இந்து தர்மம்: வழிபாட்டுப் பிரிவுகள் (பகுப்புகள்):

கற்ப கோடி ஆண்டுகளாக நிலைபெற்றிருக்கும் நமது இந்து சமயத்திற்கு இறைவன் என்பவன் ஒருவனே, அந்த இறைவனை பிரம்மம் என்றும் பரம்பொருள் என்றும் வேதங்கள் சுட்டும். ஆன்மாக்கள் உய்வு பெரும் பொருட்டு கருணைப் பெருங்கடலான இறைவன் சில முக்கியத் திருவடிவங்களில் தோன்றி அருள்கின்றான். நால்வேதங்களை அடிப்படையாகக் கொண்ட இந்து மதத்திற்கு ஆதிமுதலே ஆறு வழிபாட்டு பிரிவுகள் (பகுப்புகள்) இருந்து வந்துள்ளது தெளிவு, இனி அவற்றினைக் காண்போம். சைவம்: ஆதிப் பரம்பொருளாகவும், முக்கண் முதல்வராகவும், பரஞ்சுடராகவும் விளங்கியருளும் சிவபெருமானைப் போற்றும் முத்தி மார்க்கம்.

வைணவம்: சிவபரம்பொருளின் இடபாகத்தில் கோயில் கொண்டருள்பவராகவும், பரவாசுதேவராகவும் விளங்கியருளும் ஸ்ரீமன் நாராயண மூர்த்தியை உபாசிக்கும் சீர்மிகு மார்கம்.
சாக்தம்: சிவபரம்பொருளின் அருட்சக்தியாகவும், அச்சுத சகோதரியாகவும், அனைத்து வேதத் தலைவியாகவும் விளங்கியருளும் ஆதிபராசக்தியை வழிபடும் உத்தம மார்க்கம்.
காணாபத்தியம்: பிரணவ சுவரூபரான விநாயகக் கடவுளைத் தொழுதுச் சிவமுத்தி அடைந்துய்யும் வேத மார்க்கம்.
கௌமாரம்: சிவசுவரூபியான ஆறுமுக தெய்வத்தைப் பணிந்தேத்திப் பிறவிப் பெருங்கடலினைக் கடந்துய்யும் அற்புத மார்க்கம்.
சௌரம்: சூரிய தேவனை உபாசிக்கும் மார்க்கம், இப்பிரிவு தற்பொழுது வழக்கத்தில் பெரிதாக இல்லை, மேற்குறித்துள்ள ஐந்து பிரிவுகளோடு இம்மார்க்கம் முற்றிலும் இணைந்து விட்டது எனலாம், மகாபாரத கர்ணன் இப்பிரிவினைச் சார்ந்தவன்.
'நான்கு வேதங்கள்; உபநிடதங்கள்; இதிகாசங்கள்; புராணங்கள்; பாவ புண்ணியச் செயல்கள் மற்றும் அதன் விளைவுகளைக் குறிக்கும் கர்ம வினையின் வகைகள்; மறுபிறவிக் கோட்பாடுகள்; யுக தர்மங்கள்; பிறவியின் பயனான முத்தி வகைகள்' இவை அனைத்துமே மேற்குறித்துள்ள அனைத்துப் பிரிவுகளுக்கும் பொதுவானவை. இருப்பினும் இவ்வழிபாட்டு முறைகளுக்குத் தனித்தனியே 'மூல மந்திரங்கள், பூஜை முறைகள், அருளார்களின் திருப்பாடல்கள், ஆலயங்கள், ஆகமங்கள், விரத நாட்கள், விழா நாட்கள், வழிவழி ஆச்சாரியர்களைக் கொண்டொழுகும் குரு பரம்பரை' இவைகள் உண்டு. ஆன்மாக்கள் தத்தம் மனங்களின் ருசி பேதங்கள், வளரும் சூழல், உள்ளச் சீரமைப்பு இவைகளுக்குத் தக்கவாறு, தங்கள் மனதில் எளிதில் பொருத்திப் பார்க்கக் கூடிய ஒரு இறை வடிவத்தைத் தேர்ந்தெடுத்து உபாசித்து, இம்மானுடப் பிறவியின் ஒரே ஆன்ம குறிக்கோளான சிவமுத்தியினை அடைந்துய்யும் பாதையில் பயணிக்கின்றனர், உய்வு பெறுகின்றனர் (சிவ சிவ)!!!

இந்து மதத்தின் தொன்மை (யுகங்கள், கால சக்கரம், 14 உலகங்கள், பிரளயம்):

இந்து தர்மம் பேசும் யுகங்கள் நான்கு, கிருத (சத்திய) யுகம், திரேதா யுகம், துவாபர யுகம், கலியுகம். யுகங்களின் கால அளவுகளை இருவேறு வகையில் புராணங்கள் விவரிக்கும், தேவ வருட அளவு அல்லது பூவுலகின் வருட அளவு. தேவ வருட கணக்கின் படி 1 நாள் என்பது நம்முடைய 1 வருடத்தைக் குறிக்கும்; 1 வருடம் என்பது நம்முடைய 360 வருட கால அளவினைக் குறிக்கும். இப்பதிவினில் நம்முடைய அளவுகோலின் வழியிலேயே  யுக அளவினைச் சிந்தித்து உணர்வோம்.

கலியுகத்தின் கால அளவு நான்கு லட்சத்து முப்பத்திரண்டு ஆயிரம் ஆண்டுகள் (4,32,000). துவாபர யுகம் இக்கால அளவின் இரண்டு பங்கு (8 64,000), திரேதா யுகம் மூன்று பங்கு (12,96,000), கிருத யுகம் நான்கு பங்கு (17,28,000). நான்கு யுகங்களும் சேர்ந்தது ஒரு சதுர்யுகம், 4:3:2:1 எனும் விகிதாச்சாரத்திலுள்ள சதுர்யுக யுகங்களின் மொத்த கால அளவு நாற்பத்து மூன்று லட்சத்து இருபது ஆயிரம் ஆண்டுகள் (43,20,000).
71 சதுர்யுகங்களைக் கொண்டது ஒரு 'மன்வந்திரம்' என்று அழைக்கப் பெறும். ஒவ்வொரு மன்வந்திரத்துக்கும் 'மனு' எனும் அதிகாரியொருவர் இருப்பார். 14 மன்வந்திரங்களின் கால அளவு ஒரு 'கல்பம்', 1000 சதுர்யுகங்களைக் கொண்ட இக்கல்பமே பிரம்மாவின் ஒரு பகல் பொழுதாகும். பிரம்மாவின் ஒரு நாள் என்பது இரு கல்ப கால அளவினைக் கொண்டது. முதல் கல்பமான பகல் பொழுதின் முடிவில் நிகழ்ந்தேறும் பிரளயத்தில்,14 உலகங்களில் மூன்று உலகங்கள் (பூலோகம், புவர்லோகம், சுவர்லோகம்) மட்டும் முழுவதுமாய் அழியும்.

இப்பிரளயம் பிரமனின் இரவுப் பொழுது முழுவதும் நீடிக்கும் (ஒரு கல்ப காலம்). அதாவது அடுத்த 1000 சதுர்யுகங்களுக்குப் படைப்பேதும் நடந்தேறாது. அதுவரையில் சிவமுத்தி அடையாத ஆன்மாக்கள் இக்கால கட்டத்தில் 'உருவமற்று; செயலற்று' மாயையாகிய கோளத்தில் கட்டுண்டு இருக்கும். பிரமனின் இரவுப் பொழுது முடிந்தவுடன் மீண்டும் மூன்று உலகங்களின் படைப்பு துவங்கப் பெறும். இக்கால அளவுகளின் படி, பிரமனுக்கு 100 ஆண்டுகள் கடந்தவுடன், பிரமன் சிவமுத்தி பெற்றுய்வு பெறுவார், மகாபிரளயம் தோன்றி 14 உலகங்களும் அழிவுறும். (தற்பொழுது படைப்புத் தொழில் புரிந்து வரும் பிரம்மாவுக்கு இவ்வகையில் 50 ஆண்டுகள் கடந்துள்ளது).

தற்பொழுது நடந்தேறி வருவது 'சுவேத வராக கல்பம்', இதன் 14 மன்வந்திரங்களில் நாமிருப்பது 7 ஆம் (வைவசுவத) மன்வந்திரத்தில். இம்மன்வந்திரத்தின் 71 சதுர்யுகங்களில் நாமிருப்பது 28ஆம் சதுர்யுகத்தில். தற்பொழுது நடந்தேறி வரும் கலியுகத்தில் சுமார் 5100 ஆண்டுகளே கடந்துள்ளது. இக்கலியுகம் முடிவுற சுமார் 4,27,000 ஆண்டுகள் மீதமுள்ளது (முக்கியக் குறிப்பு: கலி முடிவில் பிரளயம் ஏற்படாது, கல்ப முடிவில் மட்டுமே பிரளய நிகழ்வு நடந்தேறும்).

இந்து மதம் (இராமாயண, மகாபாரத நிகழ்வுகள் நடந்தேறி எவ்வளவு ஆண்டுகள் கடந்துள்ளன?):

ஸ்ரீகிருஷ்ண அவதாரம் 'தற்பொழுது நடைபெற்று வரும் கலியுகத்தின் முந்தைய யுகமான துவாபர யுகத்தின் இறுதி 150 ஆண்டுகளுக்குள்' நிகழ்ந்தேறியுள்ளது என்று வியாச மாமுனிவரின் இதிகாசம் நமக்கு அறிவிக்கின்றது. கலி தொடங்கி சுமார் 5100 ஆண்டுகள் கடந்துள்ளது எனில் மாபாரத நிகழ்வுகள், அவை நடந்தேறிய தலங்கள், அத்தலங்களில் குறிக்கப் பெற்றுள்ள திருக்கோயில்கள் இவையாவும் குறைந்த பட்சம் 5100 ஆண்டுகள் தொன்மையானவை எனும் முடிவிற்கு எளிதாக வந்துவிடலாம்.

ஸ்ரீராமாவதாரம் 'துவாபர யுகத்திற்கு முன்னதான திரேதா யுகத்தின் இறுதியில், யுக நிறைவு பெற 12,000 ஆண்டுகளே மீதமிருந்த நிலையில், அயோத்தியில்' நிகழ்ந்தேறியுள்ளது. இராவண சம்ஹாரத்திற்குப் பின்னர் ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி சுமார் 11,000 ஆண்டுகளுக்கு ஆட்சி புரிந்தருளியதாக உத்தர இராமாயணம் பதிவு செய்கின்றது. தற்பொழுது நடந்தேறி வரும் 4ஆம் யுகமான கலியுகத்திற்கும், 2ஆம் யுகமான திரேதா யுகத்திற்கும் இடையிலுள்ள துவாபர யுகத்தின் கால அளவு மட்டுமே 'எட்டு லட்சத்து அறுபத்தி நான்காயிரம் (8, 64,000)' ஆண்டுகள்.
ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி தம்முடைய அவதாரக் காலத்தில் '(இராமேஸ்வரம் உள்ளிட்ட) எண்ணிறந்த சிவாலயங்களைப் புதுக்கியும், தரிசித்தும், போற்றியும் வந்துள்ளார்' என்று அந்தந்த தல புராணங்கள் நமக்குத் தெரிவிக்கின்றன, அவை அனைத்துமே சுமார் 8 1/2 லட்சம் ஆண்டுகள் பழமையானவை என்பதே நினைவிலிருத்த வேண்டிய முக்கியக் குறிப்பு. மேலும் இந்நெடிய காலகட்டத்தில் அத்திருக்கோயில்கள் பல்லாயிரம் முறை சிதிலமடைந்துப் பின்னர் புணர்நிர்மாணம் கண்டு வந்திருக்கக் கூடும் எனினும் 'அவ்வாலயங்களிலுள்ள மூல மூர்த்தி மற்றும் பிற விக்கிரக மூர்த்தங்கள் மிகமிகப் புராதனமானவை' எனும் புரிதல் அவசியம்.

இந்து தர்மம் 'மதமா அல்லது வாழ்வியலா?' (ஒரு தெளிவான பார்வை):

இந்து தர்மம் 'தனிப்பட்ட ஒரு மதம் அல்ல அது ஒரு வாழ்வியல்' என்பது போன்ற வாசகங்கள் முகநூல் பதிவுகளில் வெகு வேகமாகப் பரவி வருகின்றது. இவ்விதமான கருத்துக்களைப் பகிர்வோர் 'இந்து மதத்தின் மீது பற்றுள்ளவர்' என்பதில் ஐயமில்லை, இவர்களின் நோக்கத்திலும் குற்றமில்லை இருப்பினும் இவ்வகையான பிரச்சாரங்கள் 'தற்சமயம் நிலவி வரும் சூழலில்' நலன் பயக்கக் கூடியவையா என்பது குறித்துச் சிறிது சிந்திப்போம்.

இந்து தர்மம் 'உபநயனம்; திருமணம்; புதுமனைப் புகுவிழா உள்ளிட்ட ஒவ்வொரு நிகழ்விலும் சடங்கிலும் பின்னிப் பிணைந்திருக்கின்றது, அன்றாட வாழ்வின் ஒவ்வொரு செயலுக்கும் தக்கது; தகாதது எனும் வரைமுறைகளை வகுத்துத் தருகின்றது, வாழும் பொழுது மட்டுமல்லாது ஒருவர் உயிர் நீத்தபின்னரும் புரியப் படவேண்டிய நியமங்களை அறிவிக்கின்றது, தனிமனித ஒழுக்கம் மற்றும் சமுதாய நலன் சார்ந்த கோட்பாடுகளை முன்மொழிகின்றது' ஆதலின் இதனை வாழ்வியல் என்று விவரிப்பது என்பது முற்றிலும் பொருத்தமானதே.

எனினும் 'இந்து தர்மம் மதமே அல்ல - ஒரு வாழ்வியல்' என்று குறிக்கையில் அது தவறான புரிதலுக்கு வழிவகுத்து விடுகின்றது. இந்து தர்மம் பன்முகத் தன்மை கொண்டது, அவற்றுள் மதமும் முக்கியமான ஒரு பரிமாணம் என்பதை எக்காரணம் கொண்டும் மறுத்து விட இயலாது. பலகலைகளில் தேர்ச்சியும், மிருதங்கத்தில் சிறப்புப் பயிற்சியும் உள்ள ஒருவரைப் பற்றி விவரிக்கையில் 'இவர் மிருதங்க வித்துவான் மட்டுமல்லாது பலகலைகளிலும் தேர்ச்சி பெற்றுள்ளவர்' என்று கூறுவதே பொருந்தும், அதை விடுத்து 'இவர் மிருதங்க வித்துவானே அல்ல, பல கலைகளிலும் வல்லவர்' என்று கூறுவது ஏற்புடையதாக இருக்காது.  

'வாழ்வியல்' எனும் சொல் பொதுவில் 'மதம் சார்ந்த ஆன்மீக பயணத்தினையும் கோட்பாடுகளையும்' குறிப்பதில்லை, ஒரு சிலர் அவ்வாறு கருதக் கூடும் என்பதால் அது வெகு ஜன மக்களுக்கான புரிதலாக மாறி விடாது. 'மனித நிலையிலிருந்து அனைத்து தரப்பினரையும் இறை நிலைக்கு இட்டுச் செல்லும் பயணத்தைக் குறிப்பது மதம், மறுபிறவி; பிறவியின் வகைகள்; வினைகள் மற்றும் அதற்கான விளைவுகள் குறித்த கோட்பாடுகளைக் குறிப்பது மதம், அனைத்திற்குள்ளும், அனைத்திலிருந்து வேறுபட்டும் நின்றருளும் பரம்பொருளின் தன்மைகளைக் குறிப்பது மதம், பிறவியின் பயனான முத்தி வகைகளைக் குறிப்பது மதம், இறைவனின் பல்வேறு அவதாரங்களையும் திருத்தலங்களையும் அடியவர் பெருமக்களையும் பறைசாற்றுவது மதம்', இப்படி 1000 விதமாகக் கூறிக் கொண்டே செல்லலாம். 

புரிதலற்ற மதமாற்றம் பாரத தேசமெங்கிலும் பரவி வரும் மிகவும் இக்கட்டான இச்சூழலில் 'இந்து தர்மம் ஒரு மதமே அல்ல' என்று முழங்குவது பெரும் குழப்பத்தினை மட்டுமே விளைவிக்கும், எவ்வித நன்மையையும் ஏற்படுத்தி விடாது. ஒரு பிரச்சாரம் எவ்வகையான சூழலில், எத்தகைய காலகட்டத்தில் மேற்கொள்ளப் படுகின்றது என்பதனைப் பொறுத்தே அதன் பயனும் அமையும். ஆதலின் இந்து தர்மம் 'ஒரு மதமே' என்று தெளிவுறுவோம், பிறருக்கும் தெளிவுறுத்துவோம் (சிவ சிவ)!!!!

கந்தபுராண நிகழ்வுகள் நடந்தேறிய காலகட்டம் தான் என்ன (ஆதாரபூர்வ விளக்கங்கள்):

வால்மீகி இராமாயணம் - பால காண்டத்தின் 37ஆவது சர்க்கத்தில் பதிவு செய்யப் பெற்றுள்ள நிகழ்வுகளின் அடிப்படையில் கந்தபுராண நிகழ்வுகளின் காலகட்டத்தினை ஆய்வோம். விஸ்வாமித்திர மகரிஷி 'உலக நலனுக்காக தாம் புரியவிருக்கும் சிவவேள்வி, அசுரர்களால் தடையுறா வண்ணம் காத்துத் தரும் பொருட்டு' ஸ்ரீராமர் மற்றும் இலக்குவன் இருவரையும் உடனழைத்துச் செல்கின்றார், யாகம் இனிதே நிறைவுற்றுப் பின் தாடகை வதமும் ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியால் நடந்தேறுகின்றது. பின்னர் ஜனக மன்னரின் அழைப்பினையேற்று அனைவரும் மிதிலா நகருக்குப் பயணிக்கின்றனர். செல்லும் வழியில் எண்ணிறந்த புராண நிகழ்வுகளைத் தசரத மைந்தர்களுக்கு விவரித்தவாறு செல்கின்றார் மகரிஷி.
’இடையில் கங்கையைக் கடக்க நேரிடும் சமயத்தில் ஆறுமுக தெய்வத்தின் திருஅவதார நிகழ்வுகளையும் விரிவாக எடுத்துரைக்கின்றார் மகரிஷி' என்று வால்மீகி முனிவர் பதிவு செய்தருளியுள்ளார். இதனால் கந்தபுராண காலகட்டம் 'இராமாயண நிகழ்வுகள் நடந்தேறியுள்ள திரேதா யுக காலத்தினின்றும் மிகவும் முற்பட்டது' என்பது தெளிவு. தற்பொழுது நடந்தேறி வரும் 4ஆம் யுகமான கலியுகம் துவங்கப் பெற்று சுமார் 5130 வருடங்கள் கடந்துள்ளன, இதற்கும் 2ஆம் யுகமான திரேதா யுகத்திற்கும் இடையிலுள்ள துவாபர யுகம் மட்டுமே சுமார் 8 1/2 லட்சம் ஆண்டுகளைக் கொண்டதாகும்.

ஆதலின் சிவகுமாரன் எழுந்தருளியிருக்கும் அறுபடை வீடுகளும் அத்தனை லட்சம் ஆண்டுகள் புராதனமானவை. இந்நெடிய காலகட்டத்தில் இத்திருக்கோயில்கள் எண்ணிறந்த முறை சிதிலமடைந்தும் பின் செப்பனிடப் பெற்றும் வந்திருக்கக் கூடும், எனினும் இத்தலங்களில் எழுந்தருளியுள்ள விக்கிரக மூர்த்தங்கள் காலவரையற்ற தொன்மையினைக் கொண்டு விளங்குபவை எனும் புரிதல் மிக அவசியம் (சிவாய நம)!!!

இந்து தர்மம் - புராணங்களும் இதிகாசங்களும்:

நிகழ்வுகள் நடந்தேறும் கால கட்டத்திலேயே அவை தொகுக்கப்பட்டு எழுதப் பெறுவது இதிகாசங்கள், நிகழ்வுகள் நடந்தேறி எண்ணிறந்த யுகங்களுக்குப் பின்னர் பிறிதொரு காலகட்டத்தில் தொகுக்கப் பெறுவது புராணங்கள். திரேதா யுகத்தில் இராமாயண காவியத்தினை இயற்றியருளிய வால்மீகி முனிவரும், துவாபர யுகத்தில் மாபாரதம் புனைந்தருளிய வேத வியாசரும் அந்தந்த காலகட்டங்களிலேயே வாழ்ந்தருளிய மாமுனிவர்கள், மேலும் தத்தமது இதிகாசங்களில் இப்பெருமக்கள் ஒரு கதாபாத்திரமாகவே இருந்து வந்துள்ளனர். பதினெண் புராணங்களோடு எண்ணிறந்த உப புராணங்களையும் வியாச மகரிஷி துவாபர யுக காலகட்டத்திலேயே இயற்றியருளியுள்ளார்.

இந்து தர்மம் (ஷண்மதமா (ஆறு மதங்களா) அல்லது ஒரு மதமா - ஆதாரபூர்வ நுட்பங்களும் விளக்கங்களும்):

'கொள்கைகள்; கோட்பாடுகளோடு கூடிய ஒரு குறிப்பிட்ட வழிபாட்டு முறையினை 'மதம்' எனும் வரையறைக்குள் உட்படுத்த வேண்டுமாயின் அவற்றிற்கென்று தனியே ஒரு வேத நூலொன்று அமைந்திருத்தல் இன்றியமையாதது'. நமது பாரத தேசத்தில் எண்ணில் பலகோடி ஆண்டுகளாக நிலவி வரும் 'சைவம்; வைணவம்; கௌமாரம்; காணபத்தியம்; சாக்தம்; சௌரம்' எனும் ஆறு வழிபாட்டு முறைகளுமே தத்தமெக்கென்று தனித்தனி வேதநூலினைக் கொண்டிராமல் 'ரிக்; யஜுர்; சாம; அதர்வணம்' எனும் நான்மறைகளைப் பொதுவான வேதநூலாகக் கொண்டு விளங்குபவை, ஆதலின் இவையனைத்துமே ஒரே மதத்திற்குட்பட்ட சமயப் பிரிவுகளே அன்றி தனித்தனி மதங்களன்று என்பது தெளிவு.

இக்கருத்திற்கு 'வடமொழிப் புராணங்கள்; உபநிடதங்கள்; தீந்தமிழில் தோன்றிய புராணங்கள், சாத்திரங்கள் மற்றும் அருளாளர்களின் திருமுறைத் திருப்பாடல்கள் இவைகளிலிருந்து ஒருகோடி அகச் சான்றுகளைத் தரவுகளாகத் தரஇயலும். சிவபரம்பொருளை 'நான்மறைபாடும் பரம யோகி' என்று திருஞானசம்பந்தப் பெருமான் 'திருக்கள்ளில்' எனும் தலத்திற்கான தேவாரத் திருப்பதிகத்தில் போற்றுகின்றார். திருமூலர் திருமந்திரத்தில் 'வேதச் சிறப்பு' எனும் தனித்தலைப்பையே அமைத்தருளிப் போற்றுகின்றார்.
-
வேதத்தை விட்ட அறம்இல்லை! வேதத்தின்
ஓதத் தகும்அறம் எல்லாம் உள!தர்க்க
வாதத்தை விட்டு மதிஞர் வளமுற்ற
வேதத்தை ஓதியே வீடுபெற்றார்களே!!!
'நன்கோது நால் வேதத்துள்ளான்' என்று நாலாயிர திவ்யப் பிரபந்தத்தில் ஸ்ரீமன் நாராயண மூர்த்தியைப் போற்றுகின்றார் பேயாழ்வார். சரி வேதநூல் ஒன்றேயாய் இருப்பினும் தெய்வங்கள் வெவ்வேறாக உள்ளனவே? எனில், 'இந்து தர்மம் ஒன்றே குலம்! ஒருவனே தேவன்' எனும் ஒற்றைப் பரம்பொருள் தத்துவத்தை மையமாகக் கொண்டு விளங்குவது, எங்கும் யாவிலும் நீக்கமற நிறைந்தருளும் அப்பரப்பிரமமே ஆன்மாக்கள் உய்யும் பொருட்டு சில முக்கியத் திருவடிவங்களில் தோன்றியருள் புரிகின்றது'. 'ஒன்றாய் அரும்பி பலவாய் விரிந்து இவ்வுலகு எங்குமாய் நின்றாள் அனைத்தையும் நீங்கி நிற்பாள்' என்றிதனைச் சுட்டுவார் அபிராமி பட்டர்.
-
சுடரோ சிவபெருமான் சூடு பராசக்தி
திடமார் கணநாதர் செம்மை - படரொளியோ
கந்தவேளாகும் கருதுங்கால் சற்றேனும்
வந்ததோ பேத வழக்கு?

மேலும் இந்த ஆறு பிரிவுகளையும் வேத வியாசர் துவாபர யுக காலகட்டத்தில், இன்றிலிருந்து சுமார் 5100 ஆண்டுகளுக்கு முன்னர் இயற்றியருளிய பதினெண் புராணங்களிலேயே தெளிவாகக் குறிக்கப் பெற்றுள்ளன, ஆதிசங்கரர் அவதரித்ததோ சுமார் 2000 வருடங்களுக்கு முன்னர், ஆதலின் 'ஆதி சங்கரர் இப்பிரிவுகளைத் தாமே புதிதாகத் தோற்றுவிக்கவில்லை மாறாக சிதறுண்டிருந்த (நான்மறைகளுக்கு உட்பட்ட) வழிபாட்டு முறைகளைப் புணரமைத்து இந்து தர்மம் (அல்லது வேத தர்மம்; மறை நெறி) எனும் ஒரு குடையின் கீழ் மீண்டும் புத்துணர்வு பெற்று மிளிரச் செய்தருளினார்' என்பதே சரியான புரிதல்.
எனில் 'ஸ்ரீஆதிசங்கர பகவத் பாதருக்கு ஷண்மத ஸ்தாபகர் எனும் திருப்பெயரும் உண்டே! அதனை எப்படிப் புரிந்து கொள்வது?, ஒரு சொல் எந்த வாக்கியத்தில் எந்த கருத்தில் எந்த கண்ணோட்டத்தில் கையாளப் படுகின்றது என்பதனை வைத்தே அதற்கு பொருள் கொள்ளுதல் வேண்டும்! 'ஒரு யானை மதம் பிடித்து ஓடியது' எனும் வாக்கியத்தில், மதம் எனும் சொல்லை ஆன்மீகத்தின் குறியீடாக எவரொருவரும் பார்ப்பதில்லை, அது போன்று 'ஷண்மத ஸ்தாபகர்' எனும் சொற் பிரயோகத்தில் 'மதம்' என்பது 'பிரிவுகள் அல்லது உட்சமயங்கள்' என்பதனையே குறிக்க வந்தது, தனித்தனி மதங்களை அல்ல (சிவாய நம!!!).