ஸ்ரீமகா சாஸ்தாவின் திருஅவதாரம் (கந்த புராண விளக்கங்கள்):

8ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தோன்றிய கச்சியப்ப சிவாச்சாரியார் தீந்தமிழில் அருளியுள்ள கந்த புராணத்தின் பல்வேறு பகுதிகளில் 'அரிகர புத்திரரான ஸ்ரீமகாசாஸ்தாவின் அவதார நிகழ்வுகள்' தொகுக்கப் பெற்றுள்ளன. குறிப்பாக அசுர காண்டத்தின் இறுதியில் இடம்பெறும் 'மகா சாத்தாப் படலம்; மகாகாளர் வரு படலம்' ஆகியவை ஸ்ரீசாஸ்தாவின் பிரபாவத்தை நன்முறையில் பதிவு செய்கின்றன. ஸ்ரீசாஸ்தாவை 'சாத்தன், மாசாத்தனார்; ஐயன்' எனும் பல்வேறு திருப்பெயர்களால் போற்றி மகிழ்கின்றார் கச்சியப்பர்.

மகா சாத்தாப் படலம் 68 திருப்பாடல்களைக் கொண்டது. இவற்றுள் முதல் 47 திருப்பாடல்களில் 'தேவர்கள் அசுரர்களோடு இணைந்துப் பாற்கடலைக் கடைதல், ஸ்ரீமகாவிஷ்ணுவின் மோகினி அவதாரம்; சிவபெருமான் மோகினியைக் காண்பதற்காகப் பாற்கடலுக்கு எழுந்தருளி வரும் தெய்வ நாடகம்' ஆகிய நிகழ்வுகளை விவரித்துக் கொண்டே வரும் கச்சியப்பர் '48ஆம் திருப்பாடலில்' பரப்பிரம்ம சுவரூபரான ஸ்ரீமகாசாஸ்தாவின் திருஅவதாரத்தைப் பதிவு செய்கின்றார். இனி அத்திருப்பாடல்களை உணர்ந்து மகிழ்வோம்.

(மகா சாத்தாப் படலம் - திருப்பாடல் 48):
இந்த வண்ணம் இருக்க முராரியும்
அந்தி வண்ணத்து அமலனும் ஆகியே
முந்து கூடி முயங்கிய எல்லையில்
வந்தனன் எமை வாழ்விக்கும் ஐயனே.

பொருள்:
இவ்வாறு மோகினி வடிவிலிருந்த பரந்தாமனின் திருப்பார்வையும், அந்தி வண்ணத் திருமேனியரான சிவமூர்த்தியின் திருப்பார்வையும் கணநேரம் சங்கமிக்கும் தெய்வ நாடகமொன்று நடந்தேற, அதனின்றும் கோடி சூர்ய பிரகாசமாய்த் தோன்றுகின்றார் தாரகப் பிரம்ம சுவரூபரான ஸ்ரீசாஸ்தா. 'ஐயன்' எனும் அற்புத திருநாமத்தால் ஸ்ரீசாஸ்தாவைப் போற்றிப் பணிகின்றார் கச்சியப்பர்.

(மகா சாத்தாப் படலம் - திருப்பாடல் 49):
மைக் கருங்கடல் மேனியும் வானுலாம்
செக்கர் வேணியும் செண்டுறு கையுமாய்
உக்கிரத்துடன் ஓர்மகன் சேர்தலும்
முக்கண் எந்தை முயக்கினை நீங்கினான்.
-
பொருள்:
கருங்கடல் வண்ணத்தினராகவும், சிவந்த திருச்சடையுடனும், திருக்கரங்களில் செண்டு எனும் ஆயுதத்தை ஏந்திய அற்புதத் திருக்கோலத்தில், உக்கிர வடிவினராய் ஸ்ரீமகாசாஸ்தா தோன்றினார். 

(மகா சாத்தாப் படலம் - திருப்பாடல் 50):
அத்தகும் திரு மைந்தற்(கு) அரிகர
புத்திரன் என்னும் நாமம் புனைந்து பின்
ஒத்த பான்மை உருத்திரர் தம்மொடும்
வைத்து மிக்க வரம் பல நல்கியே
-
பொருள்:
இவ்விதம் போற்றுதற்குரிய முறையில் உதித்த திவ்ய பாலகனான ஸ்ரீமகாசாஸ்தாவிற்கு மறை முதல்வரான சிவபெருமான் 'அரிகர புத்திரர்' எனும் திருநாமம் அளித்து, ஐயனை உருத்திரர்கள் அனைவருக்கும் நடுநாயகமாய் வீற்றிருக்கச் செய்துப் பின்னர் எண்ணற்ற  நல்வரங்களையும் அளித்து அருள் செய்தார்.

கச்சியப்பர்  'சாஸ்தா படலம்' என்று குறிக்காமல் 'மகா சாஸ்தா படலம்' என்று குறித்துள்ளதன் மூலம் ஐயனின் பிரபாவம் அளவிடற்கரியது என்பது தெளிவு (சிவ சிவ)!!!

No comments:

Post a Comment