நம் இந்து தர்ம ஆலயக் கருவறையிலுள்ள மூல மூர்த்தியின் தரிசனம் என்பது தனித்துவமான அனுபவத்தைத் தரவல்லது, ஏராளமானோர் திருச்சன்னிதி முன்பு கூடியிருந்தாலும் அங்குள்ள ஒவ்வொருவருக்கும் இறைவனுக்கும் இடையே தனிப்பட்ட உரையாடலொன்று நடந்தேறிய வண்ணமிருக்கும். எண்ணிறந்த பக்தர்கள் விரதமிருந்துப் பலநாட்கள் பாத யாத்திரையாக நடந்து திருக்கோயில்களுக்குச் செல்வது அற்புதமான அந்த சில நிமிட நேர இறை தரிசனத்திற்காகவே, திருப்பதி பெருமாளைத் தரிசிக்கப் பலமணி நேரம் ஆர்வத்துடன் மெய் வருந்தக் காத்திருந்து, வரிசையில் மெதுமெதுவே முன்னேறி இறுதியாய் வேங்கடவனின் ஆச்சரியமான திருக்கோல தரிசனத்தைக் கண்ணாற சில கணங்களே தரிசித்துப் பேரானந்தம் அடைந்துப் பின் சிறிது ஏக்கத்துடனே வெளிவரும் அனுபவம் நம் தர்மத்திற்கே உரித்தானது.
நாயன்மார்கள்; ஆழ்வார்கள்; அருணகிரிநாதர் மற்றும் எண்ணிறந்த முனிவர்கள்; ஞானிகள்; அருளாளர்கள்; ஆச்சார்யர்கள் ஆகியோர் தரிசித்தும் போற்றியும் பரவியுள்ள மூல மூர்த்தியைப் படமெடுப்பதும், அதனைப் பகிர்வதும் ஆகம விரோத செயலாகும், இறை பக்தியை வளர்க்கும் கருத்திலேயே நம் இந்து தர்ம சகோதரர்களும் சகோதரிகளும் இத்தகு படங்களை முகநூலில் பகிர்கின்றனர் எனினும் இவ்வழிமுறை எவ்விதக் கோணத்திலும் ஏற்புடையதல்ல, நம் சமய முன்னோர்கள் இதனை ஒரு பொழுதும் அங்கீகரித்ததுமில்லை.
உற்சவங்கள் நடைபெறும் பொழுது, உற்சவத் திருமேனிகளைப் படமெடுப்பதும் பகிர்வதும் தற்காலச் சூழலில் தவிர்க்கவே இயலாதவொன்றாகி விட்ட காரணத்தால் அதனால் பாதகமொன்றும் இல்லை, மூல மூர்த்தியின் ஓவியத்தைக் கூட பகிரலாம் எனினும் மூல மூர்த்தியின் நேரடிப் புகைப்படத்தைப் பகிர்வதை இக்கண முதலே நிறுத்துவோம், 'நானொன்றும் புகைப்படம் எடுக்கவில்லையே, தினமலர் வலைத்தளத்திலுள்ள படங்களைத் தானே பகிர்கின்றேன்' என்போருக்கும் இது பொருந்தும், திருக்கோயில் யாத்திரையையும், இறை தரிசன இன்பத்தையுமே ஆன்ம இலட்சியமாகக் கொண்டுள்ள எண்ணிறந்த அடியவர்களுக்கு இவ்விதமாய் முகநூலில் உலவி வரும் மூலவர் புகைப்படங்களைக் காண்கையில் உள்ளம் துடித்துப் பதறும் என்பது கண்கூடு.
No comments:
Post a Comment