புலால் மறுத்தல் (திருமூலரின் எச்சரிக்கை):

(புலால் மறுத்தல்: முதல் தந்திரம்):
பொல்லாப் புலாலை நுகரும் புலையரை
எல்லாரும் காண இயமன் தன் தூதுவர்
செல்லாகப் பற்றித் தீவாய் நரகத்தில்
மல்லாக்கத் தள்ளி மறித்து வைப்பாரே!!

ஐயறிவு வரையிலான உயிரினங்களின் பரிதாபக் கதறலிலிருந்து தோன்றும் மாமிசத்தைப் 'பொல்லாப் புலால்' என்று குறிக்கின்றார் திருமூல நாயனார். பிராணிகள் துடிதுடித்து உயிர் இழப்பதைப் பற்றிச் சிறிதும் வருத்தமின்றி அவ்வுயிர்களின் புலாலினைச் சுவைத்து உட்கொள்பவர் ஐயத்திற்கு இடமின்றி 'நரக வேதனைக்கு இணையான தாங்கொணா துயரத்தில் உழல்வர்' என்றும் எச்சரிக்கின்றார்.

தங்களைத் தற்காத்துக் கொள்ளும் சக்தியின்றி, கதியற்ற நிலையில், கடும் துயர் மற்றும் அச்சத்துடன் கதறிப் பதறி உயிர் துறக்கும் பிராணிகளின் மரண ஓலம் அக்கணமே தீய வினையாக உருமாறி அவ்வுயிரைக் கொல்பவர் மற்றும் உட்கொள்பவர் யாவரையும் ஐயத்திற்கு இடமின்றிப் பற்றுகின்றது. 

இப்புவியில் எது பொய்ப்பினும், பரிபூரணச் சிவஞானம் கைவரப் பெற்ற சிவயோகிகளின் திருவாக்கு ஒரு பொழுதும் பொய்ப்பதில்லை. அசைவம் உணவல்ல; உயிர் என்று உணர்ந்து அவற்றினை அறவே தவிர்த்துச் சிவகதி சார்வோம் (சிவாய நம)!!!

மகாபாரதம் அறிவுறுத்தும் அகிம்சை மீறலுக்கான தண்டனைகள் (அனுசாசனப் பர்வம்):

அம்புப் படுக்கையிலுள்ள பீஷ்மர் யுதிஷ்டிரனின் 'அகிம்சை மற்றும் மாமிசம் உட்கொள்வது தொடர்பான கேள்விகளுக்கு' எண்ணிறந்த நீதிகளை விடைகளாக எடுத்துரைக்கும் நிகழ்வினை அனுசாசனப் பர்வத்தின் 115, 116, 117, 118 ஆகிய பகுதிகள் மிகவும் விரிவாகப் பேசுகின்றன. இனி அவற்றுள் கூறப் பெற்றிருக்கும் தர்மங்களை சிந்தித்துத் தெளிவோம்.

தன்னுடலினை வளர்க்க பிற உயிர்களின் மாமிசத்தை உட்கொள்பவர் பேரிடர்களைச் சந்திப்பது உறுதி. மனித இனத்தைப் போலவே ஒவ்வொரு உயிரினத்திற்கும் தத்தமது உயிரும் சுவாசமும் மிகவும் பிரியமான ஒன்றாகும், உயர்ந்த ஞானத்தினைக் கொண்டிருப்போருக்கே மரணத்தைக் குறித்த பயமிருப்பது இயற்கையான நியதியெனில் ஏதுமறியாத வாயில்லாப் பிராணிகளின் நிலையினை எண்ணிப் பார்த்து தெளிதல் வேண்டும் (பகுதி 115).

மாமிசத்தின் பொருட்டு உயிரினங்களைக் கொல்வோருக்கும், அதனை உட்கொள்வோருக்கும் ஒவ்வொரு பிறவியிலும் குறைஆயுளே கிட்டும். மேலும் இத்தகையோருக்கு அபாயகரமான சூழல் ஏற்படும் சமயங்களில் எவரொருவராலும் இவர்களுக்குப் பாதுகாப்பு கிட்டாது. ஆதலின் தன் சொந்த நலத்தின் பொருட்டாவது ஒவ்வொருவரும் மாமிசம் உட்கொள்வதை அறவே துறத்தல் வேண்டும் (பகுதி 115).
தன் உடலினை வளர்க்கும் பொருட்டு பிற உயிரினங்களின் மாமிசத்தினை உட்கொள்பவருக்கு எந்தவொரு பிறவியிலும் இன்பமே கிட்டாது, எந்நேரமும் பதட்ட நிலையிலேயே உழன்று கொண்டிருக்கும் நிலை ஏற்படும், மேலும் அத்தகையோருக்கு அடுத்து வரும் பிறவிகளில் மனிதப் பிறவி வாய்க்காது; பல்வேறு உயிரினங்களாகப் பிறந்தும் இறந்தும் உழன்ற வண்ணமிருப்பர் (பகுதி 115).

மாமிசம் உட்கொள்பவர் ஐயத்திற்கு இடமில்லாது நரக வேதனையை நுகர்வர். மற்றொரு புறம் அகிம்சையைக் கைக்கொண்டு மாமிசம் தவிர்ப்பவரோ பிறவிகள் தோறும் நீண்ட ஆயுள், உடல் ஆரோக்கியம் மற்றும் மனமகிழ்ச்சியோடு வாழ்ந்திருப்பர். எந்தவொரு துன்பமும் தனக்கு நேரக்கூடாது என்றெண்ணுபவர் பிற உயிர்களின் கதறலிலிருந்து தோன்றும் மாமிசத்தினை அறவே துறத்தல் வேண்டும் (பகுதி 115).

உட்கொள்வதற்கு எண்ணற்ற பிற உணவு வகைகள் இருக்க (பிற உயிர்க்குக் கடும் துன்பம் விளைவித்து) உயிரினங்களின் மாமிசத்தினை விரும்பி உட்கொள்பவர் ராட்சச இனத்தினரெனவே கொள்ளப்படுவர், இவர்கள் கும்பிபாகம் எனும் நரகத்தில் கடும் வேதனைக்கு உள்ளாவர் (பகுதி 116).

எவரொருவர் பிற உயிரினங்களின் மாமிசத்தினைப் புசிப்பரோ அவ்வுயிரினமாகவே அடுத்த பிறவிகளில் பிறப்பெடுத்து அதே முறையிலேயே வதைத்துக் கொல்லப்பட்டு உட்கொள்ளப் பெறுவார், இது சத்தியம் (பகுதி 116)

கொன்றால் பாவம் தின்றால் போகுமா? திருமுருக வாரியார் சுவாமிகளின் விளக்கம்:

(திருமுருக வாரியார் சுவாமிகளின் 'குமுதம் வினாவிடை' தொகுப்பிலிருந்து)

புலால் உண்டவர்களை யமபடர்கள் நரகத்தில் நிறுத்தி அவர்கள் உடல் தசையை அறுத்து அறுத்து அவர்கள் வாயில் வைத்து ஊட்டுவார்கள். அதை உண்டால் தான் அவர்கள் கொன்ற பாவம் போகும். இந்தக் கருத்தை அருணகிரிநாதர் 'புவனத்தொரு' என்று தொடங்குகின்ற திருச்சிராப்பள்ளி திருப்புகழில் 'இறைச்சி அறுத்து அயில்வித்து' என்று குறிப்பிட்டிருக்கின்றார். எனவே கொன்ற பாவம் தன் உடம்பைத் தானே தின்றால் தான் போகும்.

பசுவின் உடலிலிருந்து வரும் பால் எப்படி சைவ உணவாக முடியும்? திருமுருக வாரியார் சுவாமிகள் விளக்கம்:

(திருமுருக வாரியார் சுவாமிகளின் 'குமுதம் வினாவிடை' தொகுப்பிலிருந்து)

புலால் உயிர்க் கொலையினால் கிடைக்கின்றது. பால் ஜீவ ஹிம்சையின்றிக் கிடைக்கின்றது. கறக்கின்ற பாலைப் பருகுவது குற்றமன்று. அது அசைவமாகாது. புலால் தீய குணங்களை வளர்க்கும். பால் தூய குணங்களை நல்கும். பசுவுக்கு மட்டும் அதன் கன்றுக்கு மேற்பட்ட பால் பெருக்கத்தை இறைவன் கொடுத்திருக்கிறான். பால் கறக்கவில்லையானால் பசுவுக்குத் துன்பம். கன்றுக்கு இரு மடிகளை விட்டு மற்ற இரு மடிகளில் பால் கறக்க வேண்டும். கன்றுக்குப் பால் விடாமல் கறந்து குடிப்பது தான் பாவம். பசுவின் பால் புனிதமானது. சத்வ குணத்தைத் தரவல்லது.

"பாலும் தெளிதேனும் பாகும் பருப்பிவை
நாலும் கலந்துனக்கு நான்தருவேன்" என்று அவ்வைப் பிராட்டியார் விநாயகரைக் குறித்துப் பாடிய பாடலாலும் அறிக.

பெற்றவள் சிறப்புத் தாய், பசு பொதுத் தாய்.

புண்ணியங்களை முழுவதுமாய் அழிக்கும் செயல் எது ? வடலூர் வள்ளலாரின் பார்வை:

கதியற்ற பிராணிகளின் பரிதாபக் கதறலிலிருந்து தோன்றும் மாமிசத்தினை உட்கொள்வது பெரும் பாவத்தினை சேர்ப்பதோடு அது வரை சேர்த்துள்ள புண்ணியங்களையும் முழுவதுமாக அழித்தொழித்து விடும் என்று எச்சரிக்கின்றார் வள்ளல் பெருமானார். புலால் உட்கொள்வதை இக்கண முதல் துறப்பதாக சபதமேற்போம்! நலமெலாம் பெற்றுய்வு பெறுவோம்!

(சமாதி வற்புறுத்தல் - பாடல் 10: திருவருட்பா: ஆறாம் திருமுறை):
புலைத்தொழிலே புரிகின்றீர் புண்ணியத்தைக்
கருங்கடலில் போக விட்டீர்
கொலைத் தொழிலில் கொடியீர் நீர் செத்தாரைச்
சுடுகின்ற கொடுமை நோக்கிக்
கலைத்தொழிலில் பெரியர்உளம் கலங்கினர்அக்
கலக்கம் எலாம் கடவுள் நீக்கித்
தலைத்தொழில் செய் சன்மார்க்கம் தலைஎடுக்கப்
புரிகுவது இத்தருணம் தானே!!

அகிம்சையை வலியுறுத்தும் பத்ராசலம் ஸ்ரீராமதாசரின் திவ்ய சரிதம் (இந்து தர்ம நுட்பங்கள்):

பத்ராசலம் ஸ்ரீராமதாசர் 17ஆம் நூற்றாண்டில் தோன்றிய அருளாளர். ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியிடம் அதீத பக்தியும் ஈடுபாடும் கொண்டொழுகும் உத்தம சீலர். அக்கால கட்டத்தில் ஆந்திர மாநிலத்தை ஆண்டு வரும் முகலாய மன்னன் தானேஷாவின் ஆளுகைக்குட்பட்ட பத்ராசலப் பகுதியின் தாசில்தாராகப் பொறுப்பேற்கின்றார் தாசர். பத்ராசலத்தில் ஸ்ரீராமர் அன்னை சீதையை மடியிலிருத்திய அதிஆச்சரியத் திருக்கோலத்தில் (இலக்குவனும் உடனிருக்க) எழுந்தருளி இருக்கும் புராதன ஆலயமொன்று மிகவும் பழுதுற்ற நிலையிலிருப்பதைக் கண்ணுற்று வருந்திப் புணர் நிர்மாணிக்க விழைகின்றார்.

நிதி பற்றாத நிலை உருவாக அரசாங்க வரிப் பொருளிலிருந்து 6 லட்சம் வரை எடுத்து, அதனை விரைவில் திரும்ப வைத்து விடுவதாகவும் சங்கல்பிக்கின்றார். திருக்கோயில் புணர் நிர்மாணமும் குடமுழுக்கும் மிகச் சிறப்பான முறையில் நடந்தேறுகின்றது, இதனிடையில் நடந்தேறிய நிகழ்வுகளை அறிந்து கொள்ளும் தானேஷாவோ வெகுண்டு ஸ்ரீராமதாசரை கோல்கொண்டா கோட்டையில் சிறையிடுமாறு ஆணையிடுகின்றான். சிறைச் சாலையிலோ சாட்டையடி, சுடு மணலில் இடுதல் என்று ஸ்ரீதாசர் அனுதினமும் கடும் துன்பத்திற்கு உள்ளாக்கப் படுகின்றார். ஓரிரு ஆண்டுகள் அல்ல; பனிரெண்டு முழு ஆண்டுகள் இவ்விதம் சிறை வாசமும் சித்திரவதையுமாய் கழிகின்றது.

தண்டனையின் தீவிரத்தினைத் தாங்கவொண்ணாத நிலையில் ஸ்ரீதாசர் அனுதினமும் அற்புதப் பனுவல்களால் தசரத மைந்தனைப் போற்றித் தன்னைக் காத்தருளுமாறு அகம்குழைத்துக் கண்ணீர் பெருக்கி மன்றாடி வருவார். இவ்விதம் 12 ஆண்டுகள் முடிவுறும் நிலையில் ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி இலக்குவனுடன், இரு வீரர்களின் திருவுருக்கொண்டு, பின்னிரவு வேளையில் தானேஷாவின் அரண்மனையுள் தோன்றியருளி, ஸ்ரீதாசர் எடுத்த பொருளினை வட்டியோடு செலுத்தி ரசீதும் பெற்று, சிறையில் மயங்கிய நிலையிலிருக்கும் ஸ்ரீராமதாசரின் அருகினில் அதனை சேர்ப்பித்துப் பின் திருவுருவம் மறைகின்றார்.
கண் விழித்ததும் ரசீதினைக் கண்டு உளம் நெகிழும் ஸ்ரீதாசர் கோசலை மைந்தனின் திருவருட் செயலினை வியந்து போற்றித் துதிக்கின்றார். தானேஷா ஸ்ரீதாசரின் தெய்வத் தன்மையினை உணர்ந்து தன் தவறுக்காக மன்னிப்பு வேண்டிப் பணிகின்றான். இவ்விடத்தில், கருணைப் பெருவெள்ளமான ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி 12 ஆண்டுகளாக ஸ்ரீதாசரை இரட்சித்து அருளாதது ஏன் எனும் வினா நமக்கு எழுமல்லவா! அன்னை ஸ்ரீமகாலக்ஷ்மி பாற்கடல் வாசனாரிடம் இது குறித்து வினவுவதாகவும், 'முற் பிறவியில் ஒரு கிளியினை 12 ஆண்டுகள் கூண்டில் அடைத்து வளர்த்த பாவத்தின் பயனாய் ஸ்ரீதாசருக்கு இப்பிறவியில் 12 ஆண்டுகள் சிறைவாசம் வந்தெய்தியது' என்று ஸ்ரீமகாவிஷ்ணு விளக்கியருள்வதாகவும் 'ஸ்ரீமகா பக்த விஜயம்' எனும் மூல நூல் நமக்குத் தெரிவிக்கின்றது. 

மேரு மலையினும் மேம்பட்ட தவமும் சீலமும் கொண்டு விளங்கியருளிய ஸ்ரீராமதாசருக்கே (ஒரு கிளியை கூண்டிலடைத்த செயலுக்கு) இத்தகைய துன்பம் எய்துமெனில், தம்மைத் தற்காத்துக் கொள்ளும் சக்தியும் கதியுமற்ற நிலையிலுள்ள வாயிலாப் பிராணிகளை வதைத்து அதன் மாமிசத்தினை உட்கொள்ளும் கருணையற்ற செயலானது நம்மை எத்தகு கொடிய துயரத்தில் ஆழ்த்தும் என்பதனை நன்குணர்த்துத் தெளிதல் வேண்டும். எவ்வுயிர்க்கும் தாயாக விளங்கியருளும் இறைவன் ஒரு பொழுதும் உயிர் வதையை மன்னிப்பதில்லை (சிவாய நம).

ஸ்ரீமத் பாகவத புராணம் அறிவுறுத்தும் அறமும் தண்டனையும்:

(அத்தியாயம் 11.5.14):
உண்மையான தர்மம் எது என்று சிறிதும் அறியாதவர்களே ஏதுமறியா வாயிலாப் பிராணிகளை வதைத்துக் கொல்லுதல் மற்றும் அவ்வுயிரினங்களின் மாமிசத்தினை உண்ணுதல் முதலிய கொடிய செயல்களைப் புரிகின்றார்கள். தங்களை ஞானியென்று எண்ணிக் கொள்ளும் இவர்கள் 'தங்களால் கொல்லப்பட்ட அதே உயிரினங்களால் மறுபிறவியில் வதைத்துக் கொல்லப்பட்டு புசிக்கப் படுவார்கள்'.