21ஆம் நூற்றாண்டில் மகா சாஸ்தாவுக்கென ஒரு அற்புத புராணம்

(ஸ்ரீ மகாசாஸ்த்ரு ப்ரியதாசன் அரவிந்த் ஸுப்ரமண்யம் அவர்கள் இயற்றியது):
ஹரிஹர புத்திரரான மகா சாஸ்தாவின் பிரபாவங்களைப் பற்றி வேத வியாசரின் ஸ்காந்த புராணம்; கச்சியப்பரின் கந்தபுராணம் மற்றும் பற்பல தெய்வீகப் பனுவல்கள் நன்முறையில் பதிவு செய்துள்ளது எனினும் சாஸ்தாவின் லீலைகள் யாவையும் ஒருங்கேயமைத்துப் பறைசாற்றும் தனித்தவொரு புராணம் இல்லையே எனும் அடியவர்களின் ஆதங்கத்தைப் போக்கும் வகையில் ஸ்ரீஅரவிந்த் ஸுப்ரமண்யம் அவர்கள் 'மகா சாஸ்தா விஜயம்' எனும் ஒப்புவமையற்ற புராணத்தினை இயற்றியளித்துள்ளார்.  

புராண நூல் தான் புதிது எனினும் அதனில் இடம்பெறும் நிகழ்வுகளோ மிகமிகப் புராதனமானது. பகீரதப் பிரயத்தனமிது, 12 வருட ஆய்வு, அதன் தொடர்ச்சியாக அரிதினும் அரிதான சுவடிகள் மற்றும் ஆதி நூல்களிலுள்ள நிகழ்வுகளைப் புராண நடையில்  தொகுத்தளிக்க 2 வருட காலம் ஆக மொத்தம் 14 வருட தவ வாழ்வினையொத்த அர்ப்பணிப்புடன் திரு.அரவிந்த் அவர்கள் இப்புராண நூலினை நமக்களித்துள்ளார். பூர்வ பாகம்; உத்திர பாகம் என்று இரு பிரிவுகளைக் கொண்டு இந்நூல் தொகுக்கப் பெற்றுள்ளது. 

சுவாமி ஐயப்பன் மகா சாஸ்தாவின் அவதாரமே என்பதனைப் பல்வேறு கோணங்களில் முதலில் நிறுவிப் பின் சாஸ்தாவின் பிரபாவங்களை ஆச்சரியமான முறையில் வரிசைக் கிரமமாக விவரிக்கத் துவங்குகின்றார் நூலாசிரியர். 

ஹரிஹர புத்திரரான சாஸ்தாவின் அவதாரம், திருக்கயிலையில் வளரும் பால சாஸ்தாவின் லீலைகள், சர்வ லோக தர்ம பரிபாலனத்தை ஏற்றல், பூரணா; புஷ்கலா தேவியரை மணம் புரிந்து அருள் செய்த நிகழ்வுகள், மகிஷி சம்ஹாரம், மகா சாஸ்தாவின் (சுவாமி ஐயப்பன் உள்ளிட்ட) அஷ்ட அவதாரங்கள், எண்ணிறந்த ரிஷிகள்; தேவர்கள் மற்றும் அடியவர்களுக்கு அருள் புரிந்த நிகழ்வுகள், அற்புதத் தன்மை வாய்ந்த ஐயனின் பல்வேறு லீலா விநோதங்கள், ஐயன் எழுந்தருளியுள்ள அற்புதத் தலங்கள் என்று இந்நூலாசிரியர் விவரித்துள்ள ஒவ்வொன்றும் ஐயனின் திருவடிகளில் தெளிந்த பக்தியினைத் தோற்றுவிக்கும் விதமாக அமைந்துள்ளது. 

2ஆம் பாகமான உத்திர பாகத்தில், ஐயனைப் போற்றும் சகஸ்ரநாமங்கள், த்ரிசதிகள், பிரதான அஷ்டோத்திரங்கள், சத நாமாவளிகள் மற்றும் ஐயனின் பரிபூரணத் திருவருளைப் பெற்றிருந்த பரம அடியவரான மணிதாசர் அருளியுள்ள எண்ணிறந்த சாஸ்தா பாடல்கள் மற்றும் பஞ்சகங்கள் ஆகியவை இடம் பெறுகின்றன. 

சபரி ஐயனையும், மகா சாஸ்தாவையும் போற்றும் அடியவர் பெருமக்கள் ஒவ்வொருவர் இல்லத்தையும் உள்ளத்தையும் அலங்கரிக்க வேண்டிய புண்ணிய நூலிது (மணிகண்டப் பொருளே சரணம் ஐயப்பா)!!!



காந்தமலை (மகா சாஸ்தாவிற்கென தனியே ஒரு முத்தி உலகம்):

ஆதிப் பரம்பொருளான சிவமூர்த்தி மகா சாஸ்தாவிற்கென ஒரு தனி உலகத்தையே அளித்து அருள் புரிந்ததாகக் கச்சியப்பரின் கந்தபுராணம் பறைசாற்றுகின்றது. 'மகா சாஸ்தா' படலத்தின் 51ஆம் திருப்பாடலில் "புவனம் ஈந்து புவனத்து இறையென அவனை நல்கி" எனும் முதல் இரு வரிகளால் இதனை அறியப் பெறுகின்றோம். அவ்வாறெனில் 'அந்த புவனத்தின் பெயர் தான் என்ன?' எனும் கேள்விக்கான விடையே 'காந்த மலை'.

அசுர காண்டம் - மகா சாஸ்தா படலம் (திருப்பாடல்கள் 50 - 51)
அத்தகும் திரு மைந்தற்கு அரிகர
புத்திரன் எனும் நாமம் புனைந்துபின்
ஒத்த பான்மை உருத்திரர் தம்மொடும்
வைத்து மிக்க வரம்பல நல்கியே
-
புவனம் ஈந்து புவனத்து இறையென
அவனை நல்கி அமரரும் மாதவர்
எவரும் ஏத்திடும் ஏற்றமும் நல்கினான்
சிவனது இன்னருள் செப்புதற் பாலதோ

108 வைணவ திவ்ய தேசங்களில் 'திருப்பாற்கடல்' மற்றும் 'ஸ்ரீவைகுந்தம்' எனும் இரு தலங்களை முத்தி பெற்ற ஆன்மாக்கள் மட்டுமே தரிசிக்க இயலும் என்பது அனைவரும் அறிந்ததே. அது போலவே பாரத தேசத்தின் வட எல்லையிலுள்ள திருக்கயிலை மலையும் விண்ணிலுள்ள திருக்கயிலைக்கான ஒரு குறியீடே, சிவமுத்தி பெறுவோர் சென்றடையும் திருக்கயிலையோ, சத்திய லோகம் உள்ளிட்ட 14 உலகங்களையும் தாண்டி, வைகுந்தம் மற்றும் திருப்பாற்கடலையும் கடந்து, கற்பனைக்கும் எட்டாத, தத்துவங்கள் யாவற்றையும் கடந்ததொரு பெருவெளியில் அமைந்துள்ளது. 

பிரதான தெய்வங்கள் ஒவ்வொன்றிற்கும் தனியேயொரு முத்தி உலகம் உண்டு, அது போல் மகா சாஸ்தாவையும், அவரது அவதாரமான சுவாமி ஐயப்பனையும் உபாசித்து முத்தி பெறுவோர் காந்த மலையினை அடைந்துத் திருவருள் வெள்ளத்தில் அமிழ்ந்திருப்பர். 

காந்த மலையில் மகா சாஸ்தா கோடி சூர்ய பிரகாசராய் பூரணா; புஷ்கலா தேவியருடன் ஆச்சரியமாய் எழுந்தருளி இருப்பார், காந்த மலைக்கு ஐயனின் பரம அடியவரான மணிதாசர் 'காந்தமலை பஞ்சகம்' எனும் தொகுப்பினை அருளியுள்ளார்.  

(ஸ்ரீஅரவிந்த் சுப்ரமண்யம் இயற்றியுள்ள 'மகா சாஸ்தா விஜயம்' எனும் புராண நூலில் இடம்பெறும் மணிதாசரின் 'காந்தமலை பஞ்சகம்'):
பூமலர் சோலைபால் நீராழி சூழவும் - புற்றில் ஈதேன் 
ஒழுகவும் - பொங்கியே வானோடி கல்லாலின் 
மூலமே - பொன்மணி பீடம் தன்னில் 

காமனுடைய வடிவு தன்மேல் ஒளிக்கோடி என 
காந்தமலை வாசனப்பன் கருணை ப்ரவாஹமாய் 
அருள் வீற்றிருக்கவும், 

காமாதி சரணமடைய வாச ப்ரபையாள் தன் வீணையின் 
நாதமும், மைந்தனும் கனிந்தாடவும், வானுலகம் 
ஈரேழும் ஸ்தாணுமாலயன் என்று சாஸ்தரை வணங்கி நிதமும் 

நியமமொடு ஸனகாதி முனி வானோர் ஜெய ஜெய என்றுமே 
ஸ்துதி செய்யவும் (காணுவாம்) நேமி சிவகாமி தன் 
நேசனுடைய மைந்தனே! நித்யனே! முக்தி வடிவே!!

கருங்கடல் வண்ணரான மகா சாஸ்தா (கந்த புராண விளக்கங்கள்):

சிவ விஷ்ணு தத்துவங்களின் சங்கமத்தினின்றும் தோன்றிய மகா சாஸ்தாவைப் பொன்நிற மேனியராய் உருவகித்து வரையப் பெற்றுள்ள பல படங்களை இணைய தளங்களிலும் முகநூல் பதிவுகளிலும் காண்கின்றோம். இருப்பினும் கச்சியப்பரின் கந்த புராணம் 'மைக்கருங்கடல் மேனியர்' என்றே ஹரிஹர புத்திரரின் திருமேனி நிறத்தினை வர்ணிக்கின்றது,
-
(அசுர காண்டம்: மகா சாத்தா படலம்: திருப்பாடல் 49)
மைக்கருங்கடல் மேனியும் வானுலாம்
செக்கர் வேணியும் செண்டுறு கையுமாய்
உக்கிரத்துடன் ஓர்மகன் சேர்தலும்
முக்கண் எந்தை முயக்கினை நீங்கினான்

இறைவன் எத்தகைய வடிவத்திலும் நிறத்திலும் தோன்றும் சர்வ வல்லமை பொருந்தியவன் எனினும் புராணங்கள் முன்னிறுத்தும் இறை வடிவங்களை அதன் வழி நின்று உபாசிப்பதே நலன்கள் யாவையும் பெற்றுத்தர வல்லது. 'மழை வண்ணத்து அண்ணலே' என்று ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியைப் போற்றுவார் கவிச்சக்கரவர்த்தி, ஹரிஹர குமாரர் ஆகையால் 'ஹரியாகிய ஸ்ரீமகாவிஷ்ணுவின் திருமேனி நிறத்தில் தோன்றி அருள்பவர் மகா சாஸ்தா' எனும் புரிதல் அவசியமாகின்றது (சிவ சிவ)!!!.

தர்ம சாஸ்தா அஷ்டோத்திரம்:

ஹரிஹர புத்திரரான மகா சாஸ்தாவிற்கு 4 முதல் 5 அஷ்டோத்திரங்கள் இருப்பினும், சுவாமி ஐயப்பன் மற்றும் சாஸ்தா பூஜைக்கு, 108 திருநாமங்களைக் கொண்ட பின்வரும் அஷ்டோத்திரமே பொதுவில் பயன்படுத்தப் பெற்று வருகின்றது, 

1. ஓம் மஹாசாஸ்த்ரே நம
2. ஓம் விச்வ சாஸ்த்ரே நம
3. ஓம் லோக சாஸ்த்ரே நம
4. ஓம் தர்ம சாஸ்த்ரே நம
5. ஓம் வேத சாஸ்த்ரே நம
6. ஓம் கால சாஸ்த்ரே நம
7. ஓம் கஜாதிபாய நம
8. ஓம் கஜாரூடாய நம
9. ஓம் கணாத்யஷாய நம
10. ஓம் வ்யாக்ராரூடாய நம
11. ஓம் மஹாத்யுதயே நம
12. ஓம் கோப்த்ரே நம
13. ஓம் கீர்வாண ஸம்ஸேவ்யாய நம
14. ஓம் கதாதங்காய நம
15. ஓம் கதாக்ரண்யை நம
16. ஓம் ரிக்வேத ரூபாய நம
17. ஓம் நக்ஷத்ராய நம
18. ஓம் சந்த்ர ரூபாய நம
19. ஓம் வலாஹகாய நம
20. ஓம் தூர்வாச்யாமாய நம
21. ஓம் மஹாரூபாய நம
22. ஓம் க்ரூரத்ருஷ்டயே நம
23. ஓம் அனாமயாய நம
24. ஓம் த்ரிநேத்ராய நம
25. ஓம் உத்பலாகாராய நம
26. ஓம் காலஹந்த்ரே நம
27. ஓம் நராதிபாய நம
28. ஓம் கண்டேந்து மௌளி தனயாய நம
29. ஓம் கல்ஹாரகுஸுமப்ரியாய நம
30. ஓம் மதனாய நம
31. ஓம் மாதவஸுதாய நம
32. ஓம் மந்தார குஸுமார்சிதாய நம
33. ஓம் மஹாபலாய நம
34. ஓம் மஹோத்ஸாஹாய நம
35. ஓம் மஹாபாப விநாசநாய நம
36. ஓம் மஹா சூராய நம
37. ஓம் மஹா தீராய நம
38. ஓம் மஹா ஸர்ப்ப விபூஷணாய நம
39. ஓம் அஸிஹஸ்தாய நம
40. ஓம் சரதராய நம
41. ஓம் ஹாலாஹலதராத்மஜாய நம
42. ஓம் அர்ஜுநேசாய நம
43. ஓம் அக்னிநயநாய நம
44. ஓம் அநங்க மதனாதுராய நம
45. ஓம் துஷ்ட க்ரஹாதிபாய நம
46. ஓம் ஸ்ரீ தாய நம
47. ஓம் சிஷ்டரக்ஷண தீக்ஷிதாய நம
48. ஓம் கஸ்தூரி திலகாய நம
49. ஓம் ராஜசேகராய நம
50. ஓம் ராஜ ஸத்தமாய நம
51. ஓம் ராஜ ராஜார்சிதாய நம
52. ஓம் விஷ்ணு புத்ராய நம
53. ஓம் வனஜனாதிபாய நம
54. ஓம் வர்ச்சஸ்கராய நம
55. ஓம் வரருசயே நம
56. ஓம் வரதாய நம
57. ஓம் வாயுவாஹனாய நம
58. ஓம் வஜ்ர காயாய நம
59. ஓம் கட்க பாணயே நம
60. ஓம் வஜ்ர ஹஸ்தாய நம
61. ஓம் பலோத்ததாய நம
62. ஓம் த்ரிலோகக்ஞாய நம
63. ஓம் அதிபலாய நம
64. ஓம் புஷ்கலாய நம
65. ஓம் வ்ருத்த பாவனாய நம
66. ஓம் பூர்ணாதவாய நம
67. ஓம் புஷ்கலேசாய நம
68. ஓம் பாசஹஸ்தாய நம
69. ஓம் பயாபஹாய நம
70. ஓம் பட்கார ரூபாய நம
71. ஓம் பாபக்னாய நம
72. ஓம் பாஷண்ட ருதிராசனாய நம
73. ஓம் பஞ்ச பாண்டவ ஸந்த்ராத்ரே நம
74. ஓம் ப்ரபஞ்சாக்ஷ ராச்ரிதாய நம
75. ஓம் பஞ்சவக்த்ர ஸுதாய நம
76. ஓம் பூஜ்யாய நம
77. ஓம் பண்டிதாய நம
78. ஓம் பரமேச் வராய நம
79. ஓம் பவதாப ப்ரசமனாசாய நம 
80. ஓம் பக்தாபீஷ்ட ப்ரதாயகாய நம 
81. ஓம் கவயே நம
82. ஓம் கவீ நாமதிபாய நம
83. ஓம் க்ருபாளவே நம
84. ஓம் க்லேச நாசனாய நம
85. ஓம் ஸமாய நம
86. ஓம் அரூபாய நம
97. ஓம் ஸேநான்யை நம
88. ஓம் பக்த ஸம்பத் ப்ரதாயகாய நம
89. ஓம் வ்யாக்ர சர்மதராய நம
90. ஓம் சூலினே நம
91. ஓம் கபாலினே நம
92. ஓம் வேணு வாதனாய நம
93. ஓம் கலாரவாய நம
94. ஓம் கம்புகண்ட்டாய நம
95. ஓம் கிரீடாதி விபூஷிதாய நம
96. ஓம் தூர்ஜடயே நம
97. ஓம் விரநிலாய நம
98. ஓம் வீராய நம
99. ஓம் விரேந்த்ர வந்திதாய நம
100. ஓம் விச்வரூபாய நம
101. ஓம் வ்ருஷபதயே நம
102. ஓம் விவிதார்த்த பலப்ரதாய நம
103. ஓம் தீர்க்க நாஸாய நம
104. ஓம் மஹாபாஹவே நம
105. ஓம் சதுர்பாஹவே நம
106. ஓம் ஜடாதராய நம
107. ஓம் ஸநகாதிமுனிச்ரேஷ்ட ஸ்துத்யா நம
108. ஓம் ஹரிஹராத்மஜாய நம

சுவாமி ஐயப்பனின் திருஅவதார நட்சத்திரம் (மார்கழி உத்திரம்):

தற்பொழுது நடந்தேறி வரும் கலியுக காலகட்டத்தில், சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் மூல தெய்வமான மகா சாஸ்தா பந்தள தேசத்தில், பம்பை ஆற்றங்கரையில் சுவாமி ஐயப்பனாக திருஅவதாரம் செய்த திருநட்சத்திரம் 'மார்கழி உத்திரம்'. 

பலகோடி வருடங்களுக்கு முந்தைய பாற்கடல் கடையப் பெற்ற காலகட்டத்தில், சிவ விஷ்ணு தத்துவங்களின் சங்கமத்திலிருந்து மூல தெய்வமான மகாசாஸ்தா தோன்றிய திருநட்சத்திரம் 'பங்குனி உத்திரம்'.

ஆண்டு தோறும் இவ்விரு தினங்களையும் அவசியம் நினைவு கூர்ந்து ஐயனைப் போற்றித் துதித்து உய்வு பெறுவோம் (சிவசக்தி ஐக்ய சுவரூபனே சரணம் ஐயப்பா)!!!

சபரிமலை ஜோதி தானாகத் தோன்றுவதா அல்லது ஏற்றப்படுவதா ? (சில விளக்கங்கள்):

எண்ணற்ற யுகங்களாக நமது இந்து தர்மம் தனித்தன்மையுடன் நிலைபெற்றுப் பிரகாசித்து வருவது அதன் உன்னதமான கோட்பாடுகளாலும், தெளிவான சித்தாந்தங்களினாலும் மட்டுமேயன்றி எவ்வித அதிசய நிகழ்வுகளாலும் அற்புதங்களாலும் அல்ல எனும் தெளிவான புரிதலோடு இப்பதிவினை அணுகுதல் வேண்டும். 3 ஆண்டுகளுக்கு ஒரு முறையும், 12 ஆண்டுகளுக்கு ஒரு முறையும் நடந்தேறும் அர்த்த, மகா கும்பமேளா விழாக்களில் கோடிக் கணக்கான இந்துக்கள் பங்கேற்றுப் புண்ணிய நீராடி வருவது கண்கூடு.

2013ல் திரிவேணி சங்கமத்தில் நடந்தேறிய கும்பமேளாவில் கலந்து கொண்ட இந்துக்களின் எண்ணிக்கை மட்டுமே சுமார் 10 கோடி. இவை தவிர ஆண்டு தோறும் நடந்தேறும் மாசி மக உற்சவம்; 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடந்தேறும் மகாமகப் பெருவிழா; பூரியில் நடந்தேறும் ரத யாத்திரை ஆகிய நிகழ்வுகளில் எண்ணிலடங்கா பக்தர்கள் பெரும் ஆர்வத்துடனும், உறுதி மாறாத பக்தியுடனும் கலந்து கொண்டு வழிபடுகின்றனர். இந்த உற்சவங்கள் யாவுமே மிகவும் இயல்பானவை, எவ்வித அதிசயங்களையும் உள்ளடக்கியவையன்று.

மகர சங்கராந்தி தினமன்று வானில் தோன்றும் திருநட்சத்திரமே 'மகர ஜோதி' என்று குறிக்கப் பெறும். அதே சமயத்தில் 'பொன்னம்பல மேட்டில்' நிகழ்ந்தேறும் தீபாராதனையே 'ஜோதி தரிசனம்' என்றும் 'மகர விளக்கு' என்றும் தொன்றுதொட்டு நிலவி வருகின்றது. அடியவர்கள் கடும் நியமத்துடன் சபரி மலைக்கு யாத்திரை மேற்கொள்வது அம்மலையில் கிடைக்கப் பெறும் தெய்வீக அனுபவத்திற்காகவும், ஐயனின் பரமானந்த தரிசனத்துக்காகவுமே அன்றி வேறெந்த அற்புத நிகழ்வுகளுக்காகவும் அன்று.
இந்துக்கள் ஆழ்ந்த சமயப் புரிதல் கொண்டு விளங்குபவர்கள். திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவில், கண்ணெதிரிலேயே ஏற்றப்படும் திருஅண்ணாமலையார் தீபச் சுடரைத் தரிசிக்க சுமார் 30 லட்சம் பக்தர்கள் கூடுகின்றனரே, இதை விடவும் வேறென்ன சான்று கூறி விட இயலும்? தானாகத் தோன்றும் தீபச்சுடரில் தெய்வத் தன்மை மிகுந்திருக்கும் என்றோ அடியவர்களால் ஒளியேற்றப்படும் ஜோதியில் சானித்யம் குறைவு என்றோ ஐயனின் அடியவர்கள் கனவிலும் கருதுவதில்லை.

ஒரு சாதாரண கல்லினை வேத மந்திரங்களாலும் இன்ன பிற குடமுழுக்குச் சடங்குகளாலும் கடவுளாக மாற்றும் வல்லமையை இறைவன் நமது இந்து தர்மத்துக்கு அருளியிருப்பது நிதர்சனமன்றோ! மகர ஜோதி அற்புதங்களில் ஒன்று என்றோ, தானாகத் தோன்றுவது என்றோ எவரொருவரும் எக்காலத்திலும் விளம்பரப்படுத்தியதும் இல்லை, அப்படியெல்லாம் அறிவித்துக் கூட்டம் சேர்க்க வேண்டிய எந்தவொரு அவசியமும் நம் இந்து மதத்திற்கும் இல்லை. 'மகர ஜோதி திருவண்ணாமலை தீபம் போலவே வழிவழியாய் நடைமுறையிலுள்ள ஒரு உத்தமமான மரபு' என்ற அளவில் இதனைப் புரிந்து கொள்வதே செய்யத் தக்கது. 

ஜோதி தரிசனம் காண, கூட்ட நெரிசலையும்; உடல் துன்பத்தையும்; இன்ன பிற இடர்களையும் பொருட்படுத்தாது 'சுவாமியே சரணம் ஐயப்பா' என்று உளமுருகிக் கதறும் லட்சோப லட்சம் அடியவர்களின் பிரார்த்தனைகளும், நியமத்தோடு கூடிய விரதமும் பலிக்குமாறு அந்த அருட்பெரும் ஜோதியில் சபரி ஐயன் ஆவிர்பவித்துப் பேரருள் புரிவான் என்பதே சத்தியம் (சத்ய சுவரூபனே சரணம் ஐயப்பா)!!!

மகர ஜோதி