காந்தமலை (மகா சாஸ்தாவிற்கென தனியே ஒரு முத்தி உலகம்):

ஆதிப் பரம்பொருளான சிவமூர்த்தி மகா சாஸ்தாவிற்கென ஒரு தனி உலகத்தையே அளித்து அருள் புரிந்ததாகக் கச்சியப்பரின் கந்தபுராணம் பறைசாற்றுகின்றது. 'மகா சாஸ்தா' படலத்தின் 51ஆம் திருப்பாடலில் "புவனம் ஈந்து புவனத்து இறையென அவனை நல்கி" எனும் முதல் இரு வரிகளால் இதனை அறியப் பெறுகின்றோம். அவ்வாறெனில் 'அந்த புவனத்தின் பெயர் தான் என்ன?' எனும் கேள்விக்கான விடையே 'காந்த மலை'.

அசுர காண்டம் - மகா சாஸ்தா படலம் (திருப்பாடல்கள் 50 - 51)
அத்தகும் திரு மைந்தற்கு அரிகர
புத்திரன் எனும் நாமம் புனைந்துபின்
ஒத்த பான்மை உருத்திரர் தம்மொடும்
வைத்து மிக்க வரம்பல நல்கியே
-
புவனம் ஈந்து புவனத்து இறையென
அவனை நல்கி அமரரும் மாதவர்
எவரும் ஏத்திடும் ஏற்றமும் நல்கினான்
சிவனது இன்னருள் செப்புதற் பாலதோ

108 வைணவ திவ்ய தேசங்களில் 'திருப்பாற்கடல்' மற்றும் 'ஸ்ரீவைகுந்தம்' எனும் இரு தலங்களை முத்தி பெற்ற ஆன்மாக்கள் மட்டுமே தரிசிக்க இயலும் என்பது அனைவரும் அறிந்ததே. அது போலவே பாரத தேசத்தின் வட எல்லையிலுள்ள திருக்கயிலை மலையும் விண்ணிலுள்ள திருக்கயிலைக்கான ஒரு குறியீடே, சிவமுத்தி பெறுவோர் சென்றடையும் திருக்கயிலையோ, சத்திய லோகம் உள்ளிட்ட 14 உலகங்களையும் தாண்டி, வைகுந்தம் மற்றும் திருப்பாற்கடலையும் கடந்து, கற்பனைக்கும் எட்டாத, தத்துவங்கள் யாவற்றையும் கடந்ததொரு பெருவெளியில் அமைந்துள்ளது. 

பிரதான தெய்வங்கள் ஒவ்வொன்றிற்கும் தனியேயொரு முத்தி உலகம் உண்டு, அது போல் மகா சாஸ்தாவையும், அவரது அவதாரமான சுவாமி ஐயப்பனையும் உபாசித்து முத்தி பெறுவோர் காந்த மலையினை அடைந்துத் திருவருள் வெள்ளத்தில் அமிழ்ந்திருப்பர். 

காந்த மலையில் மகா சாஸ்தா கோடி சூர்ய பிரகாசராய் பூரணா; புஷ்கலா தேவியருடன் ஆச்சரியமாய் எழுந்தருளி இருப்பார், காந்த மலைக்கு ஐயனின் பரம அடியவரான மணிதாசர் 'காந்தமலை பஞ்சகம்' எனும் தொகுப்பினை அருளியுள்ளார்.  

(ஸ்ரீஅரவிந்த் சுப்ரமண்யம் இயற்றியுள்ள 'மகா சாஸ்தா விஜயம்' எனும் புராண நூலில் இடம்பெறும் மணிதாசரின் 'காந்தமலை பஞ்சகம்'):
பூமலர் சோலைபால் நீராழி சூழவும் - புற்றில் ஈதேன் 
ஒழுகவும் - பொங்கியே வானோடி கல்லாலின் 
மூலமே - பொன்மணி பீடம் தன்னில் 

காமனுடைய வடிவு தன்மேல் ஒளிக்கோடி என 
காந்தமலை வாசனப்பன் கருணை ப்ரவாஹமாய் 
அருள் வீற்றிருக்கவும், 

காமாதி சரணமடைய வாச ப்ரபையாள் தன் வீணையின் 
நாதமும், மைந்தனும் கனிந்தாடவும், வானுலகம் 
ஈரேழும் ஸ்தாணுமாலயன் என்று சாஸ்தரை வணங்கி நிதமும் 

நியமமொடு ஸனகாதி முனி வானோர் ஜெய ஜெய என்றுமே 
ஸ்துதி செய்யவும் (காணுவாம்) நேமி சிவகாமி தன் 
நேசனுடைய மைந்தனே! நித்யனே! முக்தி வடிவே!!

No comments:

Post a Comment