சைவத் திருமுறைகளில் ரிக் வேதச் சிறப்பு:

'சைவ சமயத்தின் அடிநாதமான ரிக்; யஜுர்; சாம; அதர்வண வேதங்களுள், ரிக் வேதத்தின் ஏற்றத்தினை நால்வர் பெருமக்களும் அருணகிரிப் பெருமானும் எவ்வாறு பதிவு செய்துள்ளனர்' என்பதனை இப்பதிவில் உணர்ந்துத் தெளிவுறுவோம், 

'பூவார் கொன்றை' என்று துவங்கும் சீகாழித் திருப்பதிகத்தின் 10ஆம் திருப்பாடல்:
சிவபெருமான் ரிக் வேத மந்திரங்களில் முழுவதுமாய் நிறைந்து விளங்கும் தன்மையினை 'இருக்கின் மலிந்த இறைவரவர் போலாம்' என்று ஞானசம்பந்தப் பெருமான் போற்றுகின்றார், 
-
பெருக்கப் பிதற்றும் சமணர் சாக்கியர்
கரக்கும் உரையை விட்டார் காழியார்
இருக்கின் மலிந்த இறைவரவர் போலாம்
அருப்பின் முலையாள் பங்கத்தையரே.

திருப்பேரெயில் தல தேவாரத்தின் 6ஆம் திருப்பாடல்:
ரிக் வேத மந்திரங்களால் தொழுபவர்களின் துயரினைச் சிவபெருமான் போக்கி அருள்வதாகப் பதிவு செய்துப் போற்றுகின்றார் நாவுக்கரசு சுவாமிகள் ('இருக்கு வாய்மொழியால் தனையேத்துவார்'),  
-
திருக்கு வார்குழல் செல்வன் சேவடி
இருக்கு வாய்மொழியால் தனையேத்துவார்
சுருக்கு வார்துயர் தோற்றங்களாற்றறப்
பெருக்குவாரவர் பேரெயிலாளரே

திருக்கானாட்டுமுள்ளூர் தலத் திருப்பதிகத்தின் 5ஆம் திருப்பாடல்:
ரிக் வேதங்களை ஓதும் அந்தணர்கள் அத்தலத்தில் நிறைந்து விளங்கும் தன்மையினைப் பதிவு செய்கின்றார் சுந்தரர் ('இருக்குவாய் அந்தணர்கள்'),
-
செருக்குவாய்ப் பைங்கண் வெள்ளரவரையினானைத்
    தேவர்கள் சூளாமணியைச் செங்கண் விடையானை
முருக்குவாய் மலரொக்கும் திருமேனியானை
    முன்னிலையாய் முழுதுலகமாய பெருமானை
இருக்குவாய் அந்தணர்கள் எழுபிறப்புள் எங்கும்
    வேள்வியிருந்திருநிதியம் வழங்கு நகரெங்கும்
கருக்குவாய்ப் பெண்ணையொடு தெங்குமலி சோலைக்
    கானாட்டுமுள்ளூரில் கண்டுதொழுதேனே

திருவாசகத்தின் திருப்பள்ளியெழுச்சி 4ஆம் திருப்பாடல்: திருப்பெருந்துறையில் எழுந்தருளியுள்ள சிவபெருமானை வேதியர்கள் ரிக் வேத மந்திரங்களால் போற்றுவதாகப் பதிவு செய்கின்றார் மணிவாசப் பெருமான் ('இருக்கொடு தோத்திரம் இயம்பினர் ஒருபால்'), 
-
இன்னிசை வீணையர் யாழினர் ஒருபால்
    இருக்கொடு தோத்திரம் இயம்பினர் ஒருபால்
துன்னிய பிணைமலர்க் கையினர் ஒருபால்
    தொழுகையர் அழுகையர் துவள்கையர் ஒருபால்
சென்னியில் அஞ்சலி கூப்பினர் ஒருபால்
    திருப்பெருந்துறையுறை சிவபெருமானே
என்னையும் ஆண்டு கொண்டின்னருள் புரியும்
    எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே

'அருக்கு மங்கையர்' என்று துவங்கும் திருப்பரங்குன்றத் திருப்புகழ்:
'சப்த ரிஷிகளான அகத்தியர்; அத்திரி; பரத்வாஜர்; கௌதமர்; ஜமதக்னி; வசிஷ்டர்; விஸ்வாமித்ரர் ஆகியோருக்கு முருகப் பெருமான் ரிக் வேத மந்திரங்களை உபதேசித்து அருளினான்' என்று அருணகிரிப் பெருமான் பதிவு செய்கின்றார்,  
..
இருக்கு மந்திரம் எழுவகை முனிபெற 
உரைத்த சம்ப்ரம சரவண பவகுக
இதத்த இங்கிதம் இலகிய அறுமுக எழில்வேளென்
...

சைவத் திருமுறைகளில் சாம வேதச் சிறப்பு:

நால்வேதங்களில் சிவபெருமானுக்கு மிகவும் உகந்தது இசை வடிவான சாம வேதம், இனி தேவார மூவரும், தெய்வச் சேக்கிழாரும், அருணகிரிப் பெருமானும் சாம வேதச் சிறப்பினை எவ்வாறு போற்றிப் பரவியுள்ளனர் என்று இப்பதிவினில் உணர்ந்துத் தெளிவுறுவோம், 

திருஞானசம்பந்தர் தேவாரம்:
1. 'கண்ணுதலானும்' என்று துவங்கும் திருப்புகலி திருப்பதிகத்தில் 'சாமநல் வேதனும் தக்கன்தன் வேள்வி தகர்த்தானும்

2. 'இறையவன் ஈசன்எந்தை' என்று துவங்கும் திருப்பிரமபுர திருப்பதிகத்தில் 'சடையினன் சாமவேதன்'

3. 'பொங்குநூல் மார்பினீர்' என்று துவங்கும் திருவிடைமருதூர் திருப்திகத்தில் 'தங்கு செஞ்சடையினீர் சாமவேதம் ஓதினீர்

4. திருவாழ்கொளிபுத்தூர் திருப்பதிகத்தின் முதல் வரியிலேயே 'சாகை ஆயிரமுடையார சாமமும் ஓதுவதுடையார்'

திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரம்:
1. 'சந்திரனை மாகங்கை' என்று துவங்கும் திருவதிகை திருப்பதிகத்தில் 'சாம வேத கந்தருவம் விரும்புமே'

2. 'மடக்கினார்' என்று துவங்கும் திருவதிகை திருப்பதிகத்தில் 'பாடினார் சாம வேதம் பாடிய பாணியாலே'

3. 'வெள்ளத்தைச் சடையில்' என்று துவங்கும் திருவொற்றியூர் திருப்பதிகத்தில் 'சாமத்து வேதமாகி நின்றதோர் சயம்பு தன்னை'

சுந்தரர் தேவாரம்:
1. 'ஆலம்தான் உகந்து' என்று துவங்கும் திருக்கச்சி ஏகம்பத் திருப்பதிகத்தில் 'சாம வேதம் பெரிதுகப்பானை'

2. 'கொடுகு வெஞ்சிலை' என்று துவங்கும் திருமுருகன்பூண்டி திருப்பதிகத்தில் 'தயங்கு தோலை உடுத்துச் சங்கர சாம வேதமோதி'

சேக்கிழார் - பெரியபுராணம்:
1. குங்கிலியக் கலய நாயனார் புராணத்தில், 'குடங்கையின்' என்று துவங்கும் 3ஆம் திருப்பாடலில் 'வைதிக மறையோர் செய்கைச் சடங்குடை இடங்கள் தோறும் எழுவன சாமம் பாடல்'

2. திருஞானசம்பந்த மூர்த்தி புராணத்தின் 97ஆம் திருப்பாடலில் 'மங்கல தூரியம் துவைப்பார் மறைச்சாமம் பாடுவார்'

அருணகிரிநாதர் - திருப்புகழ்:
1. 'சீருலாவிய' என்று துவங்கும் திருப்போரூர் திருப்புகழில் 'சாம வேதியர் வானவரோதி நாண்மலர் தூவிய தாளில் வீழ வினாமிக அருள்வாயே'

 



யஜுர் வேத ஸ்ரீருத்ர பாராயணத்தைப் போற்றும் பெரிய புராணம்:

பெரிய புராணத்தின் உருத்திர பசுபதி நாயனார் புராணத்தில், 5 திருப்பாடல்களில் யஜுர் வேத மந்திரத் தொகுப்பான ஸ்ரீருத்ர பாராயணத்தைப் போற்றியுள்ளார் தெய்வச் சேக்கிழார். இனி அத்திருப்பாடல்களை இப்பதிவில் உணர்ந்துத் தெளிவுறுவோம், பொய்ப் பிரச்சாரங்களைப் புறம்தள்ளுவோம், 

4ஆம் திருப்பாடலில், வேத மந்திரமாகிய ஸ்ரீருத்ரத்தை நாயனார் இடையறாது பாராயணம் புரிந்து வந்ததைப் பதிவு செய்கின்றார், 
-
(உருத்திர பசுபதி நாயனார் புராணம் - திருப்பாடல் 4):
ஆய அந்தணர் அருமறை உருத்திரம் கொண்டு
மாயனார் அறியா மலர்ச் சேவடி வழுத்தும்
தூய அன்பொடு தொடர்பினில் இடையறாச் சுருதி
நேய நெஞ்சினராகி அத்தொழில் தலை நின்றார்

6ஆம் திருப்பாடலில் நாயனார், தெளிந்த குளத்து நீரில், கழுத்தளவு ஆழத்தில் நின்ற வண்ணம், உச்சி கூப்பிய கையினராய், மிகுந்த அன்புடன் ஸ்ரீருத்ர மந்திர பாராயணத்தால் சிவபெருமானைப் போற்றி வந்த தன்மையைப் பதிவு செய்கின்றார், 
-
(உருத்திர பசுபதி நாயனார் புராணம் - திருப்பாடல் 6):
தெள்ளு தண்புனல் கழுத்தளவாயிடைச் செறிய
உள்ளுறப்புக்கு நின்றுகை உச்சிமேல் குவித்துத்
தள்ளு வெண்திரைக் கங்கைநீர் ததும்பிய சடையார்
கொள்ளும் அன்பினில் உருத்திரம் குறிப்பொடு பயின்றார்

7ஆம் திருப்பாடலில், 'அருமறைப் பயனாகிய ஸ்ரீருத்ரம்' என்று அடைமொழி கொடுத்துப் போற்றுகின்றார் சேக்கிழார் பெருமான். 
-
(உருத்திர பசுபதி நாயனார் புராணம் - திருப்பாடல் 7):
அருமறைப் பயனாகிய உருத்திரம் அதனை
வருமுறைப் பெரும் பகலும் எல்லியும் வழுவாமே
திருமலர்ப் பொகுட்டிருந்தவன் அனையவர் சிலநாள்
ஒருமை உய்த்திட உமையிடம் மகிழ்ந்தவர் உவந்தார்

8ஆம் திருப்பாடலில், 'ஸ்ரீருத்ர பாராயணத்தை நியதியுடன் பாராயணம் புரிதலை சிவபெருமான் மிகவும் விரும்புகின்றார்' என்பதனை ஐயத்திற்கு இடமின்றிப் பதிவு செய்கின்றார், 
(உருத்திர பசுபதி நாயனார் புராணம் - திருப்பாடல் 8):
காதல் அன்பர்தம் அருந்தவப் பெருமையும் கலந்த
வேத மந்திர நியதியின் மிகுதியும் விரும்பி
ஆதி நாயகர் அமர்ந்தருள் செய்ய மற்றவர் தாம்
தீதிலா நிலைச் சிவபுரி எல்லையில் சேர்ந்தார்

9ஆம் திருப்பாடலில், 'ஸ்ரீருத்ர பாராயணம் ஒன்றினாலேயே சிவகதி பெற்றிருந்த தன்மையினால் 'உருத்திர பசுபதி நாயனார்' எனும் திருநாமமும் பெற்றார்' என்று பதிவு செய்கின்றார் தெய்வச் சேக்கிழார்,
-
(உருத்திர பசுபதி நாயனார் புராணம் - திருப்பாடல் 9):
நீடும் அன்பினில் உருத்திரம் ஓதிய நிலையால்
ஆடு சேவடி அருகுற அணைந்தனர் அவர்க்குப்
பாடு பெற்றசீர் உருத்திர பசுபதியாராம் 
கூடு நாமமும் நிகழ்ந்தது குவலயம் போற்ற

தமிழ்; சமஸ்கிருதம் இரண்டும் தெய்வ மொழிகளே (திருமந்திர விளக்கங்கள்):

பொதுவில் ஊடங்கங்களில் நடந்தேறும் சமய விவாதங்களில், நம் தென்னக மொழியான தீந்தமிழ் மட்டுமே தெய்வ மொழியென்றும், வடமொழியான சமஸ்கிருதம் தேவ பாஷை என்றும் தொடர்ப் பரப்புரை நடந்தேறி வருகின்றது. 63 நாயன்மார்களுள் ஒருவராகப் போற்றப் பெறும் நம் திருமூலர் இவ்விரு மொழிகளையும் வைதீக சைவ சமயத்தின் இரு கண்களெனவே கொண்டு போற்றியுள்ளார், இனி இப்பதிவில் இது தொடர்பான இரு முக்கியத் திருப்பாடல்களை உணர்ந்துத் தெளிவுறுவோம்,  

'சிவபரம்பொருள் உமையன்னைக்கு, பிரளய காலம் நிறைவுறும் வேளையில், ஆன்மாக்கள் உய்யும் மார்க்கங்களைத் தென்னக மொழியான தமிழிலும்; வடமொழியான சமஸ்கிருதத்திலும் உபதேசித்து அருள் செய்தார்' என்று திருமூலர் பதிவு செய்கின்றார், 

(திருமந்திரம் - ஆகமச் சிறப்பு - திருப்பாடல் 8):
மாரியும் கோடையும் வார்பனி தூங்க!நின்
றேரியும் நின்றங்கிளைக்கின்ற காலத்து
ஆரியமும் தமிழும் உடனே சொலிக்
காரிகையார்க்குக் கருணை செய்தானே!!

'இவ்விதமாய் மறை முதல்வரான சிவமூர்த்தி அம்பிகைக்கு உணர்த்தியருளிய ஆன்ம நுட்பங்களைத் தமிழ்; வடமொழியான சமஸ்கிருதம் இவையிரண்டாலுமே உணரப் பெறலாம்' என்று மற்றுமொரு முறை 'இம்மொழிகளுக்குள் பேதம் கற்பித்தல்' தகாது என்று அறிவுறுத்துகின்றார் திருமூல நாயனார், 

(திருமந்திரம் - ஆகமச் சிறப்பு - திருப்பாடல் 9):
அவிழ்க்கின்றவாறும் அதுகட்டுமாறும் 
சிமிழ்த்தலைப் பட்டுயிர் போகின்றவாறும்
தமிழ்ச்சொல் வடசொல் எனும் இவ்விரண்டும்
உணர்த்தும் அவனை உணரலுமாமே!!!

இவ்வாறாக, நம் பாரத தேசத்தின் ஒப்புவமையற்ற இரு மொழிகளையும் சிவபெருமானே அருளியுள்ள தன்மையினால், இவையிரண்டும் தெய்வ மொழிகளே என்பது தெளிவு (சிவ சிவ)!!!

தமிழ்; வடமொழி இரண்டையும் ஒருமைப்படுத்திப் போற்றும் சைவத் திருமுறைகள்:

(திருஞானசம்பந்தர் தேவாரம்):

'பட்டம் பால்நிற' என்று துவங்கும் 'திருப்புகலூர் வர்த்தமானீச்சரம்' திருப்பதிகத்தின் 7ஆம் திருப்பாடல்:

தென்சொல் விஞ்சமர் வடசொல் திசைமொழி எழினரம்பெடுத்துத்
துஞ்சு நெஞ்சிருள் நீங்கத் தொழுதெழு தொல்புகலூரில்
அஞ்சனம் பிதிர்ந்தனைய வலைகடல் கடையஅன்றெழுந்த
வஞ்ச நஞ்சணி கண்டர் வர்த்தமானீச்சரத்தாரே
-
'மானினேர்விழி' என்று துவங்கும் திருஆலவாய்த் திருப்பதிகத்தின் 4ஆம் திருப்பாடல்:

சந்துசேனனும் இந்துசேனனும் தருமசேனனும் கருமைசேர்
கந்துசேனனும் கனகசேனனும் முதலதாகிய பெயர்கொளா
மந்திபோல்திரிந்து ஆரியத்தொடு செந்தமிழ்ப்பயன் அறிகிலா
அந்தகர்க்கெளியேன் அலேன் திருஆலவாயரன் நிற்கவே
-
'பொன் திரண்டன்ன' என்று துவங்கும் திருஅச்சிறுப்பாக்கத் திருப்பதிகத்தின் 4ஆம் திருப்பாடல்:

மைம்மலர்க்கோதை மார்பினர் எனவும் மலைமகள் அவளொடு மருவினரெனவும்
செம்மலர்ப்பிறையும் சிறையணிபுனலும் சென்னி மேலுடையர் என்சென்னிமேலுறைவார்
தம்மலரடிஒன்றடியவர் பரவத் தமிழ்ச்சொலும் வடசொலும் தாள்நிழல்சேர
அம்மலர்க்கொன்றை அணிந்தஎம்அடிகள் அச்சிறுபாக்கமது ஆட்சி கொண்டாரே!!!

(திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரம்):

'வானவன் காண்' என்று துவங்கும் திருச்சிவபுரத் திருப்பதிகத்தின் 1ஆம் திருப்பாடல்:

வானவன்காண் வானவர்க்கு மேலானான் காண்
வடமொழியும் தென்தமிழும் மறைகள் நான்கும்
ஆனவன்காண் ஆனைந்தும் ஆடினான்காண்
ஐயன்காண் கையிலனல் ஏந்தியாடும்
கானவன்காண் கானவனுக்கருள் செய்தான்காண்
கருதுவார் இதயத்துக் கமலத்தூறும்
தேனவன்காண் சென்றடையாச் செல்வன் தான்காண்
சிவனவன்காண் சிவபுரத்தெம் செல்வன் தானே!!!
-
'முற்றிலாமுலை' என்று துவங்கும் திருக்கடம்பந்துறை திருப்பதிகத்தின் 3ஆம் திருப்பாடல்: 

ஆரியம் தமிழோடிசையானவன்
கூரிய குணத்தார் குறி நின்றவன்
காரி கை உடையான் கடம்பந்துறைச்
சீரியல் பத்தர் சென்றடைமின்களே!!!
-
'நம்பனை நால்வேதம் கரை கண்டானை' என்று துவங்கும் திருஆவடுதுறை திருப்பதிகத்தின் 10ஆம் திருப்பாடல்:

பந்தணவு மெல்விரலாள் பாகன் தன்னைப்
பாடலோடாடல் பயின்றான் தன்னைக்
கொந்தணவு நறும்கொன்றை மாலையானைக்
கோலமா நீலமிடற்றான் தன்னைச்
செந்தமிழோடு ஆரியனைச் சீரியானைத்
திருமார்பில் புரிவெண்ணூல் திகழப் பூண்ட
அந்தணனை ஆவடுதண்துறையுள் மேய
அரனடியே அடிநாயேன் அடைந்துய்ந்தேனே!!!
-
'தூண்டு சுடரனைய' என்று துவங்கும் திருமறைக்காட்டுத் திருப்பதிகத்தின் 5ஆம் திருப்பாடல்:

மூரி முழங்கொலி நீரானான் கண்டாய்
முழுத்தழல்போல் மேனி முதல்வன் கண்டாய்
ஏரி நிறைந்தனைய செல்வன் கண்டாய்
இன்னடியார்க்கின்பம் விளைப்பான் கண்டாய்
ஆரியன் கண்டாய் தமிழன் கண்டாய்
அண்ணா மலையுறையெம் அண்ணல் கண்டாய்
வாரி மதகளிறே போல்வான் கண்டாய்
மறைக்காட்டுறையும் மணாளன் தானே!!!

(11ஆம் திருமுறை திருத்தொண்டர் திருவந்தாதி)

72ஆம் திருப்பாடல்:

தொகுத்த வடமொழி தென்மொழி
    யாதொன்று தோன்றியதே
மிகுத்த வியலிசை வல்ல
    வகையில்விண் தோயுநெற்றி
வகுத்த மதில்தில்லை !அம்பலத்
    தான் மலர்ப் பாதங்கள்மேல்
உகுத்த மனத்தொடும் !பாடவல்
    லோரென்பர் உத்தமரே!!!

(பெரிய புராணம்): 

ஐயடிகள் காடவர்கோன் நாயனார் புராணத்தின் 3ஆம் திருப்பாடல்:

மன்னவரும் பணிசெய்ய
    வடநூல்தென் தமிழ்முதலாம்
பன்னுகலை பணிசெய்யப்
    பார்அளிப்பார் அரசாட்சி
இன்னல்என இகழ்ந்ததனை
    எழிற்குமரன் மேல்இழிச்சி
நன்மைநெறித் திருத்தொண்டு
    நயந்தளிப்பார் ஆயினார்

பெரியாழ்வார் பாசுரத்தில் ரிக்; யஜுர்; சாம; அதர்வண வேதங்கள்:

பன்னிரு ஆழ்வார்களுள் ஒருவராகப் போற்றப் பெறும் பெரியாழ்வார் பின்வரும் திருப்பாசுரத்தில், 'ஓம் நமோ நாராயணாய எனும் அஷ்டாஷர மந்திரத்தை உச்சரிக்காத நாட்களும், ரிக்; யஜுர்; சாம; அதர்வண வேத  மந்திரங்களால் பூசிக்காத நாட்களும் உண்ணாதொழிந்த நாட்களே' என்று வைதீக தர்மத்தின் அடிநாதமான நான்மறைகளின் ஏற்றத்தினைப் பதிவு செய்துப் போற்றுகின்றார், 

(பெரிய திருமொழி - நான்காம் பத்து: 10ஆம் திருமொழி):
கண்ணா நான்முகனைப் படைத்தானே காரணா கரியாய் அடியேன்நான்
உண்ணா நாள் பசியாவதொன்றில்லை ஓவாதே நமோ நாரணாவென்று
எண்ணா நாளும் இருக்கெசுச் சாம வேத நாண்மலர் கொண்டுஉன் பாதம்
நண்ணா நாள்அவை தத்துறுமாகில் அன்று எனக்கு அவை பட்டினி நாளே

திருஅச்சிறுப்பாக்க தேவாரத்தில் தமிழும் வடமொழியும் (தமிழ்ச் சொலும் வடசொலும் தாள்நிழல் சேர):

'தெய்வத் தமிழ் மொழியிலுள்ள பனுவல்களும், வடமொழியிலுள்ள நால்வேதப் பாராயணங்கள்; தோத்திரங்கள்; மற்றும் அர்ச்சனை மந்திரங்களும் சிவபெருமானின் திருவடிகளில் அர்ச்சனை மலர்களாகச் சென்று சேர்கின்றன' என்று வைதீக மொழியையும்; தமிழையும் ஒருமைப்படுத்தியும், சிறப்பித்தும் போற்றுகின்றார் நம் ஞானசம்பந்தப் பெருமான். 

(திருஅச்சிறுப்பாக்கம் - திருஞானசமபந்தர் தேவாரம் - திருப்பாடல் 4)
மைம்மலர்க்கோதை மார்பினர் எனவும் மலைமகள்அவளொடு மருவினரெனவும்
செம்மலர்ப்பிறையும் சிறையணிபுனலும் சென்னிமேலுடையர் என்சென்னிமேலுறைவார்
தம்மலரடிஒன்றடியவர் பரவத் தமிழ்ச்சொலும் வடசொலும் தாள்நிழல்சேர
அம்மலர்க்கொன்றை அணிந்தஎம்அடிகள் அச்சிறுபாக்கமது ஆட்சி கொண்டாரே!!!