தமிழ்; சமஸ்கிருதம் இரண்டும் தெய்வ மொழிகளே (திருமந்திர விளக்கங்கள்):

பொதுவில் ஊடங்கங்களில் நடந்தேறும் சமய விவாதங்களில், நம் தென்னக மொழியான தீந்தமிழ் மட்டுமே தெய்வ மொழியென்றும், வடமொழியான சமஸ்கிருதம் தேவ பாஷை என்றும் தொடர்ப் பரப்புரை நடந்தேறி வருகின்றது. 63 நாயன்மார்களுள் ஒருவராகப் போற்றப் பெறும் நம் திருமூலர் இவ்விரு மொழிகளையும் வைதீக சைவ சமயத்தின் இரு கண்களெனவே கொண்டு போற்றியுள்ளார், இனி இப்பதிவில் இது தொடர்பான இரு முக்கியத் திருப்பாடல்களை உணர்ந்துத் தெளிவுறுவோம்,  

'சிவபரம்பொருள் உமையன்னைக்கு, பிரளய காலம் நிறைவுறும் வேளையில், ஆன்மாக்கள் உய்யும் மார்க்கங்களைத் தென்னக மொழியான தமிழிலும்; வடமொழியான சமஸ்கிருதத்திலும் உபதேசித்து அருள் செய்தார்' என்று திருமூலர் பதிவு செய்கின்றார், 

(திருமந்திரம் - ஆகமச் சிறப்பு - திருப்பாடல் 8):
மாரியும் கோடையும் வார்பனி தூங்க!நின்
றேரியும் நின்றங்கிளைக்கின்ற காலத்து
ஆரியமும் தமிழும் உடனே சொலிக்
காரிகையார்க்குக் கருணை செய்தானே!!

'இவ்விதமாய் மறை முதல்வரான சிவமூர்த்தி அம்பிகைக்கு உணர்த்தியருளிய ஆன்ம நுட்பங்களைத் தமிழ்; வடமொழியான சமஸ்கிருதம் இவையிரண்டாலுமே உணரப் பெறலாம்' என்று மற்றுமொரு முறை 'இம்மொழிகளுக்குள் பேதம் கற்பித்தல்' தகாது என்று அறிவுறுத்துகின்றார் திருமூல நாயனார், 

(திருமந்திரம் - ஆகமச் சிறப்பு - திருப்பாடல் 9):
அவிழ்க்கின்றவாறும் அதுகட்டுமாறும் 
சிமிழ்த்தலைப் பட்டுயிர் போகின்றவாறும்
தமிழ்ச்சொல் வடசொல் எனும் இவ்விரண்டும்
உணர்த்தும் அவனை உணரலுமாமே!!!

இவ்வாறாக, நம் பாரத தேசத்தின் ஒப்புவமையற்ற இரு மொழிகளையும் சிவபெருமானே அருளியுள்ள தன்மையினால், இவையிரண்டும் தெய்வ மொழிகளே என்பது தெளிவு (சிவ சிவ)!!!

No comments:

Post a Comment