ஸ்ரீராமர் ஏன் இலங்கைக்குப் பறந்து செல்லவில்லை? (காஞ்சி மகாப் பெரியவரின் அற்புத விளக்கங்கள்):

ஸ்ரீராமர் ஏன் இலங்கைக்குப் பறந்து செல்லவில்லை? இராவணன் கடத்திச் செல்லும் பொழுது சீதையின் கூக்குரல் ஏன் இராமனுக்கு கேட்கவில்லை, எனில் அவர் எப்படி கடவுளாக இருந்திருக்க முடியும்? (காஞ்சி மகாப் பெரியவரின் அற்புத விளக்கங்கள்):

"இராவணன் சீதையைத் தூக்கிக் கொண்டு போனபோது, ஒரே மைல் தூரத்திலிருந்த ராமனுக்கு சீதை போட்ட கூச்சல் காதில் விழவில்லையாம், அப்படிப்பட்டவனை இப்போது பக்தர்கள் கூப்பிட்டால் என்ன பிரயோஜனம்?" என்று கேலி செய்து கேட்டவர்கள், எழுதியவர்கள் இருக்கிறார்கள். இவர்கள், ராமனாக இந்த உலகத்தில் வாழ்ந்த போது மனுஷ்ய வேடத்தில் இருந்தான்; மநுஷ்யர்களைப் போலவே வாழ்ந்தான் என்பதை மறந்துப் பேசுகிறார்கள்.

ஒரு நாடகம் நடக்கிறது, இராமாயண நாடகம் தான். அதில் லவ; குசர்களை வால்மீகி இராமனிடம் அழைத்து வருகிறார், ராஜபார்ட் ராமசுவாமி அய்யங்கார் இராமனாக வேடம் போட்டிருக்கிறார். அவருடைய சொந்த பிள்ளைகளே நாடகத்தில் லவ; குசர்களாக நடிக்கிறார்கள். நாடக இராமன் வால்மீகியைப் பார்த்து 'இந்த குழந்தைகள் யார்' என்று கேட்கிறார். ராமசுவாமி அய்யங்காருக்குத் தன்னுடைய சொந்த பிள்ளைகளையே தெரியவில்லை என்று நாடகம் பார்க்கிறவர்கள் கேலி செய்யலாமா? நாடக வால்மீகி 'இவர்கள் ராஜபார்ட் ராமசுவாமி அய்யங்காரின் பிள்ளைகள்; நீங்கள் தானே அந்த ராமசுவாமி அய்யங்கார்! என்று பதில் சொன்னால் எத்தனை ரசாபாசமாக இருக்கும்? வாஸ்தவத்தில் தெரிந்ததை, நாடகத்தில் இல்லாததாக, தெரியாததாகத் தான் நடிக்க வேண்டும்.

ஸ்ரீராமன் பூலோகத்தில் வாழ்ந்தபோது இப்படித் தான் மனுஷ்ய வேஷம் போட்டுக் கொண்டு தம் வாஸ்தவமான சக்தியையும் ஞானத்தையும் மறைத்துக் கொண்டு வாழ்ந்தார். வேதப் பொருளான பரமாத்மா தசரதனின் குழந்தையாக வேடம் போட்டுக் கொண்டவுடன், வேதங்களும் வால்மீகியின் குழந்தையாக, இராமாயணமாக வந்துவிட்டது. அந்த இராமாயணம் முழுக்க எங்கு பார்த்தாலும் தர்மத்தைத் தான் சொல்லி இருக்கிறது.
*
(ஆதார நூல்: தெய்வத்தின் குரல், பாகம் 1, பகுதி 'ஸ்ரீராமன்', பக்கங்கள் 596, 597):

No comments:

Post a Comment