புலால் மறுத்தல் (திருமூலரின் எச்சரிக்கை):

(புலால் மறுத்தல்: முதல் தந்திரம்):
பொல்லாப் புலாலை நுகரும் புலையரை
எல்லாரும் காண இயமன் தன் தூதுவர்
செல்லாகப் பற்றித் தீவாய் நரகத்தில்
மல்லாக்கத் தள்ளி மறித்து வைப்பாரே!!

ஐயறிவு வரையிலான உயிரினங்களின் பரிதாபக் கதறலிலிருந்து தோன்றும் மாமிசத்தைப் 'பொல்லாப் புலால்' என்று குறிக்கின்றார் திருமூல நாயனார். பிராணிகள் துடிதுடித்து உயிர் இழப்பதைப் பற்றிச் சிறிதும் வருத்தமின்றி அவ்வுயிர்களின் புலாலினைச் சுவைத்து உட்கொள்பவர் ஐயத்திற்கு இடமின்றி 'நரக வேதனைக்கு இணையான தாங்கொணா துயரத்தில் உழல்வர்' என்றும் எச்சரிக்கின்றார்.

தங்களைத் தற்காத்துக் கொள்ளும் சக்தியின்றி, கதியற்ற நிலையில், கடும் துயர் மற்றும் அச்சத்துடன் கதறிப் பதறி உயிர் துறக்கும் பிராணிகளின் மரண ஓலம் அக்கணமே தீய வினையாக உருமாறி அவ்வுயிரைக் கொல்பவர் மற்றும் உட்கொள்பவர் யாவரையும் ஐயத்திற்கு இடமின்றிப் பற்றுகின்றது. 

இப்புவியில் எது பொய்ப்பினும், பரிபூரணச் சிவஞானம் கைவரப் பெற்ற சிவயோகிகளின் திருவாக்கு ஒரு பொழுதும் பொய்ப்பதில்லை. அசைவம் உணவல்ல; உயிர் என்று உணர்ந்து அவற்றினை அறவே தவிர்த்துச் சிவகதி சார்வோம் (சிவாய நம)!!!

மகாபாரதம் அறிவுறுத்தும் அகிம்சை மீறலுக்கான தண்டனைகள் (அனுசாசனப் பர்வம்):

அம்புப் படுக்கையிலுள்ள பீஷ்மர் யுதிஷ்டிரனின் 'அகிம்சை மற்றும் மாமிசம் உட்கொள்வது தொடர்பான கேள்விகளுக்கு' எண்ணிறந்த நீதிகளை விடைகளாக எடுத்துரைக்கும் நிகழ்வினை அனுசாசனப் பர்வத்தின் 115, 116, 117, 118 ஆகிய பகுதிகள் மிகவும் விரிவாகப் பேசுகின்றன. இனி அவற்றுள் கூறப் பெற்றிருக்கும் தர்மங்களை சிந்தித்துத் தெளிவோம்.

தன்னுடலினை வளர்க்க பிற உயிர்களின் மாமிசத்தை உட்கொள்பவர் பேரிடர்களைச் சந்திப்பது உறுதி. மனித இனத்தைப் போலவே ஒவ்வொரு உயிரினத்திற்கும் தத்தமது உயிரும் சுவாசமும் மிகவும் பிரியமான ஒன்றாகும், உயர்ந்த ஞானத்தினைக் கொண்டிருப்போருக்கே மரணத்தைக் குறித்த பயமிருப்பது இயற்கையான நியதியெனில் ஏதுமறியாத வாயில்லாப் பிராணிகளின் நிலையினை எண்ணிப் பார்த்து தெளிதல் வேண்டும் (பகுதி 115).

மாமிசத்தின் பொருட்டு உயிரினங்களைக் கொல்வோருக்கும், அதனை உட்கொள்வோருக்கும் ஒவ்வொரு பிறவியிலும் குறைஆயுளே கிட்டும். மேலும் இத்தகையோருக்கு அபாயகரமான சூழல் ஏற்படும் சமயங்களில் எவரொருவராலும் இவர்களுக்குப் பாதுகாப்பு கிட்டாது. ஆதலின் தன் சொந்த நலத்தின் பொருட்டாவது ஒவ்வொருவரும் மாமிசம் உட்கொள்வதை அறவே துறத்தல் வேண்டும் (பகுதி 115).
தன் உடலினை வளர்க்கும் பொருட்டு பிற உயிரினங்களின் மாமிசத்தினை உட்கொள்பவருக்கு எந்தவொரு பிறவியிலும் இன்பமே கிட்டாது, எந்நேரமும் பதட்ட நிலையிலேயே உழன்று கொண்டிருக்கும் நிலை ஏற்படும், மேலும் அத்தகையோருக்கு அடுத்து வரும் பிறவிகளில் மனிதப் பிறவி வாய்க்காது; பல்வேறு உயிரினங்களாகப் பிறந்தும் இறந்தும் உழன்ற வண்ணமிருப்பர் (பகுதி 115).

மாமிசம் உட்கொள்பவர் ஐயத்திற்கு இடமில்லாது நரக வேதனையை நுகர்வர். மற்றொரு புறம் அகிம்சையைக் கைக்கொண்டு மாமிசம் தவிர்ப்பவரோ பிறவிகள் தோறும் நீண்ட ஆயுள், உடல் ஆரோக்கியம் மற்றும் மனமகிழ்ச்சியோடு வாழ்ந்திருப்பர். எந்தவொரு துன்பமும் தனக்கு நேரக்கூடாது என்றெண்ணுபவர் பிற உயிர்களின் கதறலிலிருந்து தோன்றும் மாமிசத்தினை அறவே துறத்தல் வேண்டும் (பகுதி 115).

உட்கொள்வதற்கு எண்ணற்ற பிற உணவு வகைகள் இருக்க (பிற உயிர்க்குக் கடும் துன்பம் விளைவித்து) உயிரினங்களின் மாமிசத்தினை விரும்பி உட்கொள்பவர் ராட்சச இனத்தினரெனவே கொள்ளப்படுவர், இவர்கள் கும்பிபாகம் எனும் நரகத்தில் கடும் வேதனைக்கு உள்ளாவர் (பகுதி 116).

எவரொருவர் பிற உயிரினங்களின் மாமிசத்தினைப் புசிப்பரோ அவ்வுயிரினமாகவே அடுத்த பிறவிகளில் பிறப்பெடுத்து அதே முறையிலேயே வதைத்துக் கொல்லப்பட்டு உட்கொள்ளப் பெறுவார், இது சத்தியம் (பகுதி 116)

கொன்றால் பாவம் தின்றால் போகுமா? திருமுருக வாரியார் சுவாமிகளின் விளக்கம்:

(திருமுருக வாரியார் சுவாமிகளின் 'குமுதம் வினாவிடை' தொகுப்பிலிருந்து)

புலால் உண்டவர்களை யமபடர்கள் நரகத்தில் நிறுத்தி அவர்கள் உடல் தசையை அறுத்து அறுத்து அவர்கள் வாயில் வைத்து ஊட்டுவார்கள். அதை உண்டால் தான் அவர்கள் கொன்ற பாவம் போகும். இந்தக் கருத்தை அருணகிரிநாதர் 'புவனத்தொரு' என்று தொடங்குகின்ற திருச்சிராப்பள்ளி திருப்புகழில் 'இறைச்சி அறுத்து அயில்வித்து' என்று குறிப்பிட்டிருக்கின்றார். எனவே கொன்ற பாவம் தன் உடம்பைத் தானே தின்றால் தான் போகும்.

பசுவின் உடலிலிருந்து வரும் பால் எப்படி சைவ உணவாக முடியும்? திருமுருக வாரியார் சுவாமிகள் விளக்கம்:

(திருமுருக வாரியார் சுவாமிகளின் 'குமுதம் வினாவிடை' தொகுப்பிலிருந்து)

புலால் உயிர்க் கொலையினால் கிடைக்கின்றது. பால் ஜீவ ஹிம்சையின்றிக் கிடைக்கின்றது. கறக்கின்ற பாலைப் பருகுவது குற்றமன்று. அது அசைவமாகாது. புலால் தீய குணங்களை வளர்க்கும். பால் தூய குணங்களை நல்கும். பசுவுக்கு மட்டும் அதன் கன்றுக்கு மேற்பட்ட பால் பெருக்கத்தை இறைவன் கொடுத்திருக்கிறான். பால் கறக்கவில்லையானால் பசுவுக்குத் துன்பம். கன்றுக்கு இரு மடிகளை விட்டு மற்ற இரு மடிகளில் பால் கறக்க வேண்டும். கன்றுக்குப் பால் விடாமல் கறந்து குடிப்பது தான் பாவம். பசுவின் பால் புனிதமானது. சத்வ குணத்தைத் தரவல்லது.

"பாலும் தெளிதேனும் பாகும் பருப்பிவை
நாலும் கலந்துனக்கு நான்தருவேன்" என்று அவ்வைப் பிராட்டியார் விநாயகரைக் குறித்துப் பாடிய பாடலாலும் அறிக.

பெற்றவள் சிறப்புத் தாய், பசு பொதுத் தாய்.

புண்ணியங்களை முழுவதுமாய் அழிக்கும் செயல் எது ? வடலூர் வள்ளலாரின் பார்வை:

கதியற்ற பிராணிகளின் பரிதாபக் கதறலிலிருந்து தோன்றும் மாமிசத்தினை உட்கொள்வது பெரும் பாவத்தினை சேர்ப்பதோடு அது வரை சேர்த்துள்ள புண்ணியங்களையும் முழுவதுமாக அழித்தொழித்து விடும் என்று எச்சரிக்கின்றார் வள்ளல் பெருமானார். புலால் உட்கொள்வதை இக்கண முதல் துறப்பதாக சபதமேற்போம்! நலமெலாம் பெற்றுய்வு பெறுவோம்!

(சமாதி வற்புறுத்தல் - பாடல் 10: திருவருட்பா: ஆறாம் திருமுறை):
புலைத்தொழிலே புரிகின்றீர் புண்ணியத்தைக்
கருங்கடலில் போக விட்டீர்
கொலைத் தொழிலில் கொடியீர் நீர் செத்தாரைச்
சுடுகின்ற கொடுமை நோக்கிக்
கலைத்தொழிலில் பெரியர்உளம் கலங்கினர்அக்
கலக்கம் எலாம் கடவுள் நீக்கித்
தலைத்தொழில் செய் சன்மார்க்கம் தலைஎடுக்கப்
புரிகுவது இத்தருணம் தானே!!

அகிம்சையை வலியுறுத்தும் பத்ராசலம் ஸ்ரீராமதாசரின் திவ்ய சரிதம் (இந்து தர்ம நுட்பங்கள்):

பத்ராசலம் ஸ்ரீராமதாசர் 17ஆம் நூற்றாண்டில் தோன்றிய அருளாளர். ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியிடம் அதீத பக்தியும் ஈடுபாடும் கொண்டொழுகும் உத்தம சீலர். அக்கால கட்டத்தில் ஆந்திர மாநிலத்தை ஆண்டு வரும் முகலாய மன்னன் தானேஷாவின் ஆளுகைக்குட்பட்ட பத்ராசலப் பகுதியின் தாசில்தாராகப் பொறுப்பேற்கின்றார் தாசர். பத்ராசலத்தில் ஸ்ரீராமர் அன்னை சீதையை மடியிலிருத்திய அதிஆச்சரியத் திருக்கோலத்தில் (இலக்குவனும் உடனிருக்க) எழுந்தருளி இருக்கும் புராதன ஆலயமொன்று மிகவும் பழுதுற்ற நிலையிலிருப்பதைக் கண்ணுற்று வருந்திப் புணர் நிர்மாணிக்க விழைகின்றார்.

நிதி பற்றாத நிலை உருவாக அரசாங்க வரிப் பொருளிலிருந்து 6 லட்சம் வரை எடுத்து, அதனை விரைவில் திரும்ப வைத்து விடுவதாகவும் சங்கல்பிக்கின்றார். திருக்கோயில் புணர் நிர்மாணமும் குடமுழுக்கும் மிகச் சிறப்பான முறையில் நடந்தேறுகின்றது, இதனிடையில் நடந்தேறிய நிகழ்வுகளை அறிந்து கொள்ளும் தானேஷாவோ வெகுண்டு ஸ்ரீராமதாசரை கோல்கொண்டா கோட்டையில் சிறையிடுமாறு ஆணையிடுகின்றான். சிறைச் சாலையிலோ சாட்டையடி, சுடு மணலில் இடுதல் என்று ஸ்ரீதாசர் அனுதினமும் கடும் துன்பத்திற்கு உள்ளாக்கப் படுகின்றார். ஓரிரு ஆண்டுகள் அல்ல; பனிரெண்டு முழு ஆண்டுகள் இவ்விதம் சிறை வாசமும் சித்திரவதையுமாய் கழிகின்றது.

தண்டனையின் தீவிரத்தினைத் தாங்கவொண்ணாத நிலையில் ஸ்ரீதாசர் அனுதினமும் அற்புதப் பனுவல்களால் தசரத மைந்தனைப் போற்றித் தன்னைக் காத்தருளுமாறு அகம்குழைத்துக் கண்ணீர் பெருக்கி மன்றாடி வருவார். இவ்விதம் 12 ஆண்டுகள் முடிவுறும் நிலையில் ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி இலக்குவனுடன், இரு வீரர்களின் திருவுருக்கொண்டு, பின்னிரவு வேளையில் தானேஷாவின் அரண்மனையுள் தோன்றியருளி, ஸ்ரீதாசர் எடுத்த பொருளினை வட்டியோடு செலுத்தி ரசீதும் பெற்று, சிறையில் மயங்கிய நிலையிலிருக்கும் ஸ்ரீராமதாசரின் அருகினில் அதனை சேர்ப்பித்துப் பின் திருவுருவம் மறைகின்றார்.
கண் விழித்ததும் ரசீதினைக் கண்டு உளம் நெகிழும் ஸ்ரீதாசர் கோசலை மைந்தனின் திருவருட் செயலினை வியந்து போற்றித் துதிக்கின்றார். தானேஷா ஸ்ரீதாசரின் தெய்வத் தன்மையினை உணர்ந்து தன் தவறுக்காக மன்னிப்பு வேண்டிப் பணிகின்றான். இவ்விடத்தில், கருணைப் பெருவெள்ளமான ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி 12 ஆண்டுகளாக ஸ்ரீதாசரை இரட்சித்து அருளாதது ஏன் எனும் வினா நமக்கு எழுமல்லவா! அன்னை ஸ்ரீமகாலக்ஷ்மி பாற்கடல் வாசனாரிடம் இது குறித்து வினவுவதாகவும், 'முற் பிறவியில் ஒரு கிளியினை 12 ஆண்டுகள் கூண்டில் அடைத்து வளர்த்த பாவத்தின் பயனாய் ஸ்ரீதாசருக்கு இப்பிறவியில் 12 ஆண்டுகள் சிறைவாசம் வந்தெய்தியது' என்று ஸ்ரீமகாவிஷ்ணு விளக்கியருள்வதாகவும் 'ஸ்ரீமகா பக்த விஜயம்' எனும் மூல நூல் நமக்குத் தெரிவிக்கின்றது. 

மேரு மலையினும் மேம்பட்ட தவமும் சீலமும் கொண்டு விளங்கியருளிய ஸ்ரீராமதாசருக்கே (ஒரு கிளியை கூண்டிலடைத்த செயலுக்கு) இத்தகைய துன்பம் எய்துமெனில், தம்மைத் தற்காத்துக் கொள்ளும் சக்தியும் கதியுமற்ற நிலையிலுள்ள வாயிலாப் பிராணிகளை வதைத்து அதன் மாமிசத்தினை உட்கொள்ளும் கருணையற்ற செயலானது நம்மை எத்தகு கொடிய துயரத்தில் ஆழ்த்தும் என்பதனை நன்குணர்த்துத் தெளிதல் வேண்டும். எவ்வுயிர்க்கும் தாயாக விளங்கியருளும் இறைவன் ஒரு பொழுதும் உயிர் வதையை மன்னிப்பதில்லை (சிவாய நம).

ஸ்ரீமத் பாகவத புராணம் அறிவுறுத்தும் அறமும் தண்டனையும்:

(அத்தியாயம் 11.5.14):
உண்மையான தர்மம் எது என்று சிறிதும் அறியாதவர்களே ஏதுமறியா வாயிலாப் பிராணிகளை வதைத்துக் கொல்லுதல் மற்றும் அவ்வுயிரினங்களின் மாமிசத்தினை உண்ணுதல் முதலிய கொடிய செயல்களைப் புரிகின்றார்கள். தங்களை ஞானியென்று எண்ணிக் கொள்ளும் இவர்கள் 'தங்களால் கொல்லப்பட்ட அதே உயிரினங்களால் மறுபிறவியில் வதைத்துக் கொல்லப்பட்டு புசிக்கப் படுவார்கள்'.

மாமிசம் உட்கொண்டும் கண்ணப்ப நாயனார் முத்தி பெற்றது எவ்வாறு? ஒரு தெளிவான பார்வை:

'புலால் உட்கொள்வதை கைவிடுவது இல்லை' எனும் முடிவுக்கு முன்னமே வந்துப் பின் அம்முடிவுக்கு சாதகமான நிகழ்வுகளை அங்கொன்றும் இங்கொன்றுமாய் சேகரித்து வைத்துக் கொண்டு வாதிடுவதென்பது சரியான அணுகுமுறையாக இருக்க இயலாது. புராணங்கள்; இதிகாசங்கள்; சாத்திரங்கள்; திருமுறைகள் மற்றும் அருளாளர்களின் திருப்பாடல்கள் ஆகியவைகளைக் கசடறக் கற்று அதன் பின்னரே தர்ம அதர்மம் குறித்த ஒரு தெளிவான முடிவிற்கு வருதல் வேண்டும். இனி இப்பதிவின் மூலக் கருவிற்குள் பயணிப்போம்.

முதல் கோணம், கண்ணப்ப நாயனார் வேடர் மரபில் தோன்றியவர், சாத்திரங்கள் குறித்த ஞானமோ, தர்ம அதர்மம் குறித்த புரிதலோ பெரிதாக அமைந்திருக்காத வேடர்கள் நிறைந்துள்ள சூழலில், வனப்பகுதியில் வளரப் பெற்றவர். ஆனால் நம்முடைய நிலையோ இதனின்றும் முற்றிலும் மாறுபட்டது, எண்ணற்ற தர்ம சாத்திரங்கள்; திருமுறைகள்; அருளாளர்களின் அறவுரைகள் ஆகியவைகளை கற்றுணரும் வாய்ப்பும் கல்வியும் நமக்கின்று அமையப் பெற்றுள்ளது. ஆதலின் கண்ணப்பரின் சூழலையும் நம்முடைய இக்காலகட்ட சூழலையும் ஒப்பு நோக்குவது முறையன்று.

இரண்டாவது கோணம், நம் உடற் பகுதியொன்றின் குறைபாட்டினைப் பதிவு செய்யும் ஊடு-கதிர்ப்படத்தினை (எக்ஸ்-ரே), அத்துறையில் நிபுணத்துவம் வாய்ந்த மருத்துவரொருவரின் துணையினைக் கொண்டே அறிந்து கொள்ள முனைகின்றோம். அது போன்று, புராண;இதிகாச நிகழ்வுகளிலிருந்து நாம் உய்த்துணர வேண்டிய நீதிக் கருத்துகளை, தவத்தாலும் சீலத்தாலும் மேம்பட்டு, தம்முடைய வாழ்வையே சமயத் தொண்டிற்கென அர்ப்பணித்து வந்துள்ள அருளாளர்கள் மற்றும் ஆச்சாரியர்கள் மூலமாகவே உணர்ந்துத் தெளிதல் வேண்டும். அதனை விடுத்து, நாமாக புராண நிகழ்வுகளை மேலோட்டமாக அணுகி ஒரு முடிவுக்கு வருதலென்பது நுனிப் புல் மேய்வதனை ஒக்கும்.
(சமயப் பெரியோர்கள் அறிவுறுத்தியுள்ள கண்ணப்பரின் வரலாற்றுச் சாரம்): 'இறை வழிபாட்டில் அன்பே பிரதானம். ஆசாரமும் நியமமும் அவசியமே எனினும் அவைகளால் மட்டும் வழிபாடு முழுமை பெற்று விடுவதில்லை. நெறிமுறைகளுடன் புரியப் பெற்று வரும் வழிபாடு நாளடைவில் அன்பு வழிபாடாக பரிணாமம் பெறுகின்றது. நியமத்துடன் கூடிய வழிபாடு என்பது அவசியமான தொடக்க நிலையே; கருணைப் பெருங்கடலான இறைவனுடன் அன்பினால் ஒன்றிக் கரைவதே அதன் இறுதி நோக்கம்'.

மூன்றாவது கோணம், யாருடன் யாரை ஒப்பு நோக்குவது என்றொரு வரைமுறை வேண்டாமா? 'கண்ணப்பன் ஒப்பதோர் அன்பின்மை கண்டபின்' என்று மணிவாசகப் பெருந்தகை 'கண்ணப்பர் சிவபரம்பொருளிடத்து கொண்டிருந்த அன்புப் பெருநிலை தமக்கு வாய்க்கவில்லையே' என்றுருகிப் போற்றுகின்றார். 'கலைமலிந்த சீர்நம்பி கண்ணப்பர்க்கு அடியேன்' என்று பணிகின்றார் நமது சுந்தர மூர்த்தி சுவாமிகள். தன்னலமில்லா அன்புப் பெருவெள்ளமான கண்ணப்பருடன் எண்ணிறந்த தகுதிக் குறைபாடுகளோடு கூடிய நம்மை ஒப்பிட்டுப் பார்ப்பதோ?

இறுதிக் கோணம், ஓரிரு விதிவிலக்கான சரிதங்களைப் பொதுவான விதிகள் என்று குழம்பித் தவறான பாதையில் பயணிக்கத் துவங்குவது பெரும் தீமையில் நம்மைக் கொண்டு சேர்க்கும். 3000 ஆண்டுகள் சிவயோகத்திலிருந்து ஆண்டொன்றிற்கு ஒரு திருப்பாடல் வீதம் 3000 திருப்பாடல்கள் அருளியுள்ள திருமூலர் 'புலால் மறுத்தல்' எனும் அதிகாரத்தில் 'மாமிசம் உட்கொள்பவர் கடும் நரகில் வீழ்வார்' என்று அறுதியிட்டுள்ளாரே! பரமஞானியான அச்சிவயோகி அறியாத நீதியினை நாம் அறிந்ததாக எண்ணிப் பிதற்றுவது மடமையன்றோ!

புலி மானைக் கொன்று புசிப்பது போல மனிதன் பிராணிகளின் மாமிசம் உண்பதும் உணவுச் சங்கிலியின் ஒரு அங்கமா?

இப்புவியில் பிறக்கும் ஐயறிவு வரையிலான உயிரினங்களுக்கு 'தர்ம அதர்மங்கள் குறித்து அறியச் சாத்தியக் கூறுகள் இல்லை'. மனித இனத்திற்கு மட்டுமே 'அறங்களை கற்றறியவும், அதன்வழி நடந்து உயர் நிலை ஞானமெய்திச் சிவமுத்தி நிலையைப் பெற்றுய்வு பெறவும்' இறைவனால் வாய்ப்பளிக்கப் பட்டுள்ளது. இக்காரணத்தாலன்றோ தமிழ் மூதாட்டி 'அரிது அரிது மானிடராதல் அரிது' என்று அறிவுறுத்திச் சென்றாள். பிற உயிரினங்களுக்கு 'இது சரி; இது தவறு' என்று பகுத்தறியும் திறனில்லாத காரணத்தால் அவைகள் புரியும் செயல்களுக்குப் பாவ புண்ணிய வினைகள் வந்தெய்துவதில்லை.

சிறிது விரிவுபடுத்திச் சிந்திப்போம், மனிதனாய் பிறப்பெடுக்கும் ஒரு ஆன்மாவிற்கு மூன்று வினைகள் உண்டு, இது வரையில் பலகோடிப் பிறவிகளில் சேர்த்து வந்துள்ள சஞ்சித வினை, இப்பிறவியில் அனுபவிக்கும் பொருட்டு எடுத்து வந்துள்ள பிராரப்த வினை, இப்பிறவியில் சேர்க்கும் புது வினைகளான ஆகாம்ய வினை. அதே ஆன்மா ஐயறிவு வரையிலான உயிரினமாகப் பிறப்பெடுக்கையில் அதற்கு முதல் இரண்டு வகை வினைகள் மட்டுமே உண்டு. ஒரு எளிய உலகியல் உதாரணம், சாலை விதியினை மீறிச் செல்லும் ஆடு மாடுகளை போக்குவரத்து அதிகாரிகளால் தண்டிக்க இயலாது, அவைகளை விலக்க மட்டுமே இயலும். ஆனால் ஆறறிவு படைத்த மனிதன் சாலை விதிகளை மீறும் பொழுது தண்டனைக்கு உள்ளாக்கப் படுகின்றான்.
மானிட இனம் தர்மங்களை எளிதில் உணர்ந்து உய்வுபெறும் பொருட்டு பரம்பொருளான இறைவன் வேதங்கள்; புராணங்கள்; உபநிடதங்கள்; இதிகாசங்கள்; சாத்திரங்கள் இவைகளை ரிஷிகள்; ஞானிகள்; அருளாளர்கள்; ஆச்சாரியர்கள் மூலம் இயற்றுவிக்கின்றான். இத்தகு சாத்திரங்கள் மூலம் அறங்களை அறிவதை விடுத்து, மிருகங்களின் வாழ்க்கை முறையைப் பார்த்து 'தர்மங்களையும், படைப்பின் விதிகளையும் வகுத்துக் கொள்வது' மிகவும் பிழையானது. ஒவ்வொரு முறை அசைவம் உட்கொள்ளும் பொழுதும் அவ்வுயிரினத்திடம் நம்மை அறியாமலே கடன் பட்டு விடுகின்றோம்.

அக்கடன் மென்மேலும் நம்மைப் பற்பல பிறவிகளில் ஆட்படுத்தித் துன்புறுத்துகின்றது. இனி 'மாம்சா' எனும் வடமொழி சொல்லின் உட்பொருளினை ஆய்வோம், 'மாம்' என்பது 'நான்' என்றும் 'சா' என்பது 'நீ' என்றும் பொருள்படும். 'இன்று நான் உன்னைத் துன்புறுத்தி உண்கின்றேன், அடுத்து வரும் பிறவிகளில் நீ இதே முறையில் என்னைக் கொன்று புசிப்பாய்' எனும் உடன்படிக்கையே அச்சொல்லின் பொருள். புலி சிங்கங்களிடமிருந்து 'தர்ம - அதர்ம' பாடம் பயில்வதை விடுத்து மனித இனத்திற்குரிய தர்மத்தைப் பின்பற்றுவோம். நல்லதோர் வீணையான இவ்வரிய மனிதப் பிறவியை 'பிற உயிர்களைக் கடும் துன்பத்திற்கு உள்ளாக்கிக் கொன்று புசிப்பதன் மூலம்' புழுதியில் எறியாது 'நல் அறங்களைப் பின்பற்றி உய்வு பெறுவோம்'.

உண்ணாமை வேண்டும் புலால் பிறிதொன்றன்
புண்ணது உணர்வார்ப் பெறின் (புலால் மறுத்தல்: திருக்குறள்).
-
பொருள் (மு.வரதராசனார் உரை):
குற்றத்திலிருந்து நீங்கிய அறிவை உடையவர், ஒர் உயிரினிடத்திலிருந்து பிரிந்து வந்த ஊனை உண்ணமாட்டார்.

ஜீவகாருண்யமே மோட்ச வீட்டின் திறவுகோல்:


தாவர உணவினை உண்பது மட்டும் ஜீவ ஹிம்சை ஆகாதா? வள்ளல் பெருமானார் மற்றும் திருமுருக வாரியார் சுவாமிகளின் விளக்கங்கள்:

(திருமுருக வாரியார் சுவாமிகளின் 'குமுதம் வினாவிடை' தொகுப்பிலிருந்து):

"நெல் முதலிய தானியங்கள் உயிர் தோன்றும் உடம்பேயன்றி அவை உயிராக மாட்டா. ஒரு முருங்கை மரத்தின் கிளையை வெட்டி நாலு துண்டுகளாக்கி, நான்கு இடத்தில நட்டால் நான்கு முருங்கை மரங்களாக ஆகிவிடும். அது போல், ஓர் ஆட்டுக் காலை வெட்டி நான்காகத் துண்டித்து நாலு இடத்தில நட்டால் நான்கு ஆடுகளாக ஆவதில்லை. ஆகவே புலால் உணவுக்கும் மரக்கறி உணவிற்கும் நிரம்ப வேற்றுமை உண்டு.
செடி கொடிகளை வேருடன் பிடுங்குவதில் சிறிது பாவமுண்டு. ஆடு, கோழி முதலிய உயிர்கள் ஐயறிவுப் பிராணிகள். செடி கொடிகள் ஓரறிவு உயிரினங்கள். ஆடு கோழிகளை வெட்டுகின்ற பொது அவை கதறித் துடிக்கின்றன. காய்கறிகளை எடுப்பது பாவமாகாது. அது நமக்கு நகமும் முடியும் அகற்றுவது போல். ஆதலினால் அவைகளை அதிதிகளுக்கு இட்டு மிகுதியை உண்ணுதல் வேண்டும்".

(இராமலிங்க வள்ளலாரின் விளக்கம்: ஜீவ காருண்ய ஒழுக்கம்: முதற் பிரிவு): 

மரம் புல் நெல் முதலான ஜீவர்கள் ஸ்பரிசமென்கிற ஓரறிவையுடைய ஜீவர்களாதலாலும், அவ்வித்துக்களை நாமே விதைத்து உயிர் விளைவு செய்யக் கூடுமாதலாலும், அவ்வுயிர்களை வேறுசெய்யாமல் அவ்வுயிர்களிடத்து உயிரில்லாமல் ஆனால் உயிர் தோன்றுவதற்கு இடமான ஜடங்களாகத் தோன்றிய வித்துக்களையும் காய்களையும் கனிகளையும் பூக்களையும் கிழங்குகளையும் தழைகளையும் ஆகாரங்களாகக் கொள்வதேயன்றி அவ்வுயிருள்ள முதல்களை ஆகாரமாகக் கொள்ளாத படியாலும், நகம் ரோமம் முதலியவைகளை வாங்கும் போது எவ்விதம் இம்சை உண்டாவதில்லையோ அது போல்  அவைகளுக்கு இம்சை உண்டாகாத படியாலும், தாவர வர்க்கங்களுக்கு மனம் முதலான அந்தக் கரணங்கள் விருத்தியில்லாத படியாலும் அது உயிர்க் கொலையுமல்ல; துன்பம் உண்டு பண்ணுவதுமல்ல; அதனால் அது ஜீவகாருணிய விரோதமாகாது.
(விதையாகிய) வித்துக்களில் ஜீவனிருந்தால் நிலத்தில் விதையா முன்னமே விளைய வேண்டும்; நிலத்தில் விதைத்த காலத்தும் சில வித்துக்கள் விளையாமலே இருக்கின்றன. அன்றியும் வித்தென்பது காரணம். இந்தக் காரணம் உடம்பு தோன்றுதற்கே என்று சிறு பிள்ளைகளாலும் அறியப்படும். அன்றி உயிர் நித்தியம், உடம்பு அநித்தியம்; நித்தியமான உயிர் காரணம் வேண்டாது; அநித்தியமாகிய உடம்பே காரணம் வேண்டும். ஆதலின் வித்துக்களைச் ஜடம் என்றறிய வேண்டும். ஆனால் வித்துக்களிடத்து ஆன்மாக்கள் ஏறுவது எப்படியென்னில்:- நிலத்திற் கலந்த விதைக்கு நீர்விடில் அந்த நீரின் வழியாகக் கடவுள் அருள் நியதியின்படி ஆன்மாக்கள் அணுத் தேகத்தோடு கூடி நிலத்திற் சென்று அந்நிலத்தின் பக்குவ சத்தியோடு கலந்து வித்துக்களினிடமாகச் செல்கின்றன என்று அறிய வேண்டும்.
(விதையாகிய) வித்து நிலத்திற் படிந்தபின் நீர் வழியாக ஆன்மாவானது சென்று பக்குவ சத்தியிற் கலந்து வித்திலேறி முளைத்தபடியால், முளையானது வித்து காய் முதலியவைகளைப் போலச் ஜடமல்ல. ஆதலால், முளைகளைப் பிடுங்கப் படாதென்பது உண்மையென்று அறிய வேண்டும். வித்து காய் கனி முதலியவற்றில் தத்துவவிருத்தியும் தாது விருத்தியும் இல்லாதபடியால் அசுத்தமுமில்லை, ஆதலின் மரம் புல் நெல் முதலியவைகளின் வித்து காய் கனி தழை முதலியவற்றைப் புசிப்பது ஜீவகாருணிய விரோதமல்ல என்றறிய வேண்டும்.

புலையும் கொலையும் களவும் தவிர்:

சிறு வயது முதலே 'புலால் மறுத்தல்' முதலிய அறங்களை நம் ஒவ்வொருவரின் மனதிலும் பசுமரத்தாணி போன்று பதிவிக்க  விரும்பியே கொன்றை வேந்தன்; ஆத்திச்சூடி இவைகளை இயற்றியளித்தாள் நம் தமிழ் மூதாட்டி. ஆனால் நாமோ அவையெல்லாம் ஏதோ சிறு பிள்ளைகளுக்கான மனப்பாடப் பகுதி மட்டுமே என்றெண்ணி அந்த தர்மங்களையெல்லாம் முழுவதுமாய் மறந்து வெகுதூரம் பயணித்து விட்டோம்!!

பட்டினத்தாரின் திருவாக்கில் புலால் மறுத்தல்:


திருக்குறளில் புலால் மறுத்தல் (வள்ளுவத்தைப் பின்பற்றுதலே வள்ளுவரைப் போற்றுதல்):

திருவள்ளுவனார் பிரதானமாக முன்னிறுத்தும் 'கொல்லாமை; புலால் மறுத்தல்' எனும் தர்மங்களை ஒருசிறிதும் உணராமல்; பின்பற்றாமல், வள்ளுவருக்கு சிலைகள் வைப்பது; பல்வேறு இந்திய; உலக மொழிகளில் மொழிபெயர்க்கப்படும் பொழுது 'உலகப் பொதுமுறையடா எங்கள் குறள்' என்று முழங்குவது; பிற நாடுகளிலுள்ள திருவள்ளுவர் சிலைகள் குறித்துப் பெருமையுடன் பகிர்வது; திருவள்ளுவர் எங்கள் முப்பாட்டன் என்று திமிர் கொள்வது என்று இவைகளோடு மட்டுமே நாம் நிறைவுற்று விடுகின்றோம். வள்ளுவமாகிய கொள்கைகளைப் பின்பற்றுவதே வள்ளுவனாரைப் போற்றும் முறையான வழியென்று உணர்ந்துத் தெளிவோம், இன்றே பிற உயிர்களின் கடும் வேதனையின்றும் தோன்றும் மாமிசத்தினை உட்கொள்வதில்லை என்று சபதமேற்போம், வள்ளுவம் பேணுவோம்!! சிவ சிவ!!!

யார் ஞானி? யார் ஞானியில்லை? வள்ளலாரின் அதிஅற்புத விளக்கம்:

திருஅருட்பா - 2ஆம் திருமுறை - அறநிலை விளக்கம்:

மருவாணைப் பெண்ணாக்கி ஒருகணத்தில் கண்விழித்து வயங்கும் அப்பெண்
உருவாணை உருவாக்கி இறந்தவரை எழுப்புகின்ற உறுவனேனும்
கருவாணையுற இரங்காது உயிருடம்பைக் கடிந்துண்ணும் கருத்தனேல்எம்
குருவாணை எமதுசிவக்கொழுந்தாணை ஞானிஎனக் கூறொணாதே!!!

பொருள்:
கண நேரத்தில் ஆணொருவரைப் பெண்ணாகவும், உருமாறிய அப்பெண்ணினை மீண்டும் முந்தைய ஆண் உருவத்தினாராகவும், இறந்தவரை மீண்டும் உயிர் பெற்றெழச் செய்யும் வல்லமை பெற்றவராகவும் இருப்பினும், பிற உயிரினங்களின் கடும் துன்பம் கண்டு இரங்காது அவற்றின் மாமிசத்தைச் சுவைத்துண்ணும் கருத்துடையவராக இருப்பின் அத்தகையோரை ஞானியென்று எவ்விதப் பரிமாணத்தினாலும் கூறுவது பொருந்தாது (அவர்கள் ஒரு பயனுமற்ற வெற்றுச் சித்து புரிபவரேயாவர்). இது எமது குரு மற்றும் எமை ஆட்கொண்டருளிய சிவபரம்பொருளின் மீது ஆணை (ஜீவகாருண்யத்தினை உறுதியாகக் கொள்ளாதவற்கு ஒரு பொழுதும் சிவஞானம் சித்திக்காது என்பது இத்திருப்பாடலின் இறுதி முடிவு).

(குறிப்பு: பரம குருநாதரான திருமுருக வாரியார் சுவாமிகள் மேற்குறித்துள்ள வள்ளல் பெருமானின் திருப்பாடலினைத் தம்முடைய பல விரிவுரைகளிலும் சிலாகித்துக் கூறியுள்ளார்).

அருணகிரிநாதர் குறிப்பிட்டுள்ள ஆறு பாதகச் செயல்கள் (திருச்செந்தூர் திருப்புகழ் நுட்பங்கள்):

அருணகிரிப் பெருமான் 'அனிச்சம் கார்முகம் வீசிட' என்று துவங்கும் திருச்செந்தூர் திருப்புகழில் ஆறு விதமான தகாத செயல்களுக்காகத் தன்னைத் தானே கடுமையாக நிந்தித்துக் கொள்கின்றார். சிவஞானம் கைவரப் பெற்ற ஞானிகள் சுயநிந்தனை செய்து கொள்வது 'ஆன்மாக்கள் தத்தமது குற்றங்களை இவ்வித சுயபரிசோதனை மூலம் அறிந்துணர்ந்துப் பின் அதனின்றும் விலகி நிற்றலின் பொருட்டே' எனும் தெளிவான புரிதலுடன் இப்பதிவிற்குள் பயணிப்போம்,

அருக்கன் போலொளி வீசிய மாமரகதப் பைம் பூணணி வார்முலை மேல்முகம் அழுத்தும் பாவியை:- இல்லற தர்மத்திற்குப் பொருந்தாத முறையற்ற காமத்தில் எந்நேரமும் திளைத்திருக்க விரும்பும் பாவியை

ஆவி ஈடேறிட நெறிபாரா வினைச் சண்டாளனை:- எடுத்துள்ள இப்பிறவியில் ஆன்மா மும்மலங்களினின்றும் விடுபட்டு சிவமுத்தி பெற்றுய்யும் வழியை ஆய்ந்துணராத பரம சண்டாளனை

வீணனை நீள் நிதி தனைக் கண்டு ஆணவமான நிர்மூடனை:- செல்வத்தின் நிலையாத் தன்மையை உணராமல் அதன் பொருட்டு செருக்குற்றுப் பிறிதொருவருக்கு அச்செல்வத்தினை ஈயாது திரியும் முழு மூடனை

விடக்கு அன்பாய் நுகர் பாழனை:- பிற உயிரினங்களின் துன்பத்தினின்றும் தோன்றும் மாமிசத்தினை மிகுந்த ஆசையுடன் சுவைத்து உண்கின்ற பாழானவனை

ஓர் மொழி பகராதே விகற்பம் கூறிடு மோக விகாரனை: (ஆறுமுக தெய்வத்தின்) ஒப்புவமையற்ற சடாக்ஷர மந்திரத்தினை ஓதாமல், சாத்திர விரோதமாகவே எந்நேரமும் பேசிக்கொண்டிருக்கும் காம விகாரம் பொருந்தியவனை

அறத்தின் பால் ஒழுகாத மூதேவியை:- (ஞானிகளின் திருவாக்கினின்றும், சாத்திரங்களினின்றும்) எது அறம் என்றறிந்து அவ்வழியில் நின்றொழுகாத மூதேவியை

அருணகிரியார் அருளியுள்ள அறநெறியின் வழிநிற்றலே அப்பரம குருநாதரைப் போற்றும் உத்தம மார்க்கமாகும். அது விடுத்து 'படிப்பது இராமாயணம்; இடிப்பது பெருமாள் கோயில்' என்பது போல், திருப்புகழையும் ஒருபுறம் பாராயணம் புரிந்து கொண்டு மற்றொருபுறம் மாமிச பழக்கத்தினையும் கொண்டிருப்பதென்பது விழலுக்கிறைக்கும் நீருக்கு ஒப்பாகும். 'விடக்கு' என்று அருணகிரியார் குறித்துள்ள மாமிசத்தினை உட்கொள்ளும் தீச்செயலை அறவே துறப்பதாக இன்றே சபதமேற்போம். திருவருள் கைகூடப் பெறுவோம். சிவ சிவ!!!

தவறாக விளங்கிக் கொள்ளப்பட்டு வரும் திருநாவுக்கரசர் திருப்பாடல்: திருமுருக வாரியார் சுவாமிகளின் விளக்கமும் சில நுட்பங்களும்:

தவறான புரிதலுடன் மேற்கோள் காட்டப்பட்டு வரும் நாவுக்கரசு சுவாமிகள் அருளியுள்ள 'சங்கநிதி பதுமநிதி' என்று துவங்கும் தேவாரத் திருப்பாடலின் இறுதி 4 வரிகளை இப்பதிவில் பல்வேறு கோணங்களில் சிந்தித்துத் தெளிவோம்.
-
அங்கமெலாம் குறைந்து அழுகு தொழுநோயராய்
ஆவுரித்துத் தின்றுழலும் புலையரேனும்
கங்கைவார் சடைக் கரந்தார்க்கு அன்பராகில்
அவர் கண்டீர் நாம்வணங்கும் கடவுளாரே!!

மேற்குறித்துள்ள வரிகளை மேலோட்டமாக அணுகினால் "பசுவின் மாமிசத்தினை உண்டுழல்பவராக இருப்பினும் கங்கையைத் திருமுடியினில் சூடியருளும் சிவபரம்பொருளின் அடியவராக இருப்பின் அவரும் வணங்கத் தக்கவரே" என்று நாவுக்கரசு சுவாமிகள் தெரிவிப்பது போலத் தோன்றும். இதற்கான வாரியார் சுவாமிகளின் முறையான விளக்கத்தினை முதலில் காண்போம்,

"பசுவினைக் கொன்று அதன் மாமிசத்தை உரித்துண்ணும் கொடிய வழக்கம் உள்ளவராகிலும், ஞானிகளின் திருவாக்கினை கற்றறிந்து, அச்செயல் பெரும் தவறு என்றுணர்ந்துத் திருந்தி அவ்வழக்கத்தை முற்றிலுமாய் கைவிட்டுச் சிவபெருமானிடம் உளமுருகி மன்னிப்பு வேண்டிப் பின் பரமேசுவரரின் அடியவராக தன்னை முழுவமதுமாய் மாற்றிக் கொள்வாராயின், அடியவர் எனும் கோணத்தில் அத்தகையோரும் வணங்கத் தக்க நிலையினைப் பெறுவர்' என்று இதன் உட்கருத்தினைத் தெளிவுறுத்துகின்றார் வாரியார் சுவாமிகள்.
மேற்குறித்துள்ள வாரியார் சுவாமிகளின் விளக்கவுரையினைச் சிறிது விரிவுபடுத்திச் சிந்திப்போம். அருளாளர்களின் திருப்பாடல்களுக்கு நம் மனம் போன போக்கிலெல்லாம் பொருள் கொள்ளுதல் கூடாது, சமயச் சான்றோர் மூலமாகவே அவைகளின் உட்கருத்தினை உணர்ந்துத் தெளிவுருதல் வேண்டும். மேலும் திருமுறைப் பாடல்களுக்கு, அதனைப் பாடியருளிய அருளாளரின் பிற திருப்பாடல்களுக்கும், மற்ற திருமுறை ஆசிரியர்கள் அறிவுறுத்தியுள்ள கருத்துகளுக்கும் முரண்படாத வகையில் பொருள் காணுதலே ஏற்புடையது.

திருமந்திரத்திலும் பிற சைவத் திருமுறைகளிலும் புலால் மறுத்தலும் கொல்லாமையும் மிக அழுத்தமாகப் பதிவு செய்யப்பட்டிருக்கும் பொழுது அப்பர் சுவாமிகள் உயிர்க் கொலையை எவ்வாறு ஞாயப்படுத்தியிருக்க இயலும் என்று சிந்தித்துத் தெளிதல் வேண்டும். இராவணனும் வாலியும் சிவ பக்தர்களாக அறியப்படுபவராயினும் வணங்கத் தக்க நிலையினைப் பெற்றார்களா எனில் இல்லை, நாவுக்கரசு சுவாமிகள் இராமேச்சுரம் தல தேவாரத் திருப்பாடல்களில் இராவணனை கொடிய; நெறியற்ற; ஒழுக்கமற்ற அரக்கன் என்று கடுமையாக நிந்திக்கின்றார்.

பிறன் மனை நயந்த அதர்மச் செயலுக்காக 'இராவணன்; வாலி' இருவருமே ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியால் வதைக்கப்பட்டுள்ளது தெளிவு. தர்மம் கைக்கொள்ளப்படாத நிலையில் பக்தியால் பயனேதும் விளையாது, சாத்திரம் விதித்துள்ள தர்மங்களைப் பின்பற்றியவாறு இறைவழிபாடு புரிதலே பக்தியேயன்றி அனைத்து வித அக்கிரமங்களையும் புரிந்து கொண்டே மற்றொரு புறம் சிவபூசையும் செய்து வருவது பாதகச் செயலே. சரி 'எது தான் தலையாய தர்மம்?' எனில் எந்தவொரு உயிரினத்திற்கும் ஒருசிறிதும் மன மெய் வாக்கினாலே துன்பம் விளைவிக்காத அகிம்சையையே மிக உயர்ந்த தர்மமாக நம் இந்து மதம் முன்னிறுத்துகின்றது.

தர்ம சாத்திரங்கள் மற்றும் ஞானிகளின் திருவாக்கினைச் செவிமடுப்போம், மிகக் கொடூரமாக வதைக்கப் பெற்று துடிதுடித்து மடியும் உயிரினங்களின் மாமிசத்தை சுவைத்துண்ணும் பழக்கத்தினை இக்கணமே துறப்பதாகச் சபதமேற்போம், சிவபரம்பொருளின் திருவருள் கைகூடப் பெறுவோம்.

இந்து தர்மம் யாகங்களில் ஆட்டினை பலியிடச் சொல்கின்றதா? (திருமுருக வாரியார் சுவாமிகளின் விளக்கம் மற்றும் சில நுட்பங்கள்):

முந்தைய யுகங்களிலும், தற்பொழுது நடந்தேறி வரும் கலியுகத்தின் துவக்க காலகட்டத்திலும் ஆட்டினைக் கொன்று அதனுடலைக் குறிப்பிட்ட சில வகை யாகங்களில் ஆகுதியாக இடும் வழக்கம் நிலவி வந்தது. வேத வாக்கியங்களைக் கற்றரிந்தவர்கள் என்று பல வேதியர்கள் தங்களை முன்னிறுத்திக் கொண்டுத் தத்தமது குறையறிவினைக் கொண்டு மறைகளுக்குப் பொருள் கொள்ளத் துவங்கியதே இதற்கான காரணம். தற்பொழுது அவ்வழக்கம் முற்றிலுமாய் ஒழிந்து விட்டது எனலாம். முதலில் இது தொடர்பான பரம குருநாதரான நம் வாரியார் சுவாமிகளின் விளக்கத்தினைக் காண்போம்.

"வேதியர்கள் ஆட்டைக் கொன்று யாகம் செய்வது பெரும் பிழையாகும். அஜம் என்ற சொல்லுக்கு முளைக்காத பழைய நெல் என்று பொருள் (ஜம் - தோன்றுவது, அஜம்  = தோற்றமில்லாதது). அஜம் என்ற பழைய நெல்லால் வேள்வி செய்வது என்ற கருத்தை உணராமல் அஜம் என்ற சொல்லுக்கு ஆடு என்று அர்த்தம் செய்து கொண்டு ஆட்டைக் கொன்று வேள்வி செய்யத் தொடங்கினார்கள். "தீதா வசவனியாயம்  செய் வேதியரே" என்று வரும் கந்தரந்தாதி 31வது பாடலால் அறிக".

இனி வாரியார் சுவாமிகள் குறித்துள்ள அருணகிரியாரின் கந்தர் அந்தாதித் திருப்பாடலையும் அதன் சுருக்கமான பொருளையும் காண்போம்.
-
(பதம் பிரிக்கப் பட்டுள்ளது):
தீதா வசவு அனுபவிக்க மண்ணிலும் விண்ணிலும் - செந்
தீ தாவு அச அனியாயம் செய் வேதியரே, தியங்கா
தீ தா வசவ நிமலர் செல்வா, சாக்கிர வசத்து
(அ)தீத வச அன்புறப்பாரெனும் முத்தி சித்திக்கவே!!!
-
சுருக்கமான பொருள்:
இம்மை மறுமை நலன்கள் பெற விழைந்து, ஒரு சிறிதும் ஜீவகாருண்யம் இல்லாது ஆட்டினைப் பலியிட்டு வேள்வி புரியும் வேதியர்களே, இனி அவ்வாறு திகைத்துத் தவறிழைக்காமல், சிவபரம்பொருளின் திருக்குமாரனான குமாரக் கடவுளிடம் தெளிவான அறிவினையும், திருவருளையும் வேண்டிப் பணிந்து உய்வு பெறுங்கள்!!!
மேற்குறித்துள்ள திருப்பாடலின் இரண்டாம் வரிக்கு சிறிது விரிவாகப் பொருள் காண்போம். அக்கினி தேவனின் வாகனம் ஆடு, அதனால் தீ தாவு என்கின்றார், அச என்பது அஜம் எனும் ஆட்டினைக் குறிக்க வந்தது. கதியற்ற பிராணிகளை வதைத்து வேள்வியில் இடும் செயலை 'அநியாயம் செய் வேதியரே' என்று கடுமையாய் நிந்திக்கின்றார் அருணகிரிப் பெருமான்.

இனி, மகாபாரதத்தின் அனுசாசனப் பர்வத்தில் (அத்தியாயம் 115) குறிக்கப் பெற்றுள்ள இது தொடர்பான நிகழ்வினையும் காண்போம். 'அஜம்' என்பது ஆட்டையே குறிக்கின்றது என்று தேவர்களும், 'முளைக்காத நெல்லையே' சுட்டுகின்றது என்று ரிஷிகளும் வாதிடுகின்றனர். இரு சாராரும் சுவர்க்கத்தில் உள்ள வசு எனும் அரசனிடம் இது குறித்துக் கேட்க, தேவர்களுக்கு அஞ்சி 'வேதம் வேள்வியில் இடச் சொல்வது ஆட்டையே' என்று வசு மாற்றிக் கூறுகின்றான். 'அசத்தியம் உரைத்ததால் மறுகணமே பாதாள உலகிலும் வீழ்கின்றான்' என்று மாபாரதம் தெளிவாகப் பதிவு செய்கின்றது. இதனால் இந்து தர்மம் ஜீவகாருண்யத்தை மிகக் கடுமையாக முன்னிறுத்துகின்றது என்பது தெளிவு.

தேவர்களே மறைப் பொருளில் குழம்பினால் நம் கதியென்ன? வருத்தமே வேண்டாம். மிக எளியதொரு வழியுண்டு, எவ்வகையில் பொருள் கொண்டால் பிற உயிர்களுக்கு ஒருசிறிதும் துன்பம் விளையாதோ அவ்வழியில் பொருள் காண்பதே தக்கதொரு தீர்வு. கல்வியறிவு இதற்குப்  பிரதானம் அல்ல; கருணையே பிரதானம். கருணையே வடிவான இறைவனை கருணையால் மட்டுமே அடைய இயலும். இன்று முதல் அசைவம் உட்கொள்ளும் செயலை முழுவதுமாய்த் துறப்போம் சிவகதி சேர்வோம்.

கருணையைக் கொண்டு கருணையைப் பெறுவோம்:


அசைவம் உணவல்ல உயிர்:

ஒரு உயிரினத்தின் உடம்பிலிருந்து அதன் இன்னுயிரைப் பிரிப்பதே உச்சகட்டமானதொரு வன்முறைச் செயலாகும்.

தன்னூன் பெருக்கற்குத் தான்பிறிது ஊனுண்பான்
எங்ஙனம் ஆளும் அருள்
-
தன் உடம்பினை வளர்ப்பதற்குப் பிற உயிரினங்களின் மாமிசத்தினை உட்கொள்பவருடைய உள்ளத்தில் ஜீவகாருண்யம் எவ்வாறு குடியிருக்க இயலும்?

வள்ளல் பெருமானாரின் பார்வையில் மனிதகுலத்தின் இரு பிரிவுகள்:

'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்ற திருமூலரின் வழியிலேயே 'மனித குலத்தில் சாதி; குலம் என்ற எவ்விதமான பிரிவினைகளும், பேதங்களும், பாகுபாடுகளும் கூடாது' என்று வலியுறுத்திய வள்ளல் பெருமானார் கருணையின் அடிப்படையில் மனித இனத்தினை இரண்டாகப் பிரிக்கின்றார். ஜீவ காருண்யம் உள்ளோர் 'அக இனத்தார்' என்றும் ஜீவகாருண்யமற்றுப் பிற உயிர்களின் துன்பத்திற்குச் சிறிதும் இரங்காது 'வாயிலாப் பிராணிகளை வதைத்தல் மற்றும் அவைகளின் மாமிசத்தினைப் புசித்தல்' ஆகிய செயல் புரிவோரைப் 'புற இனத்தார்' என்றும் வகைப்படுத்துகின்றார்.

அருள் விளக்க மாலை: திருவருட்பா 6ஆம் திருமுறை - திருப்பாடல் 71:
உயிர்க்கொலையும் புலைப்பொசிப்பும் உடையவர்கள் எல்லாம்
உறவினத்தார் அல்லர் அவர் புறஇனத்தார் அவர்க்குப்
பயிர்ப்புறும் ஓர் பசிதவிர்த்தல் மாத்திரமே புரிக
பரிந்துமற்றைப் பண்புரையேல் நண்புதவேல் இங்கே
நயப்புறு சன்மார்க்கம் அவர் அடையளவும் இதுதான்
நம்ஆணை என்றெனக்கு நவின்ற அருள் இறையே
மயர்ப்பறு மெய்த்தவர் போற்றப் பொதுவில் நடம் புரியும்
மாநடத்து என் அரசே என் மாலை அணிந்தருளே!!!
ஜீவகாருண்யம் இல்லாது ஆன்மீகப் பயணத்தில் ஒருசிறிதும் பயன் ஏற்படப் போவதில்லை எனும் பிரதானக் கொள்கை விளக்கத்தால் தமது 'வடலூர் சத்திய ஞான சபை வளாகத்தின்' திருவாயிலில் 'கொலைத் தொழில் புரிபவரும், புலால் எனும் மாமிசம் உட்கொள்வோரும் உள்ளே புகுதல் கூடாது' எனும் கட்டளையைப் பொறித்தருளினார். உயர்நிலை சிவஞானம் சித்திக்கப் பெற்ற வள்ளலாரின் அறவுரையைச் செவிமடுப்போம். இக்கணமுதல் அசைவம் உட்கொள்வதை முழுவதுமாய்த் துறந்து வள்ளலார் குறித்துள்ள அக இனத்தவராக நம்மைப் பரிணமித்துக் கொள்வோம், வடலூர் சென்று இதுவரையிலும் நேர்ந்துள்ள ஜீவகாருண்யப் பிழைக்கு வள்ளல் பெருமானிடம் உளமார மன்னிப்பு வேண்டி, மாதந்தோறும் பூச நன்னாளில் நடந்தேறும் சோதி தரிசனம் பெற்றுச் சிவகதி சேர்வோம்.

குழந்தைகளும் அசைவமும் (மனதில் இருத்த வேண்டிய மிக முக்கிய நுட்பங்களும் விளக்கங்களும்):

பொதுவாக அசைவம் உட்கொள்ளும் பழக்கமுடைய குடும்பங்களில் பெற்றோர் தத்தமது குழந்தைகளுக்கு 1-1/2 முதல் 2 வயதிற்குள் உணவினுள் சிறு அளவில் மாமிசம் கலந்தளிக்கத் துவங்குகின்றனர். உணவின் பேதமறியா அக்குழந்தைகளும் வாரம் இருமுறையேனும் அசைவம் உட்கொள்ளும் சூழலுக்கு மெதுமெதுவே பழக்கப்படுகின்றது. பின்னர் அக்குழந்தை வெவ்வேறு பருவங்களைக் கடப்பினும் சுமார் 20 முதல் 25 வருடங்கள் தொடர்ந்து வரும் அசைவ வழக்கத்தால் 'அசைவம் ஒரு உயிர் எனும் எண்ணம் அறவே அழிந்து அதுவும் தாவர உணவினைப் போல மற்றொரு உணவு வகை' எனும் எண்ணம் ஆழ்மனதில் அழுத்தமாகப் பதிந்து விடுகின்றது. இக்கால கட்டத்தில் கூடுதலாக உடலும் மனமும் அச்சுவைக்கு பூரண அடிமையாகி விடுகின்றது.

இந்நிலையிலுள்ள மனதுக்கு தர்ம சாத்திரங்களில் உள்ள 'கொல்லாமை; புலால் மறுத்தல்' எனும் கருணை சார்ந்த அறங்களை உள்வாங்கிக் கொள்வது மிகவும் கடினமாகின்றது. தவறு என்று உள்மனம் சில நேரங்களில் குரல் எழுப்பினாலும் மனமானது அக்குற்ற உணர்வைப் போக்க பல்வேறு வாதங்களைத் தனக்குச் சாதகமாக வைத்துக் கொண்டு பாராமுகமாக இருக்கவே முனைகின்றது. நாம் அசைவம் உட்கொள்வது நம்மோடு போகட்டும், அடுத்த தலைமுறையினருக்கு எது தர்மம்; எது அதர்மம் என்று அவர்களாகக் கண்டறிந்து உணரும் நல்வாய்ப்பினை வழங்குதல் வேண்டாமா?
ஒரு குழந்தை தான் சுயமாகச் சிந்திக்கும் வயது வரையில் உட்கொள்ளும் மாமிசத்திற்கான பாவச் சுமை முழுவதும் 'ஒன்றுமறியாப் பருவமுதல் அப்பழக்கத்தைத் துவக்கி வைத்த பெற்றோரையே சாரும்' என்று தர்மசாத்திரங்கள் பறைசாற்றுகின்றன. இது சத்திய வாக்கு! இதில் எள்ளளவும் ஐயம் வேண்டாம். குழந்தைகள் மழலை மொழிகளில் 'chilly chicken; fish fry' என்று தாங்கள் உட்கொள்ளும் விவரங்களைத் தெரிவிக்கையில் உள்ளம் பதைக்கின்றது. உண்ணும் உணவானது நம் சிந்தனைப் போக்கின் பெரும் பகுதியைத் தீர்மானிக்கின்றது என்பது 'விஞ்ஞானம்; மெய்ஞானம்' இரண்டுமே அறிவிக்கும் பேருண்மை. பல ஆண்டுகள் புலால் வழக்கம் மனதில் ஏற்படுத்திய தாக்கத்தால் பிராணிகள் துடிதுடிப்பதைக் கண்டாலும் கேள்வியுற்றாலும் அது பெரிதான பாதிப்பை ஏற்படுத்துவதில்லை.
குழந்தைகளுக்குச் சிறு துன்பமும் எய்தாமல் கண்ணும் கருத்துமாய் பாதுகாத்து வளர்க்கும் பெற்றோர் தத்தமது 'குழந்தைகளின் ஆன்மாவிற்கு' தங்களையறியாமலே இத்தகு பாவத்தினைத் தேடித் தருவது முறையாகுமா? சாத்திரங்களின் மீதும் ஞானிகளின் வாக்கின் மீதும் அசையாத நம்பிக்கை வைப்போம். நடைமுறைச் சிக்கல்கள் ஆயிரம் இருப்பினும் குழந்தைகளுக்கு அசைவ பழக்கத்தினை உண்டாக்காது அடுத்த தலைமுறையினரை ஜீவகாருண்ய வழியில் செலுத்துவோம் (சிவாய நம).

(உலகப் பொதுமறை):
படைகொண்டார் நெஞ்சம்போல் நன்னூக்காது ஒன்றன்
உடல்சுவை உண்டார் மனம்
-
கொலைக் கருவியைக் கையில் கொண்டவரின் நெஞ்சம் ஒருபொழுதும் கருணை; இரக்கம் இவைகளை எண்ணிப் பார்க்காது; அது போன்று கதியற்ற பிராணிகளின் மாமிசத்தினை உட்கொள்பவரின் மனமும் இரக்கத்தினைக் கொள்ளாது, கருணையைப் போற்றாது!

ஆலய பலியினைக் கண்டிக்கும் அபிராமி பட்டரும் வள்ளலாரும்:

தம்முடைய ஞானத் தமிழால் ஆதிபராசத்தியின் திவ்ய தரிசனம் பெற்று, அம்பிகையின் திருவருளால், அமாவாசையன்று நிலவினைத் தோன்றுமாறு செய்தருளிய தவப்பெறும் குன்றான அபிராமி பட்டர் பின்வரும் திருப்பாடலில் 'ஆலயங்களில் நடந்தேறும் உயிர் பலியினைப் பற்றிய' தம்முடைய கண்டனத்தினைப் பதிவு செய்கின்றார்.

அபிராமி அந்தாதி: திருப்பாடல் 64:
வீணே பலி கவர் தெய்வங்கள்பாற் சென்று மிக்க அன்பு
பூணேன், உனக்கு அன்பு பூண்டுகொண்டேன், நின்புகழ்ச்சியன்றிப்
பேணேன், ஒரு பொழுதும் திருமேனிப் பிரகாசமன்றிக்
காணேன், இரு நிலமும் திசை நான்கும் ககனமுமே!!!
-
சுருக்கமான பொருள்:
சிவபரம்பொருளின் திருத்துணைவியான அபிராமி அன்னையே! கதியற்ற பிராணிகளின் பலியினை ஏற்கும் சிறுதெய்வங்களை அடியவன் எக்காலத்திலும் சென்று வணங்க மாட்டேன். விண்ணிலும் மண்ணிலும் எந்த திசையாகிலும் உன்னுடைய திருவருளின் பெருமையை மட்டுமே போற்றித் துதித்து வணங்குவேன்!!!
அவ்வழியிலேயே வள்ளல் பெருமானார் பின்வரும் திருப்பாடலில், ஆங்காங்கே சிறு தெய்வ ஆலயங்களில் நடந்தேறும் ஆடு; பன்றி; கோழி; கிடாமாடு முதலிய வாயிலாப் பிராணிகளின் பலிகளைக் கண்டுத் தாம் கதறித் துடிதுடிப்பதையும் அஞ்சி நடுங்குவதையும் பெரிதும் வருத்தத்துடன் பதிவு செய்கின்றார்.
-
(திருஅருட்பா: பிள்ளைப்பெரு விண்ணப்பம் - திருப்பாடல் 63):
நலிதரு சிறிய தெய்வமென்று ஐயோ நாட்டிலே பலபெயர் நாட்டிப்
பலிதர ஆடு பன்றி குக்குடங்கள் பலிக்கடா முதலிய உயிரைப்
பொலிவுறக் கொண்டே போகவும் கண்டே புந்திநொந்துஉள நடுக்குற்றேன்
கலியுறு சிறிய தெய்வ வெங்கோயில் கண்டகாலத்திலும் பயந்தேன்

ஞானிகள் பதைபதைக்குமாறு ஒரு வாழ்க்கை முறையினை அமைத்துக் கொள்ளும் வரையிலும் பரம்பொருளான இறைவனின் திருவருளை நம்மால் ஒருபொழுதும் பெற்றுவிட இயலாது. இது சத்தியம்! இந்து தர்ம சாத்திரங்கள் ஒருபொழுதும் ஆலய பலியை ஆதரித்தது இல்லை; திருமந்திரம் முதலான தர்ம சாத்திரங்கள் கொல்லாமையை மிகக் கடுமையாக முன்னிறுத்துகின்றன. இக்கண முதல் ஜீவகாருண்யக் கொள்கையினை ஏற்போம்; மாமிசம் உட்கொள்வதை அறவே துறப்போம்; நலமெலாம் பெற்றுச் சிவகதி சேர்வோம்.

ஆவுரித்துத் தின்றுழலும் புலையரேனும் (திருமுருக வாரியார் சுவாமிகளின் அற்புத விளக்கம்):

(சங்கநிதி பதுமநிதி என்று துவங்கும் திருநாவுக்கரசர் தேவாரப் பாடலின் இறுதி மூன்று வரிகள்):
ஆவுரித்துத் தின்றுழலும் புலைய ரேனும்
கங்கைவார் சடைக்கரந்தார்க்கு அன்பராகில்
அவர்கண்டீர் நாம்வணங்கும் கடவுளாரே
-
ஆவுரிரித்துத் தின்பது (மாமிசம் உண்பது) அன்பிலாமை, இறைவனை நினைப்பது அன்புடைமை. அன்பும் அன்பிலாமையும் ஒரே சமயத்தில் ஒருவரிடம் நிகழா. இரவும் பகலும் ஒரே சமயத்தில் தோன்றுவதில்லை. சிவனுக்கு அன்பு செய்து கொண்டே ஆவுரித்துத் தின்று உழலுதல் பொருந்தாது. அவ்வாறு செய்வாராயின் அது அன்புடைமையாகாது. நேற்றுவரை ஆவுரித்துத் தின்றுழன்ற ஒருவன், இன்று அதனின்றும் நீங்கி எங்கும் சிவனைக் கண்டு சிவபக்தி புரிவானாயின் அவன் எமது கடவுள். முன்னைய நிலையை நோக்காமல் வணங்குதல் வேண்டும் என்று பொருள் கொள்க.
*
(ஆதார நூல்: திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகளின் பெரிய புராணம், குகஸ்ரீ வாரியார் பதிப்பகம், பக்கம் 542)

சங்கநிதி பதுமநிதி இரண்டும் தந்து
தரணியொடு வானாளத் தருவரேனும்
மங்குவார் அவர்செல்வம் மதிப்போமல்லோம்
மாதேவர்க்கு ஏகாந்தர் அல்லாராகில்,
அங்கமெலாம் குறைந்தழுகு தொழுநோயராய்
ஆவுரித்துத் தின்றுழலும் புலையரேனும்
கங்கைவார் சடைக்கரந்தார்க்கு அன்பராகில்
அவர்கண்டீர் நாம்வணங்கும் கடவுளாரே!!!