சைவத் திருமுறைகளில் ரிக் வேதச் சிறப்பு:

'சைவ சமயத்தின் அடிநாதமான ரிக்; யஜுர்; சாம; அதர்வண வேதங்களுள், ரிக் வேதத்தின் ஏற்றத்தினை நால்வர் பெருமக்களும் அருணகிரிப் பெருமானும் எவ்வாறு பதிவு செய்துள்ளனர்' என்பதனை இப்பதிவில் உணர்ந்துத் தெளிவுறுவோம், 

'பூவார் கொன்றை' என்று துவங்கும் சீகாழித் திருப்பதிகத்தின் 10ஆம் திருப்பாடல்:
சிவபெருமான் ரிக் வேத மந்திரங்களில் முழுவதுமாய் நிறைந்து விளங்கும் தன்மையினை 'இருக்கின் மலிந்த இறைவரவர் போலாம்' என்று ஞானசம்பந்தப் பெருமான் போற்றுகின்றார், 
-
பெருக்கப் பிதற்றும் சமணர் சாக்கியர்
கரக்கும் உரையை விட்டார் காழியார்
இருக்கின் மலிந்த இறைவரவர் போலாம்
அருப்பின் முலையாள் பங்கத்தையரே.

திருப்பேரெயில் தல தேவாரத்தின் 6ஆம் திருப்பாடல்:
ரிக் வேத மந்திரங்களால் தொழுபவர்களின் துயரினைச் சிவபெருமான் போக்கி அருள்வதாகப் பதிவு செய்துப் போற்றுகின்றார் நாவுக்கரசு சுவாமிகள் ('இருக்கு வாய்மொழியால் தனையேத்துவார்'),  
-
திருக்கு வார்குழல் செல்வன் சேவடி
இருக்கு வாய்மொழியால் தனையேத்துவார்
சுருக்கு வார்துயர் தோற்றங்களாற்றறப்
பெருக்குவாரவர் பேரெயிலாளரே

திருக்கானாட்டுமுள்ளூர் தலத் திருப்பதிகத்தின் 5ஆம் திருப்பாடல்:
ரிக் வேதங்களை ஓதும் அந்தணர்கள் அத்தலத்தில் நிறைந்து விளங்கும் தன்மையினைப் பதிவு செய்கின்றார் சுந்தரர் ('இருக்குவாய் அந்தணர்கள்'),
-
செருக்குவாய்ப் பைங்கண் வெள்ளரவரையினானைத்
    தேவர்கள் சூளாமணியைச் செங்கண் விடையானை
முருக்குவாய் மலரொக்கும் திருமேனியானை
    முன்னிலையாய் முழுதுலகமாய பெருமானை
இருக்குவாய் அந்தணர்கள் எழுபிறப்புள் எங்கும்
    வேள்வியிருந்திருநிதியம் வழங்கு நகரெங்கும்
கருக்குவாய்ப் பெண்ணையொடு தெங்குமலி சோலைக்
    கானாட்டுமுள்ளூரில் கண்டுதொழுதேனே

திருவாசகத்தின் திருப்பள்ளியெழுச்சி 4ஆம் திருப்பாடல்: திருப்பெருந்துறையில் எழுந்தருளியுள்ள சிவபெருமானை வேதியர்கள் ரிக் வேத மந்திரங்களால் போற்றுவதாகப் பதிவு செய்கின்றார் மணிவாசப் பெருமான் ('இருக்கொடு தோத்திரம் இயம்பினர் ஒருபால்'), 
-
இன்னிசை வீணையர் யாழினர் ஒருபால்
    இருக்கொடு தோத்திரம் இயம்பினர் ஒருபால்
துன்னிய பிணைமலர்க் கையினர் ஒருபால்
    தொழுகையர் அழுகையர் துவள்கையர் ஒருபால்
சென்னியில் அஞ்சலி கூப்பினர் ஒருபால்
    திருப்பெருந்துறையுறை சிவபெருமானே
என்னையும் ஆண்டு கொண்டின்னருள் புரியும்
    எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே

'அருக்கு மங்கையர்' என்று துவங்கும் திருப்பரங்குன்றத் திருப்புகழ்:
'சப்த ரிஷிகளான அகத்தியர்; அத்திரி; பரத்வாஜர்; கௌதமர்; ஜமதக்னி; வசிஷ்டர்; விஸ்வாமித்ரர் ஆகியோருக்கு முருகப் பெருமான் ரிக் வேத மந்திரங்களை உபதேசித்து அருளினான்' என்று அருணகிரிப் பெருமான் பதிவு செய்கின்றார்,  
..
இருக்கு மந்திரம் எழுவகை முனிபெற 
உரைத்த சம்ப்ரம சரவண பவகுக
இதத்த இங்கிதம் இலகிய அறுமுக எழில்வேளென்
...

சைவத் திருமுறைகளில் சாம வேதச் சிறப்பு:

நால்வேதங்களில் சிவபெருமானுக்கு மிகவும் உகந்தது இசை வடிவான சாம வேதம், இனி தேவார மூவரும், தெய்வச் சேக்கிழாரும், அருணகிரிப் பெருமானும் சாம வேதச் சிறப்பினை எவ்வாறு போற்றிப் பரவியுள்ளனர் என்று இப்பதிவினில் உணர்ந்துத் தெளிவுறுவோம், 

திருஞானசம்பந்தர் தேவாரம்:
1. 'கண்ணுதலானும்' என்று துவங்கும் திருப்புகலி திருப்பதிகத்தில் 'சாமநல் வேதனும் தக்கன்தன் வேள்வி தகர்த்தானும்

2. 'இறையவன் ஈசன்எந்தை' என்று துவங்கும் திருப்பிரமபுர திருப்பதிகத்தில் 'சடையினன் சாமவேதன்'

3. 'பொங்குநூல் மார்பினீர்' என்று துவங்கும் திருவிடைமருதூர் திருப்திகத்தில் 'தங்கு செஞ்சடையினீர் சாமவேதம் ஓதினீர்

4. திருவாழ்கொளிபுத்தூர் திருப்பதிகத்தின் முதல் வரியிலேயே 'சாகை ஆயிரமுடையார சாமமும் ஓதுவதுடையார்'

திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரம்:
1. 'சந்திரனை மாகங்கை' என்று துவங்கும் திருவதிகை திருப்பதிகத்தில் 'சாம வேத கந்தருவம் விரும்புமே'

2. 'மடக்கினார்' என்று துவங்கும் திருவதிகை திருப்பதிகத்தில் 'பாடினார் சாம வேதம் பாடிய பாணியாலே'

3. 'வெள்ளத்தைச் சடையில்' என்று துவங்கும் திருவொற்றியூர் திருப்பதிகத்தில் 'சாமத்து வேதமாகி நின்றதோர் சயம்பு தன்னை'

சுந்தரர் தேவாரம்:
1. 'ஆலம்தான் உகந்து' என்று துவங்கும் திருக்கச்சி ஏகம்பத் திருப்பதிகத்தில் 'சாம வேதம் பெரிதுகப்பானை'

2. 'கொடுகு வெஞ்சிலை' என்று துவங்கும் திருமுருகன்பூண்டி திருப்பதிகத்தில் 'தயங்கு தோலை உடுத்துச் சங்கர சாம வேதமோதி'

சேக்கிழார் - பெரியபுராணம்:
1. குங்கிலியக் கலய நாயனார் புராணத்தில், 'குடங்கையின்' என்று துவங்கும் 3ஆம் திருப்பாடலில் 'வைதிக மறையோர் செய்கைச் சடங்குடை இடங்கள் தோறும் எழுவன சாமம் பாடல்'

2. திருஞானசம்பந்த மூர்த்தி புராணத்தின் 97ஆம் திருப்பாடலில் 'மங்கல தூரியம் துவைப்பார் மறைச்சாமம் பாடுவார்'

அருணகிரிநாதர் - திருப்புகழ்:
1. 'சீருலாவிய' என்று துவங்கும் திருப்போரூர் திருப்புகழில் 'சாம வேதியர் வானவரோதி நாண்மலர் தூவிய தாளில் வீழ வினாமிக அருள்வாயே'

 



யஜுர் வேத ஸ்ரீருத்ர பாராயணத்தைப் போற்றும் பெரிய புராணம்:

பெரிய புராணத்தின் உருத்திர பசுபதி நாயனார் புராணத்தில், 5 திருப்பாடல்களில் யஜுர் வேத மந்திரத் தொகுப்பான ஸ்ரீருத்ர பாராயணத்தைப் போற்றியுள்ளார் தெய்வச் சேக்கிழார். இனி அத்திருப்பாடல்களை இப்பதிவில் உணர்ந்துத் தெளிவுறுவோம், பொய்ப் பிரச்சாரங்களைப் புறம்தள்ளுவோம், 

4ஆம் திருப்பாடலில், வேத மந்திரமாகிய ஸ்ரீருத்ரத்தை நாயனார் இடையறாது பாராயணம் புரிந்து வந்ததைப் பதிவு செய்கின்றார், 
-
(உருத்திர பசுபதி நாயனார் புராணம் - திருப்பாடல் 4):
ஆய அந்தணர் அருமறை உருத்திரம் கொண்டு
மாயனார் அறியா மலர்ச் சேவடி வழுத்தும்
தூய அன்பொடு தொடர்பினில் இடையறாச் சுருதி
நேய நெஞ்சினராகி அத்தொழில் தலை நின்றார்

6ஆம் திருப்பாடலில் நாயனார், தெளிந்த குளத்து நீரில், கழுத்தளவு ஆழத்தில் நின்ற வண்ணம், உச்சி கூப்பிய கையினராய், மிகுந்த அன்புடன் ஸ்ரீருத்ர மந்திர பாராயணத்தால் சிவபெருமானைப் போற்றி வந்த தன்மையைப் பதிவு செய்கின்றார், 
-
(உருத்திர பசுபதி நாயனார் புராணம் - திருப்பாடல் 6):
தெள்ளு தண்புனல் கழுத்தளவாயிடைச் செறிய
உள்ளுறப்புக்கு நின்றுகை உச்சிமேல் குவித்துத்
தள்ளு வெண்திரைக் கங்கைநீர் ததும்பிய சடையார்
கொள்ளும் அன்பினில் உருத்திரம் குறிப்பொடு பயின்றார்

7ஆம் திருப்பாடலில், 'அருமறைப் பயனாகிய ஸ்ரீருத்ரம்' என்று அடைமொழி கொடுத்துப் போற்றுகின்றார் சேக்கிழார் பெருமான். 
-
(உருத்திர பசுபதி நாயனார் புராணம் - திருப்பாடல் 7):
அருமறைப் பயனாகிய உருத்திரம் அதனை
வருமுறைப் பெரும் பகலும் எல்லியும் வழுவாமே
திருமலர்ப் பொகுட்டிருந்தவன் அனையவர் சிலநாள்
ஒருமை உய்த்திட உமையிடம் மகிழ்ந்தவர் உவந்தார்

8ஆம் திருப்பாடலில், 'ஸ்ரீருத்ர பாராயணத்தை நியதியுடன் பாராயணம் புரிதலை சிவபெருமான் மிகவும் விரும்புகின்றார்' என்பதனை ஐயத்திற்கு இடமின்றிப் பதிவு செய்கின்றார், 
(உருத்திர பசுபதி நாயனார் புராணம் - திருப்பாடல் 8):
காதல் அன்பர்தம் அருந்தவப் பெருமையும் கலந்த
வேத மந்திர நியதியின் மிகுதியும் விரும்பி
ஆதி நாயகர் அமர்ந்தருள் செய்ய மற்றவர் தாம்
தீதிலா நிலைச் சிவபுரி எல்லையில் சேர்ந்தார்

9ஆம் திருப்பாடலில், 'ஸ்ரீருத்ர பாராயணம் ஒன்றினாலேயே சிவகதி பெற்றிருந்த தன்மையினால் 'உருத்திர பசுபதி நாயனார்' எனும் திருநாமமும் பெற்றார்' என்று பதிவு செய்கின்றார் தெய்வச் சேக்கிழார்,
-
(உருத்திர பசுபதி நாயனார் புராணம் - திருப்பாடல் 9):
நீடும் அன்பினில் உருத்திரம் ஓதிய நிலையால்
ஆடு சேவடி அருகுற அணைந்தனர் அவர்க்குப்
பாடு பெற்றசீர் உருத்திர பசுபதியாராம் 
கூடு நாமமும் நிகழ்ந்தது குவலயம் போற்ற

தமிழ்; சமஸ்கிருதம் இரண்டும் தெய்வ மொழிகளே (திருமந்திர விளக்கங்கள்):

பொதுவில் ஊடங்கங்களில் நடந்தேறும் சமய விவாதங்களில், நம் தென்னக மொழியான தீந்தமிழ் மட்டுமே தெய்வ மொழியென்றும், வடமொழியான சமஸ்கிருதம் தேவ பாஷை என்றும் தொடர்ப் பரப்புரை நடந்தேறி வருகின்றது. 63 நாயன்மார்களுள் ஒருவராகப் போற்றப் பெறும் நம் திருமூலர் இவ்விரு மொழிகளையும் வைதீக சைவ சமயத்தின் இரு கண்களெனவே கொண்டு போற்றியுள்ளார், இனி இப்பதிவில் இது தொடர்பான இரு முக்கியத் திருப்பாடல்களை உணர்ந்துத் தெளிவுறுவோம்,  

'சிவபரம்பொருள் உமையன்னைக்கு, பிரளய காலம் நிறைவுறும் வேளையில், ஆன்மாக்கள் உய்யும் மார்க்கங்களைத் தென்னக மொழியான தமிழிலும்; வடமொழியான சமஸ்கிருதத்திலும் உபதேசித்து அருள் செய்தார்' என்று திருமூலர் பதிவு செய்கின்றார், 

(திருமந்திரம் - ஆகமச் சிறப்பு - திருப்பாடல் 8):
மாரியும் கோடையும் வார்பனி தூங்க!நின்
றேரியும் நின்றங்கிளைக்கின்ற காலத்து
ஆரியமும் தமிழும் உடனே சொலிக்
காரிகையார்க்குக் கருணை செய்தானே!!

'இவ்விதமாய் மறை முதல்வரான சிவமூர்த்தி அம்பிகைக்கு உணர்த்தியருளிய ஆன்ம நுட்பங்களைத் தமிழ்; வடமொழியான சமஸ்கிருதம் இவையிரண்டாலுமே உணரப் பெறலாம்' என்று மற்றுமொரு முறை 'இம்மொழிகளுக்குள் பேதம் கற்பித்தல்' தகாது என்று அறிவுறுத்துகின்றார் திருமூல நாயனார், 

(திருமந்திரம் - ஆகமச் சிறப்பு - திருப்பாடல் 9):
அவிழ்க்கின்றவாறும் அதுகட்டுமாறும் 
சிமிழ்த்தலைப் பட்டுயிர் போகின்றவாறும்
தமிழ்ச்சொல் வடசொல் எனும் இவ்விரண்டும்
உணர்த்தும் அவனை உணரலுமாமே!!!

இவ்வாறாக, நம் பாரத தேசத்தின் ஒப்புவமையற்ற இரு மொழிகளையும் சிவபெருமானே அருளியுள்ள தன்மையினால், இவையிரண்டும் தெய்வ மொழிகளே என்பது தெளிவு (சிவ சிவ)!!!

தமிழ்; வடமொழி இரண்டையும் ஒருமைப்படுத்திப் போற்றும் சைவத் திருமுறைகள்:

(திருஞானசம்பந்தர் தேவாரம்):

'பட்டம் பால்நிற' என்று துவங்கும் 'திருப்புகலூர் வர்த்தமானீச்சரம்' திருப்பதிகத்தின் 7ஆம் திருப்பாடல்:

தென்சொல் விஞ்சமர் வடசொல் திசைமொழி எழினரம்பெடுத்துத்
துஞ்சு நெஞ்சிருள் நீங்கத் தொழுதெழு தொல்புகலூரில்
அஞ்சனம் பிதிர்ந்தனைய வலைகடல் கடையஅன்றெழுந்த
வஞ்ச நஞ்சணி கண்டர் வர்த்தமானீச்சரத்தாரே
-
'மானினேர்விழி' என்று துவங்கும் திருஆலவாய்த் திருப்பதிகத்தின் 4ஆம் திருப்பாடல்:

சந்துசேனனும் இந்துசேனனும் தருமசேனனும் கருமைசேர்
கந்துசேனனும் கனகசேனனும் முதலதாகிய பெயர்கொளா
மந்திபோல்திரிந்து ஆரியத்தொடு செந்தமிழ்ப்பயன் அறிகிலா
அந்தகர்க்கெளியேன் அலேன் திருஆலவாயரன் நிற்கவே
-
'பொன் திரண்டன்ன' என்று துவங்கும் திருஅச்சிறுப்பாக்கத் திருப்பதிகத்தின் 4ஆம் திருப்பாடல்:

மைம்மலர்க்கோதை மார்பினர் எனவும் மலைமகள் அவளொடு மருவினரெனவும்
செம்மலர்ப்பிறையும் சிறையணிபுனலும் சென்னி மேலுடையர் என்சென்னிமேலுறைவார்
தம்மலரடிஒன்றடியவர் பரவத் தமிழ்ச்சொலும் வடசொலும் தாள்நிழல்சேர
அம்மலர்க்கொன்றை அணிந்தஎம்அடிகள் அச்சிறுபாக்கமது ஆட்சி கொண்டாரே!!!

(திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரம்):

'வானவன் காண்' என்று துவங்கும் திருச்சிவபுரத் திருப்பதிகத்தின் 1ஆம் திருப்பாடல்:

வானவன்காண் வானவர்க்கு மேலானான் காண்
வடமொழியும் தென்தமிழும் மறைகள் நான்கும்
ஆனவன்காண் ஆனைந்தும் ஆடினான்காண்
ஐயன்காண் கையிலனல் ஏந்தியாடும்
கானவன்காண் கானவனுக்கருள் செய்தான்காண்
கருதுவார் இதயத்துக் கமலத்தூறும்
தேனவன்காண் சென்றடையாச் செல்வன் தான்காண்
சிவனவன்காண் சிவபுரத்தெம் செல்வன் தானே!!!
-
'முற்றிலாமுலை' என்று துவங்கும் திருக்கடம்பந்துறை திருப்பதிகத்தின் 3ஆம் திருப்பாடல்: 

ஆரியம் தமிழோடிசையானவன்
கூரிய குணத்தார் குறி நின்றவன்
காரி கை உடையான் கடம்பந்துறைச்
சீரியல் பத்தர் சென்றடைமின்களே!!!
-
'நம்பனை நால்வேதம் கரை கண்டானை' என்று துவங்கும் திருஆவடுதுறை திருப்பதிகத்தின் 10ஆம் திருப்பாடல்:

பந்தணவு மெல்விரலாள் பாகன் தன்னைப்
பாடலோடாடல் பயின்றான் தன்னைக்
கொந்தணவு நறும்கொன்றை மாலையானைக்
கோலமா நீலமிடற்றான் தன்னைச்
செந்தமிழோடு ஆரியனைச் சீரியானைத்
திருமார்பில் புரிவெண்ணூல் திகழப் பூண்ட
அந்தணனை ஆவடுதண்துறையுள் மேய
அரனடியே அடிநாயேன் அடைந்துய்ந்தேனே!!!
-
'தூண்டு சுடரனைய' என்று துவங்கும் திருமறைக்காட்டுத் திருப்பதிகத்தின் 5ஆம் திருப்பாடல்:

மூரி முழங்கொலி நீரானான் கண்டாய்
முழுத்தழல்போல் மேனி முதல்வன் கண்டாய்
ஏரி நிறைந்தனைய செல்வன் கண்டாய்
இன்னடியார்க்கின்பம் விளைப்பான் கண்டாய்
ஆரியன் கண்டாய் தமிழன் கண்டாய்
அண்ணா மலையுறையெம் அண்ணல் கண்டாய்
வாரி மதகளிறே போல்வான் கண்டாய்
மறைக்காட்டுறையும் மணாளன் தானே!!!

(11ஆம் திருமுறை திருத்தொண்டர் திருவந்தாதி)

72ஆம் திருப்பாடல்:

தொகுத்த வடமொழி தென்மொழி
    யாதொன்று தோன்றியதே
மிகுத்த வியலிசை வல்ல
    வகையில்விண் தோயுநெற்றி
வகுத்த மதில்தில்லை !அம்பலத்
    தான் மலர்ப் பாதங்கள்மேல்
உகுத்த மனத்தொடும் !பாடவல்
    லோரென்பர் உத்தமரே!!!

(பெரிய புராணம்): 

ஐயடிகள் காடவர்கோன் நாயனார் புராணத்தின் 3ஆம் திருப்பாடல்:

மன்னவரும் பணிசெய்ய
    வடநூல்தென் தமிழ்முதலாம்
பன்னுகலை பணிசெய்யப்
    பார்அளிப்பார் அரசாட்சி
இன்னல்என இகழ்ந்ததனை
    எழிற்குமரன் மேல்இழிச்சி
நன்மைநெறித் திருத்தொண்டு
    நயந்தளிப்பார் ஆயினார்

பெரியாழ்வார் பாசுரத்தில் ரிக்; யஜுர்; சாம; அதர்வண வேதங்கள்:

பன்னிரு ஆழ்வார்களுள் ஒருவராகப் போற்றப் பெறும் பெரியாழ்வார் பின்வரும் திருப்பாசுரத்தில், 'ஓம் நமோ நாராயணாய எனும் அஷ்டாஷர மந்திரத்தை உச்சரிக்காத நாட்களும், ரிக்; யஜுர்; சாம; அதர்வண வேத  மந்திரங்களால் பூசிக்காத நாட்களும் உண்ணாதொழிந்த நாட்களே' என்று வைதீக தர்மத்தின் அடிநாதமான நான்மறைகளின் ஏற்றத்தினைப் பதிவு செய்துப் போற்றுகின்றார், 

(பெரிய திருமொழி - நான்காம் பத்து: 10ஆம் திருமொழி):
கண்ணா நான்முகனைப் படைத்தானே காரணா கரியாய் அடியேன்நான்
உண்ணா நாள் பசியாவதொன்றில்லை ஓவாதே நமோ நாரணாவென்று
எண்ணா நாளும் இருக்கெசுச் சாம வேத நாண்மலர் கொண்டுஉன் பாதம்
நண்ணா நாள்அவை தத்துறுமாகில் அன்று எனக்கு அவை பட்டினி நாளே

திருஅச்சிறுப்பாக்க தேவாரத்தில் தமிழும் வடமொழியும் (தமிழ்ச் சொலும் வடசொலும் தாள்நிழல் சேர):

'தெய்வத் தமிழ் மொழியிலுள்ள பனுவல்களும், வடமொழியிலுள்ள நால்வேதப் பாராயணங்கள்; தோத்திரங்கள்; மற்றும் அர்ச்சனை மந்திரங்களும் சிவபெருமானின் திருவடிகளில் அர்ச்சனை மலர்களாகச் சென்று சேர்கின்றன' என்று வைதீக மொழியையும்; தமிழையும் ஒருமைப்படுத்தியும், சிறப்பித்தும் போற்றுகின்றார் நம் ஞானசம்பந்தப் பெருமான். 

(திருஅச்சிறுப்பாக்கம் - திருஞானசமபந்தர் தேவாரம் - திருப்பாடல் 4)
மைம்மலர்க்கோதை மார்பினர் எனவும் மலைமகள்அவளொடு மருவினரெனவும்
செம்மலர்ப்பிறையும் சிறையணிபுனலும் சென்னிமேலுடையர் என்சென்னிமேலுறைவார்
தம்மலரடிஒன்றடியவர் பரவத் தமிழ்ச்சொலும் வடசொலும் தாள்நிழல்சேர
அம்மலர்க்கொன்றை அணிந்தஎம்அடிகள் அச்சிறுபாக்கமது ஆட்சி கொண்டாரே!!!

சாம வேதமும் கீதாச்சாரியனும்:

ரிக்; யஜுர்; சாம; அதர்வண வேதங்களுள் இசை வடிவமான சாம வேதத்திற்குத் தனிச் சிறப்பு. 

சைவத் திருமுறைகள் 'சாமத்து வேதமாகி நின்றதோர் சயம்பு தன்னை' என்று சிவபரம்பொருளைப் போற்ற மற்றொருபுறம் நம் மாபாரதக் கண்ணனும் 'வேதங்களில் நான் சாம வேதமாக இருக்கின்றேன்' என்று கீதையில் பிரகடனப் படுத்துகின்றான் (அத்தியாயம் 10 - சுலோகம் 22 - வேதாநாம் ஸாம வேதோஸ்மி..)

வேத வியாசரின் ஸ்காந்த புராணத்திலிருந்து தோன்றிய கந்த புராணம் (கந்த புராணத் திருப்பாடல் சான்றுகள்):

காஞ்சீபுரத்தில் 10ஆம் நூற்றாண்டு கால கட்டத்தில், ஆதி சைவ மரபில் தோன்றிய அருளாளர் கச்சியப்ப சிவாச்சாரியார். இவர் குமாரக் கோட்டத்தில் எழுந்தருளியுள்ள கந்தக் கடவுளாலேயே 'திகட சக்கரம்' என்று அடியெடுத்துக் கொடுக்கப் பெற்று, வேத வியாசர் வடமொழியில் அருளியிருந்த ஸ்காந்த புராணத்தின் சிவரகசிய கண்டத்தினைத் தமிழ் மொழியில் கந்தபுராணத் திருப்பாடல்களாய் இயற்றித் தந்த உத்தம சீலராவார். இனி இக்குறிப்புகளுக்கான அகச் சான்றுகளைக் கச்சியப்ப சிவாச்சாரியாரின் திருப்பாடல்களின் வாயிலாகவே உணர்ந்து மகிழ்வோம், 

பின்வரும் திருப்பாடலின் முதல் இரு வரிகளில், 'முன்னர் வேத வியாசர் வடமொழியில் அருளிச் செய்துள்ள ஆறுமுக தெய்வத்தின் வரலாற்றை அறிந்து, அதனைத் தென்மொழியான தமிழில் இச்சிறியேன் உரைக்க முனைந்துள்ளேன்' என்று குறிக்கின்றார் (முனி - வேத வியாசர், தெரீஇ - தெரிந்து) , 
-
(கந்த புராணம் - அவையடக்கம் - திருப்பாடல் 3):
முன்சொல்கின்ற முனி வடநூல் தெரீஇத்
தென்சொலால் சிறியேன்உரை செய்தலால் 
மென் சொலேனும் வெளிற்றுரையேனும் வீண்
புன்சொலேனும் இகழார் புலமையோர்

பின்வரும் திருப்பாடலில், 'முன்னர் சிவபரம்பொருள் புராண நிகழ்வுகள் யாவையும் திருநந்திதேவருக்கு உபதேசிக்க, அவர் அதனை சனற்குமாரருக்கு உரைக்க, சனற்குமாரர் மூலம் அவைகளை அறியப் பெறும் வேத வியாசர் அவைகளைப் பதினெண் புராணங்களாக இயற்றியளித்து சூத முனிவரிடம் உபதேசிக்க, சூத முனிவர் வாயிலாக யாவருக்கும் உபதேசிக்கப் பெற்றுள்ளவையே இப்புராணங்கள்' என்று ஸ்காந்த புராண மூலத்தினைப் பதிவு செய்கின்றார் ('மூவாறு தொல்கதை' - பதினெண்  புராணங்கள், 'வாதராயண முனி' -  வேத வியாசர்). 

(கந்த புராணம் - அவையடக்கம் - திருப்பாடல் 8):
நாதனார் அருள்பெறு நந்தி தந்திடக்
கோதிலாதுணர் சனற்குமரன் கூறிட
வாதராயண முனி வகுப்ப ஓர்ந்துணர்
சூதன் ஓதியது மூவாறு தொல்கதை

கீழ்க்குறித்துள்ள திருப்பாடலில், 'ஸ்காந்தமாகிய பெருங்கடலுள், சிவபெருமானின் திருநெற்றிக் கண்ணிலிருந்து ஆறுமுக தெய்வம் வெளிப்பட்ட நிகழ்விலிருந்துத் துவங்கி, சூர சம்ஹாரம் முதலிய முக்கிய நிகழ்வுகளை இப்புராணத்தில் கூறவுள்ளேன்' என்று மேலும் விவரிக்கின்றார் (காந்தம் - ஸ்காந்தம்),

(கந்த புராணம் - அவையடக்கம் - திருப்பாடல் 14):
காந்தமாகிய பெருங் கடலுள் கந்தவேள்
போந்திடு நிமித்தமும் புனிதன் கண்ணிடை
ஏந்தல் வந்தவுணர்கள் யாரும் அவ்வழி
மாய்ந்திட அடர்த்தது மற்றும் கூறுகேன்

இறுதியாய்ப் பின்வரும் திருப்பாடலின் முதல் இரு வரிகளில், வடமொழியில் சூதமுனிவர் முன்பு உபதேசித்த ஸ்காந்த புராணத்தினை ('முன்பு சூதன் மொழி வடநூல் கதை'), சிறப்புற்று விளங்கும் தமிழ் மொழியில் கூறுகின்றேன் ('பின்பு யான் தமிழ்ப் பெற்றியில் செப்புகேன்') என்று மீண்டுமொரு முறை ஐயத்திற்குச் சிறிதும் இடமின்றி, கந்தபுராணத்தின் மூலமான ஸ்காந்த புராணத்தினைப் பதிவு செய்துப் போற்றுகின்றார் கச்சியப்ப சிவாச்சாரியார். 

(கந்த புராணம் - அவையடக்கம் - திருப்பாடல் 16):
முன்பு சூதன் மொழிவட நூல்கதை
பின்பு யான்தமிழ்ப் பெற்றியில் செப்புகேன்
என்பயன்எனில் இன்தமிழ்த் தேசிகர்
நன்புலத்தவை காட்டு நயப்பினால்

வேத வியாசரின் அவதார நோக்கம் (கந்த புராண விளக்கங்கள்):

திருக்கயிலையிலுள்ள சிவபரம்பொருளின் திருச்சபையில் இந்திரன் உள்ளிட்ட தேவர்கள்; நான்முகக் கடவுளான பிரமன்; பாற்கடல் வாசனாரான ஸ்ரீமகாவிஷ்ணு முதலியோர் கூடியிருக்கின்றனர். தேவர்கள் முக்கண் முதல்வரிடம், 'நிலவுகிலுள்ளோர் யாவரும் தாம் அருளியுள்ள மறைகளுக்குத் தத்தமது விருப்பம் போல் பொருள் கற்பித்துக் கொண்டு, அற நெறியிலிருந்து பிறழ்ந்து வருகின்றனர்' என்று முறையிட்டுப் பணிகின்றனர்.   

நான்மறை நாயகரான சிவமூர்த்தி ஸ்ரீமகாவிஷ்ணுவிடம், 'காதலுடன் காத்தல் தொழிலைப் புரிந்து வரும் பரந்தாமா!, உம்முடைய குற்றமற்ற கலைகளில் ஓர் அம்சத்தைக் கொண்டு நிலவுலகில் வியாச முனியாகத் தோன்றுவீராக' என்று அருளிச் செய்கின்றார், 

(கந்தபுராணம்: பாயிரம் - திருப்பாடல் 32)
காதலின் அருளுமுன் கலையின் பன்மையில் 
கோதறும் ஓர்கலை கொண்டு நேமிசூழ்
மேதினி அதனிடை வியாதன் என்றிடு
போதக முனியெனப் போந்து வைகுதி

சிவபெருமான் ஸ்ரீமகாவிஷ்ணுவிடம் மேலும் கூறுகின்றார், 'அவ்வாறு வியாசனாய்த் தோன்றிய பின்னர், நாமருளிய மறைகளை ஆய்ந்தறிந்து அதனை நான்காகப் பகுத்து நிலவுலகிலுள்ளோர் அகஇருளை நீக்குவீராகுக, 

(கந்தபுராணம்: பாயிரம் - திருப்பாடல் 33)
போந்தவண் இருந்தபின் புகரிலா மறை
ஆய்ந்திடின் வந்திடும் அவற்றை நால்வகை
வாய்ந்திட நல்கியே மரபினோர்க்கெலாம்
ஈந்தனை அவர்அகத்திருளை நீத்தியால்

சிவபெருமான் ஸ்ரீமகாவிஷ்ணுவிடம் மேலும் கூறுகின்றார், 'துன்பங்களைப் போக்கிடும் பதினெண் வகைப் புராணங்களை நாம் முன்னமே நந்தி அறியுமாறு கூறியுள்ளோம்', 

(கந்தபுராணம்: பாயிரம் - திருப்பாடல் 36)
என்பெயர் அதற்கெனில் இனிது தேர்ந்துளோர்
துன்பம் அதகற்றிடும் தொல் புராணமாம்
ஒன்பதிற்றிருவகை உண்டவற்றினை
அன்புடை நந்திமுன்அறியக் கூறினேம்

சிவபெருமான் மேலும் தொடர்கின்றார், 'நந்தி அப்புராணங்களை சனற்குமாரருக்கு கூறினான், நிலவுலகில் வியாசனாய்த் தோன்றிய பின்னர் சனற்குமாரரிடமிருந்து அவைகளை அறிந்து கொள்வீராகுக', 

(கந்தபுராணம்: பாயிரம் - திருப்பாடல் 37)
ஆதியில் நந்திபால் அளித்த தொன்மைசேர்
காதைகள் யாவையும் கருணையால் அவன்
கோதற உணர் சனற்குமாரற்கீந்தனன்
நீதியொடவனிடை நிலத்தில் கேட்டியால்

ஆக, 'பராசர மகரிஷியின் திருக்குமாரராகத் தோன்றிய வேத வியாசரின் பிரதான அவதார நோக்கங்கள் இரண்டு' என்று கச்சியப்ப சிவாச்சாரியார் பதிவு செய்கின்றார், 

1. ஒவ்வொரு துவாபர யுக துவக்கத்திலும் தோன்றி, அது வரையிலும் ஒரே தொகுப்பாக விளங்கி வந்துள்ள வேதங்களை, 'ரிக், யஜூர், சாம, அதர்வனம்' என்று நான்மறைகளாக பகுத்தளிப்பது,
-
2. ஆதியில் சிவபெருமான் அருளியுள்ள பதினெண் புராணங்களையும் சனற்குமாரரிடமிருந்துக் கேட்டறிந்து அதனைச் சுலோக வடிவமாக்கி நமக்களித்தல், 

இவை நீங்கலாக, பிரம்ம சூத்திரம், 5ஆவது வேதமெனப் போற்றப் பெறும் மகாபாரத இதிகாசம் ஆகியவைகளையும் வடமொழியில் இயற்றி அருளியுள்ளார் வேத வியாசர்.

18 புராணங்களில் சைவ; வைணவ புராணங்களின் எண்ணிக்கை என்ன? (கந்த புராண விளக்கங்கள்):

வேத வியாசர் பதினெண் புராணங்களை வடமொழியில் இயற்றி அவைகளை சூத முனிவருக்கு உபதேசிக்கின்றார். ஆதலின் ஒவ்வொரு புராணத்தின் துவக்கமும், சூத முனிவர் நைமிசாரண்ய ஷேத்திரத்தில் குழுமியிருக்கும் எண்ணிறந்த முனிவர்களுக்கு அப்புராண நிகழ்வுகளை விவரிப்பதாகவே அமைந்திருக்கும். இனி இப்புராணங்கள் எவ்வாறு வகைப்படுத்தப் பெற்றுள்ளன என்று நம் கச்சியப்ப சிவாச்சாரியாரின் திருப்பாடல்கள் வாயிலாக உணர்ந்துத் தெளிவுறுவோம், 

'சிவபரம்பொருளுக்கென 10 புராணங்களும், ஸ்ரீமகாவிஷ்ணுவிற்கென 4 புராணங்களும், நான்முகக் கடவுளான பிரமனுக்கு 2 புராணங்களும், சூரிய தேவன் மற்றும் அக்கினி தேவனுக்கு ஓரோர் புராணமுமாய் மொத்தம் 18 புராணங்கள்' என்று பட்டியலிடுகின்றார் கச்சியப்ப சிவாச்சாரியார் (அலரி - சூரிய தேவன், அங்கி - அக்கினி தேவன்),
-
(கந்தபுராணம்: பாயிரம் - திருப்பாடல் 53)
நம்பனார்க்கு ஒருபது நாரணற்கு நான்கு 
அம்புயத்தவற்கு இரண்டு அலரிஅங்கியாம்
உம்பர்வான் சுடர்களுக்கு ஓரொன்று என்பரால்
இம்பரில் இசைக்கும் அப்புராணத்து எல்லையே

பின்வரும் திருப்பாடலில் 12 புராணங்களை வகைப்படுத்தித் தொகுக்கின்றார், 
-
(சைவம் பேணும் சிவசம்பந்தமான புராணங்களின் வரிசை): 
1. சிவ புராணம் 
2. பவிஷ்ய புராணம் 
3. மார்க்கண்டேய புராணம் 
4. இலிங்க புராணம் 
5. ஸ்காந்த புராணம் 
6. வராக புராணம் 
7. வாமன புராணம் 
8. மத்சய புராணம் 
9. கூர்ம புராணம் 
10. பிரமாண்ட புராணம் 
-
(நான்முகக் கடவுளுக்கான புராணங்களின் வரிசை) :
11. பிரம்ம புராணம் 
12. பத்ம புராணம் 
-
(கந்தபுராணம்: பாயிரம் - திருப்பாடல் 54)
எதிரில் சைவமே பவிடியம் மார்க்கண்டம் இலிங்கம்
மதிகொள் காந்த நல் வராகமே வாமனம் மற்சம்
புதிய கூர்மமே பிரமாண்டம் இவை சிவபுராணம்
பதும மேலவன் புராணமாம் பிரமமே பதுமம்

பின்வரும் திருப்பாடலில் மீதமுள்ள 6 புராணங்களை வகைப்படுத்துகின்றார், 
-
(ஸ்ரீமன் நாராயணருக்கான புராணங்களின் வரிசை):
13. கருட புராணம் 
14. நாரத புராணம் 
15. ஸ்ரீவிஷ்ணு புராணம் 
16. ஸ்ரீமத் பாகவத புராணம் 
-
(அக்கினி தேவனுக்கான புராணம்):
17. ஆக்கினேய புராணம் 
-
(சூரிய தேவனுக்கான புராணம்):
18. பிரம்ம வைவார்த புராணம் 
-
(கந்தபுராணம்: பாயிரம் - திருப்பாடல் 55)
கருது காருடம் நாரதம் விண்டு பாகவதம்
அரிகதைப் பெயர் ஆக்கினேயம் அழல் கதையாம்
இரவி தன்கதை பிரமகைவர்த்தமாம் இவைதாம்
தெரியும் ஒன்பதிற்றிருவகைப் புராணமாம் திறனே

குருஷேத்திர பூமியில் மாபாரதக் கண்ணன் உபதேசித்த சிவ சகஸ்ரநாமம் (அனுசாசனப் பர்வம் பறைசாற்றும் அரிய நிகழ்வு):

குருக்ஷேத்திர பூமி, அம்புப் படுக்கையில் பீஷ்மர், பாண்டவர்கள் திரௌபதியுடன் சென்று பிதாமகரைப் பணிகின்றனர், கண்ணனும் உடன் எழுந்தருளி இருக்கின்றான். அச்சமயத்தில் எண்ணிறந்த தர்மங்களை பாண்டவர்களுக்கு உபதேசிக்கும் பீஷ்மர் இறுதியாய், 1000 திருநாமங்களுடன் கூடிய ஸ்ரீவிஷ்ணு சகஸ்ரநாமத்தையும் வெளிப்படுத்துகின்றார். 

பின்பு தர்மர் பிதாமகரிடம், 'பரந்தாமனின் திவ்யத் திருநாமங்களைக் கேட்கப் பெற்று புண்ணியர்களானோம், இனி 'ஈஸ்வரர்; சம்பு என்று பலவாறு போற்றப் பெறுபவரும், அண்டங்கள் அனைத்திற்கும் ஆதியும் அந்தமுமாய் விளங்குபவரும், தனக்கொரு காரணமற்ற சுயம்பு மூர்த்தியாய் விளங்கியருளும் மகாதேவரின் திருநாமங்களையும் உபதேசித்தருள வேண்டும்' என்று விண்ணப்பிக்கின்றார் (வியாச பாரதம்: அனுசாசன பர்வம் - அத்தியாயம் 14).

பீஷ்மர் யுதிஷ்டிரரிடம் 'மகாதேவரின் தன்மைகளை விளக்கும் உத்தம ஞானமானது எனக்கு கைவரப் பெறவில்லை. எங்கும் வியாபித்துள்ள பரம்பொருளாக இருப்பினும் காண்பதற்கரிய இறைவர் அவர், அம்மூர்த்தியே யாதொன்றிற்கும் மூல காரணம், அவரே ஞானங்களனைத்தின் வரம்பாகத் திகழ்பவர், தேவர்களும் தெய்வங்களும் தொழுதேத்தும் தனிப்பெரும் தெய்வமாய் விளங்கும் அப்பெருமானின் தன்மையினை உள்ளவாறு அறிந்துணர எவரொருவராலும் இயலாது. எனினும் அச்சிவ மூர்த்தியின் அளப்பரிய கீர்த்தியினை உரைக்க வல்லவர் ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா ஒருவரே, கண்ணனைத் தவிர்த்துப் பிரிதொருவரால் சர்வேஸ்வரரின் பிரபாவத்தினை விவரித்து விட இயலாது' என்றுரைக்கின்றார். 

நம் மாபாரதக் கண்ணன் இவ்விடத்திலும் தானே ஸ்ரீமன் நாராயணன மூர்த்தி; பரவாசுதேவன் என்றெல்லாம் அறிவித்துக் கொள்ளவில்லை. மாறாக, 'முன்னாளில் குருவான உபமன்யு முனிவர் எமக்கு உபதேசித்துள்ள சிவ ஸஹஸ்ரநாம வைபவத்தை உங்களுக்குக் கூறுகின்றேன்' என்று அருளிச் செய்கின்றார். கிடைக்கும் வாய்ப்புகள் தோறும், ஆச்சாரிய பரம்பரையின் மகத்துவத்தைப் பறைசாற்ற நம் கீதாச்சாரியன் தவறுவதே இல்லை.

அனுசாசனப் பர்வம் 14-16 அத்தியாயங்கள் வரையிலும் ஸ்ரீகிருஷ்ணன் சிவபரம்பொருளின் அளப்பரிய கீர்த்தியையும், இமயமலைச் சாரலில் உபமன்யு முனிவரிடம் முன்பொரு சமயம் உபதேசமாகப் பெற நேர்ந்த நிகழ்வுகளையும் முதலில் விவரிக்கின்றான். பின்னர் 17ஆம் அத்தியாயத்தில் சிவ சகஸ்ரநாமத்தை முழுவதுமாய், உபமன்யு முனிவரின் வார்த்தைகளாகவே மாபாரதக் கண்ணன் வெளிப்படுத்தி அருள்கின்றான்.

வேத வியாசர், மகாபாரதத்திலும், மற்றுமுள்ள தம்முடைய புராணங்களிலும் மொத்தம் 5 சிவ சகஸ்ரநாமங்களைப் பதிவு செய்தருளி உள்ளார். அவற்றுள், கிருஷ்ணாணாவதார கால கட்டத்தில், உபமன்யு முனிவரிடமிருந்து உபதேசமாகப் பெற்று, குருஷேத்ர யுத்த சமயத்தில் ஸ்ரீகிருஷ்ணன் வெளிப்படுத்தி அருளியுள்ள இந்த சிவ சகஸ்ரநாமமே பாரத தேசமெங்கும் பிரசித்தமாகப் பாராயணம் புரியப்பட்டு வருகின்றது.

சிவ; விஷ்ணு சகஸ்ரநாமங்கள் இரண்டையும் அளித்து சைவ வைணவ சமயங்களின் ஒப்புயர்வற்ற சங்கமமாகத் திகழ்வது வியாச பாரதத்தின் அனுசாசனப் பர்வம். புது தில்லியிலிருந்து 175 கி.மீ பயணத் தொலைவிலுள்ள குருஷேத்திர பூமிக்கருகில், பிதாமகர் அம்புப் படுக்கையில் வீழ்ந்திருந்த இடத்தை இன்றும் தரிசிக்கலாம். இங்கு பீஷ்மருக்கு ஆலயமொன்றும் அதனருகில் அர்ஜுனன் சரத்தால் உருவாக்கிய தீர்த்தமும் அமைந்துள்ளது.

சிவபெருமானுக்கும் முருகக் கடவுளுக்கும் முப்புரி நூலான பூணூலா? (முறையான விளக்கங்கள்):

இறைவனின் திருமார்பில் விளங்கும் முப்புரி நூலை 'நான்மறைகளுக்கான குறியீடு அல்லது வைதீக தர்மத்தின் குறியீடு' என்ற அளவில் பொருள் கொள்ளுதலே சிறப்பு அன்றி அது ஒரு குலத்தையோ சமூகத்தையோ குறிக்க வந்ததன்று. 'நூலது வேதாந்தம் நுண்சிகை ஞானமாம்' என்று 'முப்புரி நூல் வேதாந்தத்தையே குறிக்க வந்தது' என்பதனைத் திருமூலர் தெளிவுறுத்துகின்றார். 
*
இனி முருகப் பெருமான் முப்புரி நூல் அணிந்தருள்வதை அருணகிரிப் பெருமானின் திருப்பாடல்கள் வாயிலாக உணர்ந்துத் தெளிவுறுவோம், 
-
('மின்னார் பயந்த' என்று துவங்கும் முள்வாய் தலத் திருப்புகழ்): 
'பொன்னார் சதங்கை தண்டை முந்நூல் கடம்பணிந்து பொய்யார் மனங்கள் தங்கும் அதுபோல'
-
பொன் சதங்கை; தண்டை இவைகளைக் திருக்கழலிலும், முப்புரி நூல்; கடப்ப மாலை இவைகளைத் திருத்தோள்களிலும் முருகப் பெருமான் அணிந்தருளும் திருக்காட்சியை இத்திருப்பாடலில் போற்றுகின்றார்,  
-
('உறவின்முறை கதறியழ' என்று துவங்கும் பொதுத் திருப்புகழ்): 
'மதுவொழுகு தரவில்மணி மீதே முநூல்ஒளிர'
-
தேனொழுகும் மணிமாலையின் மேல் பூணூல் விளங்குமாறு' முருகப் பெருமான் எழுந்தருளி வரும் திருக்காட்சியை இத்திருப்பாடலில் போற்றுகின்றார், 
-
('தருவூர் இசையார்' என்று துவங்கும் வழுவூர் தலத் திருப்புகழ்):
'புரிநூலும் உலாவு துவாதச ...... புயவீரா'
-
'முப்புரி நூல் அசைகின்ற பன்னிரு திருத்தோள்களை உடையவனே' என்று இத்திருப்பாடலில் போற்றுகின்றார், 
*
பிரசித்தி பெற்ற கந்த சஷ்டிக் கவசத்தில், 'முப்புரி நூலும் முத்தணி மார்பும்' என்று பதிவு செய்துப் போற்றுகின்றார் பாலன் தேவராய சுவாமிகள்.
*
தேவாரத் திருமுறைகள் முழுவதிலும் எண்ணிறந்த திருப்பாடல்களில் சிவபெருமான் முப்புரி நூல் அணிந்தருளும் திருக்காட்சியினை தேவார மூவர் பதிவு செய்துப் போற்றியுள்ளனர், 
-
பின்வரும் திருநள்ளாறு திருப்பதிகத்தின் 5ஆம் திருப்பாடலில், ' நூல்கிடந்த மார்பில்' என்று போற்றுகின்றார் ஞானசம்பந்தப் பெருமான்,  
-
ஏறுதாங்கி யூர்திபேணி யேர்கொள் இளமதியம்
ஆறுதாங்குஞ் சென்னிமேலோர் ஆடர வஞ்சூடி
நீறுதாங்கி நூல்கிடந்த மார்பில் நிரைகொன்றை
நாறுதாங்கு நம்பெருமான் மேயது நள்ளாறே
*
பின்வரும் திருஆமாத்தூர் திருப்பதிகத்தின் 6ஆம் திருப்பாடலில், 'பூண்டவன் பூண்டவன் மார்பில் புரிநூல் புரளவே' என்று போற்றுகின்றார் நாவுக்கரசு சுவாமிகள்,
-
காண்டவன் காண்டவன் காண்டற்கரிய கடவுளாய்
நீண்டவன் நீண்டவன் நாரணன் நான்முகன் நேடவே
ஆண்டவன் ஆண்டவன் ஆமாத்தூரையும் எனையுமாட்
பூண்டவன் பூண்டவன் மார்பில் புரிநூல் புரளவே
*
பின்வரும் திருக்கூடலையாற்றூர் திருப்பதிகத்தின் 6ஆம் திருப்பாடலில், 'வித்தக வீணையொடும் வெண்புரி நூல்பூண்டு' என்று போற்றுகின்றார் சுந்தர மூர்த்தி நாயனார், 
-
வித்தக வீணையொடும் வெண்புரி நூல்பூண்டு
முத்தன வெண்முறுவல் மங்கையொடும் உடனே
கொத்தலரும் பொழில்சூழ் கூடலையாற்றூரில்
அத்தன் இவ்வழிபோந்த அதிசயம் அறியேனே

மாபாரதம் கூறிய மாமுனி:

'குகையில் நவ நாதரும்' என்று துவங்கும் பொதுத் திருப்புகழில், 'குற்றமற்ற முறையில் வேத வியாசர் மாபாரத இதிகாசத்தை வடமொழி சுலோகங்களாகக் கூறிக்கொண்டே வர, அதனை விநாயகப் பெருமான் தன் திருக்கரங்களால் எழுதிப் பேரருள் புரிந்த அற்புத நிகழ்வினைப் போற்றுகின்றார் அருணகிரிப் பெருமான். 
-
பழுதற வியாசன் அன்றியம்ப
எழுதிய விநாயகன் சிவந்த
பவளமத யானை பின்பு வந்த முருகோனே!!!

சைவ சமயத்தின் வேதங்கள் "அறம்; பொருள்; இன்பம்; வீடா?" அல்லது "ரிக்; யஜுர்; சாம; அதர்வணமா? "

திருமுறை ஆசிரியர்கள்; அருளாளர்கள் மற்றும் ஆச்சாரியர்கள் யாவரும், "சைவ சமயத்தின் அடிநாதமான ரிக்; யஜுர்; சாம; அதர்வண வேதங்களை" எண்ணிறந்த திருப்பாடல்களில் தனித்தனியே பெயரைக் குறிப்பிட்டே போற்றி வந்துள்ளனர். இவ்வளவு வெளிப்படையான குறிப்புகள் இருந்தும், சைவ சமயத்தில் மொழி அரசியலால்  பிரிவினைப் பிரச்சாரம் புரிவதையே தங்கள் வாழ்நாள் லட்சியமாகக் கொண்டுள்ள புண்ணியவான்கள், 'நான்மறைகள்' என்று பொதுக் குறியீடாக வரும் திருமுறைப் பாடல்களை மட்டும் எடுத்துக் கொண்டு, அவை 'அறம்; பொருள்; இன்பம்; வீடு' எனும் தமிழர் வேதத்தையே குறிக்கின்றது, 'ரிக்; யஜுர்; சாம; அதர்வண வேதங்களை அல்ல' என்று தொடர்ந்து பொய்ப் பரப்புரைகளை மேற்கொண்டு வருகின்றனர், அது குறித்து இப்பதிவில் சிறிது சிந்தித்துத் தெளிவுறுவோம், 

கச்சியப்ப சிவாச்சாரியார் பின்வரும் கந்தபுராணத் திருப்பாடலில், 'இருக்கு ஆதியாம் வேத நான்கையும்' எனும் வரியில், 'ரிக் முதலான நான்கு வேதங்களையும்' என்று சைவ சமய வேதங்களைக் குறிக்கின்றார், 
-
(கந்த புராணம் - பாயிரம் - திருப்பாடல் 47)
மயலறு பயிலரே வைசம்பாயனர்
சயிமினி சுமந்துவாம் தவத்தர் நால்வர்க்கும்
வியல்இருக்கு ஆதியாம் வேத நான்கையும்
உயர்வுறு தவத்தினான் முறையின் ஓதினான்

ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள், பின்வரும் திருப்பாடல் வரிகளில் ஐயத்திற்குச் சிறிதும் இடமின்றி, 'ரிக்; யஜுர்; சாம; அதர்வண வேதங்களையும் அவற்றின் இறுதியில் இடம்பெறும் வேதாந்தமாகிய 10 பிரதான உபநிடதங்களையும் தனித்தனியே பெயரோடு குறிப்பிட்டுப் போற்றுகின்றார், 
-
(கந்தக்கோட்ட மும்மணிக்கோவை - திருப்பாடல் 28 - முதல் 8 வரிகள் மட்டும்)
நாயகன் தந்த நால்வேதத்துள் 
இருக்கு மறையின் எழில் ஐத்ரேயம் 
எசுவின் தைத்திரியம் ஈசாவாசியம் 
பிருகதாரணியம் பேழ்க் கடவல்லி 
கீதச் சாந்தோக்கியம் நல்கேதம் 
அதர்வப் பிரச்சிந மணி மாண்டூக்கியம் 
முண்டகம் என்ன மொழி ஒருபதூஉம் 
..

பின்வரும் திருப்பாடலில் உமாபதி சிவாச்சாரியார் தம்முடைய சேக்கிழார் புராணத்தில், 'இருக்கு முதல் மறைநான்கில்' என்று சைவ சமய வேதங்கள் எவையென்று தெளிவாகக் குறிக்கின்றார்.  
-
(சேக்கிழார் புராணம்: திருப்பாடல் 86)
திருத்தொண்டர் புராணம் எழுதிய முறையை
மறையோர் சிவமூல மந்திரத்தால் அருச்சனை செய்திறைஞ்சி
இருக்கு முதல் மறைநான்கில் இன்று முதலாக
இதுவும் ஒரு தமிழ்வேதம் ஐந்தாவதென்று
கருத்திருத்தி அமுதடைக்காய் நறும்தூபதீபம்
கவரி குடை கண்ணாடி ஆலத்திநீறு
பரித்தளவு செய்யக்கண்டு வளவர்பிரான்
முறையைப் பசும்பட்டினால் சூழ்ந்து பொற்கலத்தினில் இருத்தி

ஆதலின் சைவ; வைணவ; சாக்த; கௌமார; காணபத்ய; சௌரம் எனும் அறுசமயங்களுக்கும் அடிநாதமாக விளங்குவது 'ரிக்;யஜுர்;சாம; அதர்வண' வேதங்களே என்பது தெளிவு.

எனில் 'தேவராயும்' என்று துவங்கும் திருமுதுகுன்றத் திருப்பதிகத்தில், 'அந்தணாளர்க்கு அறம்பொருள் இன்பம்வீடு மொழிந்த வாயான்' என்று ஞானசம்பந்தர் குறித்துள்ளாரே, இதனை எவ்வாறு புரிந்து கொள்வது? எனில், வடமொழியில் "தர்ம; அர்த்த; காம; மோக்ஷம்" என்று வழங்கப் பெறும் புருஷார்த்தங்களே தமிழ் வழக்கில்  "அறம்; பொருள்; இன்பம்; வீடு" எனும் வாழ்வியல் நெறிகளாகப் போற்றப் பெறுகின்றது. 'நான்மறைகளாகிய ரிக்; யஜுர்; சாம; வேதங்களில் பொதிந்துள்ள இந்நெறிகளைச் சிவபெருமான் சனகாதியர்க்கு உணர்த்தி அருளினார்' என்ற அளவில் இதனைப் புரிந்து கொள்வதே ஏற்புடையது. 

மேலும் நம் சம்பந்தப் பிள்ளையார் 'தங்கு செஞ்சடையினீர் சாமவேதம் ஓதினீர்' என்றும் 'இருக்கின் மலிந்த இறைவர்அவர் போலாம்' என்றும் சாம; ரிக் வேதங்களைத் தனித்தனியே பெயரைக் குறிப்பிட்டுப் போற்றியுள்ள திருப்பாடல்களையும் சிந்தித்துத் தெளிவுறுதல் வேண்டும். 

திருமுறைகளின் பொருளைத் திரித்துக் கூறி, வடமொழி வன்மத்தைத் தூண்டித் தொடர்ந்து பிரிவினைப் பிரச்சாரம் புரிந்து வரும் இவர்களின் பிரதான நோக்கம், நால்வேதங்கள் எனும் சங்கிலியால் பாரத தேசமெங்கிலும் ஒற்றைப் புள்ளியில் வலிமையாய்ப் பிணைக்கப் பெற்றுள்ள நம் சனாதன தர்மத்தின் அறுவகைச் சமயங்களையும் வேதங்களிலிருந்து பிரித்துச் சிறுசிறு பிரிவுகளாக்கிப் பலவீனப்படுத்துவது. அதன் ஒரு பகுதியாய் தமிழகத்தில், வடமொழியிலுள்ள நான்மறைகள்; உபநிடதங்கள்; புராணங்கள்; இதிகாசங்கள் இவைகளின் மீது தொடர்ந்து வெறுப்புப் பிரச்சாரம் புரிந்து, அவைகளைத் தமிழ்ச் சமய மரபிலிருந்து நீக்க முனைந்து வருகின்றனர். 

மொழி அரசியல் மற்றும் பிரிவினைப் பிரச்சாரம் புரிபவர் மூலம் ஆன்மிகம் கற்காமல் நம் சமயச் சான்றோர் அறிவுறுத்தி வந்துள்ள பாதையில் பயணித்து உய்வு பெறுவோம், தொடர்ப் பொய்ப் பிரச்சாரங்களை புறம் தள்ளுவோம் (சிவ சிவ).

வேத வேள்வியை நிந்தனை செய்துழல் 
ஆதமில்லி அமணொடு தேரரை
வாதில் வென்றழிக்கத் திருவுள்ளமே
பாதி மாதுடனாய பரமனே
ஞாலம் நின்புகழே மிகவேண்டும் தென்
ஆலவாயில் உறையும் எம்ஆதியே!!!

தமிழ் மொழியும் ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியும் (கம்ப இராமாயண விளக்கங்கள்):

கைகேயி அன்னையின் மூலம் வெளிப்பட்ட தசரத மன்னனின் வாக்கினைச் சிரமேற் கொண்டு கோசலை மைந்தன் அக்கணமே கானகம் செல்ல முனைகின்றான். எனினும் இலக்குவனோ தமையனுக்கு இழைக்கப்பட்டுள்ள அநீதி கண்டு வெகுண்டு, யாவரையும் அழித்தொழிக்கும் எண்ணத்துடன் வில்லில் நாணொலி எழுப்புகின்றான், அண்டங்கள் யாவும் கிடுகிடுக்கின்றன. அச்சமயத்தில் ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி பல்வேறு அறவுரைகளால் இலக்குவனை அமைதியுறச் செய்வதாகக் கவிச்சக்கரவர்த்தி பதிவு செய்கின்றார். இனி இது குறித்த திருப்பாடலொன்றினை இப்பதிவில் சிந்தித்து மகிழ்வோம், 

(அயோத்தியா காண்டம் -  நகர் நீங்கு படலம்):
நன்சொற்கள் தந்து ஆண்டு எனை நாளும் வளர்த்த தாதை
தன் சொல் கடந்து எற்கு அரசு ஆள்வது தக்கது அன்றால்
என் சொல் கடந்தால் உனக்கு யாது உளது ஈனம்?' என்றான் 
தென்சொல் கடந்தான் வடசொல் கலைக்கு எல்லை தேர்ந்தான்!!!
-
(பொருள்):
தம்பீ, இனிய சொற்களை மட்டுமே புகன்று இதுநாள் வரையிலும் நமை வளர்த்து வந்த தந்தையின் வாக்கினை மீறி அரசாள முனைவது எவ்விதத்திலும் அறமாகாது. (தமையனான எம்மை 'தாய், தந்தை, தலைவன், இறைவன்' என்று அனைத்துமாகவும் ஏற்றுள்ளதாகப் பல சமயங்களில் கூறி வருவாயே, அவையாவும் உண்மையெனில்) இன்று இச்சமயத்தில் எம்முடைய சொற்களை மீறி நீ அடைந்து விடக்கூடிய பயன் தான் என்ன? என்று அறவுரை பகர்கின்றான் தசரத மைந்தன். 

மேற்குறித்துள்ள திருப்பாடலின் இறுதி வரியில் 'வடமொழி; தென்மொழியாகிய தமிழ்' ஆகிய இரண்டிலும் பெரும் புலமை பெற்றிருந்தான் ஸ்ரீராமன் என்று குறிக்க வரும் கம்பர், 'மறைமொழியாகிய வடமொழிப் புலமையில் எல்லை கண்டவன் (வடசொல் கலைக்கு எல்லை தேர்ந்தான்)' என்றும் தென்மொழியாகிய தமிழ் மொழியில் 'எல்லை கடந்த புலமையைக் கைக்கொண்டிருந்தான் (தென்சொல் கடந்தான்)' என்றும் அற்புதத் தன்மையில் பதிவு செய்துப் போற்றுகின்றார்.

சைவ சமயம் வடமொழியிலுள்ள 18 புராணங்களை அங்கீகரிக்கின்றதா? முறையான விளக்கங்கள்:

திருஞானசம்பந்தர், பாண்டிய நாட்டில் மீண்டும் சைவ சமயம் தழைத்தோங்கச் செய்யும் பொருட்டு மதுரைக்கு எழுந்தருளி வருகின்றார். பாண்டியனின் வெப்பு நோயினைத் திருநீற்றுப் பதிகம் பாடி நீக்குகின்றார். பின் அனல் வாதத்தில் சமணர்களை வெல்கின்றார், இறுதியாய் வையையாற்றில் புனல் வாதம் நடந்தேறுகின்றது, சமணர்கள் இட்ட பொய்நெறிச் சுவடிகள் ஆற்றின் போக்கில் அடித்துச் செல்லப் பட, சம்பந்த மூர்த்தி இடும் 'வாழ்க அந்தணர்' எனும் சுவடியோ ஆற்றின் போக்கிற்கு எதிரேறிச் சென்று சைவ சமயத்தின் மேன்மையைப் பறைசாற்றுகின்றது.

இந்நிகழ்வு தொடர்பான பெரிய புராணத் திருப்பாடலொன்றை இனிக் காண்போம்,
-
வேத முதல்வன் எனும் மெய்த் திருப்பாட்டினில்நேர்
ஆதி உலகோர் இடர்நீங்கிட ஏத்த ஆடும்
பாத முதலாம் பதினெண் புராணங்கள் என்றே
ஓதென்றுரை செய்தனர் யாவும் ஓதாதுணர்ந்தார் .

(சுருக்கமான பொருள்):
வேத வியாசர் அருளிய பதினெட்டு புராணங்களிலும் 'முக்கண் மூர்த்தியான சிவபெருமானே ஆதிப் பரம்பொருளாக விளங்குபவர்' எனும் சத்தியம் பேசப் பெற்றுள்ளது' என்றுரைத்தவாறே சம்பந்தப் பெருமான் தம்முடைய தேவாரச் சுவடியினை வைகை ஆற்றில் இட்டார் என்று சேக்கிழார் குறிக்கின்றார். ஆதலின் சைவ சமயம் பதினெண் புராணங்களை முழுவதுமாய் அங்கீகரிக்கின்றது என்பது தெளிவு.

வியாசர் அருளிய 18 புராணங்களையும் சூத மாமுனிவர் என்பவர் நைமிசாரண்யம் எனும் வனத்தில் எண்ணிறந்த முனிவர்களுக்கு உபதேசித்ததாகப் புராணங்கள் பதிவு செய்கின்றன. இதனைச் சமபந்தப் பெருமான் தம்முடைய தேவாரத் திருப்பதிகத்திலும் 'சூதன் ஒலிமாலை' என்று குறித்துள்ளார்.
-
வேத முதல்வன் முதலாக விளங்கி வையம்
ஏதப்படாமை உலகத்தவரேத்தல் செய்யப்
பூத முதல்வன் முதலே முதலாப் பொலிந்த
சூதனொலிமாலை என்றே கலிக்கோவை சொல்லே.

திருவள்ளுவரின் சமயம் தான் என்ன? கொள்கை வழியிலொரு ஆய்வு:

சமணம் பௌத்தம் ஆகியவை கடவுள் மறுப்புக் கொள்கைகளைப் பிராதனமாக முன்னிறுத்தும் மதங்கள், குறிப்பாக பௌத்த மதம் 'அனைத்தும் சூனியம்' எனும் சூனியவாதத் தத்துவத்தினை உள்ளடக்கியது. இவ்விரு சமயங்களுமே 'பரம்பொருள் எனும் ஒற்றைத் தத்துவமே உலகங்கள் யாவையும் படைத்துக் காத்து அழித்து இறுதியில் ஒடுக்குகின்றது' எனும் இந்து தர்மக் கோட்பாட்டினை முற்றிலும் மறுதலிக்கின்றது. திருவள்ளுவனாரோ பரம்பொருளான இறைவனின் இருப்பினை முழுவதும் வழிமொழிந்துக் கடவுள் வாழ்த்துடன் தன் குறட்பாக்களைத் துவக்குகின்றார். 

சமணம் பௌத்தம் ஆகிய சமயங்கள் 'மறுபிறவியை ஒப்புக் கொள்கின்றன எனினும் அவரவர் புரியும் செயல்களின் வினைப் பயன்கள் தாமாகவே சென்று அச்செயல் புரிந்தோரை மறுபிறவிகளில் பற்றும், இதற்கு இறைவன் என்றொருவர் குறுக்கே வருவதில்லை' எனும் கர்மவாதக் கொள்கையை உடையவை. திருவள்ளுவரோ 'பரம்பொருளாகிய இறைவனின் துணையின்றி ஒருபொழுதும் இப்பிறவிக் கடலிலிருந்து நீங்க இயலாது என்று அறுதியிடுகின்றார்.
-
தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க்கு அல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது 

திருவள்ளுவரின் காலகட்டமான சங்ககாலத்தில் கிருத்துவ; இஸ்லாமிய மதங்களின் ஊடுருவல் பாரத தேசத்திலில்லை. எனினும் ஒரு வாதத்திற்கு அம்மதங்களையும் இந்த ஆய்வில் எடுத்துக் கொள்வோமாயின், இவ்விரு ஆப்ரகாமிய மதங்களும் மறுபிறவிக் கொள்கைகளை முற்றிலும் மறுக்கின்றன, திருவள்ளுவரோ இந்து தர்மத்தின் அடிநாதமான மறுபிறவிக் கோட்பாடுகளை எண்ணிறந்த குறள்களில் பதிவு செய்கின்றார்.
-
பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேராதார்

இந்து தர்மக் கொள்கைகள் 'புண்ணியம்; பாவம் இவையிரண்டுமே முத்தி அடைவதற்குத் தடைகள்' என்றொரு புரட்சிக் கருத்தினை முன்மொழிகின்றன. புண்ணியச் செயல்களை 'நான் செய்கின்றேன்' எனும் தன்முனைப்பின்றிப் புரிதல் வேண்டும் இல்லையேல் அப்புண்ணியப் பலன்களை அனுபவிக்க மீண்டும் பிறவியெடுக்க வேண்டி வரும்' என்பது இந்து தர்மத்தின் கர்ம யோகக் கோட்பாடு, இத்தனித்துவமான கொள்கை வேறெந்த மதங்களிலும் இல்லை. இதனைத் திருவள்ளுவர் பின்வரும் குறளில் பதிவு செய்கின்றார்.
-
இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு

மருத்துவர் எம்மதமாக இருப்பினும் அவரளிக்கும் மருந்துகள் எவரொருவருக்கும் பலனளிக்கும், ஆதலின் 'மருத்துவருக்கு ஏன் மதச் சாயம் பூசுகின்றீர்' என்று வாதிடுவது முறையான அணுகுமுறையன்று. மதம் என்பது முக்கியக் கொள்கை மற்றும் கோட்பாடுகளின் தொகுப்பு என்றுணர்வோமாயின் வள்ளுவப் பெருந்தகை 'நம் பாரத தேசத்தில் பல லட்சம் வருடங்களாக வழிவழியாய் புத்துணர்வுடன் விளங்கி வரும் ஒப்புவமையற்ற' இந்து தர்மத்தினைச் சார்ந்தவரே என்பது தெளிவு (சிவ சிவ).

திருக்குறளிலும் சைவத் திருமுறைகளிலும் இறைவனின் எண்குணங்கள்:

திருவள்ளுவர் முதல் அதிகாரமான கடவுள் வாழ்த்தில் பரம்பொருளான இறைவனின் எண்குணங்களைக் குறிப்பிடுகின்றார். நால்வேதங்களை மையமாகக் கொண்டு சமைக்கப் பெற்றிருக்கும் இந்து தர்மத்தில் மட்டுமே இந்த எண்குணக் கோட்பாடு பேசப் பெற்றுள்ளது என்பது முக்கியக் குறிப்பு.
-
கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை

இந்து தர்மம் பறைசாற்றும் இறைவனின் எண்குணங்கள் பின்வருமாறு: தன் வயத்தனாதல், தூய உடம்பினனாதல், இயற்கை உணர்வினனாதல், முற்றும் உணர்தல், இயல்பாகவே பாசங்களினின்றும் நீங்கியிருத்தல், பேரருள் உடைமை, முடிவில்லாத ஆற்றலுடைமை மற்றும் வரம்பில்லாத இன்பமுடைமை.

இனி இந்து தர்மத்தின் அங்கமான சைவத் திருமுறைகளிலிருந்து இறைவனின் எண்குணம் குறித்த சில அகச் சான்றுகளைக் காண்போம்,
-
திருநாவுக்கரசர் தேவாரம்:
எட்டுக்கொலாம் அவர்ஈறில் பெருங்குணம்
-
சுந்தரர் தேவாரம் - திருக்கானாட்டுமுள்ளூர்:
இரும்புயர்ந்த மூவிலைய சூலத்தினானை
இறையவனை மறையவனை எண்குணத்தினானை
-
அருணகிரிநாதர் அருளிய கந்தர் அனுபூதி: திருப்பாடல் 15:
முருகன் குமரன் குகனென்று மொழிந்து
உருகும் செயல் தந்துணர்வு என்றருள்வாய்
பொரு புங்கவரும் புவியும் பரவும்
குருபுங்கவ எண்குண பஞ்சரனே!!!

இந்து மதமும் சைவ வைணவ சமயங்களும் வெவ்வேறா ? அகச் சான்றுகளோடு கூடிய முறையான விளக்கங்கள்:

ஒப்புவமையற்ற நமது இந்து தர்மம் பிரதானமாக நான்கு வேதங்களை அடிப்டையாகக் கொண்டு விளங்குகின்றது, பின்னர் அடுத்த தளத்தில் வேதங்களின் அந்தமாக விளங்கும் உபநிடதங்கள், ஆகமங்கள், வேத வியாசர் அருளியுள்ள 18 புராணங்கள் மற்றும் எண்ணிறந்த உப புராணங்கள், இராமாயண மகாபாரத இதிகாசங்கள் இவையாவும் இடம்பெறுகின்றன. 'இந்து' எனும் மந்திரச் சொல் சனாதனமான நம் தர்மத்தின் குறியீடாக வழங்கப் பெறுதற்கு முன்னர் இம்மதம் 'வேதநெறி, மறைநெறி, வைதீக மதம்' என்று வேதத்தினை மையப்படுத்திய பெயர்களுடனேயே குறிக்கப் பெற்று வந்துள்ளது ('மறை வழக்கம் இல்லாத மாபாவிகள்' என்று சுந்தரர் தேவாரமும், 'வேத நெறி தழைத்தோங்க' என்று பெரியபுராணமும் பேசுகின்றது).

இனி 'ஆன்மீக பூமியான பாரத தேசம் முழுவதிலும் உயிரினும் மேலாகப் போற்றப் பெற்று வரும் இந்து மதத்திற்கும், தமிழ்த்திருநாட்டில் பேணப்பெற்று வரும் சைவ வைணவ சமயங்களுக்கும் தொடர்பேதுமில்லை ' என்பது போன்று போலியாகச் சித்தரிக்கப் பெறும் மத அரசியல் சார்ந்த கருத்தியிலை இப்பதிவினில் சிறிது ஆய்வோம்.
'வேதம் நான்கினும் மெய்ப்பொருளாவது நாதன் நாமம் நமசிவாயவே' என்று திருஞானசம்பந்தப் பெருமான் 'சைவ சமயம் நால்வேதங்களை உள்ளடக்கிய வைதீக மதத்தின் ஒரு அங்கமே' என்று ஐயம் திரிபற நிறுவி அருளுகின்றார்.  'ஆறங்கம் நால்வேதம் ஆனாய் போற்றி' என்பார் அப்பர் சுவாமிகள். 'நம்பினார்க்கருள் செய்யும் அந்தணர் நான்மறைக்கு இடமாய வேள்வியுள் செம்பொனேர் மடவாரணி பெற்ற திருமிழலை' என்று சுந்தர மூர்த்தி சுவாமிகள் நான்மறைகளின் பிராதனத்துவத்தினைப் பேசுவார்.
சைவப் பெருஞ்சமயம் வைதீக மதத்துடன் பின்னிப் பிணைந்துள்ள நிலையினைத் திருமூலர் பின்வரும் திருப்பாடலால் நமக்கு தெளிவுறுத்தி அருளியுள்ளார்,

அத்திசைக்குள்ளே அமர்ந்தன ஆறங்கம்
அத்திசைக்குள்ளே அமர்ந்தன நால்வேதம்
அத்திசைக்குள்ளே அமர்ந்த சரியையோடு
அத்திசைக்குள்ளே அமர்ந்த சமயமே .
'மறையாய நால்வேதத்துள் நின்ற மலர்சுடரே' என்று திருவாய்மொழியில் நம்மாழ்வார் பதிவு செய்தருளுகின்றார். அருணகிரிப் பெருமானார் திருப்பாதிரிப் புலியூர் திருப்புகழில் 'நான்மறை உபநிடம் அதனை விளங்க நீயருள் புரிவாயே' என்று கந்தக் கடவுளிடம் வேண்டிப் பாடுகின்றார். அபிராமி பட்டர் நான்மறைகளுள் போற்றப் பெற்றுள்ள அன்னை பராசக்தியின் பல்வேறு திருநாமங்களைப் பட்டியலிட்டுத் துதிக்கின்றார்.
-
பயிரவி, பஞ்சமி, பாசாங்குசை, பஞ்ச பாணி, வஞ்சர்
உயிரவி உண்ணும் உயர் சண்டி, காளி, ஒளிரும் கலா
வயிரவி, மண்டலி, மாலினி, சூலி, வராகி--என்றே
செயிரவி நான்மறை சேர் திருநாமங்கள் செப்புவரே.

மேற்குறித்துள்ள அகச் சான்றுகளை முறையாக உணர்ந்து உள்ளத்தில் இருத்துவோம், சைவ வைணவ சாக்த கௌமார காணாபத்திய சமயங்கள் 'நால்வேதங்களை மையமாகக் கொண்டு விளங்கும் இந்து மதத்தின் அங்கங்களே' எனும் தெளிவான புரிதலோடு போலிப் பரப்புரைகளைப் புறந்தள்ளுவோம்! மெய்ப்பொருள் காண்பது அறிவு (சிவ சிவ).

ஆன்மீக முருகனும் அரசியல் முருகனும்.

அறிவிலிகளான பிரிவினைவாதிகள் உள்நோக்கத்தோடு உருவாக்கியுள்ள (இப்பதிவில் பெருக்கல் குறியோடு இணைத்துள்ள) போலி உருவத்தினை ஆன்மீகப் பதிவுகளில் ஒரு பொழுதும் பயன்படுத்தாது இருப்போம், விழிப்புணர்வோடு செயல்பட வேண்டிய நேரமிது.

இவர்கள் முருகக் கடவுளைத் தெய்வமாக ஒருபொழுதும் ஏற்றதில்லை மாறாக 'முன்பு வாழ்ந்திருந்த முன்னோர்களுள் ஒருவரையே, அதாவது முன்னோரை வணங்குதல் என்ற முறையில் முப்பாட்டனாக ஏற்கின்றோம்' என்றே பிதற்றி வருகின்றனர்.

இவர்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நிலவி வரும் வழிபாட்டு மரபு, அருளாளர்கள், ஞானிகள், தமிழ்ப் பாடல் தொகுப்புகள் என்று எதையுமே ஏற்கவில்லை, அங்கீகரிக்கவும் இல்லை. இவர்களுக்கு அருணகிரிநாதர்; பாம்பன் சுவாமிகள்; வாரியார் சுவாமிகள்; பாலன் தேவராய சுவாமிகள், திருமுருகாற்றுப்படை பாடிய நக்கீரர் என்று இதற்கு முன்னர் வாழந்த ஞானிகள் எவரைப் பற்றியும் ஒருசிறிதும் அக்கறையில்லை, திருப்புகழ் துவங்கி எவ்விதத் திருமுறைகளையும் இவர்கள் எந்த இடத்திலும் மறந்தும் பேசியதில்லை. எவ்வித முருகன் ஆலயத்தையும் சிறப்பித்ததில்லை.

சிவன் முருகன் என்று ஏக வசனத்தில் பேசிவரும் இந்த கூட்டம் சிவபெருமானுக்கும் முருகக் கடவுளுக்குமே சம்பந்தம் இல்லை என்று உளறி வரும் விந்தையை என்னென்று கூறுவது? இவர்களின் தலைமைப் பைத்தியம் 'நம் முருகப் பெருமான் உள்ளிட்ட இந்து மத தெய்வங்களை, எழுதுவதற்கே கூசும் இழிவான வார்த்தைகளால் வசைபாடியுள்ள காணொளிகள்' யூட்யூபில் ஏராளமாக உலா வருகின்றன.

இனி கந்த சஷ்டிக் கவசத்தின் வழி நின்று நம் ஆறுமுக தெய்வத்தின் திருவுருவ வர்ணனையைக் காண்போம்,
-
ஆறு முகமும் அணிமுடி ஆறும்
நீறிடு நெற்றியில் நீண்ட புருவமும்
பன்னிரு கண்ணும் பவளச் செவ்வாயும்
நன்னெறி நெற்றியில் நவமணிச் சுட்டியும்
-
ஈராறு செவியில் இலகு குண்டலமும்
ஆறிரு திண்புயத்தழகிய மார்பில்
பல் பூஷணமும் பதக்கமும் தரித்து
நன்மணி பூண்ட நவரத்ன மாலையும்
-
முப்புரி நூலும் முத்தணி மார்பும்
செப்பழகுடைய திருவயிறுந்தியும்
துவண்ட மருங்கில் சுடரொளிப் பட்டும்
நவரத்தினம் பதித்த நற்சீராவும்
-
இருதொடையழகும் இணைமுழந்தாளும்
திருவடியதனில் சிலம்பொலி முழங்க
செககண செககண செககண செகண
மொகமொக மொகமொக மொகமொக மொகென

முருகப் பெருமானைக் போற்றும் அனைத்து தெய்வீகப் பாடல்களையும், ஞானிகளையும் முற்றிலும் புறந்தள்ளி விட்டு, விஷமத்தனமான உருவமொன்றினைப் போலியாக வடிவமைத்து அதனை 'முருகன்' என்று பிரகடனப் படுத்துகின்றான் இந்த அறிவிலி, இவர்களின் நோக்கம் நம் சமயக் கலாச்சாரத்தில் குழப்பம் விளைவித்துப் பிரிவினை அரசியல் புரிவது மற்றும் மதமாற்று சக்திகளுக்கு மறைமுகமாகத் துணை நிற்பது ஆகியவையே.

இவை எதையுமே சிந்திக்காமல் நம் இந்து தர்ம சகோதரர்கள் தங்களின் ஆன்மீகப் பதிவுகளுக்கு இந்த போலி உருவத்தைப் பயன்படுத்தத் துவங்கி விட்டார்கள், இனியேனும் இப்போலிப் படம் குறித்த விழிப்புணர்வோடு இருப்போம்.

தமிழ்க் கடவுளாகிய முருகப் பெருமானின் நிறம் தான் என்ன? (ஆதார பூர்வ விளக்கங்கள்):

இறைவன் எந்த நிறத்தில் தோன்றினாலும் போற்றுதலுக்குரியவனே, 'கண்ணன் என்னும் கருந்தெய்வம் காட்சி பழகிக் கிடப்பேனை' என்று போற்றுகின்றாள் அன்னை ஆண்டாள் நாச்சியார். எனினும் பன்னெடுங்காலமாய் நம் பாரத தேசத்தில் தோன்றி வந்துள்ள ஞானிகளும் அருளாளர்களும் தங்களுக்கு இறைவன் எந்த வடிவத்தில், எந்த வண்ணத்தில், எந்த திருக்கோலத்தில் திருக்காட்சி அளித்துள்ளானோ அதனை ஏராளமான திருப்பாடல்களில் ஆவணப்படுத்தி வைத்துள்ளனர். அவற்றின் வழி நின்றே நாம் உண்மையை உணர்தல் கூடுமேயன்றி நாமாக நம் சிற்றறிவில் தோன்றியதையெல்லாம் வரைமுறையின்றி நிறுவ முயலுதல் அறிவுடைமை அல்ல.

'எத்தனை கலாதி' என்று துவங்கும் திருத்தணித் திருப்புகழின் இறுதி வரிகளில் 'தணிகை வாழ் சிவப்பின் செக்கர் நிறமாயிருக்கும் பெருமாளே' என்று ஐயத்திற்கு இடமின்றி முருகப் பெருமான் சிவந்த திருமேனியை உடையவன் என்று பதிவு செய்கின்றார் அருணகிரிநாதர், மேலும் கந்தர் அனுபூதியின் 30ஆம் திருப்பாடலில் 'செவ்வான் உருவில் திகழ் வேலவன்' என்று போற்றுகின்றார். 'செவ்வேள் ஏறிய மஞ்சை வாழ்க' என்று கந்த புராணம் பறைசாற்றுகின்றது.

எதனையுமே மரபு வழி நின்று அணுகுவோம், நம் பொருட்டு அவதரித்துள்ள ஞானிகளின் திருவாக்கினைச் செவிமடுப்போம், ஆறுமுக தெய்வத்தின் திருவருளைப் பெற்று வாழ்வோம்!

'இந்து தர்மம்' என்பது ஒரு மதமா? (முக்கிய விளக்கங்கள்):

'ரிக்; யஜுர்; சாம; அதர்வணம்' எனும் நால்வேதங்களை அடிப்டையாகக் கொண்டு விளங்கும் 'சைவ; வைணவ; சாக்த; கௌமார; காணாபத்ய; சௌர' சமயங்கள் ஆறும் 'மறை நெறி; வேத நெறி; வைதீக சமயம்; சனாதன தர்மம்' என்று பல்லாயிரம் ஆண்டுகளாகப் பல்வேறு விதங்களில் குறிக்கப் பெற்று வந்தது, பின் இறுதியாய் இந்த தொன்மையான தர்மத்திற்கு 'இந்து' எனும் குறியீடு மந்திரச் சொல் போன்று வந்து அமைந்தது. குறியீடு தான் பின்னாளில் தோன்றியதேயன்றி நம் அறு சமயங்களும் அனைத்து காலத்திலும் 'நால்வேதங்கள்' எனும் குடைக்குக் கீழ் ஒன்றிணைந்த நிலையிலேயே இயங்கி வந்துள்ளது தெளிவு.

ஒரு சிறு உதாரணம் மூலம் இதனை விளங்கிக் கொள்ள முயல்வோம், திருப்பதி ஸ்ரீநிவாசப் பெருமாளுக்குப் பின்னாளிலேயே (அடியவர் ஒருவரால்) 'பாலாஜி' எனும் திருப்பெயர் அமைந்தது, இத்திருநாமத்தை எந்த பாசுரங்களிலும் புராணங்களிலும் காண முடியாது, சரி இதிலிருந்து நாம் என்ன முடிவுக்கு வரப் போகின்றோம்? 'பாலாஜி எனும் திருநாமம் பின்னாளில் தோன்றி இருப்பினும் அப்பெயர் குறிக்கும் தெய்வம் பல லட்சம் வருடங்களாக அத்திருமலையிலேயே அருள் புரிந்து வருகின்றார்' என்று தானே பொருள் கொள்வோம்? அது விடுத்து 'எந்த புராணத்திலும் பாலாஜி என்ற பெயர் இல்லாததால் பாலாஜி என்பது ஒரு தெய்வமே அல்ல' என்று குழந்தைத் தனமாக வாதிட்டுக் கொண்டிருக்கப் போகின்றோமோ?

'இந்து' என்றொரு மதமே இல்லை என்று மத வெறுப்புப் பிரச்சாரம் புரிந்து வரும் நாத்தீகக் கழகங்களும், பிரிவினை அரசியல்வாதிகளும், மதமாற்று சக்திகளும் மறைமுகமாக அழிக்க நினைப்பது அக்கூட்டமைப்பினுள் இயங்கி வரும் நம்முடைய அறு சமயங்களையே என்பதனை முதலில் உணர்வோம். ஒரு பெரும் கூட்டமைப்பைச் சிறிது சிறிதாக வெவ்வேறு பகுதிகளாகப் பிரித்து விட்டால் அதனைச் சிதைத்து அழிப்பது எளிது என்பதே இதன் பின்னணி அரசியல்.

மெய்ப்பொருள் காண்பது 'அறிவு' (சிவ சிவ)!!!!

திருமாலும் விஷ்ணுவும் ஒரே தெய்வமா? சைவத் திருமுறைகள் கூறுவது என்ன ? (ஆதாரபூர்வ விளக்கங்கள்):

திருமால் தமிழர் தெய்வம், விஷ்ணு வடதேசத்து தெய்வம், இரண்டையும் பிற்காலத்தில் ஒன்றாகச் சேர்த்துவிட்டார்கள் என்று தற்காலச் சூழலில் உலவி வரும் பிரிவினைவாதப் பிதற்றல்கள் குறித்துச் சைவத் திருமுறைகள் வாயிலாக இப்பதிவில் சிந்தித்துத் தெளிவுறுவோம்,

முருகக் கடவுளின் பரிபூரணத் திருவருளைப் பெற்றுள்ள அருணகிரிப் பெருமானின் கருத்தினை அவருடைய திருப்புகழ் திருப்பாடல்கள் வாயிலாகவே முதலில் காண்போம்,
-
'கொலையிலே மெத்த விரகிலே கற்ற' என்று துவங்கும் திருப்புகழில் 'உலகனே முத்தி முதல்வனே சித்தி உடையனே விஷ்ணு மருகோனே' என்று குறிக்கின்றார், 'கருவினுருவாகி வந்து' என்று துவங்கும் பழனித் திருப்புகழில் 'உரகபட மேல் வளர்ந்த பெரியபெருமாள் அரங்கர் உலகளவு மால் மகிழ்ந்த மருகோனே' என்று பதிவு செய்கின்றார், ஆதலின் விஷ்ணு; திருமால் எனும் இரு திருப்பெயர்களும் ஒரே தெய்வத்தையே குறிக்கின்றது என்பது தெளிவு.

இனி திருநாவுக்கரசு சுவாமிகளின் திருஇராமேச்சுரம் தேவாரத் திருப்பதிகப் பாடலைக் காண்போம்,
-
(திருப்பாடல் 11):
வரைகளொத்தே உயர்ந்த மணிமுடி அரக்கர் கோனை
விரைய முற்றறஒடுக்கி மீண்டு மால் செய்த கோயில்
திரைகள்முத்தால் வணங்கும் திருஇராமேச்சுரத்தை
உரைகள் பத்தால் உரைப்பார் உள்குவார் அன்பினாலே!!!

இலங்கை சென்று மணிமுடி அரக்கர் கோனாகிய இராவணனை அடியோடு அழித்தொழித்துத் திரும்புகையில் ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி செய்த கோயில் திருஇராமேஸ்வரம் என்று பதிவு செய்கின்றார் அப்பர் அடிகள், ஸ்ரீராமர் என்று குறிக்காமல் 'மால் செய்த கோயில்' என்று குறித்திருப்பதனால் 'திருமால்', 'ஸ்ரீராமர்', 'ஸ்ரீமகாவிஷ்ணு' ஆகிய திருப்பெயர்கள் யாவும் ஒரே தெய்வத்தையே குறிக்கின்றன என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

ஆன்மீகத்தைப் பிரிவினை வெறி கொண்ட மதமாற்று சக்திகளின் மூலம் அறிய முற்படாமல் ஞானிகளின் வாக்கினைக் கொன்டு உணர்ந்துத் தெளிவுறுவோம் (சிவ சிவ).

சிவபெருமான் தமிழர் தெய்வம், ருத்திரன் வடமொழி தெய்வமா? ஆதாரபூர்வ விளக்கங்கள்:

சிவபெருமான் தமிழர் தெய்வம்; உருத்திரன் வடமொழி தெய்வம், பிற்காலத்தில் இவ்விரு கடவுளர்களையும் ஒன்றாகச் சேர்த்துவிட்டார்கள் என்று தீவிரமாகப் பிரிவினைவாத பிரச்சாரம் புரிந்து வரும் அறிவிலிகளின் பிதற்றல்கள் குறித்து இப்பதிவில் சிந்தித்துத் தெளிவுறுவோம்,

ஆதிப் பரம்பொருளாகிய சிவபெருமானுக்கு ஆயிரம் திருநாமங்கள், அவற்றுள் ருத்திரன் என்ற திருநாமத்துக்கு 'துன்பக் கடலினின்றும் விடுவிப்பவர்' என்று பொருள், கச்சியப்ப சிவாச்சாரியார் பின்வரும் கந்த புராணத் திருப்பாடலில் இதனை ஐயத்திற்கு இடமின்றித் தெளிவுறுத்தியுள்ளார்,

(கந்த புராணம்: தக்ஷ காண்டம், ததீசிப் படலம்: திருப்பாடல் 46):
இன்னலம் கடலுள் பட்டோர் யாரையும் எடுக்கும் நீரால்
உன்னரும் பரம மூர்த்தி உருத்திரன் எனும்பேர் பெற்றான்
அன்னவன் தரவந்தோர்க்கும் அடியடைந்தோர்க்கும் அன்னான்
தன்னுரு எய்தினோர்க்கும் சார்ந்ததால் அவன் தனிப்பேர்

காஞ்சிப் புராணத்தில் சிவஞான முனிவரும் இதே கருத்தை வலியுறுத்துகின்றார்,
-
இன்பம் செய்தலின் சங்கரன்; எம்பிரான்
இன்பம் ஆக்கலின் சம்பு, இடும்பைநோய்
என்பது ஓட்டும் இயல்பின் உருத்திரன்

இந்து தர்ம கடவுளர்களைத் தமிழர் தெய்வம்; வடமொழி தெய்வம் என்று பிரிவினை பேசித் திரிபவர்களின் உள்நோக்கம் மிக மிகத் தெளிவானது, இந்து தர்மத்தைப் பிரித்துப் பிரித்துச் சிறு சிறு பிரிவுகளாக்கி வலிமையிழக்கச் செய்துப் பின் முழுமதுமாய் அழித்தொழித்து விடலாம் எனும் எண்ணத்தில் இவர்களின் செயல்பாடு மிகத் தீவிரமாகவே உள்ளது, நாம் தான் விழிப்புணர்வோடு இத்தகைய போலிப் பிரச்சாரங்களுக்குப் பலியாகாமல் நம் சமய அருளாளர்களின் திருவாக்கினை உள்ளத்தில் கொண்டு ஆன்மீக யாத்திரையை மேற்கொள்ளுதல் வேண்டும்.

தெய்வங்களில் தென்னாடு; வடநாடு பாகுபாடா? (ஆதாரபூர்வ விளக்கங்கள்):

சிவபெருமான், அம்பிகை எனும் அன்னை ஸ்ரீபார்வதி; ஸ்ரீவிநாயக மூர்த்தி; ஆறுமுகக் கடவுள்; திருமாலாகிய ஸ்ரீமகாவிஷ்ணு ஆகிய மூர்த்திகள் பாரத தேசம் முழுமைக்குமான தனிப்பெரும் தெய்வங்கள், உலக நாடுகள் முழுவதிலுமுள்ள பாரத தேசத்தினர் பல்லாயிரம் ஆண்டுகளாக இன்னுயிரெனப் போற்றி வரும் சர்வ வல்லமை பொருந்திய கடவுளர்கள். ஆயிரம் நாமங்கள் கொண்டு விளங்கும் இம்மூர்த்திகளை ஒவ்வொரு மாநிலத்தவரும் தத்தமது மொழி; மரபு இவைகளுக்கேற்ப உளமாரத் தொழுது வருகின்றனர். ஆதி அந்தமற்ற, அண்ட கோடிகள் யாவையையும் ஆட்சி புரிந்து வரும் நம் தெய்வங்களை தென்னாடு; வடநாடு என்று பிரித்துப் பார்ப்பது சிறுபிள்ளைத் தனமான அணுகுமுறையாகும்.

திருஞானசம்பந்தர் திருக்காளத்தியில் தங்கியிருந்த நிலையிலேயே, ஆந்திர மாநிலத்திலுள்ள ஸ்ரீசைலத்தையும், கர்நாடகா மாநிலத்திலுள்ள கோகரணத்தையும், வடக்கே உத்தர்காண்ட் மாநிலத்திலுள்ள திருக்கேதாரத்தையும், பத்ரிநாத் அருகிலுள்ள இந்திர நீல பருப்பதம் எனும் தலத்தையும், வடக்கு எல்லையிலுள்ள திருக்கயிலை மலையையும் தனித்தனி திருப்பதிகங்களால் போற்றித் துதித்துள்ளார்.

நாவுக்கரசு சுவாமிகள் திருக்காளத்தியிலிருந்து புறப்பட்டு ஆந்திர மாநிலத்திலுள்ள ஸ்ரீசைலத்தினை அடைந்துத் தமிழ்ப் பாமாலைகள் சூட்டி மகிழ்ந்தார், பின் அங்கிருந்து கன்னட தேசத்திலுள்ள கோகரணத்தைத் தொழுதார், இதன் தொடர்ச்சியாய் உத்தர பிரதேச மாநிலத்திலுள்ள வாரணாசியைத் தரிசித்துப் பரவி இறுதியாய் வடக்கு எல்லையிலுள்ள திருக்கயிலை மலையையும் நேரில் தரிசித்துத் தீந்தமிழ்ப் பதிகங்களால் சிவபெருமானைப் போற்றியுள்ளார்.

சுந்தர மூர்த்தி நாயனார் திருக்காளத்தியில் இருந்த நிலையிலேயே, ஆந்திர மாநிலத்திலுள்ள ஸ்ரீசைலத்தையும், வடக்கேயுள்ள திருக்கேதாரத்தையும் தனித்தனி திருப்பதிகங்களால் போற்றியுள்ளார்.

பின்னர் 15ஆம் நூற்றாண்டில் தோன்றிய அருணகிரிநாதரும் இம்முறையிலேயே தமிழகத்திற்கு வடக்கேயுள்ள திருவேங்கடம் (கீழ்த்திருப்பதியிலுள்ள கபிலேஸ்வரம்), விஜயவாடா இந்திரகீலாத்ரி மலைச்சாரலில் அமைந்துள்ள ஸ்ரீசுப்பிரமண்ய சுவாமி திருக்கோயில், ஸ்ரீசைலம், கேரள தேசத்தில் பாலக்காடு அருகிலுள்ள ஸ்ரீகல்யாண சுப்பிரமண்ய சுவாமி திருக்கோயில், வடக்கே உத்தர்காண்ட் மாநிலத்திலுள்ள ஹரித்வார், உத்தரப் பிரதேச மாநிலத்திலுள்ள காசி ஆகிய தலங்களுக்கு நேரில் சென்று தரிசித்துத் திருப்புகழ் திருப்பாடல்களை அருளியுள்ளார், வடக்கு எல்லையிலுள்ள திருக்கயிலைக்கும் தனியே திருப்புகழ் பாடல்களை அருளியுள்ளார்.

ஆன்மீகத்தின் அரிச்சுவடி கூட தெரியாமல் மத வெறுப்பு அரசியல் பேசித் திரிபவர்களும், இதுவரையிலும் நம் பாரத தேசத்தில் தோன்றிய எண்ணிறந்த ஞானிகள் மற்றும் அருளாளர்கள் மீது ஒருசிறிதும் மரியாதை இல்லாதவர்களும் முன்வைக்கும் பிரிவினை சார்ந்த மத அரசியல் வலையில் சிக்காமல், தெளிந்த புரிதலுடன் நம் ஆன்மீக யாத்திரையைத் தொடர்வோம், திருவருள் நமக்கு என்றுமே துணை நின்று காக்கும் (சிவ சிவ)!!!