இராமச்சந்திர மூர்த்தி தென்னாட்டு தெய்வமா வடநாட்டு தெய்வமா? கவிச் சக்கரவர்த்தியின் விடை:

மரண வேதனையிலிருக்கும் வாலி தன் மார்பினைத் துளைத்து நிற்கும் அம்பில் 'இராம' எனும் திருநாமம் பொறித்திருத்தலைக் காண்கின்றான், இதனைக் கவிச் சக்கரவர்த்தி கம்பர் பின்வரும் அற்புதத் திருப்பாடலால் காட்சிப்படுத்துகின்றார்.

கம்ப இராமாயணம்: வாலி வதைப் படலம்:
மும்மை சால் உலகுக்கு எல்லாம் மூல மந்திரத்தை, முற்றும்
தம்மையே தமர்க்கு நல்கும் தனிப் பெரும் பதத்தை, தானே
இம்மையே எழுமை நோய்க்கும் மருந்தினை, இராமன் என்னும்
செம்மை சேர் நாமம் தன்னை, கண்களின் தெரியக் கண்டான்.

பாரத தேசத்திற்குள்ளாகவே வடநாட்டு தெய்வம்; தென்னாட்டு தெய்வம் என்று பிரிவினை வெறி கொண்டு பிதற்றித் திரிவோருக்குப் பதில் கூறுமாற் போலே இத்திருப்பாடல் அமைந்துள்ளது. 'மும்மை' எனும் பதம் 'பூமி; பூமிக்கு மேலுள்ள 6 உலகங்கள்; பூமிக்கு கீழேயுள்ள அதல விதல...பாதாளம் வரையிலான 7 உலகங்கள்' இவையாவையுமே ஒருசேரக் குறிக்க வந்தது. ஆதலின் ஈரேழு பதினான்கு புவனங்களுக்கும் 'இராம' என்பது ஒப்புவமையற்ற மூல மந்திரமாகத் திகழ்கின்றது என்று போற்றித் துதிக்கின்றார் கவிச் சக்கரவர்த்தி (சிவ சிவ!!!).

5100 வருடங்கள் பழமையான தமிழ்ப் பாசுரங்களில் ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி:

துவாபர யுகம் முடிவுற்றுக் கலியுகம் துவங்கி தற்பொழுது சுமார் 5100 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது என்பது அனைவரும் அறிந்ததே. கலி துவங்கி சரியாக 60 நாட்களுக்குள் அவதரித்த அருளாளர் 'சடகோபர்' எனும் நம்மாழ்வார். அவதாரத் தலம் 'தூத்துக்குடி மாவட்டத்திலிலுள்ள ஆழ்வார் திருநகரி எனும் திருக்குருகூர்'. பன்னிரு ஆழவார்களுள் முதன்மையானவராகப் போற்றப் பெறுபவர். ஒப்புவமையற்ற நமது இந்து தர்மத்தின் 'ரிக்; யஜுர்; சாம; அதர்வண' வேதங்களின் சாரங்களைத் தமிழ்ப் பாக்களாக்கித் தருவதே இப்புண்ணிய சீலரின் அவதார நோக்கம். 'வேதம் தமிழ்செய்ய வந்த மாறன்' என்றிவரைக் கொண்டாடுவர். இப்பெருமகனார் 'திருவிருத்தம், திருவாசிரியம், திருவாய்மொழி, பெரிய திருவந்தாதி' ஆகிய நான்கு அற்புதப் பிரபந்தத் தொகுப்புகளை அருளியுள்ளார்.

இனி நம்மாழ்வாரின் திருவாய்மொழிப் பாசுரம் ஒன்றினைக் காண்போம், 'கற்க வேண்டியது ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியின் திவ்யமான சரிதங்களையே அன்றி வேறெதுவுமில்லை' என்று பின்வரும் திருப்பாடலில் போற்றுகின்றார்.

கற்பார் இராமபிரானை அல்லால் மற்றும் கற்பரோ?,
புற்பா முதலாப் புல்லெறும்பாதி ஒன்றின்றியே,
நற்பால் அயோத்தியில் வாழும் சராசரம் முற்றவும்,
நற்பாலுக்கு உய்த்தனன் நான்முகனார் பெற்ற நாட்டுளே!!!

ஸ்ரீராமர் பாலம் உண்மையிலேயே கடலில் உருவாக்கப் பெற்றதா?

அருணகிரிப் பெருமான் 'துடிகொள் நோய்களோடு வற்றி' என்று துவங்கும் பழமுதிர்ச்சோலை திருப்புகழில் 'ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி திருஇராமேஸ்வரத் தலத்திலுள்ள கடற்பரப்பில் பெரும் மலைக் கற்களாலான பாலமொன்றினை அமைத்துச் சென்று, இலங்கையினை அடைந்துக் கொடியவனான இராவணனைக் கொன்று வெற்றி வாகை சூடிய நிகழ்வினைப் பின்வரும் வரிகளில் பதிவு செய்கின்றார்,
-
கடிதுலாவு வாயு பெற்ற
     மகனும் வாலி சேயு மிக்க
          மலைகள் போட ஆழி கட்டி இகலூர்போய்க்
-
களமுறானை தேர் நுறுக்கி
     தலைகளாறு நாலு பெற்ற
          அவனை வாளியாலடத்தன் மருகோனே

மற்றுமொரு அகச்சான்றினையும் காண்போம், சிவபரம்பொருளின் திருவாக்காலேயே 'நாவுக்கரசர்' எனும் அற்புதத் திருநாமம் பெற்றுள்ள நம் அப்பர் சுவாமிகளும் இதே நிகழ்வினைத் தம்முடைய திருஇராமேஸ்வரம் தேவாரத் திருப்பதிகத்தின் பின்வரும் வரிகளால் ஆவணப்படுத்துகின்றார்.
-
கடலிடை மலைகள் தம்மால் அடைத்துமால் கரும முற்றித்
திடலிடைச் செய்த கோயில் திருஇராமேச்சுரத்தைத்
தொடலிடை வைத்து நாவிற் சுழல்கின்றேன் தூய்மையின்றி
உடலிடை நின்றும் பேரா ஐவர்ஆட்டுண்டு நானே!!!

ஈனமிலாப் புகழ் அண்ணல் செய்த இராமேச்சுரம் (திருஞானசம்பந்தர் சான்றுரைக்கும் இராமயண நிகழ்வுகள்):

(திருஇராமேச்சுரம் தேவாரம்: திருப்பாடல் 3):
மானன நோக்கியை தேவிதன்னையொரு மாயையால்
கானதில் வவ்விய காரரக்கன் உயிர் செற்றவன்
ஈனமிலாப் புகழண்ணல் செய்த இராமேச்சுரம்
ஞானமும் நன்பொருளாகி நின்றதொரு நன்மையே.
-
(பொருள்):
அன்னை சீதா தேவியை மாயையால் கானகத்திலிருந்து முறைகேடாகக் கவர்ந்து சென்ற அரக்கனான இராவணனின் உயிரைப் போக்கிய, குற்றம் சிறிதுமில்லாப் புகழினைக் கொண்ட அண்ணலான ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி செய்வித்த திருஇராமேச்சுர லிங்க மூர்த்தியைப் போற்றுபவர்க்கு சிவஞானமும் அதன் பயனான முத்தியின்பமும் கிட்டும்.

(திருஇராமேச்சுரம் தேவாரம்: திருப்பாடல் 4):
உரையுணராதவன் காமமென்னும் உறுவேட்கையான்
வரைபொரு தோளிறச் செற்றவில்லி மகிழ்ந்தேத்திய
விரைமருவும் கடலோத மல்கு இராமேச்சுரத்து
அரைஅரவாட நின்றாடல் பேணும் அமம்மான்நல்லனே!!!
-
(சுருக்கமான பொருள்):
'காமமென்னும் உருவேட்கையான்' எனும் முதல் வரிமூலம் 'இராவணன் அன்னை சீதையை கடத்திச் சென்றது 'முறையற்ற காமத்தின் பொருட்டே' என்று சம்பந்தப் பெருமான் ஐயத்திற்கு இடமின்றிச் சான்றுரைக்கின்றார். 2ஆம் வரியில் 'இராவணனுடைய மலை போன்ற தோள்களைத் தன்னுடைய வில்லினால் அற்று விழுமாறு அழித்தொழித்த ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி மகிழ்ந்தேத்திய இராமேச்சுரம்' என்று போற்றுகின்றார்.

இராவணனுக்கு கும்பகர்ணன் கூறிய அறிவுரை (பேசுவது மானம் இடைபேணுவது காமம்):

கும்பகர்ணன் தமையனான இராவணனுக்கு நன்னெறியினை பலவாறு எடுத்துரைக்கின்றான், அன்னை சீதையை நயவஞ்சகமாக அபகரித்து வந்தது மறை நெறிகளுக்குப் புறம்பானது என்று இடித்துரைக்கின்றான். "சிட்டர் செயல் செய்திலை; குலச் சிறுமை செய்தாய்" என்று இகழ்கின்றான். அனைத்துவித மரியாதைகளோடு அன்னை ஜானகியை ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியிடம் சேர்ப்பித்து மன்னிப்பு வேண்டுவதொன்றே உய்யும் வழி என்று பகர்கின்றான். எனினும் அகந்தையின் உச்சத்திலிருந்த இராவணனோ இவையெதற்குமே செவிசாய்க்கவில்லை. இனி இக்காட்சி தொடர்பான கம்ப இராமாயணப் பாடலொன்றினையும் காண்போம்,
யுத்த காண்டம் - இராவணன் மந்திரப் படலம்:
ஆசில் பரதாரம் அவை அஞ்சிறை அடைப்போம்
மாசில் புகழ் காதல் உறுவோம்; வளமை கூறப்
பேசுவது மானம்; இடை பேணுவது காமம்;
கூசுவது மானுடரை; நன்று நம் கொற்றம்!!!

பொருள்:
தமையனே, ஒருபுறம் 'குற்றம் ஒரு சிறிதுமில்லாப் பிறிதொருவரின் தாரத்தின் மேல்' முறையற்ற மோகம் கொண்டு அம்மாதினைக் கடத்தி வந்து சிறை வைக்கின்றோம்! மற்றொரு புறமோ 'குற்றமில்லாத புகழ்' வந்தெய்த வேண்டும் என்றும் விரும்புகின்றோம். இது விந்தையன்றோ! நம் வார்த்தைகளில் தெரிவதோ வீரமும் மானமும், ஆனால் நம் செயல்களிலோ முறையற்ற காமமும் ஈனத்தன்மையுமே வெளிப்படுகின்றது. இவ்விதமான பழிச் செயல்களால் 'மானிடர்களுக்கு அஞ்சி வாழும் சிறுமை நிலையும்' நமக்கின்று எய்தியுள்ளது, நன்றாக இருக்கின்றது நமது அரசாட்சியும் கொற்றமும்!

இராவணன் அரக்கனா இல்லையா? தர்க்க ரீதியான ஆதாரபூர்வ விளக்கங்கள்:

இப்பதிவினைப் படிக்குமுன் ஒரு சிறு கேள்வி? நீங்கள் இறை மறுப்பாளரா? ஆம் எனில் இப்பதிவு உங்களுக்கானது அல்ல! தயவு கூர்ந்து தாம் சென்று வரலாம்!
திரேதாயுகத்தில், வடமொழியில் இராமாயணம் இயற்றியுள்ள வால்மீகி முனிவரை நாங்கள் ஒப்புக் கொள்ள மாட்டோம்; கலியுகக் காலகட்டத்தில், 12ஆம் நூற்றாண்டில், தீந்தமிழில் இராமாயணம் புனைந்துள்ள கவிச்சக்கரவர்த்தி கம்பரையும் நாங்கள் முற்றிலும் மறுதலிப்போம்; இவர்கள் இருவருமே இராவணனை அரக்கனென்றுத் தவறாகச் சித்தரித்து விட்டனர் என்று வானத்திற்கும் பூமிக்கும் குதிப்பவரா நீங்கள்? வாருங்கள் பதிவிற்குள் செல்வோம்! நீங்கள் சைவ சமயம் சார்ந்தவரா? ஆம் எனில் நிச்சயம் திருஞானசம்பந்தர்; திருநாவுக்கரசர்; சுந்தரர் ஆகிய குருநாதர்களின் திருவாக்கில் உங்களுக்குப் பரிபூரணமாய் நம்பிக்கையுண்டு தானே? சரி இனி திருநாவுக்கரசு சுவாமிகளின் இராமேஸ்வர தேவாரத் திருப்பாடலொன்றினைக் காண்போம், - வீரமிக்கெயிறு காட்டி விண்ணுற நீண்ட அரக்கன் கூரமிக்கவனைச் சென்று கொன்றுடன் கடற்படுத்துத் தீரமிக்கான் இருந்த திருஇராமேச்சுரத்தைக் கோரமிக்கார் தவத்தாற் கூடுவார் குறிப்புளாரே. - (சுருக்கமான பொருள்): 'வீரமிக்கு எயிறு காட்டி (அதாவது கோரைப்பற்கள் வெளியே தெரியும் படி), நெடிதுயர்ந்த உடலினைக் கொண்ட கூரம் மிக்கவனை (கொடுமை மிக்க அரக்கனாகிய இராவணனை), இலங்கைக்குச் சென்று அவனைக் கொன்று மீண்ட தீரம் மிக்கான் (பேராற்றல் பொருந்திய ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி) வழிபட்டு உய்ந்த திருஇராமேச்சுரம்' என்று அப்பர் சுவாமிகள் குறிக்கின்றார். சுந்தர மூர்த்தி சுவாமிகள் திருக்கோளிலி தேவாரத்தில் "அரக்கன் முடிகரங்கள் அடர்த்திட்டஎம் ஆதிப்பிரான்" என்று 'இராவணன் கயிலை மலையையே பெயர்க்க முற்பட்ட பொழுதுச் சிவபரம்பொருள் தன் திருப்பாத விரலொன்றினால் சிறிது அழுத்தி, ஆயிரம் ஆண்டுகள் அவ்விடத்திலேயே சிக்கி அலறுமாறு செய்து, அரக்கனான இராவணனின் ஆணவத்தினை அழித்தொழித்த நிகழ்வினைக் குறிக்கின்றார். திருஞானசம்பந்தர் திருக்குடவாயில் தேவாரத்தில் 'வரையார் திரள்தோள் அரக்கன் மடிய அவ் வரையார ஓர்கால் விரல் வைத்தபிரான்' என்பார். நீங்கள் முருக பக்தரா? வாருங்கள் மற்றொரு சைவ சமய குருநாதரான அருணகிரிப் பெருமான் 'எட்டுக்குடி' திருப்புகழில் என்ன கூறுகின்றார் என்பதையும் காண்போம், - தடையற்ற கணைவிட்டு மணிவஜ்ர முடிபெற்ற தலைபத்துடைய துட்டன் உயிர்போகச் சலசத்து மயிலுற்ற சிறைவிட்டு வருவெற்றி தரு சக்ரதரனுக்கு மருகோனே!!!! - (சுருக்கமான பொருள்): மேற்குறித்துள்ள பாடலில் இராவணனை "தலைப் பத்துடைய துஷ்டன்' என்று கடுமையாக நிந்திக்கின்றார் அருணகிரியார், 'அப்படிப்பட்ட கொடிய அரக்கனான இராவணனைக் கொன்று மீண்ட ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியின் மருமகனே' என்று முருகப் பெருமானைப் போற்றுகின்றார். அநேக அகச்சான்றுகளை இப்பதிவினில் கண்டோம், இறை உணர்வுடையோர் என்று கூறிக்கொண்டும், திருநீறு பூசிக்கொண்டும் ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியினை இகழும் அறியாமையைக் கைவிடுவோம், அவ்விதம் செய்வது மேற்குறித்துள்ள குருநாதர்களை நிந்திக்கும் செயலாகும் (மெய்ப்பொருள் காண்பது அறிவு)!! சிவ சிவ!!!

அருணகிரிநாதர் அடையாளப் படுத்தும் தமிழர் தெய்வங்கள் யார்?

திருவண்ணாமலையில் அருணகிரிப் பெருமான் பனிரெண்டு ஆண்டுகள் கடும் தவம் புரிகின்றார், யோகக் கனல் மூள்கின்றது; குண்டலினி சக்தி மூலாதாரத்திலிருந்து மேலெழும்பிப் பரம்பொருள் சக்கரமான சகஸ்ராரம் சென்றடைகின்றது. கோடிசூர்யப் பிரகாசனாய் தமிழ்க் கடவுளான ஆறுமுக தெய்வம் திருக்காட்சி தந்தருள்கின்றான், அருணகிரிநாதரின் நாவில் தன் திருக்கரத்திலிருக்கும் சிவஞான வேலினால் 'ஓம்' என்று எழுதுகின்றான், 'முத்து முத்தாய்ப் பாடு' என்று அடியெடுத்துக் கொடுக்கின்றான்.
பேரின்பப் பெருநிலையில் அருணகிரியார் 'முத்தைத்தரு பத்தித் திருநகை' எனும் திருப்புகழினைப் பாடத் துவங்குகின்றார். முருகக் கடவுளைப் போற்றும் முதல் திருப்பாடலிலேயே 'ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியையும், மாபாரதக் கண்ணனையும்' சேர்த்தே போற்றியுள்ளார், இதன் மூலம் இவ்விரு மூர்த்திகளும் தமிழர் மரபில் பன்னெடுங்காலமாய்ப் பின்னிப் பிணைந்துள்ள தன்மை புலனாகின்றது. ஸ்ரீராமர் இராவணனை சம்ஹாரம் புரிந்த நிகழ்வினை "பத்துத்தலை தத்தக் கணைதொடு" எனும் வரியினாலும், ஸ்ரீகிருஷ்ணன் அர்ஜுனனின் தேர்ச்சாரதியாக இருந்து, அர்ஜுனன் ஜெயத்ரதனைக் கொல்வதற்கு உதவும் பொருட்டு, தன் சக்கரத்தினால் சூரியனைச் சில நிமிடங்கள் மறையுமாறு செய்தருளிய நிகழ்வினைப் பின்வருமாறும் குறிக்கின்றார்,
-
பத்துத்தலை தத்தக் கணைதொடு
ஒற்றைக்கிரி மத்தைப் பொருதொரு
பட்டப்பகல் வட்டத் திகிரியில் இரவாகப்
-
பத்தற்கிரதத்தைக் கடவிய
பச்சைப்புயல் மெச்சத் தகுபொருள்
பட்சத்தொடு ரட்சித் தருள்வதும் ஒருநாளே
'தமிழர் மரபில் வழிபடு தெய்வங்கள் யார்?' என்பதனை, தமிழ்க் கடவுளாலேயே நேரடியாக அருள் பெற்றுள்ள தவப்பெரும் குன்றான அருணகிரிப் பெருமானின் மூலம் நாம் உறுதி செய்துகொள்ளப் போகின்றோமா? அல்லது இறை வெறுப்பினை உமிழ்ந்துக் கொண்டிருக்கும் இறை மறுப்புக் கழகங்கள் மூலமாகவா? முடிவு நம் கையில் (சிவ சிவ)!!!!