திரேதாயுகத்தில், வடமொழியில் இராமாயணம் இயற்றியுள்ள வால்மீகி முனிவரை நாங்கள் ஒப்புக் கொள்ள மாட்டோம்; கலியுகக் காலகட்டத்தில், 12ஆம் நூற்றாண்டில், தீந்தமிழில் இராமாயணம் புனைந்துள்ள கவிச்சக்கரவர்த்தி கம்பரையும் நாங்கள் முற்றிலும் மறுதலிப்போம்; இவர்கள் இருவருமே இராவணனை அரக்கனென்றுத் தவறாகச் சித்தரித்து விட்டனர் என்று வானத்திற்கும் பூமிக்கும் குதிப்பவரா நீங்கள்? வாருங்கள் பதிவிற்குள் செல்வோம்!
நீங்கள் சைவ சமயம் சார்ந்தவரா? ஆம் எனில் நிச்சயம் திருஞானசம்பந்தர்; திருநாவுக்கரசர்; சுந்தரர் ஆகிய குருநாதர்களின் திருவாக்கில் உங்களுக்குப் பரிபூரணமாய் நம்பிக்கையுண்டு தானே? சரி இனி திருநாவுக்கரசு சுவாமிகளின் இராமேஸ்வர தேவாரத் திருப்பாடலொன்றினைக் காண்போம்,
-
வீரமிக்கெயிறு காட்டி விண்ணுற நீண்ட அரக்கன்
கூரமிக்கவனைச் சென்று கொன்றுடன் கடற்படுத்துத்
தீரமிக்கான் இருந்த திருஇராமேச்சுரத்தைக்
கோரமிக்கார் தவத்தாற் கூடுவார் குறிப்புளாரே.
-
(சுருக்கமான பொருள்):
'வீரமிக்கு எயிறு காட்டி (அதாவது கோரைப்பற்கள் வெளியே தெரியும் படி), நெடிதுயர்ந்த உடலினைக் கொண்ட கூரம் மிக்கவனை (கொடுமை மிக்க அரக்கனாகிய இராவணனை), இலங்கைக்குச் சென்று அவனைக் கொன்று மீண்ட தீரம் மிக்கான் (பேராற்றல் பொருந்திய ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி) வழிபட்டு உய்ந்த திருஇராமேச்சுரம்' என்று அப்பர் சுவாமிகள் குறிக்கின்றார்.
சுந்தர மூர்த்தி சுவாமிகள் திருக்கோளிலி தேவாரத்தில் "அரக்கன் முடிகரங்கள் அடர்த்திட்டஎம் ஆதிப்பிரான்" என்று 'இராவணன் கயிலை மலையையே பெயர்க்க முற்பட்ட பொழுதுச் சிவபரம்பொருள் தன் திருப்பாத விரலொன்றினால் சிறிது அழுத்தி, ஆயிரம் ஆண்டுகள் அவ்விடத்திலேயே சிக்கி அலறுமாறு செய்து, அரக்கனான இராவணனின் ஆணவத்தினை அழித்தொழித்த நிகழ்வினைக் குறிக்கின்றார்.
திருஞானசம்பந்தர் திருக்குடவாயில் தேவாரத்தில் 'வரையார் திரள்தோள் அரக்கன் மடிய அவ் வரையார ஓர்கால் விரல் வைத்தபிரான்' என்பார்.
நீங்கள் முருக பக்தரா? வாருங்கள் மற்றொரு சைவ சமய குருநாதரான அருணகிரிப் பெருமான் 'எட்டுக்குடி' திருப்புகழில் என்ன கூறுகின்றார் என்பதையும் காண்போம்,
-
தடையற்ற கணைவிட்டு மணிவஜ்ர முடிபெற்ற
தலைபத்துடைய துட்டன் உயிர்போகச்
சலசத்து மயிலுற்ற சிறைவிட்டு வருவெற்றி
தரு சக்ரதரனுக்கு மருகோனே!!!!
-
(சுருக்கமான பொருள்):
மேற்குறித்துள்ள பாடலில் இராவணனை "தலைப் பத்துடைய துஷ்டன்' என்று கடுமையாக நிந்திக்கின்றார் அருணகிரியார், 'அப்படிப்பட்ட கொடிய அரக்கனான இராவணனைக் கொன்று மீண்ட ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியின் மருமகனே' என்று முருகப் பெருமானைப் போற்றுகின்றார்.
அநேக அகச்சான்றுகளை இப்பதிவினில் கண்டோம், இறை உணர்வுடையோர் என்று கூறிக்கொண்டும், திருநீறு பூசிக்கொண்டும் ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியினை இகழும் அறியாமையைக் கைவிடுவோம், அவ்விதம் செய்வது மேற்குறித்துள்ள குருநாதர்களை நிந்திக்கும் செயலாகும் (மெய்ப்பொருள் காண்பது அறிவு)!! சிவ சிவ!!!
No comments:
Post a Comment