இந்து தர்மம்: வழிபாட்டுப் பிரிவுகள் (பகுப்புகள்):

கற்ப கோடி ஆண்டுகளாக நிலைபெற்றிருக்கும் நமது இந்து சமயத்திற்கு இறைவன் என்பவன் ஒருவனே, அந்த இறைவனை பிரம்மம் என்றும் பரம்பொருள் என்றும் வேதங்கள் சுட்டும். ஆன்மாக்கள் உய்வு பெரும் பொருட்டு கருணைப் பெருங்கடலான இறைவன் சில முக்கியத் திருவடிவங்களில் தோன்றி அருள்கின்றான். நால்வேதங்களை அடிப்படையாகக் கொண்ட இந்து மதத்திற்கு ஆதிமுதலே ஆறு வழிபாட்டு பிரிவுகள் (பகுப்புகள்) இருந்து வந்துள்ளது தெளிவு, இனி அவற்றினைக் காண்போம். சைவம்: ஆதிப் பரம்பொருளாகவும், முக்கண் முதல்வராகவும், பரஞ்சுடராகவும் விளங்கியருளும் சிவபெருமானைப் போற்றும் முத்தி மார்க்கம்.

வைணவம்: சிவபரம்பொருளின் இடபாகத்தில் கோயில் கொண்டருள்பவராகவும், பரவாசுதேவராகவும் விளங்கியருளும் ஸ்ரீமன் நாராயண மூர்த்தியை உபாசிக்கும் சீர்மிகு மார்கம்.
சாக்தம்: சிவபரம்பொருளின் அருட்சக்தியாகவும், அச்சுத சகோதரியாகவும், அனைத்து வேதத் தலைவியாகவும் விளங்கியருளும் ஆதிபராசக்தியை வழிபடும் உத்தம மார்க்கம்.
காணாபத்தியம்: பிரணவ சுவரூபரான விநாயகக் கடவுளைத் தொழுதுச் சிவமுத்தி அடைந்துய்யும் வேத மார்க்கம்.
கௌமாரம்: சிவசுவரூபியான ஆறுமுக தெய்வத்தைப் பணிந்தேத்திப் பிறவிப் பெருங்கடலினைக் கடந்துய்யும் அற்புத மார்க்கம்.
சௌரம்: சூரிய தேவனை உபாசிக்கும் மார்க்கம், இப்பிரிவு தற்பொழுது வழக்கத்தில் பெரிதாக இல்லை, மேற்குறித்துள்ள ஐந்து பிரிவுகளோடு இம்மார்க்கம் முற்றிலும் இணைந்து விட்டது எனலாம், மகாபாரத கர்ணன் இப்பிரிவினைச் சார்ந்தவன்.
'நான்கு வேதங்கள்; உபநிடதங்கள்; இதிகாசங்கள்; புராணங்கள்; பாவ புண்ணியச் செயல்கள் மற்றும் அதன் விளைவுகளைக் குறிக்கும் கர்ம வினையின் வகைகள்; மறுபிறவிக் கோட்பாடுகள்; யுக தர்மங்கள்; பிறவியின் பயனான முத்தி வகைகள்' இவை அனைத்துமே மேற்குறித்துள்ள அனைத்துப் பிரிவுகளுக்கும் பொதுவானவை. இருப்பினும் இவ்வழிபாட்டு முறைகளுக்குத் தனித்தனியே 'மூல மந்திரங்கள், பூஜை முறைகள், அருளார்களின் திருப்பாடல்கள், ஆலயங்கள், ஆகமங்கள், விரத நாட்கள், விழா நாட்கள், வழிவழி ஆச்சாரியர்களைக் கொண்டொழுகும் குரு பரம்பரை' இவைகள் உண்டு. ஆன்மாக்கள் தத்தம் மனங்களின் ருசி பேதங்கள், வளரும் சூழல், உள்ளச் சீரமைப்பு இவைகளுக்குத் தக்கவாறு, தங்கள் மனதில் எளிதில் பொருத்திப் பார்க்கக் கூடிய ஒரு இறை வடிவத்தைத் தேர்ந்தெடுத்து உபாசித்து, இம்மானுடப் பிறவியின் ஒரே ஆன்ம குறிக்கோளான சிவமுத்தியினை அடைந்துய்யும் பாதையில் பயணிக்கின்றனர், உய்வு பெறுகின்றனர் (சிவ சிவ)!!!

இந்து மதத்தின் தொன்மை (யுகங்கள், கால சக்கரம், 14 உலகங்கள், பிரளயம்):

இந்து தர்மம் பேசும் யுகங்கள் நான்கு, கிருத (சத்திய) யுகம், திரேதா யுகம், துவாபர யுகம், கலியுகம். யுகங்களின் கால அளவுகளை இருவேறு வகையில் புராணங்கள் விவரிக்கும், தேவ வருட அளவு அல்லது பூவுலகின் வருட அளவு. தேவ வருட கணக்கின் படி 1 நாள் என்பது நம்முடைய 1 வருடத்தைக் குறிக்கும்; 1 வருடம் என்பது நம்முடைய 360 வருட கால அளவினைக் குறிக்கும். இப்பதிவினில் நம்முடைய அளவுகோலின் வழியிலேயே  யுக அளவினைச் சிந்தித்து உணர்வோம்.

கலியுகத்தின் கால அளவு நான்கு லட்சத்து முப்பத்திரண்டு ஆயிரம் ஆண்டுகள் (4,32,000). துவாபர யுகம் இக்கால அளவின் இரண்டு பங்கு (8 64,000), திரேதா யுகம் மூன்று பங்கு (12,96,000), கிருத யுகம் நான்கு பங்கு (17,28,000). நான்கு யுகங்களும் சேர்ந்தது ஒரு சதுர்யுகம், 4:3:2:1 எனும் விகிதாச்சாரத்திலுள்ள சதுர்யுக யுகங்களின் மொத்த கால அளவு நாற்பத்து மூன்று லட்சத்து இருபது ஆயிரம் ஆண்டுகள் (43,20,000).
71 சதுர்யுகங்களைக் கொண்டது ஒரு 'மன்வந்திரம்' என்று அழைக்கப் பெறும். ஒவ்வொரு மன்வந்திரத்துக்கும் 'மனு' எனும் அதிகாரியொருவர் இருப்பார். 14 மன்வந்திரங்களின் கால அளவு ஒரு 'கல்பம்', 1000 சதுர்யுகங்களைக் கொண்ட இக்கல்பமே பிரம்மாவின் ஒரு பகல் பொழுதாகும். பிரம்மாவின் ஒரு நாள் என்பது இரு கல்ப கால அளவினைக் கொண்டது. முதல் கல்பமான பகல் பொழுதின் முடிவில் நிகழ்ந்தேறும் பிரளயத்தில்,14 உலகங்களில் மூன்று உலகங்கள் (பூலோகம், புவர்லோகம், சுவர்லோகம்) மட்டும் முழுவதுமாய் அழியும்.

இப்பிரளயம் பிரமனின் இரவுப் பொழுது முழுவதும் நீடிக்கும் (ஒரு கல்ப காலம்). அதாவது அடுத்த 1000 சதுர்யுகங்களுக்குப் படைப்பேதும் நடந்தேறாது. அதுவரையில் சிவமுத்தி அடையாத ஆன்மாக்கள் இக்கால கட்டத்தில் 'உருவமற்று; செயலற்று' மாயையாகிய கோளத்தில் கட்டுண்டு இருக்கும். பிரமனின் இரவுப் பொழுது முடிந்தவுடன் மீண்டும் மூன்று உலகங்களின் படைப்பு துவங்கப் பெறும். இக்கால அளவுகளின் படி, பிரமனுக்கு 100 ஆண்டுகள் கடந்தவுடன், பிரமன் சிவமுத்தி பெற்றுய்வு பெறுவார், மகாபிரளயம் தோன்றி 14 உலகங்களும் அழிவுறும். (தற்பொழுது படைப்புத் தொழில் புரிந்து வரும் பிரம்மாவுக்கு இவ்வகையில் 50 ஆண்டுகள் கடந்துள்ளது).

தற்பொழுது நடந்தேறி வருவது 'சுவேத வராக கல்பம்', இதன் 14 மன்வந்திரங்களில் நாமிருப்பது 7 ஆம் (வைவசுவத) மன்வந்திரத்தில். இம்மன்வந்திரத்தின் 71 சதுர்யுகங்களில் நாமிருப்பது 28ஆம் சதுர்யுகத்தில். தற்பொழுது நடந்தேறி வரும் கலியுகத்தில் சுமார் 5100 ஆண்டுகளே கடந்துள்ளது. இக்கலியுகம் முடிவுற சுமார் 4,27,000 ஆண்டுகள் மீதமுள்ளது (முக்கியக் குறிப்பு: கலி முடிவில் பிரளயம் ஏற்படாது, கல்ப முடிவில் மட்டுமே பிரளய நிகழ்வு நடந்தேறும்).

இந்து மதம் (இராமாயண, மகாபாரத நிகழ்வுகள் நடந்தேறி எவ்வளவு ஆண்டுகள் கடந்துள்ளன?):

ஸ்ரீகிருஷ்ண அவதாரம் 'தற்பொழுது நடைபெற்று வரும் கலியுகத்தின் முந்தைய யுகமான துவாபர யுகத்தின் இறுதி 150 ஆண்டுகளுக்குள்' நிகழ்ந்தேறியுள்ளது என்று வியாச மாமுனிவரின் இதிகாசம் நமக்கு அறிவிக்கின்றது. கலி தொடங்கி சுமார் 5100 ஆண்டுகள் கடந்துள்ளது எனில் மாபாரத நிகழ்வுகள், அவை நடந்தேறிய தலங்கள், அத்தலங்களில் குறிக்கப் பெற்றுள்ள திருக்கோயில்கள் இவையாவும் குறைந்த பட்சம் 5100 ஆண்டுகள் தொன்மையானவை எனும் முடிவிற்கு எளிதாக வந்துவிடலாம்.

ஸ்ரீராமாவதாரம் 'துவாபர யுகத்திற்கு முன்னதான திரேதா யுகத்தின் இறுதியில், யுக நிறைவு பெற 12,000 ஆண்டுகளே மீதமிருந்த நிலையில், அயோத்தியில்' நிகழ்ந்தேறியுள்ளது. இராவண சம்ஹாரத்திற்குப் பின்னர் ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி சுமார் 11,000 ஆண்டுகளுக்கு ஆட்சி புரிந்தருளியதாக உத்தர இராமாயணம் பதிவு செய்கின்றது. தற்பொழுது நடந்தேறி வரும் 4ஆம் யுகமான கலியுகத்திற்கும், 2ஆம் யுகமான திரேதா யுகத்திற்கும் இடையிலுள்ள துவாபர யுகத்தின் கால அளவு மட்டுமே 'எட்டு லட்சத்து அறுபத்தி நான்காயிரம் (8, 64,000)' ஆண்டுகள்.
ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி தம்முடைய அவதாரக் காலத்தில் '(இராமேஸ்வரம் உள்ளிட்ட) எண்ணிறந்த சிவாலயங்களைப் புதுக்கியும், தரிசித்தும், போற்றியும் வந்துள்ளார்' என்று அந்தந்த தல புராணங்கள் நமக்குத் தெரிவிக்கின்றன, அவை அனைத்துமே சுமார் 8 1/2 லட்சம் ஆண்டுகள் பழமையானவை என்பதே நினைவிலிருத்த வேண்டிய முக்கியக் குறிப்பு. மேலும் இந்நெடிய காலகட்டத்தில் அத்திருக்கோயில்கள் பல்லாயிரம் முறை சிதிலமடைந்துப் பின்னர் புணர்நிர்மாணம் கண்டு வந்திருக்கக் கூடும் எனினும் 'அவ்வாலயங்களிலுள்ள மூல மூர்த்தி மற்றும் பிற விக்கிரக மூர்த்தங்கள் மிகமிகப் புராதனமானவை' எனும் புரிதல் அவசியம்.

இந்து தர்மம் 'மதமா அல்லது வாழ்வியலா?' (ஒரு தெளிவான பார்வை):

இந்து தர்மம் 'தனிப்பட்ட ஒரு மதம் அல்ல அது ஒரு வாழ்வியல்' என்பது போன்ற வாசகங்கள் முகநூல் பதிவுகளில் வெகு வேகமாகப் பரவி வருகின்றது. இவ்விதமான கருத்துக்களைப் பகிர்வோர் 'இந்து மதத்தின் மீது பற்றுள்ளவர்' என்பதில் ஐயமில்லை, இவர்களின் நோக்கத்திலும் குற்றமில்லை இருப்பினும் இவ்வகையான பிரச்சாரங்கள் 'தற்சமயம் நிலவி வரும் சூழலில்' நலன் பயக்கக் கூடியவையா என்பது குறித்துச் சிறிது சிந்திப்போம்.

இந்து தர்மம் 'உபநயனம்; திருமணம்; புதுமனைப் புகுவிழா உள்ளிட்ட ஒவ்வொரு நிகழ்விலும் சடங்கிலும் பின்னிப் பிணைந்திருக்கின்றது, அன்றாட வாழ்வின் ஒவ்வொரு செயலுக்கும் தக்கது; தகாதது எனும் வரைமுறைகளை வகுத்துத் தருகின்றது, வாழும் பொழுது மட்டுமல்லாது ஒருவர் உயிர் நீத்தபின்னரும் புரியப் படவேண்டிய நியமங்களை அறிவிக்கின்றது, தனிமனித ஒழுக்கம் மற்றும் சமுதாய நலன் சார்ந்த கோட்பாடுகளை முன்மொழிகின்றது' ஆதலின் இதனை வாழ்வியல் என்று விவரிப்பது என்பது முற்றிலும் பொருத்தமானதே.

எனினும் 'இந்து தர்மம் மதமே அல்ல - ஒரு வாழ்வியல்' என்று குறிக்கையில் அது தவறான புரிதலுக்கு வழிவகுத்து விடுகின்றது. இந்து தர்மம் பன்முகத் தன்மை கொண்டது, அவற்றுள் மதமும் முக்கியமான ஒரு பரிமாணம் என்பதை எக்காரணம் கொண்டும் மறுத்து விட இயலாது. பலகலைகளில் தேர்ச்சியும், மிருதங்கத்தில் சிறப்புப் பயிற்சியும் உள்ள ஒருவரைப் பற்றி விவரிக்கையில் 'இவர் மிருதங்க வித்துவான் மட்டுமல்லாது பலகலைகளிலும் தேர்ச்சி பெற்றுள்ளவர்' என்று கூறுவதே பொருந்தும், அதை விடுத்து 'இவர் மிருதங்க வித்துவானே அல்ல, பல கலைகளிலும் வல்லவர்' என்று கூறுவது ஏற்புடையதாக இருக்காது.  

'வாழ்வியல்' எனும் சொல் பொதுவில் 'மதம் சார்ந்த ஆன்மீக பயணத்தினையும் கோட்பாடுகளையும்' குறிப்பதில்லை, ஒரு சிலர் அவ்வாறு கருதக் கூடும் என்பதால் அது வெகு ஜன மக்களுக்கான புரிதலாக மாறி விடாது. 'மனித நிலையிலிருந்து அனைத்து தரப்பினரையும் இறை நிலைக்கு இட்டுச் செல்லும் பயணத்தைக் குறிப்பது மதம், மறுபிறவி; பிறவியின் வகைகள்; வினைகள் மற்றும் அதற்கான விளைவுகள் குறித்த கோட்பாடுகளைக் குறிப்பது மதம், அனைத்திற்குள்ளும், அனைத்திலிருந்து வேறுபட்டும் நின்றருளும் பரம்பொருளின் தன்மைகளைக் குறிப்பது மதம், பிறவியின் பயனான முத்தி வகைகளைக் குறிப்பது மதம், இறைவனின் பல்வேறு அவதாரங்களையும் திருத்தலங்களையும் அடியவர் பெருமக்களையும் பறைசாற்றுவது மதம்', இப்படி 1000 விதமாகக் கூறிக் கொண்டே செல்லலாம். 

புரிதலற்ற மதமாற்றம் பாரத தேசமெங்கிலும் பரவி வரும் மிகவும் இக்கட்டான இச்சூழலில் 'இந்து தர்மம் ஒரு மதமே அல்ல' என்று முழங்குவது பெரும் குழப்பத்தினை மட்டுமே விளைவிக்கும், எவ்வித நன்மையையும் ஏற்படுத்தி விடாது. ஒரு பிரச்சாரம் எவ்வகையான சூழலில், எத்தகைய காலகட்டத்தில் மேற்கொள்ளப் படுகின்றது என்பதனைப் பொறுத்தே அதன் பயனும் அமையும். ஆதலின் இந்து தர்மம் 'ஒரு மதமே' என்று தெளிவுறுவோம், பிறருக்கும் தெளிவுறுத்துவோம் (சிவ சிவ)!!!!

கந்தபுராண நிகழ்வுகள் நடந்தேறிய காலகட்டம் தான் என்ன (ஆதாரபூர்வ விளக்கங்கள்):

வால்மீகி இராமாயணம் - பால காண்டத்தின் 37ஆவது சர்க்கத்தில் பதிவு செய்யப் பெற்றுள்ள நிகழ்வுகளின் அடிப்படையில் கந்தபுராண நிகழ்வுகளின் காலகட்டத்தினை ஆய்வோம். விஸ்வாமித்திர மகரிஷி 'உலக நலனுக்காக தாம் புரியவிருக்கும் சிவவேள்வி, அசுரர்களால் தடையுறா வண்ணம் காத்துத் தரும் பொருட்டு' ஸ்ரீராமர் மற்றும் இலக்குவன் இருவரையும் உடனழைத்துச் செல்கின்றார், யாகம் இனிதே நிறைவுற்றுப் பின் தாடகை வதமும் ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியால் நடந்தேறுகின்றது. பின்னர் ஜனக மன்னரின் அழைப்பினையேற்று அனைவரும் மிதிலா நகருக்குப் பயணிக்கின்றனர். செல்லும் வழியில் எண்ணிறந்த புராண நிகழ்வுகளைத் தசரத மைந்தர்களுக்கு விவரித்தவாறு செல்கின்றார் மகரிஷி.
’இடையில் கங்கையைக் கடக்க நேரிடும் சமயத்தில் ஆறுமுக தெய்வத்தின் திருஅவதார நிகழ்வுகளையும் விரிவாக எடுத்துரைக்கின்றார் மகரிஷி' என்று வால்மீகி முனிவர் பதிவு செய்தருளியுள்ளார். இதனால் கந்தபுராண காலகட்டம் 'இராமாயண நிகழ்வுகள் நடந்தேறியுள்ள திரேதா யுக காலத்தினின்றும் மிகவும் முற்பட்டது' என்பது தெளிவு. தற்பொழுது நடந்தேறி வரும் 4ஆம் யுகமான கலியுகம் துவங்கப் பெற்று சுமார் 5130 வருடங்கள் கடந்துள்ளன, இதற்கும் 2ஆம் யுகமான திரேதா யுகத்திற்கும் இடையிலுள்ள துவாபர யுகம் மட்டுமே சுமார் 8 1/2 லட்சம் ஆண்டுகளைக் கொண்டதாகும்.

ஆதலின் சிவகுமாரன் எழுந்தருளியிருக்கும் அறுபடை வீடுகளும் அத்தனை லட்சம் ஆண்டுகள் புராதனமானவை. இந்நெடிய காலகட்டத்தில் இத்திருக்கோயில்கள் எண்ணிறந்த முறை சிதிலமடைந்தும் பின் செப்பனிடப் பெற்றும் வந்திருக்கக் கூடும், எனினும் இத்தலங்களில் எழுந்தருளியுள்ள விக்கிரக மூர்த்தங்கள் காலவரையற்ற தொன்மையினைக் கொண்டு விளங்குபவை எனும் புரிதல் மிக அவசியம் (சிவாய நம)!!!

இந்து தர்மம் - புராணங்களும் இதிகாசங்களும்:

நிகழ்வுகள் நடந்தேறும் கால கட்டத்திலேயே அவை தொகுக்கப்பட்டு எழுதப் பெறுவது இதிகாசங்கள், நிகழ்வுகள் நடந்தேறி எண்ணிறந்த யுகங்களுக்குப் பின்னர் பிறிதொரு காலகட்டத்தில் தொகுக்கப் பெறுவது புராணங்கள். திரேதா யுகத்தில் இராமாயண காவியத்தினை இயற்றியருளிய வால்மீகி முனிவரும், துவாபர யுகத்தில் மாபாரதம் புனைந்தருளிய வேத வியாசரும் அந்தந்த காலகட்டங்களிலேயே வாழ்ந்தருளிய மாமுனிவர்கள், மேலும் தத்தமது இதிகாசங்களில் இப்பெருமக்கள் ஒரு கதாபாத்திரமாகவே இருந்து வந்துள்ளனர். பதினெண் புராணங்களோடு எண்ணிறந்த உப புராணங்களையும் வியாச மகரிஷி துவாபர யுக காலகட்டத்திலேயே இயற்றியருளியுள்ளார்.

இந்து தர்மம் (ஷண்மதமா (ஆறு மதங்களா) அல்லது ஒரு மதமா - ஆதாரபூர்வ நுட்பங்களும் விளக்கங்களும்):

'கொள்கைகள்; கோட்பாடுகளோடு கூடிய ஒரு குறிப்பிட்ட வழிபாட்டு முறையினை 'மதம்' எனும் வரையறைக்குள் உட்படுத்த வேண்டுமாயின் அவற்றிற்கென்று தனியே ஒரு வேத நூலொன்று அமைந்திருத்தல் இன்றியமையாதது'. நமது பாரத தேசத்தில் எண்ணில் பலகோடி ஆண்டுகளாக நிலவி வரும் 'சைவம்; வைணவம்; கௌமாரம்; காணபத்தியம்; சாக்தம்; சௌரம்' எனும் ஆறு வழிபாட்டு முறைகளுமே தத்தமெக்கென்று தனித்தனி வேதநூலினைக் கொண்டிராமல் 'ரிக்; யஜுர்; சாம; அதர்வணம்' எனும் நான்மறைகளைப் பொதுவான வேதநூலாகக் கொண்டு விளங்குபவை, ஆதலின் இவையனைத்துமே ஒரே மதத்திற்குட்பட்ட சமயப் பிரிவுகளே அன்றி தனித்தனி மதங்களன்று என்பது தெளிவு.

இக்கருத்திற்கு 'வடமொழிப் புராணங்கள்; உபநிடதங்கள்; தீந்தமிழில் தோன்றிய புராணங்கள், சாத்திரங்கள் மற்றும் அருளாளர்களின் திருமுறைத் திருப்பாடல்கள் இவைகளிலிருந்து ஒருகோடி அகச் சான்றுகளைத் தரவுகளாகத் தரஇயலும். சிவபரம்பொருளை 'நான்மறைபாடும் பரம யோகி' என்று திருஞானசம்பந்தப் பெருமான் 'திருக்கள்ளில்' எனும் தலத்திற்கான தேவாரத் திருப்பதிகத்தில் போற்றுகின்றார். திருமூலர் திருமந்திரத்தில் 'வேதச் சிறப்பு' எனும் தனித்தலைப்பையே அமைத்தருளிப் போற்றுகின்றார்.
-
வேதத்தை விட்ட அறம்இல்லை! வேதத்தின்
ஓதத் தகும்அறம் எல்லாம் உள!தர்க்க
வாதத்தை விட்டு மதிஞர் வளமுற்ற
வேதத்தை ஓதியே வீடுபெற்றார்களே!!!
'நன்கோது நால் வேதத்துள்ளான்' என்று நாலாயிர திவ்யப் பிரபந்தத்தில் ஸ்ரீமன் நாராயண மூர்த்தியைப் போற்றுகின்றார் பேயாழ்வார். சரி வேதநூல் ஒன்றேயாய் இருப்பினும் தெய்வங்கள் வெவ்வேறாக உள்ளனவே? எனில், 'இந்து தர்மம் ஒன்றே குலம்! ஒருவனே தேவன்' எனும் ஒற்றைப் பரம்பொருள் தத்துவத்தை மையமாகக் கொண்டு விளங்குவது, எங்கும் யாவிலும் நீக்கமற நிறைந்தருளும் அப்பரப்பிரமமே ஆன்மாக்கள் உய்யும் பொருட்டு சில முக்கியத் திருவடிவங்களில் தோன்றியருள் புரிகின்றது'. 'ஒன்றாய் அரும்பி பலவாய் விரிந்து இவ்வுலகு எங்குமாய் நின்றாள் அனைத்தையும் நீங்கி நிற்பாள்' என்றிதனைச் சுட்டுவார் அபிராமி பட்டர்.
-
சுடரோ சிவபெருமான் சூடு பராசக்தி
திடமார் கணநாதர் செம்மை - படரொளியோ
கந்தவேளாகும் கருதுங்கால் சற்றேனும்
வந்ததோ பேத வழக்கு?

மேலும் இந்த ஆறு பிரிவுகளையும் வேத வியாசர் துவாபர யுக காலகட்டத்தில், இன்றிலிருந்து சுமார் 5100 ஆண்டுகளுக்கு முன்னர் இயற்றியருளிய பதினெண் புராணங்களிலேயே தெளிவாகக் குறிக்கப் பெற்றுள்ளன, ஆதிசங்கரர் அவதரித்ததோ சுமார் 2000 வருடங்களுக்கு முன்னர், ஆதலின் 'ஆதி சங்கரர் இப்பிரிவுகளைத் தாமே புதிதாகத் தோற்றுவிக்கவில்லை மாறாக சிதறுண்டிருந்த (நான்மறைகளுக்கு உட்பட்ட) வழிபாட்டு முறைகளைப் புணரமைத்து இந்து தர்மம் (அல்லது வேத தர்மம்; மறை நெறி) எனும் ஒரு குடையின் கீழ் மீண்டும் புத்துணர்வு பெற்று மிளிரச் செய்தருளினார்' என்பதே சரியான புரிதல்.
எனில் 'ஸ்ரீஆதிசங்கர பகவத் பாதருக்கு ஷண்மத ஸ்தாபகர் எனும் திருப்பெயரும் உண்டே! அதனை எப்படிப் புரிந்து கொள்வது?, ஒரு சொல் எந்த வாக்கியத்தில் எந்த கருத்தில் எந்த கண்ணோட்டத்தில் கையாளப் படுகின்றது என்பதனை வைத்தே அதற்கு பொருள் கொள்ளுதல் வேண்டும்! 'ஒரு யானை மதம் பிடித்து ஓடியது' எனும் வாக்கியத்தில், மதம் எனும் சொல்லை ஆன்மீகத்தின் குறியீடாக எவரொருவரும் பார்ப்பதில்லை, அது போன்று 'ஷண்மத ஸ்தாபகர்' எனும் சொற் பிரயோகத்தில் 'மதம்' என்பது 'பிரிவுகள் அல்லது உட்சமயங்கள்' என்பதனையே குறிக்க வந்தது, தனித்தனி மதங்களை அல்ல (சிவாய நம!!!).

பிரளயம் எப்பொழுது தான் வரும்? (இந்து தர்ம சாத்திரங்கள் முன்னிறுத்தும் நுட்பங்கள்):

கலியுக முடிவில் பிரளயம் வருமா? வராது, கலியுகத்தின் கால அளவு 4,32,000 ஆண்டுகள், தற்பொழுது அதில் சுமார் 5100 வருடங்கள் மட்டுமே நிறைவடைந்துள்ளது. மீதமுள்ள 4,27,000 ஆண்டுகள் கடந்த பின்னர் மீண்டும் முதல் யுகமான கிருத யுகம் (சத்திய யுகம்) துவங்கப் பெறும்.

சதுர்யுகம் என்று குறிக்கப் பெறும் கிருத யுகம், திரேதா யுகம், துவாபர யுகம், கலியுகம் ஆகிய நான்கு யுகங்களின் மொத்தக் கால அளவு (4:3:2:1 விகிதாச்சாரத்தில்) 43,20,000 (43 லட்சத்து 20 ஆயிரம்) ஆண்டுகள். இக்கால அளவில் 71 சதுர்யுகங்களைக் கொண்டது ஒரு மன்வந்திரம்.

சரி! மன்வந்திரத்தின் முடிவில் பிரளய நிகழ்வு நடந்தேறுமா? அதுவும் இல்லை. இத்தகைய 14 மன்வந்திரங்களின் கால அளவு ஒரு கல்பம் என்று குறிக்கப் பெறும் (சுமார் 1000 சதுர் யுகங்கள்).

அப்பொழுது கல்பத்தின் இறுதியில் தான் பிரளயமா எனில் ஆம், 14 மன்வந்திரங்கள் அல்லது 1000 சதுர்யுகங்களைக் கொண்ட ஒரு கல்பத்தின் முடிவில் நிகழ்ந்தேறும் பிரளயத்தில், 14 உலகங்களில் பூமி மற்றும் அதற்கு மேலுள்ள 2 உலகங்கள் மட்டும் முழுவதுமாக அழிவுறும். இது பிரம்மாவின் ஒரு நாளுடைய முதல் பகுதி என்று சாத்திரங்கள் குறிக்கின்றது, அந்நாளின் இரண்டாம் பகுதி முழுவதும் பிரளயம் நீடித்திருக்கும் (அதாவது 432 கோடி வருடங்களுக்கு). பின் மீண்டும் மறுநாள் காலை பூமி முதலான மூன்று உலகங்களுக்கும் படைப்பு துவங்கப் பெறும்.

இவ்விதமாய் தற்பொழுதுள்ள பிரம்மாவுக்கு 50 ஆண்டுகள் கடந்துள்ளது (அதாவது இரண்டு கல்ப கால அளவினைக் கொண்ட ஒரு நாள் மாதமாகி, அம்மாதங்கள் பன்னிரண்டு கடந்து ஒரு வருடமாகி, அவ்வருடங்கள் நூறினைக் கொண்டது பிரமனின் ஆயுள்). பிரமனின் 50 ஆண்டுகள் ஒரு பரார்த்தம் என்று குறிக்கப் பெறும். தற்பொழுது நடந்தேறி வருவது இரண்டாம் பரார்த்தத்தின் முதல் கல்பமான சுவேத வராக கல்பம், அதன் 14 மன்வந்திரங்களில் தற்பொழுது நடைபெறுவது 7ஆம் மன்வந்திரம், அதன் 71 சதுர்யுகங்களுள் தற்பொழுது நடந்தேறி வருவது 28ஆம் சதுர்யுகம், அதன் நான்கு யுகங்களில் கலியுகம், அதன் 4,32,000 ஆண்டுகளில் சுமார் 5100 ஆண்டுகள் கடந்துள்ளது.

பிரமனுக்கு 100 ஆண்டுகள் நிறைவுறும் வேளையில் 14 உலகங்களும் மகாப்பிரளயத்தில் முற்றிலுமாய் அழிவுறும், பிரமன் சிவமுத்தி அடைவார். இம்மகா பிரளயம் காலவரையின்றி நீண்டிருக்கும், பின் புதியதொரு பிரமன் (மேற்குறித்துள்ள யுககணக்குகளின் வண்ணம்) படைப்புத் தொழிலையேற்று நடத்தி வருவார்.

கிரக வழிபாடுகளும் பரிகாரங்களும் அவசியமா?

எண்ணில் பலகோடிப் பிறவிகளில் ஒரு ஆன்மா சேர்த்து வந்துள்ள, நல்வினை; தீவினைக் குவியல்களை சஞ்சித வினைகளென்றுச் சாத்திரங்கள் பேசுகின்றன. பிறவியெடுக்கும் ஒரு ஆன்மாவானது அப்பிறவியில் அனுபவித்தே தீர வேண்டிய, சஞ்சித வினைகளினின்றும் எடுக்கப் பெறும் ஒரு சிறு பகுதியே 'பிராரப்த வினை' என்று குறிக்கப் பெறுகின்றது.

நமது பிராரப்த வினைகளாலேயே நன்மை - தீமைகள் விளைகின்றனவேயன்றி கிரகங்களால் ஒருபொழுதும் அல்ல; அல்ல;அல்ல எனும் தெளிவான புரிதல் முதலில் அவசியமாகின்றது. 'அவ்வினைக்கு இவ்வினை' என்பார் திருஞானசம்பந்த மூர்த்தி. ஆன்மாக்களின் பிராரப்த வினைகளை உரிய காலத்தில், உரிய விதத்தில் சேர்ப்பிக்கும் நவ கோள்களும் 'அஞ்சலைத் தக்கோரிடத்துச் சேர்ப்பிக்கும்' தபால்காரரைப் போன்றவைகளே. வழிபாடுகளை ஏற்று, தீய பலன்களை மாற்றியமைக்கும் அதிகாரம் இறைவனால் இக்கோள்களின் அதிதேவதைகளுக்கு வழங்கப் படவில்லை.

குறிப்பிட்ட ஒரு கிரகம் நம்முடைய ராசிக்குச் சாதகமல்லாத கட்டமொன்றிற்கு வருமாயின் நமது பிராரப்த வினைகளிலிருந்துத் தீவினைப் பயன்களை மிகுதியாகவும், சாதகமான கிரகச் சூழலில் நல்வினைப் பயன்களை மிகுதியாகவும் நம்மை நுகருமாறுச் செய்வதே கோள்களின் பணியாகும். அது விடுத்து, நம் பிராரப்த வினைகளுக்குத் தொடர்பில்லாத புதியதொரு நல்வினை; தீவினையை கிரகங்களால் என்றுமே நூதனமாக உருவாக்கித் தந்துவிட இயலாது.

சனி கெடுப்பார்; குரு கெடுப்பார் என்று கூறி வருவதே பிழையான பிரயோகம், நாம் புரிந்து வந்துள்ள எண்ணிறந்த தீவினைகளே நம்மைத் தொடர்ந்து வந்து கெடுக்கின்றன என்று அவ்வப்பொழுது நினைவு கூர்தல் அவசியம்.

ஒன்பது நவகிரகத் திருத்தலங்களும் அடிப்படையில் சிவ ஷேத்திரங்களே, இத்தலங்களில் சிவபரம்பொருளை வழிபடுவதால் தோஷ நிவாரணம் கிட்டுமேயன்றிக் கிரக வழிபாட்டினால் எவ்விதப் பயனும் விளையப் போவதில்லை. நம்மைப் போன்றே கிரங்கங்களின் அதிதேவதைகளுக்கும் ஆயுட்கால வரையரை உண்டு, அதன் பின்னர் புதியதொரு அதிகாரி அந்தந்த கிரங்கங்களுக்கு இறைவனால் நியமிக்கப் பெறுவார்.
*
பெயர்ச்சியன்று மட்டும் ஆலய வழிபாடு புரிந்து விட்டு பிற நாட்களில் நம் வாழ்வியல் முறைகளில் வேறெந்த விதமான மாறுதல்களையும் கொண்டு வரவில்லையெனில் எவ்வித அதிசயமும் நிகழ்ந்து விடப் போவதில்லை என்பதே நிதர்சனம்.

சாதகமல்லாத பெயர்ச்சிக் காலத்தில் நாம் பதறுவது ஒரு புறமிருக்கட்டும், 'எதனால் நமக்குத் தீவினைகள் வருகின்றன? சாத்திரங்கள் எந்தெந்த செயல்களைச் செய்யாதே என்று வலியுறுத்துகின்றது' எனும் புரிதலையும் சேர்த்தே வளர்த்துக் கொள்ளுதல் வேண்டும், இல்லையெனில் புரிந்த தவறுகளையேப் புரிந்து வினைச் சூழலில் உழன்று கொண்டிருக்கும் நிலை உருவாகும்.

புண்ணிய தலங்களுக்குச் சென்று தரிசித்தல் மற்றும் திருத்தொண்டு புரிதல், புண்ணிய நதிகளில் நீராடுதல், திருக்கோயில்களில் (இறைவனின் பொருட்டு) தீபமேற்றி வழிபடுதல், அருளாளர்களின் திருப்பதிகங்களை உள்ளன்புடன் ஓதி வருதல், பிற உயிரினங்களின் கதறல்களிலிருந்துத் தோன்றும் மாமிசம் உட்கொள்வதை அறவே தவிர்த்தல், எளியவர்களுக்கு இயன்ற பொழுதெல்லாம் உதவி வருதல், உயிர்களின் இடர்களை நீக்குதல் ஆகியவை மட்டுமே பாதகமான கிரகச் சூழலிலிருந்து நம்மை காத்துதவும் அரண்களாக அமையும் (சிவ சிவ).

தசாவதாரங்களின் வரிசையில் புத்தரும் ஒருவரா? முறையான விளக்கங்கள்:

பாற்கடல் வாசனான ஸ்ரீமகாவிஷ்ணு இது வரையிலும் எடுத்துள்ள அவதாரங்கள் ஒன்பது, இனி கலியுக இறுதியில் எடுக்கவிருக்கும் அவதாரம் ஒன்று, இனி இப்பத்து அவதாரங்களின் முறையான வரிசையினைத் தக்க சான்றுகளுடன் உணர்ந்துத் தெளிவோம்,

பன்னிரு ஆழ்வார்களுள் ஒருவரான பெரியாழ்வாரின் ஸ்ரீரங்கப் பாசுரத்திலிருந்து முதலில் துவங்குவோம்,

தேவுடைய மீனமாய் ஆமையாய் ஏனமாய் அரியாய்க் -குறளாய்
மூவுருவில் இராமனாய் கண்ணனாய் கற்கியாய் -முடிப்பான் கோயில்
-
பெரியாழ்வார் குறித்துள்ள தசாவதாரங்களின் வரிசை பின்வருமாறு, மீன் (மச்ச அவதாரம்), ஆமை (கூர்ம அவதாரம்), ஏனம் (வராக அவதாரம்), குறள் (இரண்டு அடிகளால் உலகங்கள் யாவையையும் அளந்த காரணத்தால் வாமன அவதாரத்தைக் குறள் என்று போற்றுகின்றார்), மூவுருவில் இராமனாய் (பரசுராமர், ஸ்ரீராமர் மற்றும் ஸ்ரீகிருஷ்ணனின் மூத்த சகோதரரான பலராமர்), ஸ்ரீகிருஷ்ண அவதாரம் மற்றும் கல்கி அவதாரம்.

அடுத்ததாகத் திருமங்கை ஆழ்வாரின் பாசுரத்தில் குறிக்கப் பெற்றுள்ள வரிசையையும் காண்போம்,

மீனோடு ஆமை கேழலாய் அரி குறளாய் முன்னும் ராமனாய் தானே பின்னும் ராமனாய் தாமோதரனாய் கல்கியும் ஆனான்
-
மேற்குறித்துள்ள திருப்பாடல் வரிகளிலும் அதே வரிசை குறிக்கப் பெற்றுள்ளது, மீன் (மச்ச மூர்த்தி), ஆமை (கூர்ம மூர்த்தி), கேழல் (வராக மூர்த்தி), குறள் (வாமன மூர்த்தி), முன்னும் ராமனாய் (பரசுராமர்), தானே (ஸ்ரீராமர்), பின்னும் ராமனாய் (பலராமர்), தாமோதரனாய் (ஸ்ரீகிருஷ்ணர்), கல்கி.

உண்மை நிலை இவ்வாறிருக்க இன்றோ இணைய தளங்கள் பலவற்றிலுள்ள தசாவதாரப் படங்களில், 'பலராமருக்கு மாற்றாக புத்தரின் படம்' காணப் பெறுகின்றது. இது முற்றிலும் பிழையானது, எவ்வித ஆதாரமுமில்லாத பிற்காலத் திணிப்பு. புராணங்களும், அருளாளர்களின் திருப்பாடல்களும் 'கலப்பையோடு காட்சி அளிக்கும் பலராமரையே' தச அவதாரங்களில் ஒருவராக முன்னிறுத்துகின்றன (மெய்ப்பொருள் காண்பது அறிவு)!!!

துறவுக் கோலத்தில் போதை வழக்கம் கைக்கொள்வோர் ஞானிகளா?

வாரணாசி; ஹரித்வார்; திரிவேணி சங்கமம் ஆகிய தலங்களில் துறவிகள் போன்ற தோற்றத்தில், உடல் முழுவதும் திருநீறு பூசிக்கொண்டு, போதை வஸ்துக்களைப் புகைத்த வண்ணமிருப்போரை நம்மால் காண இயலும். இது குறித்த சில நுட்பங்களை இப்பதிவினில் சிந்தித்துத் தெளிவுறுவோம்.
நமது இந்து தர்மம் கள்ளினை உட்கொள்வது பஞ்ச மகா பாதகங்களில் ஒன்றெனச் சுட்டுகின்றது, 'கள்' என்பது மது பானத்தினை மட்டும் குறிக்க வந்ததல்ல, மனத்தையும், அறிவையும் தன்னிலை இழக்கச் செய்யும் அனைத்து வித போதை வஸ்துக்களும் அதனுள் அடங்கும். திருமூலர் 'கள்ளுண்ணாமை' எனும் அதிகாரத்தில் போதை வழக்கத்தை வன்மையாகக் கண்டிக்கின்றார்.
'காமமும் கள்ளும் கலதிகட்கே ஆகும்' என்று 'முறையற்ற காமமும், போதை வழக்கமும் கீழ் மக்களுக்கே உரியது' என்று சாடுகின்றார் திருமூலர். உலக மாயையாகிய மயக்கத்திலிருந்து விடுபட்டு உய்வு பெற மற்றொரு மயக்கத்தை நாடுவோர் மூடர்களே என்கின்றார், 
-
மயக்கும் சமய மலமன்னும் மூடர்
மயக்கும் மதுவுண்ணும் மாமூடர் தேறார்
மயக்குறு மாமாயை மாயையின் வீடும்
மயக்கில் தெளியின் மயக்குறும் அன்றே.
'வாமாச்சார வழியில் சக்தி வழிபாடு புரிகிறேன் பேர்வழி' என்று பிதற்றிக் கொண்டு போதை வழக்கத்தைக் கைக்கொள்பவர் தம்மிடம் எஞ்சியுள்ள சக்தியையும் இழந்து அழிவர், அம்பிகையின் திருவருள் எக்காலத்திலும் இம்மூடர்களுக்குக் கிட்டாது, சக்தியைச் சிவானந்தம் எய்தும் முயற்சியில் செலவிட வேண்டுமேயன்றி போதை வழக்கத்திலல்ல என்று தெளிவுறுத்துகின்றார். 
-
சத்தியை வேண்டிச் சமயத்தோர் கள்ளுண்பர்
சத்தி அழிந்தது தம்மை மறத்தலால்
சத்தி சிவஞானம் தன்னில் தலைப்பட்டுச்
சத்திய ஞான ஆனந்தத்திற் சார்தலே.
மெய்ஞான யோகிகள் யோகக் கனலை மேலெழுப்பிச் சகஸ்ராரத்தில் சிவதரிசனம் கண்டுச் சிவானந்தத் தேன் எனும் மதுவுண்டு வாழ்ந்திருப்பர். மற்றொருபுறம் போலி யோகிகளாகிய மூடர்கள் கள் முதலிய போதை வஸ்துக்களைக் கைக்கொண்டு அறிவிழந்து அழிந்து போவார், இவர்கள் ஒருக்காலமும் ஞானம் அடையார் என்று அறுதியிட்டுக் கூறுகின்றார் திருமூலர்,
இப்பதிவின் நோக்கம் இத்தகையோரின் பக்தியைச் சாடுவது அல்ல, பக்தி என்பது ஒவ்வொரு ஆன்மாவுக்கும் இறைவனுக்கும் உள்ள தனிப்பட்ட தொடர்பு, அதனை விமரிசிக்க எவருக்கும் உரிமையில்லை. எனினும் இந்து தர்ம ஞானிகள் மற்றும் ஆச்சாரியர்கள், நால்வர் பெருமக்கள்; அருணகிரிநாதர் மற்றும் சைவ சமய அருளாளர்கள் ஆகியோர் வழிவழியாய் முன்னிறுத்திய, வழிமொழிந்துள்ள தர்மங்களில் அபிமானம் உள்ள எவருக்கும் அறமற்ற போதை பழக்கத்தினைச் சாடும் கடமையும், உரிமையும் உண்டு. 
பொய்த்துறவு பூண்டு இத்தகைய வழக்கத்தில் ஈடுபடுவோர் வாழ்வினைச் சந்திக்க அச்சம் கொண்டவர்கள்; அதனால் போதை வழக்கத்தினைக் கைக்கொள்ளத் துவங்கிப் பின் அதற்கு அடிமையாகி உழலும் சாமான்ய மனிதர்களே. இவர்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் உணவிடலாம், உதவலாம் எனினும் இவர்கள் ஒருக்காலும் வணங்கத் தக்கவரல்ல; மிகத் தவறான வழிகாட்டிகள்.

உடனே அங்கொன்றும் இங்கொன்றுமாயுள்ள, நாம் ஞானிகள் என்று நம்பும், புகைப்பழக்கம் உள்ளோர் சிலரை முன்னிறுத்தி விவாதித்து நேரத்தை விரயமாக்குவதை விடுப்போம், 'போதை வழக்கத்தினைக் கைக்கொண்டும் ஆன்ம இலாபம் பெற இயலும்' எனும் அறம் சிறிதுமற்ற சிந்தனையை அகற்றுவோம், வழிவழி வந்துள்ள நமது சமய குருநாதர்களின் வழியில் பயணித்துத் தெளிவுறுவோம் (சிவ சிவ).

திருக்கோயிலிலுள்ள மூலவர் படங்களை முகநூலில் பகிரலாமா? (சில சிந்தனைகள்):

நம் இந்து தர்ம ஆலயக் கருவறையிலுள்ள மூல மூர்த்தியின் தரிசனம் என்பது தனித்துவமான அனுபவத்தைத் தரவல்லது, ஏராளமானோர் திருச்சன்னிதி முன்பு கூடியிருந்தாலும் அங்குள்ள ஒவ்வொருவருக்கும்  இறைவனுக்கும் இடையே தனிப்பட்ட உரையாடலொன்று நடந்தேறிய வண்ணமிருக்கும். எண்ணிறந்த பக்தர்கள் விரதமிருந்துப் பலநாட்கள் பாத யாத்திரையாக நடந்து திருக்கோயில்களுக்குச் செல்வது அற்புதமான அந்த சில நிமிட நேர இறை தரிசனத்திற்காகவே, திருப்பதி பெருமாளைத் தரிசிக்கப் பலமணி நேரம் ஆர்வத்துடன் மெய் வருந்தக் காத்திருந்து, வரிசையில் மெதுமெதுவே முன்னேறி இறுதியாய் வேங்கடவனின் ஆச்சரியமான திருக்கோல தரிசனத்தைக் கண்ணாற சில கணங்களே தரிசித்துப் பேரானந்தம் அடைந்துப் பின் சிறிது ஏக்கத்துடனே வெளிவரும் அனுபவம் நம் தர்மத்திற்கே உரித்தானது.   

நாயன்மார்கள்; ஆழ்வார்கள்; அருணகிரிநாதர் மற்றும் எண்ணிறந்த முனிவர்கள்; ஞானிகள்; அருளாளர்கள்; ஆச்சார்யர்கள் ஆகியோர் தரிசித்தும் போற்றியும் பரவியுள்ள மூல மூர்த்தியைப் படமெடுப்பதும், அதனைப் பகிர்வதும் ஆகம விரோத செயலாகும், இறை பக்தியை வளர்க்கும் கருத்திலேயே நம் இந்து தர்ம சகோதரர்களும் சகோதரிகளும் இத்தகு படங்களை முகநூலில் பகிர்கின்றனர் எனினும் இவ்வழிமுறை எவ்விதக் கோணத்திலும் ஏற்புடையதல்ல, நம் சமய முன்னோர்கள் இதனை ஒரு பொழுதும் அங்கீகரித்ததுமில்லை.

உற்சவங்கள் நடைபெறும் பொழுது, உற்சவத் திருமேனிகளைப் படமெடுப்பதும் பகிர்வதும் தற்காலச் சூழலில் தவிர்க்கவே இயலாதவொன்றாகி விட்ட காரணத்தால் அதனால் பாதகமொன்றும் இல்லை, மூல மூர்த்தியின் ஓவியத்தைக் கூட பகிரலாம் எனினும் மூல மூர்த்தியின் நேரடிப் புகைப்படத்தைப் பகிர்வதை இக்கண முதலே நிறுத்துவோம், 'நானொன்றும் புகைப்படம் எடுக்கவில்லையே, தினமலர் வலைத்தளத்திலுள்ள படங்களைத் தானே பகிர்கின்றேன்' என்போருக்கும் இது பொருந்தும், திருக்கோயில் யாத்திரையையும், இறை தரிசன இன்பத்தையுமே ஆன்ம இலட்சியமாகக் கொண்டுள்ள எண்ணிறந்த அடியவர்களுக்கு இவ்விதமாய் முகநூலில் உலவி வரும் மூலவர் புகைப்படங்களைக் காண்கையில் உள்ளம் துடித்துப் பதறும் என்பது கண்கூடு.

இந்து தர்மத்தின் ஏழு மோட்ச நகரங்கள்:

ஒப்புவமையற்ற நமது இந்து தர்ம சாத்திரங்கள் சப்தபுரி எனும் ஏழு புராதனமான ஷேத்திரங்களை முத்தித் தலங்கள் என்று போற்றுகின்றது, அவை ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி அவதரித்த அயோத்தி, ஸ்ரீகிருஷ்ணன் அவதரித்த மதுரா, மாயாபுரி எனும் ஹரித்வார், காசி எனும் வாரணாசி, தமிழகப் பகுதியிலுள்ள காஞ்சீபுரம், அவந்திபுரம் எனும் உஜ்ஜையினி, ஸ்ரீகிருஷ்ணன் அரசாட்சி புரிந்து வந்த துவாரகை. இந்து தர்மத்தினை இன்னுயிரெனப் பின்பற்றுவோர் இவ்வேழு தலங்களுக்கும் யாத்திரை மேற்கொள்வதைத் தம்முடைய வாழ்நாள் இலட்சியமாகக் கொண்டிருப்பர் (சிவ சிவ)!!!

சாதியும் மதமும் சமயமும் பொய்யென ஆதியில் உணர்த்திய அருட்பெருஞ்ஜோதி (மதங்கள் பொய்யா ? சில நுட்பமான விளக்கங்கள்):

வள்ளலார் திருவருட்பாவில் 'மதமும் சமயமும் பொய்' என்று அருட்பெரும்ஜோதி ஆண்டவரான சிவபெருமான் தனக்கு உணர்த்தியதாகப் பதிவு செய்கின்றார், 'தெய்வ மணி மாலை' எனும் பாடல் தொகுப்பிலும் 'மதமான பேய் பிடியாது இருக்கவேண்டும்' என்று கந்தக் கோட்ட முருகப் பெருமானிடம் வேண்டுகின்றார். மிகவும் நுட்பமாக விளங்கிக் கொள்ள வேண்டிய வாக்கியமிது. 'மதம்' எனும் பதத்திற்கு என்ன பொருள் கொள்வது? மனிதனை உயர் நிலை ஞானத்துக்கு இட்டுச் செல்லவும், இறைவனை அடைவிக்கவுமாய் வழிவழியாய் நம் சமயச் சான்றோர் பின்பற்றியும் வழிமொழிந்தும் வந்துள்ள கொள்கைகள் மற்றும் கோட்பாடுகளையே மதம் என்று பொதுவில் குறிக்கின்றோம்.

வள்ளலாரின் கோட்பாடுகளும் இதே நோக்கங்களையே முன்வைக்கின்றது அவ்விதமிருக்க 'மதம் பொய்' என்று வள்ளலார் குறிப்பதன் உட்கருத்து தான் என்ன? மதம் என்ற பதத்துக்குச் 'செருக்கு' என்றொரு பொருளுமுண்டு, அதீதமான; மித மிஞ்சிய நிலையையும் அது சுட்டுகின்றது, இனி மதங்களின் பெயரால் நடந்தேறும் முறைகேடுகளைக் காண்போம்.

பல தெய்வ வடிவங்களின் வழிபாடு நிலவி வரும் ஒரு மதத்தில், ஒவ்வொரு வடிவத்தின் உபாசகரும் பிற தெய்வ வடிவங்களைக் கடுமையாக நிந்திப்பது; மதம் அறிவுறுத்தும் தர்மங்களைப் பின்பற்றுவதை விடுத்து எந்நேரமும் சமய வாதங்களைப் புரிந்து கொண்டிருப்பது; அம்மதத்தின் மற்ற பிரிவினரைக் கடுமையாக விமரிசிப்பது அல்லது இகழ்வது;

மற்றொரு புறம் பிற மதங்களின் தெய்வங்களை மிகவும் தரக் குறைவாகப் பேசியும், கோடிக்கணக்கில் பணத்தை வாரியிரைத்தும் மதமாற்றத்தில் ஈடுபடுவது; பிற மதங்களின் தத்துவங்களைத் தாங்களே உருவாக்கியது போல் போலியாகச் சித்தரித்துப் பிரச்சாரம் செய்வது; சேவை நிறுவனங்கள் எனும் போர்வையில் பற்பல மருத்துவ மனைகளை உருவாக்கி முழுநேர மதமாற்றத்தில் ஈடுபடுவது; வீடு வீடாகச் சென்று பிற மதத் தெய்வங்கள் சாத்தான்கள் என்று பிதற்றித் திரிவது; தங்கள் கடவுள் மட்டுமே சுவர்க்கம் அளிப்பவர்; மற்ற மதத்தினர் நரகம் செல்வர் என்று மனநோய் கொண்டு பேசித் திரிவது; பிற மத தெய்வங்களைப் போலவே தங்கள் தெய்வத்தையும் வடிவமைத்துக் குழப்பிப் பின் மதமாற்றுவது; அரசியல் பலம் மூலம் வற்புறுத்தி மதமாற்றுவது;

பிற மதத்து ஆண் மற்றும் பெண்களைக் காதல் எனும் வலையில் சிக்க வைத்துப் பின் மதமாற்றுவது; மற்ற மதத்தினரைக் கொல்வதே இறைவனுக்குப் புரியும் பெரும் தொண்டு என்று வரைமுறையற்ற வன்முறையில் ஈடுபடுவது; பிற மதச் சின்னங்களை அடியோடு அழிப்பது; பிற மத வழிபாட்டுத் தளங்களைத் தகர்ப்பது; பாலியல் பலாத்காரங்கள் மற்றும் கொலை மிரட்டல் மூலம் மதமாற்றம் புரிவது;

மேற்கூறப்பட்ட செயல்களனைத்தும், மதம் என்ற எல்லையைத் தாண்டி மித மிஞ்சிய நிலையில் புரியப்படும் சகிக்க முடியாத முறைகேடுகள் ஆகும். பிற உயிர்களுக்குச் சிறிதும் தீங்கிழைக்காமல் ஞானப் பாதையில் பயணிப்பதே மதத்தைப் பின்பற்றுபவரின் மேலான நோக்கமாக இருத்தல் வேண்டும்.

அகிம்சையை முன்னிருத்தும், சரியான கோட்பாடுகளோடு கூடிய ஒரு மதம் சர்வ நிச்சயமாய் மனித இனத்தை உயர் நிலைக்கு இட்டுச் செல்லும். பரம புண்ணியமான நம் பாரத தேசத்தில் எண்ணிறந்த அருளாளர்களும்; ஞானிகளும்; ஆச்சாரியர்களும் உத்தமமான நமது இந்து தர்மத்தினைப் பின்பற்றியே பிறவாப் பெருநிலையினை எய்தியுள்ளனர். வள்ளலார் மதங்களைக் கண்டிக்கவில்லை, மதங்களின் பெயரால் நடந்தேறும் இத்தகு முறைகேடுகளையே 'பொய்' என்று நிந்திக்கின்றார் (சிவ சிவ)!!!

வியாசர் எத்தனை வியாசரோ?

'வியாசம்' என்ற பதத்துக்கு 'பிரித்தல்' அல்லது 'பகுத்தல்' என்பது பொருள். 'வியாசர்' என்பது பதவியைக் குறிக்க வந்த பதம், வியாசம் செய்பவர் 'வியாசர்'.

சதுர்யுகம் என்று குறிக்கப் பெறும் கிருத, திரேதா, துவாபர, கலி யுகங்களில், துவாபர யுகம் வரையிலும் வேதங்கள் பிரிவுகள் ஏதுமின்றி ஒரே தொகுப்பாக விளங்கும். ஒவ்வொரு துவாபர யுகத்திலும் ஒரு மாமுனிவர் தோன்றி வேதங்களை 'ரிக், யஜூர், சாம, அதர்வனம்' எனும் நான்காக பகுத்தளிப்பார், அந்த தவசீலரே 'வியாசர்' என்று போற்றப் பெறுகின்றார்.

71 சதுர்யுகங்களைக் கொண்டது ஒரு மன்வந்திரம். தற்பொழுது நடந்தேறி வருவது வைவஸ்வத மன்வந்திரத்தின் 28ஆம் சதுர்யுகமாகும், 28 மாமுனிவர்கள் இது வரை 'வியாச' பதவியை வகித்து வந்துள்ளனர், இவர்களின் பெயர்களையும் வரலாற்றையும் ஸ்ரீவிஷ்ணு புராணம் பட்டியலிடுகின்றது. இந்த சதுர்யுகத்தில் பராசர முனிவரின் புதல்வரான 'கிருஷ்ணத் துவைபாயனர்' என்பார் 'வேத வியாசர்' என்று போற்றப் பெறுகின்றார்.

18 புராணங்கள்; எண்ணிறந்த உப புராணங்கள்; மகாபாரதம்; பிரம்ம சூத்திரம் ஆகியவைகளை வடமொழியில் அருளியுள்ளார் வேத வியாசர்.

காவடி என்றால் என்ன? (திருமுருக வாரியார் சுவாமிகளின் 'குமுதம் வினா விடை' தொகுப்பிலிருந்து)

(கேள்வி): காவடி என்றால் என்ன? அதன் உட்கருத்து யாது?

(பதில்): சூரபத்மனுடைய ஆசிரியன் இடும்பன், அவன் அகஸ்தியருடைய ஏவலின்படி கயிலாயத்திலிருந்து சிவமலை, சக்தி மலை என்ற இரு மலைகளையும் காவடியாகக் கட்டிக் கொண்டு வந்தான். அதுமுதல் காவடி வழிபாடு ஏற்பட்டது. பாரமான பொருளை இரண்டாகப் பிளந்து தோளில் சுமந்து வருவதற்குக் காவடி என்று பொருள். பாவச் சுமைகளை ஆண்டவன் திருவடியில் அர்ப்பணித்து விடுவதே இதன் உட்பொருள்.

(குமுதம் வினா விடை (பக்கம் 139), குகஸ்ரீ வாரியார் பதிப்பகம்):

இந்து மதத்தை எதிர்ப்பவர்கள் பற்றி? (திருமுருக வாரியார் சுவாமிகளின் 'குமுதம் வினா விடை' தொகுப்பிலிருந்து):

(கேள்வி): இந்து மதத்தையும் இந்து மதக் கடவுள்களையும் தாறுமாறாகத் தாக்கும் கும்பல்களை எதிர்த்துத் தாங்கள் போராட்டம் நடத்தினால் என்ன?

(பதில்): நமது அநாதியான இந்து மதத்தையும் தெய்வங்களையும் அறியாமையால் எதிர்ப்பவர்களுக்கு என் எழுத்தாலும், உரையாலும் விடை கூறி வருகிறேன். நமது சமயத்திற்கு ஒரு போதும் ஆபத்து வராது, சூரியனைக் கருமேகம் மறைப்பது போல் என உணர்க!!!

(குமுதம் வினா விடை (பக்கம் 53), குகஸ்ரீ வாரியார் பதிப்பகம்):

இராமாயணமும் மகாபாரதமும் உண்மையா? (திருமுருக வாரியார் சுவாமிகளின் 'குமுதம் வினா விடை தொகுப்பிலிருந்து'):

(கேள்வி): திருவனந்தபுரத்தில் ஒரு சொற்பொழிவாளர் இராமாயணமும் பாரதமும் நடந்த கதைகள் அல்ல, வியாசருக்கும் வால்மீகிக்கும் மானசீகமாக நடந்தவைகள் தான். இப்படி இராமரும், கிருஷ்ணரும் மனிதர்களாக இந்த உலகத்தில் பிறந்ததாகச் சொல்லும் எல்லாரும் ஊரை ஏமாற்றுகிறார்கள்' என்று சொல்கின்றார். இதைப் பற்றித் தங்கள் கருத்து என்ன?

(பதில்): இராமாயணமும் மகாபாரதமும் உண்மையில் நடந்த வரலாறுகள் தான். இராமாயண வரலாற்றை புறநானூறு அகநானூறு பரிபாடல் முதலிய சங்க நூல்கள் கூறுகின்றன.
-
தேவாரம், திருவாசகம், திருப்புகழ், நாலாயிரப் பிரபந்தம் முதலிய அருள் நூல்கள் கூறுகின்றன.

"அடுத்தானை உரித்தானை அர்ச்சுனர்க்குப் பாசுபதம் கொடுத்தானை" - தேவாரம்

திருக்குரான் பொய் கூறுகின்றது என்று ஒரு முஸ்லீம் அன்பர் கூறுவாரா? பைபிள் பொய் கூறுகின்றது என்று ஒரு கிறித்துவர் கூறுவாரா? கூறமாட்டார் அல்லவா?

ஆகவே, இறைவனை நேரில் கண்ட பரம ஞானிகள் திருவாய் மலர்ந்த தேவாரம், திருப்புகழ், பிரபந்தங்களில் பேசப்படுகின்ற இராமாயணமும், பாரதமும் கட்டுக் கதையென்று கூறுவது 'என் தாய் விபச்சாரி' என்று கூறுவதோடு ஒக்கும்.

(பக்கம் 137, குமுதம் வினா விடை, குகஸ்ரீ வாரியார் பதிப்பகம்):

இந்து தர்மத்தின் வேதங்கள் நான்கா மூன்றா ? (திருமுருக வாரியார் சுவாமிகளின் விளக்கம்):

வேதம் விழுமியது; வித் என்றால் அறிவு, வேதம் அறிவுநூல் எனப்படும். "அறிவுநூல் கல்லா மூடர்" என்பார் அருணகிரிநாதர். அவ்வேதம் நான்கு எனப்படும். அவற்றுள் நான்காவது அதர்வணம் மற்ற மூன்றின் திரட்டு. ஆதலின், இருக்கு (ரிக்), யசுர் (யஜுர்), சாமம் என்னும் மூன்றுமே சிறந்தவை. அதனால், வேதம் 'த்ரயீ' என்று பேசப் பெறுகின்றது.

வேதம் மூன்றனுள் இடையில் உள்ளது யஜுர் வேதம். அது ஏழு காண்டங்களை உடையது. அதன் இடையில் உள்ள காண்டத்துள் 11 அணுவாகங்களை உடையது திருஉருத்திரம் (ஸ்ரீருத்ரம்). இதன் இடையில் ஸ்ரீபஞ்சாட்சரமும்  (நமசிவாய) அதன் இடையில் 'சி'காரமும் விளங்குகின்றது. வேத இதயம் சிவபஞ்சாட்சரமாகும். வேதத்தின் கண் திருஉருத்திரம். கண்மணி திருஐந்தெழுத்து என்ப.

(ஆதார நூல், பெரிய புராணம், குகஸ்ரீ வாரியார் பதிப்பகம், உருத்திர பசுபதி நாயனார் புராணம், பக்கம் 255)

இராமச்சந்திர மூர்த்தி தென்னாட்டு தெய்வமா வடநாட்டு தெய்வமா? கவிச் சக்கரவர்த்தியின் விடை:

மரண வேதனையிலிருக்கும் வாலி தன் மார்பினைத் துளைத்து நிற்கும் அம்பில் 'இராம' எனும் திருநாமம் பொறித்திருத்தலைக் காண்கின்றான், இதனைக் கவிச் சக்கரவர்த்தி கம்பர் பின்வரும் அற்புதத் திருப்பாடலால் காட்சிப்படுத்துகின்றார்.

கம்ப இராமாயணம்: வாலி வதைப் படலம்:
மும்மை சால் உலகுக்கு எல்லாம் மூல மந்திரத்தை, முற்றும்
தம்மையே தமர்க்கு நல்கும் தனிப் பெரும் பதத்தை, தானே
இம்மையே எழுமை நோய்க்கும் மருந்தினை, இராமன் என்னும்
செம்மை சேர் நாமம் தன்னை, கண்களின் தெரியக் கண்டான்.

பாரத தேசத்திற்குள்ளாகவே வடநாட்டு தெய்வம்; தென்னாட்டு தெய்வம் என்று பிரிவினை வெறி கொண்டு பிதற்றித் திரிவோருக்குப் பதில் கூறுமாற் போலே இத்திருப்பாடல் அமைந்துள்ளது. 'மும்மை' எனும் பதம் 'பூமி; பூமிக்கு மேலுள்ள 6 உலகங்கள்; பூமிக்கு கீழேயுள்ள அதல விதல...பாதாளம் வரையிலான 7 உலகங்கள்' இவையாவையுமே ஒருசேரக் குறிக்க வந்தது. ஆதலின் ஈரேழு பதினான்கு புவனங்களுக்கும் 'இராம' என்பது ஒப்புவமையற்ற மூல மந்திரமாகத் திகழ்கின்றது என்று போற்றித் துதிக்கின்றார் கவிச் சக்கரவர்த்தி (சிவ சிவ!!!).

5100 வருடங்கள் பழமையான தமிழ்ப் பாசுரங்களில் ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி:

துவாபர யுகம் முடிவுற்றுக் கலியுகம் துவங்கி தற்பொழுது சுமார் 5100 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது என்பது அனைவரும் அறிந்ததே. கலி துவங்கி சரியாக 60 நாட்களுக்குள் அவதரித்த அருளாளர் 'சடகோபர்' எனும் நம்மாழ்வார். அவதாரத் தலம் 'தூத்துக்குடி மாவட்டத்திலிலுள்ள ஆழ்வார் திருநகரி எனும் திருக்குருகூர்'. பன்னிரு ஆழவார்களுள் முதன்மையானவராகப் போற்றப் பெறுபவர். ஒப்புவமையற்ற நமது இந்து தர்மத்தின் 'ரிக்; யஜுர்; சாம; அதர்வண' வேதங்களின் சாரங்களைத் தமிழ்ப் பாக்களாக்கித் தருவதே இப்புண்ணிய சீலரின் அவதார நோக்கம். 'வேதம் தமிழ்செய்ய வந்த மாறன்' என்றிவரைக் கொண்டாடுவர். இப்பெருமகனார் 'திருவிருத்தம், திருவாசிரியம், திருவாய்மொழி, பெரிய திருவந்தாதி' ஆகிய நான்கு அற்புதப் பிரபந்தத் தொகுப்புகளை அருளியுள்ளார்.

இனி நம்மாழ்வாரின் திருவாய்மொழிப் பாசுரம் ஒன்றினைக் காண்போம், 'கற்க வேண்டியது ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியின் திவ்யமான சரிதங்களையே அன்றி வேறெதுவுமில்லை' என்று பின்வரும் திருப்பாடலில் போற்றுகின்றார்.

கற்பார் இராமபிரானை அல்லால் மற்றும் கற்பரோ?,
புற்பா முதலாப் புல்லெறும்பாதி ஒன்றின்றியே,
நற்பால் அயோத்தியில் வாழும் சராசரம் முற்றவும்,
நற்பாலுக்கு உய்த்தனன் நான்முகனார் பெற்ற நாட்டுளே!!!

ஸ்ரீராமர் பாலம் உண்மையிலேயே கடலில் உருவாக்கப் பெற்றதா?

அருணகிரிப் பெருமான் 'துடிகொள் நோய்களோடு வற்றி' என்று துவங்கும் பழமுதிர்ச்சோலை திருப்புகழில் 'ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி திருஇராமேஸ்வரத் தலத்திலுள்ள கடற்பரப்பில் பெரும் மலைக் கற்களாலான பாலமொன்றினை அமைத்துச் சென்று, இலங்கையினை அடைந்துக் கொடியவனான இராவணனைக் கொன்று வெற்றி வாகை சூடிய நிகழ்வினைப் பின்வரும் வரிகளில் பதிவு செய்கின்றார்,
-
கடிதுலாவு வாயு பெற்ற
     மகனும் வாலி சேயு மிக்க
          மலைகள் போட ஆழி கட்டி இகலூர்போய்க்
-
களமுறானை தேர் நுறுக்கி
     தலைகளாறு நாலு பெற்ற
          அவனை வாளியாலடத்தன் மருகோனே

மற்றுமொரு அகச்சான்றினையும் காண்போம், சிவபரம்பொருளின் திருவாக்காலேயே 'நாவுக்கரசர்' எனும் அற்புதத் திருநாமம் பெற்றுள்ள நம் அப்பர் சுவாமிகளும் இதே நிகழ்வினைத் தம்முடைய திருஇராமேஸ்வரம் தேவாரத் திருப்பதிகத்தின் பின்வரும் வரிகளால் ஆவணப்படுத்துகின்றார்.
-
கடலிடை மலைகள் தம்மால் அடைத்துமால் கரும முற்றித்
திடலிடைச் செய்த கோயில் திருஇராமேச்சுரத்தைத்
தொடலிடை வைத்து நாவிற் சுழல்கின்றேன் தூய்மையின்றி
உடலிடை நின்றும் பேரா ஐவர்ஆட்டுண்டு நானே!!!

ஈனமிலாப் புகழ் அண்ணல் செய்த இராமேச்சுரம் (திருஞானசம்பந்தர் சான்றுரைக்கும் இராமயண நிகழ்வுகள்):

(திருஇராமேச்சுரம் தேவாரம்: திருப்பாடல் 3):
மானன நோக்கியை தேவிதன்னையொரு மாயையால்
கானதில் வவ்விய காரரக்கன் உயிர் செற்றவன்
ஈனமிலாப் புகழண்ணல் செய்த இராமேச்சுரம்
ஞானமும் நன்பொருளாகி நின்றதொரு நன்மையே.
-
(பொருள்):
அன்னை சீதா தேவியை மாயையால் கானகத்திலிருந்து முறைகேடாகக் கவர்ந்து சென்ற அரக்கனான இராவணனின் உயிரைப் போக்கிய, குற்றம் சிறிதுமில்லாப் புகழினைக் கொண்ட அண்ணலான ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி செய்வித்த திருஇராமேச்சுர லிங்க மூர்த்தியைப் போற்றுபவர்க்கு சிவஞானமும் அதன் பயனான முத்தியின்பமும் கிட்டும்.

(திருஇராமேச்சுரம் தேவாரம்: திருப்பாடல் 4):
உரையுணராதவன் காமமென்னும் உறுவேட்கையான்
வரைபொரு தோளிறச் செற்றவில்லி மகிழ்ந்தேத்திய
விரைமருவும் கடலோத மல்கு இராமேச்சுரத்து
அரைஅரவாட நின்றாடல் பேணும் அமம்மான்நல்லனே!!!
-
(சுருக்கமான பொருள்):
'காமமென்னும் உருவேட்கையான்' எனும் முதல் வரிமூலம் 'இராவணன் அன்னை சீதையை கடத்திச் சென்றது 'முறையற்ற காமத்தின் பொருட்டே' என்று சம்பந்தப் பெருமான் ஐயத்திற்கு இடமின்றிச் சான்றுரைக்கின்றார். 2ஆம் வரியில் 'இராவணனுடைய மலை போன்ற தோள்களைத் தன்னுடைய வில்லினால் அற்று விழுமாறு அழித்தொழித்த ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி மகிழ்ந்தேத்திய இராமேச்சுரம்' என்று போற்றுகின்றார்.

இராவணனுக்கு கும்பகர்ணன் கூறிய அறிவுரை (பேசுவது மானம் இடைபேணுவது காமம்):

கும்பகர்ணன் தமையனான இராவணனுக்கு நன்னெறியினை பலவாறு எடுத்துரைக்கின்றான், அன்னை சீதையை நயவஞ்சகமாக அபகரித்து வந்தது மறை நெறிகளுக்குப் புறம்பானது என்று இடித்துரைக்கின்றான். "சிட்டர் செயல் செய்திலை; குலச் சிறுமை செய்தாய்" என்று இகழ்கின்றான். அனைத்துவித மரியாதைகளோடு அன்னை ஜானகியை ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியிடம் சேர்ப்பித்து மன்னிப்பு வேண்டுவதொன்றே உய்யும் வழி என்று பகர்கின்றான். எனினும் அகந்தையின் உச்சத்திலிருந்த இராவணனோ இவையெதற்குமே செவிசாய்க்கவில்லை. இனி இக்காட்சி தொடர்பான கம்ப இராமாயணப் பாடலொன்றினையும் காண்போம்,
யுத்த காண்டம் - இராவணன் மந்திரப் படலம்:
ஆசில் பரதாரம் அவை அஞ்சிறை அடைப்போம்
மாசில் புகழ் காதல் உறுவோம்; வளமை கூறப்
பேசுவது மானம்; இடை பேணுவது காமம்;
கூசுவது மானுடரை; நன்று நம் கொற்றம்!!!

பொருள்:
தமையனே, ஒருபுறம் 'குற்றம் ஒரு சிறிதுமில்லாப் பிறிதொருவரின் தாரத்தின் மேல்' முறையற்ற மோகம் கொண்டு அம்மாதினைக் கடத்தி வந்து சிறை வைக்கின்றோம்! மற்றொரு புறமோ 'குற்றமில்லாத புகழ்' வந்தெய்த வேண்டும் என்றும் விரும்புகின்றோம். இது விந்தையன்றோ! நம் வார்த்தைகளில் தெரிவதோ வீரமும் மானமும், ஆனால் நம் செயல்களிலோ முறையற்ற காமமும் ஈனத்தன்மையுமே வெளிப்படுகின்றது. இவ்விதமான பழிச் செயல்களால் 'மானிடர்களுக்கு அஞ்சி வாழும் சிறுமை நிலையும்' நமக்கின்று எய்தியுள்ளது, நன்றாக இருக்கின்றது நமது அரசாட்சியும் கொற்றமும்!

இராவணன் அரக்கனா இல்லையா? தர்க்க ரீதியான ஆதாரபூர்வ விளக்கங்கள்:

இப்பதிவினைப் படிக்குமுன் ஒரு சிறு கேள்வி? நீங்கள் இறை மறுப்பாளரா? ஆம் எனில் இப்பதிவு உங்களுக்கானது அல்ல! தயவு கூர்ந்து தாம் சென்று வரலாம்!
திரேதாயுகத்தில், வடமொழியில் இராமாயணம் இயற்றியுள்ள வால்மீகி முனிவரை நாங்கள் ஒப்புக் கொள்ள மாட்டோம்; கலியுகக் காலகட்டத்தில், 12ஆம் நூற்றாண்டில், தீந்தமிழில் இராமாயணம் புனைந்துள்ள கவிச்சக்கரவர்த்தி கம்பரையும் நாங்கள் முற்றிலும் மறுதலிப்போம்; இவர்கள் இருவருமே இராவணனை அரக்கனென்றுத் தவறாகச் சித்தரித்து விட்டனர் என்று வானத்திற்கும் பூமிக்கும் குதிப்பவரா நீங்கள்? வாருங்கள் பதிவிற்குள் செல்வோம்! நீங்கள் சைவ சமயம் சார்ந்தவரா? ஆம் எனில் நிச்சயம் திருஞானசம்பந்தர்; திருநாவுக்கரசர்; சுந்தரர் ஆகிய குருநாதர்களின் திருவாக்கில் உங்களுக்குப் பரிபூரணமாய் நம்பிக்கையுண்டு தானே? சரி இனி திருநாவுக்கரசு சுவாமிகளின் இராமேஸ்வர தேவாரத் திருப்பாடலொன்றினைக் காண்போம், - வீரமிக்கெயிறு காட்டி விண்ணுற நீண்ட அரக்கன் கூரமிக்கவனைச் சென்று கொன்றுடன் கடற்படுத்துத் தீரமிக்கான் இருந்த திருஇராமேச்சுரத்தைக் கோரமிக்கார் தவத்தாற் கூடுவார் குறிப்புளாரே. - (சுருக்கமான பொருள்): 'வீரமிக்கு எயிறு காட்டி (அதாவது கோரைப்பற்கள் வெளியே தெரியும் படி), நெடிதுயர்ந்த உடலினைக் கொண்ட கூரம் மிக்கவனை (கொடுமை மிக்க அரக்கனாகிய இராவணனை), இலங்கைக்குச் சென்று அவனைக் கொன்று மீண்ட தீரம் மிக்கான் (பேராற்றல் பொருந்திய ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி) வழிபட்டு உய்ந்த திருஇராமேச்சுரம்' என்று அப்பர் சுவாமிகள் குறிக்கின்றார். சுந்தர மூர்த்தி சுவாமிகள் திருக்கோளிலி தேவாரத்தில் "அரக்கன் முடிகரங்கள் அடர்த்திட்டஎம் ஆதிப்பிரான்" என்று 'இராவணன் கயிலை மலையையே பெயர்க்க முற்பட்ட பொழுதுச் சிவபரம்பொருள் தன் திருப்பாத விரலொன்றினால் சிறிது அழுத்தி, ஆயிரம் ஆண்டுகள் அவ்விடத்திலேயே சிக்கி அலறுமாறு செய்து, அரக்கனான இராவணனின் ஆணவத்தினை அழித்தொழித்த நிகழ்வினைக் குறிக்கின்றார். திருஞானசம்பந்தர் திருக்குடவாயில் தேவாரத்தில் 'வரையார் திரள்தோள் அரக்கன் மடிய அவ் வரையார ஓர்கால் விரல் வைத்தபிரான்' என்பார். நீங்கள் முருக பக்தரா? வாருங்கள் மற்றொரு சைவ சமய குருநாதரான அருணகிரிப் பெருமான் 'எட்டுக்குடி' திருப்புகழில் என்ன கூறுகின்றார் என்பதையும் காண்போம், - தடையற்ற கணைவிட்டு மணிவஜ்ர முடிபெற்ற தலைபத்துடைய துட்டன் உயிர்போகச் சலசத்து மயிலுற்ற சிறைவிட்டு வருவெற்றி தரு சக்ரதரனுக்கு மருகோனே!!!! - (சுருக்கமான பொருள்): மேற்குறித்துள்ள பாடலில் இராவணனை "தலைப் பத்துடைய துஷ்டன்' என்று கடுமையாக நிந்திக்கின்றார் அருணகிரியார், 'அப்படிப்பட்ட கொடிய அரக்கனான இராவணனைக் கொன்று மீண்ட ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியின் மருமகனே' என்று முருகப் பெருமானைப் போற்றுகின்றார். அநேக அகச்சான்றுகளை இப்பதிவினில் கண்டோம், இறை உணர்வுடையோர் என்று கூறிக்கொண்டும், திருநீறு பூசிக்கொண்டும் ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியினை இகழும் அறியாமையைக் கைவிடுவோம், அவ்விதம் செய்வது மேற்குறித்துள்ள குருநாதர்களை நிந்திக்கும் செயலாகும் (மெய்ப்பொருள் காண்பது அறிவு)!! சிவ சிவ!!!

அருணகிரிநாதர் அடையாளப் படுத்தும் தமிழர் தெய்வங்கள் யார்?

திருவண்ணாமலையில் அருணகிரிப் பெருமான் பனிரெண்டு ஆண்டுகள் கடும் தவம் புரிகின்றார், யோகக் கனல் மூள்கின்றது; குண்டலினி சக்தி மூலாதாரத்திலிருந்து மேலெழும்பிப் பரம்பொருள் சக்கரமான சகஸ்ராரம் சென்றடைகின்றது. கோடிசூர்யப் பிரகாசனாய் தமிழ்க் கடவுளான ஆறுமுக தெய்வம் திருக்காட்சி தந்தருள்கின்றான், அருணகிரிநாதரின் நாவில் தன் திருக்கரத்திலிருக்கும் சிவஞான வேலினால் 'ஓம்' என்று எழுதுகின்றான், 'முத்து முத்தாய்ப் பாடு' என்று அடியெடுத்துக் கொடுக்கின்றான்.
பேரின்பப் பெருநிலையில் அருணகிரியார் 'முத்தைத்தரு பத்தித் திருநகை' எனும் திருப்புகழினைப் பாடத் துவங்குகின்றார். முருகக் கடவுளைப் போற்றும் முதல் திருப்பாடலிலேயே 'ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியையும், மாபாரதக் கண்ணனையும்' சேர்த்தே போற்றியுள்ளார், இதன் மூலம் இவ்விரு மூர்த்திகளும் தமிழர் மரபில் பன்னெடுங்காலமாய்ப் பின்னிப் பிணைந்துள்ள தன்மை புலனாகின்றது. ஸ்ரீராமர் இராவணனை சம்ஹாரம் புரிந்த நிகழ்வினை "பத்துத்தலை தத்தக் கணைதொடு" எனும் வரியினாலும், ஸ்ரீகிருஷ்ணன் அர்ஜுனனின் தேர்ச்சாரதியாக இருந்து, அர்ஜுனன் ஜெயத்ரதனைக் கொல்வதற்கு உதவும் பொருட்டு, தன் சக்கரத்தினால் சூரியனைச் சில நிமிடங்கள் மறையுமாறு செய்தருளிய நிகழ்வினைப் பின்வருமாறும் குறிக்கின்றார்,
-
பத்துத்தலை தத்தக் கணைதொடு
ஒற்றைக்கிரி மத்தைப் பொருதொரு
பட்டப்பகல் வட்டத் திகிரியில் இரவாகப்
-
பத்தற்கிரதத்தைக் கடவிய
பச்சைப்புயல் மெச்சத் தகுபொருள்
பட்சத்தொடு ரட்சித் தருள்வதும் ஒருநாளே
'தமிழர் மரபில் வழிபடு தெய்வங்கள் யார்?' என்பதனை, தமிழ்க் கடவுளாலேயே நேரடியாக அருள் பெற்றுள்ள தவப்பெரும் குன்றான அருணகிரிப் பெருமானின் மூலம் நாம் உறுதி செய்துகொள்ளப் போகின்றோமா? அல்லது இறை வெறுப்பினை உமிழ்ந்துக் கொண்டிருக்கும் இறை மறுப்புக் கழகங்கள் மூலமாகவா? முடிவு நம் கையில் (சிவ சிவ)!!!!

இராமாயணம் பற்றிய வள்ளலாரின் பார்வை (திருஅருட்பா அகச்சான்றுகள்):

வள்ளல் பெருமானார் திருஅருட்பாவில் தில்லையுறைப் பரம்பொருளான ஸ்ரீநடராஜ மூர்த்தியையே அருட்பெருஞ்சோதியெனப் போற்றி எண்ணிறந்த திருப்பாடல்களை அருளியுள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே. எனினும் ஆறு திருமுறைகளாகத் தொகுக்கப் பெற்றிருக்கும் அருட்பாவில், 5ஆம் திருமுறையில் ஸ்ரீராமச்சந்திரப் பிரபுவிற்கென அதி அற்புதமான இரு பாடல் தொகுப்புகளையும் அருளியுள்ளார் என்பது ஒரு அழகிய ஆச்சரியமான குறிப்பு. அமிழ்தினும் இனிய அத்திருப்பாடல்களுள் சிலவற்றை இப்பதிவில் சிந்தித்து மகிழ்வோம்.

இராமநாம சங்கீர்த்தனம்' எனும் பாடல் தொகுப்பு ஒரு திருப்பாடலோடும், 'இராமநாமப் பதிகம்' எனும் தொகுப்பு 10 திருப்பாடல்களோடும் அமையப் பெற்றுள்ளது.

இராமநாம சங்கீர்த்தனம்:
காராய வண்ண மணிவண்ண கண்ண கனசங்கு சக்ரதரநீள்
சீராய தூய மலர்வாய நேய ஸ்ரீராம ராம எனவே
தாராய வாழ்வு தருநெஞ்சு சூழ்க தாமோதராய நமஓம்
நாராயணாய நம வாமனாய நம கேசவாய நமவே!!!

கீழ்க்குறித்துள்ள திருப்பாடலில் ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி இராமேஸ்வரப் பகுதியிலிருந்து நெடுங்கடலில் இலங்கை வரையிலும் மலைக்கற்களால் அணைகட்டிய நிகழ்வினையும், மறம்பழுக்கும் (கொடிய பாவங்களையே செய்து வந்த) இராவணனின் பத்து தலைகளையும் வெட்டி வீழ்த்திய வீரச்செயலையும் போற்றி அந்நிகழ்வுகளுக்குச் சான்றுரைக்கின்றார்.
-
இராமநாமப் பதிகம் - 7ஆம் திருப்பாடல்:
அறம்பழுக்கும் தருவே,என் குருவே, என்றன்
ஆருயிருக்கொரு துணையே, அரசே, பூவை
நிறம்பழுக்க அழகொழுகும் வடிவக் குன்றே,
நெடுங்கடலுக்கு அணையளித்த நிலையே, வெய்ய
மறம்பழுக்கும் இலங்கை இராவணனைப் பண்டோர்
வாளினால் பணிகொண்ட மணியே, வாய்மைத்
திறம்பழுக்கும் ஸ்ரீராம வள்ளலே, நின்
திருவருளே அன்றிமற்றோர் செயலிலேனே.
-
இராமநாமப் பதிகம் - 2ஆம் திருப்பாடல்:
கலைக்கடலே, கருணைநெடும் கடலே, கானம்
கடந்ததடம் கடலே, என் கருத்தே, ஞான
மலைக்கண் எழும் சுடரே,வான் சுடரே, அன்பர்
மனத்தொளிரும் சுயஞ்சுடரே, மணியே, வானோர்
தலைக்கண்உறு மகுட சிகாமணியே, வாய்மைத்
தசரதன்தன் குலமணியே, தமியேன் உள்ள
நிலைக்கண்உறும் ஸ்ரீராம வள்ளலே, என்
நிலைஅறிந்தும் அருளஇன்னும் நினைந்திலாயே

8 1/2 லட்சம் ஆண்டுகள் பழமையான வால்மீகி இராமாயணம்:

நிகழ்வுகள் நடந்தேறும் கால கட்டத்திலேயே தொகுக்கப்பட்டுக் காவியமாக எழுதப் பெறுபவையே 'இதிகாசங்கள்' என்று குறிக்கப் பெறும். அவ்வகையில் வால்மீகி முனிவர் ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி இப்புவியில் அவதரித்திருந்த திரேதா யுக காலக் கட்டத்திலேயே தோன்றியவர், இராம காவியத்தில் இம்முனிவரும் ஒரு கதாபாத்திரமாகவே இருந்து வந்துள்ளார் என்பது தெளிவு. வால்மீகி மாமுனி ஆதி இராமாயணத்தினை இயற்றியருளியது சுமார் 8 1/2 லட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் என்பதனை இச்சமயத்தில் நினைவு கூர்வோம் (தற்பொழுது நடந்தேறி வரும் கலியுகத்திற்கும் 2ஆம் யுகமான திரேதா யுகத்திற்கும் இடையிலுள்ள துவாபர யுகத்தின் காலகட்டம் மட்டுமே 8,64,000 ஆண்டுகள்).

தெய்வத் தமிழ் மொழியும் தசரத மைந்தனும் (வியப்பூட்டும் கம்ப இராமாயணக் குறிப்புகள்):

கைகேயி அன்னையின் வாக்கினைத் தசரதனின் ஆணையென ஏற்கும் கோசலை மைந்தன் 'தந்தை சொல்மிக்க மந்திரமில்லை' என்று அக்கணமே கானகம் செல்ல முனைகின்றான். எனினும் இலக்குவனோ தமையனுக்கு இழைக்கப்பட்டுள்ள அநீதி கண்டு வெகுண்டு யாவரையும் அழித்தொழிக்கும் எண்ணத்துடன் வில்லினில் நாணொலி எழுப்புகின்றான், அண்டங்கள் யாவும் நடுநடுங்குகின்றன. அச்சமயத்தில் இராகவன் பல்வேறு அறவுரைகளால் இலக்குவனை அமைதியுறச் செய்வதாகக் கம்ப இராமயணம் பதிவு செய்கின்றது, இனி இது குறித்த திருப்பாடலொன்றினை இப்பதிவில் சிந்தித்து மகிழ்வோம்,

(அயோத்தியா காண்டம் - நகர் நீங்கு படலம்):
நன்சொற்கள் தந்து ஆண்டு, எனை நாளும் வளர்ந்த தாதை
தன் சொல் கடந்து, எற்கு அரசு ஆள்வது தக்கது அன்றால்;
என் சொல் கடந்தால், உனக்கு யாது உளது ஈனம்?' என்றான் -
தென்சொல் கடந்தான், வடசொல்-கலைக்கு எல்லை தேர்ந்தான்!!!

(சுருக்கமான பொருள்):
இலட்சுமணா, இனிய சொற்களை மட்டுமே சொல்லி இதுநாள் வரையிலும் நமை வளர்த்த தந்தையின் வாக்கினை மீறி அரசாள முனைவது எந்தவொரு கோணத்திலும் அறமாகாது! எம்மை 'தாய், தந்தை, தலைவன், இறைவன்' என்று அனைத்துமாகவும் ஏற்றுள்ளதாகப் பலமுறை கூறுவாயே, அவையாவும் உண்மையெனில் இப்பொழுது எம்முடைய சொற்களை மீறி நீ அடைந்து விடக்கூடிய பயன் தான் என்ன? என்று அறவுரை பகர்கின்றான் இராமன்.

திருப்பாடலின் இறுதி வரியில் 'வடமொழி; தென்மொழியாகிய தமிழ்' ஆகிய இரண்டிலும் பெரும் புலமை பெற்றிருந்தான் ஸ்ரீராமன் என்று குறிக்க வரும் கம்பர், வடமொழியில் கூட எல்லை வரையில் மட்டுமே புலமை பெற்றிருந்தான் என்று கூறிப் பின் தென்மொழியாகிய தெய்வத் தமிழ் மொழியில் 'எல்லையையும் கடந்த புலமை பெற்றிருந்தான்' என்பதனைத் 'தென்சொல் கடந்தான்' எனும் சொற்களால் பதிவு செய்கின்றார்.

சாதிப் பாகுபாடுகளற்ற சமுதாயத்தை முன்மொழியும் இராம காவியம் (ஆதாரபூர்வ விளக்கங்கள்):

ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி, வேடர் இனத்தவரான குகனையும் சகோதரனாக ஏற்றார், வானர இனத்தவரான சுக்ரீவனையும் தம்பியாக ஆட்கொண்டார், அது மட்டுமா! உயிர்க்குயிரான மிதிலைச் செல்வியைப் பேடித்தனமான முறையில் கடத்திச் சென்ற கயவனான இராவணனின் தம்பி விபீஷணன் அடைக்கலம் நாடி வருகையில், அசுர குலத்தவனான அவனையும் அரவணைத்து உடன் பிறந்தோனாக ஏற்று அருள் புரிந்தார். இனி இது தொடர்பான கம்பராமாயணத் திருப்பாடல் ஒன்றினையும் சிந்தித்து மகிழ்வோம்,

யுத்தகாண்டம்: வீடணன் அடைக்கலப் படலம்:
குகனொடும் ஐவர் ஆனோம் முன்பு; பின் குன்று சூழ்வான்
மகனொடும் அறுவர் ஆனோம்; எம்முழை அன்பின் வந்த
அகனமர் காதல் ஐய! நின்னொடும் எழுவர் ஆனோம்;
புகலருங்கானம் தந்து புதல்வரால் பொலிந்தான் நுந்தை
-
சுருக்கமான பொருள்:
முதலில் நான்கு சோதரர்களாக இருந்தோம், பின் கங்கைக் கரையில் வாழும் குகனுடன் ஐவரானோம்; பின்னர் குன்றுகளின் தலைவனான சுக்ரீவனுடன் சேர்ந்து அறுவரானோம்; அகத்தில் மிக்க அன்புடன் இன்றெமை நாடி இவ்விடம் வந்துள்ள விபீஷணா, இப்பொழுது உன்னுடன் சேர்த்து எழுவரானோம். எமக்கு கானகம் தந்த காரணத்தாலன்றோ உனது தந்தை தசரதன் இன்று மேலும் மூன்று திருக்குமாரர்கள் வாய்க்கப் பெற்றுச் சிறப்புற்றார் (குறிப்பு: எமது தந்தை என்று கூறாது உனது தந்தை (நுந்தை) என்று கூறும் சொல்லாட்சி உள்ளத்தினை நெகிழ்விப்பது).

இராமன் என்பது நேர்மையைக் குறிப்பது, இராமன் என்பது ஒருசிறிதும் மாறுபடாத ஒழுக்கத்தைக் குறிப்பது, இராமன் என்பது சாதி; இன பாகுபாடுகளற்ற நற்சமூகத்தினைக் குறிப்பது; இராமன் என்பது குற்றமில்லா  வீரத்தைக் குறிப்பது! ஸ்ரீராமஜயம்!