சபரிமலை ஜோதி தானாகத் தோன்றுவதா அல்லது ஏற்றப்படுவதா ? (சில விளக்கங்கள்):

எண்ணற்ற யுகங்களாக நமது இந்து தர்மம் தனித்தன்மையுடன் நிலைபெற்றுப் பிரகாசித்து வருவது அதன் உன்னதமான கோட்பாடுகளாலும், தெளிவான சித்தாந்தங்களினாலும் மட்டுமேயன்றி எவ்வித அதிசய நிகழ்வுகளாலும் அற்புதங்களாலும் அல்ல எனும் தெளிவான புரிதலோடு இப்பதிவினை அணுகுதல் வேண்டும். 3 ஆண்டுகளுக்கு ஒரு முறையும், 12 ஆண்டுகளுக்கு ஒரு முறையும் நடந்தேறும் அர்த்த, மகா கும்பமேளா விழாக்களில் கோடிக் கணக்கான இந்துக்கள் பங்கேற்றுப் புண்ணிய நீராடி வருவது கண்கூடு.

2013ல் திரிவேணி சங்கமத்தில் நடந்தேறிய கும்பமேளாவில் கலந்து கொண்ட இந்துக்களின் எண்ணிக்கை மட்டுமே சுமார் 10 கோடி. இவை தவிர ஆண்டு தோறும் நடந்தேறும் மாசி மக உற்சவம்; 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடந்தேறும் மகாமகப் பெருவிழா; பூரியில் நடந்தேறும் ரத யாத்திரை ஆகிய நிகழ்வுகளில் எண்ணிலடங்கா பக்தர்கள் பெரும் ஆர்வத்துடனும், உறுதி மாறாத பக்தியுடனும் கலந்து கொண்டு வழிபடுகின்றனர். இந்த உற்சவங்கள் யாவுமே மிகவும் இயல்பானவை, எவ்வித அதிசயங்களையும் உள்ளடக்கியவையன்று.

மகர சங்கராந்தி தினமன்று வானில் தோன்றும் திருநட்சத்திரமே 'மகர ஜோதி' என்று குறிக்கப் பெறும். அதே சமயத்தில் 'பொன்னம்பல மேட்டில்' நிகழ்ந்தேறும் தீபாராதனையே 'ஜோதி தரிசனம்' என்றும் 'மகர விளக்கு' என்றும் தொன்றுதொட்டு நிலவி வருகின்றது. அடியவர்கள் கடும் நியமத்துடன் சபரி மலைக்கு யாத்திரை மேற்கொள்வது அம்மலையில் கிடைக்கப் பெறும் தெய்வீக அனுபவத்திற்காகவும், ஐயனின் பரமானந்த தரிசனத்துக்காகவுமே அன்றி வேறெந்த அற்புத நிகழ்வுகளுக்காகவும் அன்று.
இந்துக்கள் ஆழ்ந்த சமயப் புரிதல் கொண்டு விளங்குபவர்கள். திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவில், கண்ணெதிரிலேயே ஏற்றப்படும் திருஅண்ணாமலையார் தீபச் சுடரைத் தரிசிக்க சுமார் 30 லட்சம் பக்தர்கள் கூடுகின்றனரே, இதை விடவும் வேறென்ன சான்று கூறி விட இயலும்? தானாகத் தோன்றும் தீபச்சுடரில் தெய்வத் தன்மை மிகுந்திருக்கும் என்றோ அடியவர்களால் ஒளியேற்றப்படும் ஜோதியில் சானித்யம் குறைவு என்றோ ஐயனின் அடியவர்கள் கனவிலும் கருதுவதில்லை.

ஒரு சாதாரண கல்லினை வேத மந்திரங்களாலும் இன்ன பிற குடமுழுக்குச் சடங்குகளாலும் கடவுளாக மாற்றும் வல்லமையை இறைவன் நமது இந்து தர்மத்துக்கு அருளியிருப்பது நிதர்சனமன்றோ! மகர ஜோதி அற்புதங்களில் ஒன்று என்றோ, தானாகத் தோன்றுவது என்றோ எவரொருவரும் எக்காலத்திலும் விளம்பரப்படுத்தியதும் இல்லை, அப்படியெல்லாம் அறிவித்துக் கூட்டம் சேர்க்க வேண்டிய எந்தவொரு அவசியமும் நம் இந்து மதத்திற்கும் இல்லை. 'மகர ஜோதி திருவண்ணாமலை தீபம் போலவே வழிவழியாய் நடைமுறையிலுள்ள ஒரு உத்தமமான மரபு' என்ற அளவில் இதனைப் புரிந்து கொள்வதே செய்யத் தக்கது. 

ஜோதி தரிசனம் காண, கூட்ட நெரிசலையும்; உடல் துன்பத்தையும்; இன்ன பிற இடர்களையும் பொருட்படுத்தாது 'சுவாமியே சரணம் ஐயப்பா' என்று உளமுருகிக் கதறும் லட்சோப லட்சம் அடியவர்களின் பிரார்த்தனைகளும், நியமத்தோடு கூடிய விரதமும் பலிக்குமாறு அந்த அருட்பெரும் ஜோதியில் சபரி ஐயன் ஆவிர்பவித்துப் பேரருள் புரிவான் என்பதே சத்தியம் (சத்ய சுவரூபனே சரணம் ஐயப்பா)!!!

No comments:

Post a Comment