திருச்செந்தூர் முருகன் பிள்ளைத் தமிழில் ஹரிஹர புத்திரரான சாஸ்தா பற்றிய குறிப்புகள்:

பகழிக்கூத்தர் அருளியுள்ள திருச்செந்தூர் பிள்ளைத் தமிழில் மகா சாஸ்தா பற்றிய சுவையான குறிப்புகளை இப்பதிவில் சிந்தித்து மகிழ்வோம்,

பிள்ளைத்தமிழ் இலக்கியத்தில், இயற்றப்பெறும் பாடல்கள் நிறைவுற்று விளங்கவும், பிள்ளைத் தமிழில் போற்றப்பெறும் நாயகன் மேன்மையடையும் பொருட்டும் இறைவனிடம் வேண்டிப் பாடுவதே காப்புப் பருவமாகும். இங்கு பாட்டுடைத் தலைவனோ செந்திலாண்டவன், தனிப்பெரும் தெய்வமான சிவபெருமானின் திருக்குமாரன், இருப்பினும் மரபின் பொருட்டு 'என்றும் இளையோனாகிய கந்தவேளைக் காக்குமாறு' காப்புப் பருவத்தில் பின்வரும் தெய்வங்களிடம் வேண்டுகின்றார் பகழிக் கூத்தர்.
-
1. பாற்கடல் வாசரான ஸ்ரீமகாவிஷ்ணு
2. ஆதிப் பரம்பொருளான சிவபெருமான்
3. அம்பிகை
4. பிரணவ சுவரூபரான விநாயகப் பெருமான்
5. நான்முகக் கடவுளின் தேவியான அன்னை கலைவாணி
6. அரிகர புத்திரரான மகா சாஸ்தா
7. கன்யாகுமரியில் எழுந்தருளியுள்ள பகவதி அம்மை
8. அன்னை ஸ்ரீகாளி
9. ஆதித்தர் (சூரிய தேவனார்)
10. முப்பத்து முக்கோடி தேவர்கள்

இனி காப்புப் பருவத்தில் அரிகர புத்திரரிடம் வேண்டிப் பாடும் திருப்பாடலை உணர்ந்து மகிழ்வோம்,
-
வரியு நீள் சடிலத்திடை மகுட ராசி தரித்தவர்
வளையு  நீடு கருப்புவில் மதுர வாளி தொடுத்தவர்
அரிய பூரணை புட்கலை அரிவைமார் இருபக்கமும்
அழகு கூரும கிழ்ச்சியர் அடிவிடிடாமல் வழுத்துதும்
உரிய நான்மறை நித்தலும் உறுதியாக வழுத்திய
உவமை ஆசு கவித்துறை உதவு நாவலன் முற்றிய
பரிய வாளை குதித்தெழு பரவை சூழு நகர்க்கு இறை
பழநி வேலவனைப் புகழ் பனுவல் மாலை தழைக்கவே.

(சுருக்கமான பொருள்):
நீண்ட சிவந்த சடையில் மகுடம் தரித்தவரும், வளைந்த நீண்ட வில்லினை ஏந்தியிருப்பவரும், பூரணை - புஷ்கலை எனும் இரு தேவியரோடு எழுந்தருளி இருப்பவருமான பிரத்யட்ச தெய்வமே! சபரி மலை ஐயனே! அடியவன் செந்திலாண்டவனுக்கென இயற்றியுள்ள இப்பிள்ளைத் தமிழ்ப் பாடல்கள் நிறைவுற்று விளங்க திருவருள் புரிந்தருள்வாய்!!

No comments:

Post a Comment