பெரிய புராண நிகழ்வுகளில் மகா சாஸ்தா பற்றிய குறிப்புகள்:

சுந்தரமூர்த்தி நாயனாரும், சேரமான் பெருமாள் நாயனாரும் தத்தமது அவதார நோக்கம் நிறைவுற்ற நிலையில் திருக்கயிலையை அடைந்து சிவபெருமானின் திருமுன்பு தொழுது நிற்கின்றனர். அச்சமயத்தில் சேரமான் நாயனார் 'திருக்கயிலாலய ஞான உலா' எனும் பாடல் தொகுப்பினால் சிவமூர்த்தியைப் போற்றுகின்றார். சிவாலயங்களில் சிவபெருமானின் உற்சவ மூர்த்தி விக்கிரகத் திருமேனியுடன் திருவீதியுலா வருவதை அனைவரும் தரிசித்திருப்போம், அதே போன்று திருக்கயிலையில், தெய்வங்களும், கந்தர்வர்களும், முனிவர்களும், சிவகணங்களும், எண்ணிறந்த தேவர்களும் உடன்வர, சிவமூர்த்தி தன் சுயஉருவுடன் பிரத்யட்சமாய் எழுந்தருளி திருவீதியுலா கண்டு அருள் புரியும் அற்புதத் திருக்காட்சியினைப் பதிவு செய்வது 'திருக்கயிலாய ஞான உலா'.    

இவ்விதம் திருக்கயிலையில் சேரமான் அரங்கேற்றிய உலாவினை மகா சாஸ்தா மண்ணுலகில் 'திருப்பிடவூர்' எனும் தலத்தில் வெளிப்படுமாறு செய்தார் என்று பெரிய புராணத்தின் வெள்ளானைச் சருக்கத்தில் பதிவு செய்கின்றார் சேக்கிழார் அடிகள். இனி இதுகுறித்த திருப்பாடலைக் காண்போம்,

சேரர் காவலர் விண்ணப்பம் செய்ய அத்திருவுலாப் புறம்அன்று
சாரல் வெள்ளியங் கயிலையில் கேட்ட மாசாத்தனார் தரித்துஇந்தப்
பாரில் வேதியர் திருப்பிடவூர் தனில் வெளிப்படப் பகர்ந்தெங்கும்
நார வேலைசூழ உலகினில் விளங்கிட நாட்டினர் நலத்தாலே.

(குறிப்பு: மகா சாஸ்தா எனும் திருநாமத்தைத் தீந்தமிழில் 'மாசாத்தனார்' என்று சேக்கிழார் குறித்துள்ளார். திருக்கயிலாய ஞான உலா 11ஆம் திருமுறையில் தொகுக்கப் பெற்றுள்ளது)

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் அமைந்துள்ள புண்ணியத் தலம் திருப்பிடவூர் (தற்கால வழக்கில் திருப்பட்டூர்), இத்தலத்திலுள்ள பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில் மிகவும் பிரசித்தம், இவ்வாலயத்திற்கருகில் அமைந்துள்ள தனிக்கோயிலொன்றில் ஹரிஹர புத்திரரான மகா சாஸ்தா 'திருக்கயிலாய ஞான உலா' சுவடிகளைத் தன் திருக்கரங்களில் ஏந்திய திருக்கோலத்தில், 'அரங்கேற்ற நாயனார்' எனும் திருநாமத்தில், பூரணை; புஷ்கலை தேவியரும் உடனிருக்க ஆச்சரியமாய் எழுந்தருளி இருக்கின்றார். கண்கொண்ட பயனாய் இம்மூர்த்தியைத் தரிசித்துப் பணிதல் வேண்டும் (சிவ சிவ).

No comments:

Post a Comment