21ஆம் நூற்றாண்டில் மகா சாஸ்தாவுக்கென ஒரு அற்புத புராணம்

(ஸ்ரீ மகாசாஸ்த்ரு ப்ரியதாசன் அரவிந்த் ஸுப்ரமண்யம் அவர்கள் இயற்றியது):
ஹரிஹர புத்திரரான மகா சாஸ்தாவின் பிரபாவங்களைப் பற்றி வேத வியாசரின் ஸ்காந்த புராணம்; கச்சியப்பரின் கந்தபுராணம் மற்றும் பற்பல தெய்வீகப் பனுவல்கள் நன்முறையில் பதிவு செய்துள்ளது எனினும் சாஸ்தாவின் லீலைகள் யாவையும் ஒருங்கேயமைத்துப் பறைசாற்றும் தனித்தவொரு புராணம் இல்லையே எனும் அடியவர்களின் ஆதங்கத்தைப் போக்கும் வகையில் ஸ்ரீஅரவிந்த் ஸுப்ரமண்யம் அவர்கள் 'மகா சாஸ்தா விஜயம்' எனும் ஒப்புவமையற்ற புராணத்தினை இயற்றியளித்துள்ளார்.  

புராண நூல் தான் புதிது எனினும் அதனில் இடம்பெறும் நிகழ்வுகளோ மிகமிகப் புராதனமானது. பகீரதப் பிரயத்தனமிது, 12 வருட ஆய்வு, அதன் தொடர்ச்சியாக அரிதினும் அரிதான சுவடிகள் மற்றும் ஆதி நூல்களிலுள்ள நிகழ்வுகளைப் புராண நடையில்  தொகுத்தளிக்க 2 வருட காலம் ஆக மொத்தம் 14 வருட தவ வாழ்வினையொத்த அர்ப்பணிப்புடன் திரு.அரவிந்த் அவர்கள் இப்புராண நூலினை நமக்களித்துள்ளார். பூர்வ பாகம்; உத்திர பாகம் என்று இரு பிரிவுகளைக் கொண்டு இந்நூல் தொகுக்கப் பெற்றுள்ளது. 

சுவாமி ஐயப்பன் மகா சாஸ்தாவின் அவதாரமே என்பதனைப் பல்வேறு கோணங்களில் முதலில் நிறுவிப் பின் சாஸ்தாவின் பிரபாவங்களை ஆச்சரியமான முறையில் வரிசைக் கிரமமாக விவரிக்கத் துவங்குகின்றார் நூலாசிரியர். 

ஹரிஹர புத்திரரான சாஸ்தாவின் அவதாரம், திருக்கயிலையில் வளரும் பால சாஸ்தாவின் லீலைகள், சர்வ லோக தர்ம பரிபாலனத்தை ஏற்றல், பூரணா; புஷ்கலா தேவியரை மணம் புரிந்து அருள் செய்த நிகழ்வுகள், மகிஷி சம்ஹாரம், மகா சாஸ்தாவின் (சுவாமி ஐயப்பன் உள்ளிட்ட) அஷ்ட அவதாரங்கள், எண்ணிறந்த ரிஷிகள்; தேவர்கள் மற்றும் அடியவர்களுக்கு அருள் புரிந்த நிகழ்வுகள், அற்புதத் தன்மை வாய்ந்த ஐயனின் பல்வேறு லீலா விநோதங்கள், ஐயன் எழுந்தருளியுள்ள அற்புதத் தலங்கள் என்று இந்நூலாசிரியர் விவரித்துள்ள ஒவ்வொன்றும் ஐயனின் திருவடிகளில் தெளிந்த பக்தியினைத் தோற்றுவிக்கும் விதமாக அமைந்துள்ளது. 

2ஆம் பாகமான உத்திர பாகத்தில், ஐயனைப் போற்றும் சகஸ்ரநாமங்கள், த்ரிசதிகள், பிரதான அஷ்டோத்திரங்கள், சத நாமாவளிகள் மற்றும் ஐயனின் பரிபூரணத் திருவருளைப் பெற்றிருந்த பரம அடியவரான மணிதாசர் அருளியுள்ள எண்ணிறந்த சாஸ்தா பாடல்கள் மற்றும் பஞ்சகங்கள் ஆகியவை இடம் பெறுகின்றன. 

சபரி ஐயனையும், மகா சாஸ்தாவையும் போற்றும் அடியவர் பெருமக்கள் ஒவ்வொருவர் இல்லத்தையும் உள்ளத்தையும் அலங்கரிக்க வேண்டிய புண்ணிய நூலிது (மணிகண்டப் பொருளே சரணம் ஐயப்பா)!!!



No comments:

Post a Comment