இந்து மதமும் சைவ வைணவ சமயங்களும் வெவ்வேறா ? அகச் சான்றுகளோடு கூடிய முறையான விளக்கங்கள்:

ஒப்புவமையற்ற நமது இந்து தர்மம் பிரதானமாக நான்கு வேதங்களை அடிப்டையாகக் கொண்டு விளங்குகின்றது, பின்னர் அடுத்த தளத்தில் வேதங்களின் அந்தமாக விளங்கும் உபநிடதங்கள், ஆகமங்கள், வேத வியாசர் அருளியுள்ள 18 புராணங்கள் மற்றும் எண்ணிறந்த உப புராணங்கள், இராமாயண மகாபாரத இதிகாசங்கள் இவையாவும் இடம்பெறுகின்றன. 'இந்து' எனும் மந்திரச் சொல் சனாதனமான நம் தர்மத்தின் குறியீடாக வழங்கப் பெறுதற்கு முன்னர் இம்மதம் 'வேதநெறி, மறைநெறி, வைதீக மதம்' என்று வேதத்தினை மையப்படுத்திய பெயர்களுடனேயே குறிக்கப் பெற்று வந்துள்ளது ('மறை வழக்கம் இல்லாத மாபாவிகள்' என்று சுந்தரர் தேவாரமும், 'வேத நெறி தழைத்தோங்க' என்று பெரியபுராணமும் பேசுகின்றது).

இனி 'ஆன்மீக பூமியான பாரத தேசம் முழுவதிலும் உயிரினும் மேலாகப் போற்றப் பெற்று வரும் இந்து மதத்திற்கும், தமிழ்த்திருநாட்டில் பேணப்பெற்று வரும் சைவ வைணவ சமயங்களுக்கும் தொடர்பேதுமில்லை ' என்பது போன்று போலியாகச் சித்தரிக்கப் பெறும் மத அரசியல் சார்ந்த கருத்தியிலை இப்பதிவினில் சிறிது ஆய்வோம்.
'வேதம் நான்கினும் மெய்ப்பொருளாவது நாதன் நாமம் நமசிவாயவே' என்று திருஞானசம்பந்தப் பெருமான் 'சைவ சமயம் நால்வேதங்களை உள்ளடக்கிய வைதீக மதத்தின் ஒரு அங்கமே' என்று ஐயம் திரிபற நிறுவி அருளுகின்றார்.  'ஆறங்கம் நால்வேதம் ஆனாய் போற்றி' என்பார் அப்பர் சுவாமிகள். 'நம்பினார்க்கருள் செய்யும் அந்தணர் நான்மறைக்கு இடமாய வேள்வியுள் செம்பொனேர் மடவாரணி பெற்ற திருமிழலை' என்று சுந்தர மூர்த்தி சுவாமிகள் நான்மறைகளின் பிராதனத்துவத்தினைப் பேசுவார்.
சைவப் பெருஞ்சமயம் வைதீக மதத்துடன் பின்னிப் பிணைந்துள்ள நிலையினைத் திருமூலர் பின்வரும் திருப்பாடலால் நமக்கு தெளிவுறுத்தி அருளியுள்ளார்,

அத்திசைக்குள்ளே அமர்ந்தன ஆறங்கம்
அத்திசைக்குள்ளே அமர்ந்தன நால்வேதம்
அத்திசைக்குள்ளே அமர்ந்த சரியையோடு
அத்திசைக்குள்ளே அமர்ந்த சமயமே .
'மறையாய நால்வேதத்துள் நின்ற மலர்சுடரே' என்று திருவாய்மொழியில் நம்மாழ்வார் பதிவு செய்தருளுகின்றார். அருணகிரிப் பெருமானார் திருப்பாதிரிப் புலியூர் திருப்புகழில் 'நான்மறை உபநிடம் அதனை விளங்க நீயருள் புரிவாயே' என்று கந்தக் கடவுளிடம் வேண்டிப் பாடுகின்றார். அபிராமி பட்டர் நான்மறைகளுள் போற்றப் பெற்றுள்ள அன்னை பராசக்தியின் பல்வேறு திருநாமங்களைப் பட்டியலிட்டுத் துதிக்கின்றார்.
-
பயிரவி, பஞ்சமி, பாசாங்குசை, பஞ்ச பாணி, வஞ்சர்
உயிரவி உண்ணும் உயர் சண்டி, காளி, ஒளிரும் கலா
வயிரவி, மண்டலி, மாலினி, சூலி, வராகி--என்றே
செயிரவி நான்மறை சேர் திருநாமங்கள் செப்புவரே.

மேற்குறித்துள்ள அகச் சான்றுகளை முறையாக உணர்ந்து உள்ளத்தில் இருத்துவோம், சைவ வைணவ சாக்த கௌமார காணாபத்திய சமயங்கள் 'நால்வேதங்களை மையமாகக் கொண்டு விளங்கும் இந்து மதத்தின் அங்கங்களே' எனும் தெளிவான புரிதலோடு போலிப் பரப்புரைகளைப் புறந்தள்ளுவோம்! மெய்ப்பொருள் காண்பது அறிவு (சிவ சிவ).

No comments:

Post a Comment