தமிழ்க் கடவுளாகிய முருகப் பெருமானின் நிறம் தான் என்ன? (ஆதார பூர்வ விளக்கங்கள்):

இறைவன் எந்த நிறத்தில் தோன்றினாலும் போற்றுதலுக்குரியவனே, 'கண்ணன் என்னும் கருந்தெய்வம் காட்சி பழகிக் கிடப்பேனை' என்று போற்றுகின்றாள் அன்னை ஆண்டாள் நாச்சியார். எனினும் பன்னெடுங்காலமாய் நம் பாரத தேசத்தில் தோன்றி வந்துள்ள ஞானிகளும் அருளாளர்களும் தங்களுக்கு இறைவன் எந்த வடிவத்தில், எந்த வண்ணத்தில், எந்த திருக்கோலத்தில் திருக்காட்சி அளித்துள்ளானோ அதனை ஏராளமான திருப்பாடல்களில் ஆவணப்படுத்தி வைத்துள்ளனர். அவற்றின் வழி நின்றே நாம் உண்மையை உணர்தல் கூடுமேயன்றி நாமாக நம் சிற்றறிவில் தோன்றியதையெல்லாம் வரைமுறையின்றி நிறுவ முயலுதல் அறிவுடைமை அல்ல.

'எத்தனை கலாதி' என்று துவங்கும் திருத்தணித் திருப்புகழின் இறுதி வரிகளில் 'தணிகை வாழ் சிவப்பின் செக்கர் நிறமாயிருக்கும் பெருமாளே' என்று ஐயத்திற்கு இடமின்றி முருகப் பெருமான் சிவந்த திருமேனியை உடையவன் என்று பதிவு செய்கின்றார் அருணகிரிநாதர், மேலும் கந்தர் அனுபூதியின் 30ஆம் திருப்பாடலில் 'செவ்வான் உருவில் திகழ் வேலவன்' என்று போற்றுகின்றார். 'செவ்வேள் ஏறிய மஞ்சை வாழ்க' என்று கந்த புராணம் பறைசாற்றுகின்றது.

எதனையுமே மரபு வழி நின்று அணுகுவோம், நம் பொருட்டு அவதரித்துள்ள ஞானிகளின் திருவாக்கினைச் செவிமடுப்போம், ஆறுமுக தெய்வத்தின் திருவருளைப் பெற்று வாழ்வோம்!

No comments:

Post a Comment