யஜுர் வேத ஸ்ரீருத்ர பாராயணத்தைப் போற்றும் பெரிய புராணம்:

பெரிய புராணத்தின் உருத்திர பசுபதி நாயனார் புராணத்தில், 5 திருப்பாடல்களில் யஜுர் வேத மந்திரத் தொகுப்பான ஸ்ரீருத்ர பாராயணத்தைப் போற்றியுள்ளார் தெய்வச் சேக்கிழார். இனி அத்திருப்பாடல்களை இப்பதிவில் உணர்ந்துத் தெளிவுறுவோம், பொய்ப் பிரச்சாரங்களைப் புறம்தள்ளுவோம், 

4ஆம் திருப்பாடலில், வேத மந்திரமாகிய ஸ்ரீருத்ரத்தை நாயனார் இடையறாது பாராயணம் புரிந்து வந்ததைப் பதிவு செய்கின்றார், 
-
(உருத்திர பசுபதி நாயனார் புராணம் - திருப்பாடல் 4):
ஆய அந்தணர் அருமறை உருத்திரம் கொண்டு
மாயனார் அறியா மலர்ச் சேவடி வழுத்தும்
தூய அன்பொடு தொடர்பினில் இடையறாச் சுருதி
நேய நெஞ்சினராகி அத்தொழில் தலை நின்றார்

6ஆம் திருப்பாடலில் நாயனார், தெளிந்த குளத்து நீரில், கழுத்தளவு ஆழத்தில் நின்ற வண்ணம், உச்சி கூப்பிய கையினராய், மிகுந்த அன்புடன் ஸ்ரீருத்ர மந்திர பாராயணத்தால் சிவபெருமானைப் போற்றி வந்த தன்மையைப் பதிவு செய்கின்றார், 
-
(உருத்திர பசுபதி நாயனார் புராணம் - திருப்பாடல் 6):
தெள்ளு தண்புனல் கழுத்தளவாயிடைச் செறிய
உள்ளுறப்புக்கு நின்றுகை உச்சிமேல் குவித்துத்
தள்ளு வெண்திரைக் கங்கைநீர் ததும்பிய சடையார்
கொள்ளும் அன்பினில் உருத்திரம் குறிப்பொடு பயின்றார்

7ஆம் திருப்பாடலில், 'அருமறைப் பயனாகிய ஸ்ரீருத்ரம்' என்று அடைமொழி கொடுத்துப் போற்றுகின்றார் சேக்கிழார் பெருமான். 
-
(உருத்திர பசுபதி நாயனார் புராணம் - திருப்பாடல் 7):
அருமறைப் பயனாகிய உருத்திரம் அதனை
வருமுறைப் பெரும் பகலும் எல்லியும் வழுவாமே
திருமலர்ப் பொகுட்டிருந்தவன் அனையவர் சிலநாள்
ஒருமை உய்த்திட உமையிடம் மகிழ்ந்தவர் உவந்தார்

8ஆம் திருப்பாடலில், 'ஸ்ரீருத்ர பாராயணத்தை நியதியுடன் பாராயணம் புரிதலை சிவபெருமான் மிகவும் விரும்புகின்றார்' என்பதனை ஐயத்திற்கு இடமின்றிப் பதிவு செய்கின்றார், 
(உருத்திர பசுபதி நாயனார் புராணம் - திருப்பாடல் 8):
காதல் அன்பர்தம் அருந்தவப் பெருமையும் கலந்த
வேத மந்திர நியதியின் மிகுதியும் விரும்பி
ஆதி நாயகர் அமர்ந்தருள் செய்ய மற்றவர் தாம்
தீதிலா நிலைச் சிவபுரி எல்லையில் சேர்ந்தார்

9ஆம் திருப்பாடலில், 'ஸ்ரீருத்ர பாராயணம் ஒன்றினாலேயே சிவகதி பெற்றிருந்த தன்மையினால் 'உருத்திர பசுபதி நாயனார்' எனும் திருநாமமும் பெற்றார்' என்று பதிவு செய்கின்றார் தெய்வச் சேக்கிழார்,
-
(உருத்திர பசுபதி நாயனார் புராணம் - திருப்பாடல் 9):
நீடும் அன்பினில் உருத்திரம் ஓதிய நிலையால்
ஆடு சேவடி அருகுற அணைந்தனர் அவர்க்குப்
பாடு பெற்றசீர் உருத்திர பசுபதியாராம் 
கூடு நாமமும் நிகழ்ந்தது குவலயம் போற்ற

No comments:

Post a Comment