சாஸ்தாவையே குல தெய்வமெனக் கொண்டு தென்காசியில் வசித்து வரும் பாண்டிய அரச குலத்தவர் கேரளத்திலுள்ள பந்தளத்துக்கு புலம் பெயர்கின்றனர். அம்மரபின் வழியில் கோலோச்சி வரும் இராஜசேகர பாண்டியன் எனும் சிற்றரசர் சந்தான பாக்கியம் வேண்டி சிவபெருமானிடம் அனுதினமும் விண்ணப்பித்து வருகின்றார். இது ஒருபுறமிருக்க, உதயணன் எனும் கொள்ளையனின் ஆதிக்கமும் வலிமையையும் பந்தளத்தில் மிகுந்து வருகின்றது.
இக்கொடியவன் சபரி மலை; இஞ்சிப் பாறை; தலைப்பாறை ஆகிய பகுதிகளை ஆக்கிரமித்து, பெரும் கோட்டைகளையும் கட்டிக் கொண்டு தனியொரு அரசாட்சியே நடத்தி வருகின்றான். கொலை; கொள்ளைகள் மிகுந்து இருந்ததால் சபரிமலையிலுள்ள சாஸ்தாவின் ஆலயத்திற்கு எவரொருவராலும் செல்ல இயலாது போகின்றது, மெல்ல மெல்ல சாஸ்தாவின் வழிபாடு ஷீணம் அடையத் துவங்குகின்றது. இது போதாதென்று உதயணன் சாஸ்தா ஆலயம் முழுவதையும் பெருந்தீக்கு இரையாக்குகின்றான்.இந்நிலையில் பட்டத்தரசியாருக்கு ஆண் மகவொன்று பிறக்க, வஞ்சக எண்ணம் கொண்ட சில மந்திரிகள் ஐயனைக் கொல்ல அரசியாரோடு சேர்ந்து திட்டமொன்று தீட்டுகின்றனர். அரசியார் தனக்குத் தீராத தலை வலியிருப்பதாக நடிக்க, அரண்மனை வைத்தியர்களை 'புலிப் பால் ஒன்றினாலேயே இந்நோய் குணமாகும்' என்று கூற வைக்கின்றனர். கருணைப் பெருங்கடலான சுவாமி ஐயப்பன் அவர்களின் அறியாமையைப் போக்கி அருள் புரியத் திருவுள்ளம் பற்றுகின்றார்.
வனம் சென்று புலிப்பாலினைக் கொணர்வதாகக் கூறிச் செல்கின்றார். வனத்திலுள்ள கொடும் புலிகள் யாவும் 'தாய்ப் பசுவினைச் சூழும் கன்றுகளைப் போல' ஐயனைச் சூழ்கின்றன. தாரக பிரம்மமான சுவாமி ஐயப்பனும் அப்புலிகளுள் ஒன்றின் மீது ஆரோகணித்துப் பந்தள அரண்மனையினை அடைகின்றார். அனைவரும் ஐயனின் இறைத்தன்மையினை உணர்ந்துப் பணிகின்றனர்.
சுவாமி ஐயப்பன் சபரிமலைப் பகுதிகள் யாவிலுமிருந்த உதயணனின் கூட்டத்தினை முற்றிலும் அழித்தொழித்துத் தர்மத்தினை நிலைநாட்டுகின்றார். பந்தள அரசரிடம் சாஸ்தா ஆலயம் மீண்டும் அமையவேண்டிய இடத்தினை அடையாளம் காட்டி, சபரி யாத்திரைக்கான விரத நியமங்கள்; பூசை முறைகள் ஆகியவைகளையும் வகுத்துக் கூறுகின்றார்.
குடமுழுக்குத் திருநாளன்று அனைவரும் காணுமாறு 'பேரொளிப் பிழம்பாக' சாஸ்தாவின் விக்கிரகத் திருமேனியுள் கலந்து மறைகின்றார். அனைவரும் எண்ணிக் கொண்டிருப்பது போல் சுவாமி ஐயப்பனின் அவதார நோக்கம் மகிஷி வதம் அன்று, மகிஷி சம்ஹாரம் சாஸ்தாவால் புராண கால கட்டத்திலேயே நடந்தேறி விடுகின்றது. சுவாமி ஐயப்பனின் அவதார நோக்கம் கலியுகத்தில் சாஸ்தா வழிபாட்டினை புதுப்பொலிவோடு மிளிரச் செய்வதும், சபரி ஆலயத்தினை புனர்நிர்மாணம் செய்விப்பதுமே ஆகும் (மணிகண்டப் பொருளே சரணம் ஐயப்பா).

No comments:
Post a Comment