ஹரிஹர புத்திரரான மகா சாஸ்தாவே ஐயனார் (ஆதார பூர்வ விளக்கங்களும் நுட்பங்களும்):

சங்கர நாராயண தத்துவங்களின் சங்கமத்திலிருந்து தோன்றிய மகா சாஸ்தாவை 'ஐயன்' எனும் திருநாமத்தால் கந்தபுராணம் போற்றுகின்றது. 

(கந்த புராணம் - அசுர காண்டம்: மகா சாத்தா படலம் - பாடல் 48):
இந்த வண்ணம் இருக்க முராரியும்
அந்தி வண்ணத்து அமலனும் ஆகியே
முந்து கூடி முயங்கிய எல்லையில்
வந்தனன் எமை வாழ்விக்கும் ஐயனே.

போற்றுதற்குரிய ஐயன் எனும் திருப்பெயரோடு 'ஆர்' எனும் கூடுதல் மேன்மைக்குரிய விகுதியும் சேர்க்கப் பெற்று மகா சாஸ்தாவே 'ஐயனாராக' கிராமங்களிலும் நகரங்களிலும் வழிபடப்பட்டு வருகின்றார் என்று காஞ்சி மகாப் பெரியவர் தெளிவுறுத்தியுள்ளார் (ஆதார நூல்: தெய்வத்தின் குரல்: முதல் பாகம்).

ஹரிஹர புத்திரரான மகா சாஸ்தா சில தலங்களில் சுயம்பு மூர்த்தியாகவும் மற்றும் சில திருக்கோயில்களில் ரிஷிகள்; முனிவர்கள் மற்றும் பெரியோர்களால் பிரதிஷ்டை செய்விக்கப் பெற்ற நிலையிலும் எழுந்தருளி இருக்கின்றார். இவற்றோடு கூட, ஒவ்வொரு புதிய ஊர் நிர்மாணிக்கப்படும் பொழுதும் 'இந்த இடங்களில் இந்த ஆலயம் அமைக்கப்பட வேண்டும்' எனும் ஆகம விதிகளின் படி, சாஸ்தாவை 'ஐயனார்' எனும் திருநாமத்துடன், காவல் தெய்வமாக எல்லையில் எழுந்தருளச் செய்து வழிபட்டு வந்தனர். ஐயனின் வழிபாடு மிகமிகத் தொன்மையானது.
கிராமப்புரங்களில் பெரிதும் வழிபடப்பட்டு வருவதனால் ஐயனாரை கிராம தேவதை என்று பிழையாகக் கருதிவிடாமல் 'வைதீக சனாதன தர்மமாகிய நமது இந்து தர்மத்துக்குரிய சிவசக்தி தத்துவங்களிலிருந்து வெளிபட்ட ஒப்புவமையற்ற திருக்குமாரரே ஐயனார்' எனும் தெளிவான புரிதலோடு ஐயனைப் போற்றித் துதித்தல் வேண்டும். 'ஐயன்' கிராமங்களுக்கு மட்டுமா காவல் தெய்வம்? கோடான கோடி அண்டங்கள் முழுமைக்கும் அம்மூர்த்தியே தனிப்பெரும் காவல் என்பதனை அறிவிக்கும் கீழ்க்கண்ட கந்த புராணத் திருப்பாடலை இனிக் காண்போம்,

(கந்த புராணம் - அசுர காண்டம்: மகா சாத்தா படலம் - பாடல் 54):
அங்கண் மேவி அரிகரபுத்திரன்
சங்கையில் பெரும் சாரதர் தம்மொடும்
எங்கும் ஆகி இருந்து எவ்வுலகையும்
கங்குலும் பகல் எல்லையும் காப்பனால்!!!
-
பொருள்:
இங்கனம் ஹரிஹர புத்திரரான ஐயன் 'எவ்விடத்திலும் நீக்கமற நிறைந்த நிலையில் எழுந்தருளி இருந்து', இரவும் பகலும் அண்டங்களின் எல்லை முழுவதையும் காத்து வருகின்றார்.
சில தலங்களில் குதிரை அல்லது யானை வாகனங்களின் மீதும், இன்ன பிற தலங்களில் அமர்ந்த திருக்கோலத்தில் திருக்கரங்களில் வாளுடனும் ஐயனார் எழுந்தருளி இருப்பார். மேலும் எண்ணிறந்த திருக்கோயில்களில் 'பூரணை; புஷ்கலை தேவியரோடு எழுந்தருளி இருப்பது மற்றொரு சான்று!  ஸ்ரீசாஸ்தாவிற்கு 'பூரணை - புஷ்கலை' எனும் இரு அருட்சக்திகள் இருப்பதைக் கந்தபுராணம் பல்வேறு திருப்பாடல்களில் பதிவு செய்கின்றது,

(கந்த புராணம் - அசுர காண்டம்: மகா சாத்தா படலம் - பாடல் 58):
காருறழ் வெய்ய களிற்றிடையாகிப்
பாரிடர் எண்ணிலர் பாங்குற நண்ணப்
பூரணை புட்கலை பூம்புற மேவ
வாரணம் ஊர்பவன் முன்னுற வந்தான்
எந்த மூர்த்தியைக் கோடான கோடி பக்தர்கள் சபரி மலை சென்று தரிசித்தும் போற்றியும் வருகின்றனரோ, அதே மூல மூர்த்தியான மகா சாஸ்தா கிராமங்களிலும் பல்வேறு பெருநகரங்களிலும் ஐயனாராக, காவல் தெய்வமாக எழுந்தருளி இருக்கின்றார். ஐயனின் படை வீரரான மகா காளரையே கிராமங்களில் 'கருப்பசுவாமி' எனும் பெயரில் வழிபட்டு வருகின்றனர்!!!

(இறுதிக் குறிப்பு: சாஸ்தா; ஐயனார் என்பது ஒரே மூல தெய்வத்தைக் குறிக்கும் இருவேறு திருப்பெயர்கள், மகா சாஸ்தாவின் கலியுக அவதாரமே சுவாமி ஐயப்பன்).

No comments:

Post a Comment