மணிதாசர் அருளியுள்ள அச்சன்கோவில் பஞ்சகம்:

(திரு.அரவிந்த் ஸூப்ரமண்யம் அவர்கள் இயற்றியுள்ள 'ஸ்ரீமகா சாஸ்தா விஜயம்' புராண நூலிலிருந்து எடுத்துத் தொகுக்கப் பெற்றுள்ளது): 

(திருப்பாடல் 1)
கோடி சூர்ய ப்ரபா மண்டலம் போல் ஒளிவீசி
வருகின்றதைப் பார் - குவலயக் கண்ணன் 
த்ருபுவன வச்யன் - நீல கோமளாங்க ப்ரகாசன் 
தேடு நவரதன் முடி சூடு கடகாங்கதன் திவ்ய கேயூர ஹாரன் 
செங்கையில் மாணிக்க பாத்ரம் கரும்பு வில் 
அபயம் சேர்ந்திலங்கும் புஷ்பபாணன் 
நாடி நமதருகில் அவர் ஓடி விளையாடியே நமதபீஷ்டங்கள் 
தருவார் - நம்புவோர்க்கு உபகாரி என்பதில் 
இவரன்றியில் நாட்டில் ஒரு தெய்வம் யார் காண்?
ஆடலம் பரியில் ஏறி கூடலம்பதியில் வந்து அடிமை 
கொண்டு அடிமை நல்கும் ஆதி சதுர் வேதங்கள் 
ஓதும் பரஞ்சோதியே! எங்கள் அச்சனார் கோவில் அரசே!

(திருப்பாடல் 2)
மண்டலம் புகழ் வேதியர்கள் தொழும் வீரமணிகண்டர் 
இவர் பவனி பாரீர் - வாசல் ப்ரதானியாய் 
ஆவசேரங்கம் செய்து வருகிறவன் கறுப்பன் 
தண்டலதிபன் தலைவன் - இண்டலையன் அண்டையில் 
சட்டமிடு திட்டமுடையோன் - சாடி வரும் காற்றாடி 
ஆடுறுஞ்சி முத்தன் - காடுவெட்டிகளும் கூட 
துண்டரீக தலைவரென்ற செல்லப்பிள்ளை 
சுமதி முன்னோடி வருவார் - தோரணம் கட்டி 
சமூஹக்காரர் தொழுதேற்ற தொண்டரிஷ்டங்கள் தருவார் 
அண்டர் முனி தெண்டனிடுகின்ற மணிகண்டர் 
ஆராதனம் செய்யுமென்று ஆதி சதுர் வேதங்கள் 
ஓதும் பரஞ்சோதியே! எங்கள் அச்சனார் கோவில் அரசே!!! 

(திருப்பாடல் 3)
சிந்தையானந்தமுறவே ஒளிவிளங்கும் குல தெய்வம் 
வரும் கோஷமிது காண் - சீரணி வெறிக்கலியின் 
விலங்கொலி கலீர் கலீர் என - சிறந்தழகு பூண்டருகினில் 
வந்தவர்கள் வழி பார்த்திரங்கி வசமாகுவாள் 
மாளிகையில் மேல் இசக்கி,  வடிவழகி காடிக்கல் 
யஷியுடன் வாது கொள் இசக்கி கூட 
சொந்தமாம் பத்ரகாளியின் தனி முழக்கொலி சேர் 
காளி வரதாளியும் சொல் பெரிய பேச்சி வடிவில் 
ப்ரம்ம ராஷஷியும் சூழ்ந்து கொண்டாடி நடக்க 
அந்தணர்கள் சிந்தனையில் நினைந்த வரம் அருளும் 
ஆவேச தேவனென்றும் ஆதி சதுர் வேதங்கள் 
ஓதும் பரஞ்சோதியே! எங்கள் அச்சனார் கோவில் அரசே!!! 

(திருப்பாடல் 4)
விதிமனம் கொண்டு பாரதி முலைப்பால் உண்ட வீரன்
சவாரி பாரீர் - வில்லம்பு கத்தி கட்டாரியும் 
வல்லயம் ஈட்டி வேல் பரசு வாள் சுரிகையும் 
குதி கொண்டு பூதங்கள் எதிர் கொண்டு அடுத்து வர 
கூடலங்காடு சென்று குட்டிதாய்ப்புலி வட்டமிட்டு 
அனந்த கோடி கூட்டி நகரோடி வந்து 
மதுராபுரிக்கரசன் எதிராய் அழைத்து தேவி தலைவலி 
மாற்றி நின்ற அரசே - வந்து என் துயராற்றி 
மைந்தர் வரமும் தந்து என் வம்ச வழி காத்தருள்வாய் 
அதிரூப லாவண்யன் மதி பூர்ண வல்லபன் 
ஹரிஹரகுமாரனென்றும் ஆதி சதுர் வேதங்கள் 
ஓதும் பரஞ்சோதியே! எங்கள் அச்சனார் கோவில் அரசே!!! 

(திருப்பாடல் 5)
பணிகின்றவர்க்கு உயிர்த்துணை என்ற விருதுடன் 
பாலிக்கும் ஸுகுண சீலன் - பக்தபரிபாலன் என்று 
எத்திசையும் புகழ்கின்ற பூர்ண சிந்தாமணிக்கு இணையான 
மாணிக்க மணி மார்பனாம் - எனது இஷ்ட குல தெய்வமாகி 
வந்த இவர் இருக்கும் போது கவலை ஏனோ? மனமிரங்கி 
எமக்கின்று கண்காட்சி தருவார் 
கணிகண்டு கொண்டு கண்மணி என்றிவர் பாத கமலத்தை 
இடைவிடாமல் காத்திருந்தால் நமக்கு ஏற்ற 
வரமும் தருவார் - கைவல்ய மூர்த்தி என்ற 
அணிவேலவர்க்கு இளைய! மணிதாசர் ஹ்ருதயத்தில் 
அருள் தத்வ போதனென்று ஆதி சதுர் வேதங்கள் 
ஓதும் பரஞ்சோதியே! எங்கள் அச்சனார் கோவில் அரசே!!!

No comments:

Post a Comment