கேரள மாநிலத்தின் கொல்லம் மாவட்டத்திலுள்ள புனலூரில் தோன்றிய அருளாளர் மணிதாஸர். சபரி ஐயனின் பரிபூரணத் திருவருளைப் பெற்றிருந்த உத்தம சீலர். திருஞானசம்பந்தர்; திருநாவுக்கரசர்; சுந்தரர் ஆகிய அருளாளர்கள் சிவத்தலங்கள் தோறும் சென்று தேவாரப் பனுவல்களைப் பாடியது போல், அருணகிரிநாதரின் திருப்புகழைப் போல் மணிதாஸர் மகா சாஸ்தாவிற்கென அருளியுள்ள அற்புதப் பாமாலைகள் 'சாஸ்தா பாட்டு' எனும் திருப்பெயரில் வழிவழியாய் போற்றப் பெற்று வருகின்றன. 'சாஸ்தா ப்ரீத்தி' என்று குறிக்கப் பெறும் வைபவங்களில் மணிதாசரின் திருப்பாடல்கள் பிரதானமாய் இடம்பெற்றிருக்கும்.
தாஸரின் தமிழ்ப் பனுவல்கள், வடமொழிப் பிரயோகங்களோடும் கூடிய மிக எளிய நடையில், விருத்தம் முதலிய பல்வேறு இலக்கண வகைகளில் அமைக்கப் பெற்றிருக்கும். கல்லையும் கசிவிக்கும் இப்பெருமகனாரின் சில திருப்பாடல்கள் இன்னமும் அறியப் பெறாத புதுமையானதொரு நடையிலும் அமையப் பெற்றுள்ளன. இவருடைய திருப்பாடல்களில் போற்றப் பெறும் தலங்களில் ஐயன் திருவுள்ளம் மிக மகிழ்ந்து விசேடமாய் எழுந்தருளி இருப்பார்.
மணிதாஸர் முழுமுதற் கடவுளான விநாயகப் பெருமானைப் போற்றியே தம்முடைய பனுவல்களைத் துவங்கும் மரபினைக் கொண்டிருந்தார், ஆறுமுகக் கடவுளையும், சிவமூர்த்தியையும், அம்பிகையையும், மகாவிஷ்ணுவையும் தம்முடைய திருப்பாடல்களில் ஆங்காங்கே போற்றித் துதித்து மகிழ்வார். குளத்தூர், ஆரியங்காவு, அச்சன்கோயில், சபரி மலை, பொன் சொரியும் முத்தையன் திருக்கோயில் முதலிய தலங்களில் எழுந்தருளியுள்ள சாஸ்தாவிற்கு பஞ்சகம் எனும் அற்புதத் தொகுப்புகளை அருளியுள்ளார்.
ஸ்ரீமகா சாஸ்தா விஜயம் எனும் புராண நூலின் ஆசிரியராகவும், ஐயனுக்காகவே தம்முடைய வாழ்க்கையினை அர்ப்பணித்துள்ள புண்ணிய சீலராகவும் விளங்கும்' திரு. அரவிந்த் ஸுப்ரமண்யம் அவர்கள், தாஸரின் பனுவல்களைப் பல்வேறு புராதன சுவடிகளிலிருந்தும், வழிவழியாய்ப் பாடப் பெற்று வரும் பாடல்களிலிருந்தும் குறிப்பெடுத்து, தம்முடைய அரிய பெரிய பிரயத்தனத்தினால் அவற்றினை அச்சிலேற்றும் திருப்பணியினை மேற்கொண்டு வருகின்றார்.
(ஆரியங்காவு பஞ்சகம் - முதல் திருப்பாடல்):
கருணாம்புதே உமது கமல பொற்பாதமே கதியென்று
காத்திருக்கும் கம்பக்குடிக்கு அடிமை - உன் பொன்
அடிக்கடிமை கண்ட ஸிகிதப்படிக்கு உன்
சரணார விந்தமே ஸர்வதா ஸ்துதி செய்து வம்ச வழியாய்
நடந்தும் சற்றாகிலும் மனமிறங்காததேனென்று
சாற்றியெம்மை ஆட்கொள்ளுவீர் ஐயா
ஒரு நாளும் எளியேனை கைவிடேன் என்ற உமது
உறுதியை மறக்கலாமா? ஓங்காரமான பொருள்
ஆகுமென் ஐயனே - ஸ்ரீம்கார தீப ஒளியே
திருமாலரன் பெற்ற பெருமானே! எனக்குற்ற தீவினைகள்
போக்கியருள்வாய் - திக்கெல்லாம் புகழ் பரவும்
பூரண புஷ்கலை மருவும் திருஆரியக் கடவுளே!!
No comments:
Post a Comment