மகிஷியைச் சுவாமி ஐயப்பன் சம்ஹாரம் புரிகையில், சாப விமோசனமுற்றுத் தன் பழைய உருவத்தைப் பெறும் மகிஷி 'தன்னை மணக்குமாறு' ஐயப்பனிடம் வேண்டியதாகவும், சுவாமி 'நாம் பிரம்மச்சர்ய விரதம் பூண்டிருப்பதால் உன்னை ஏற்பதற்கில்லை' என்று மறுத்ததாகவும், அதன் பின்னரும் நிர்பந்தித்த மகிஷியிடம் 'இச்சபரி மலைக்கு என்றொரு நாள் ஒரு கன்னி சுவாமியும் வராதிருப்பரோ அன்று உன்னை மணக்கின்றோம்' என்று வாக்களித்ததாகவும் ஒரு கருத்து நிலவி வருகின்றது.
முதன் முறையாக சபரி மலைக்கு விரதமிருந்துச் செல்வோரைக் கன்னி சுவாமி என்று குறிப்பர். இவர்கள் 'சரங்குத்தி ஆல்' எனும் இடத்தில் தங்களது வருகையைப் பதிவு செய்யும் விதமாய்ச் சரம் ஒன்றினைக் குத்திச் செல்வர். சாப விமோசனம் பெற்ற மகிஷி அனுதினமும் இவ்விடம் வந்து கன்னி சுவாமி எவரேனும் வந்துள்ளனரா? என்று சோதிப்பதாகவும், புதிய சரங்களைக் கண்டு ஏமாற்றத்துடன் திரும்பச் செல்வதாகவும் மற்றொரு கருத்தும் பேசப் பெற்று வருகின்றது.
இனி மேற்குறித்துள்ள செவிவழிச் செய்திகளை சில முக்கிய கோணங்களில் சிந்தித்துத் தெளிவோம், முதலில் மகிஷியை வதம் புரிந்தது மூல தெய்வமான மகா சாஸ்தாவே அன்றிச் சுவாமி ஐயப்பன் அன்று. அந்நிகழ்வும் புராண காலத்திலேயே நடந்தேறி விடுகின்றது. ஆனால் சாஸ்தா பந்தள தேசத்தில் சுவாமி ஐயப்பனாக அவதரித்ததோ 'கலியுக கால கட்டத்தின் துவக்கத்தில்' என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும்.
இரண்டாவது கோணம், 'சரி! மூல தெய்வமான சாஸ்தாவே சாப விமோசனம் பெற்ற மகிஷியிடம் அவ்விதம் கூறியிருக்கக் கூடுமோ?' எனில் அதுவும் பிழையான கருத்தே. சாஸ்தாவிற்கு மகிஷி வதத்திற்கு முன்னரே 'பூரணை; புஷ்கலை' எனும் இரு தேவியர் இருந்ததாகப் புராணங்கள் பதிவு செய்கின்றன. எனில் சாஸ்தா தான் பிரம்மச்சரிய விரதம் பூண்டிருப்பதாக மகிஷியிடம் கூறியதாகக் கொள்வது முற்றிலும் பொருந்தாத வாதம்.
மூன்றாவது கோணம், தத்தாத்ரேயருடைய மனைவியாரான லீலாவதி தேவியே தன் கணவரின் சாபமொன்றினால் மகிஷி எனும் அரக்கியாகப் பிறக்க நேர்ந்ததாகப் புராணங்கள் அறிவிக்கின்றன. ஆதலின் சாப விமோசனம் பெற்ற தத்தாத்ரேயரின் தேவியார் 'பரப்பிரம்ம சுவரூபரான மகா சாஸ்தாவிடம்' தன்னை மணக்க வேண்டியதாகக் கூறுவது அனர்த்தமான கூற்று. பிறகு இதனை எவ்விதம் விளங்கிக் கொள்வது?
சபரி வாசனான சாஸ்தா சாப நீக்கம் பெற்ற லீலாவதி தேவியாரை 'மாளிகைபுரத்து அம்மன்' எனும் திருப்பெயரில் தன்னுடைய பரிவார தெய்வங்களுள் ஒருவராக விளங்குமாறு ஆட்கொண்டார் என்பதே சத்தியமான கூற்று. எவ்விதம் சைவ ஆகமங்களில் பரிவார மூர்த்திகள் குறிப்பிடப் பெற்றுள்ளதோ, ஐயனின் ஆலயங்கள் தோறும் 'மாளிகை புரத்து அம்மன்' பரிவார தெய்வமாய் எழுந்தருளி ஐயனுக்குத் தொண்டு புரிந்து வருகின்றார்.
பரம புண்ணியமான சபரி யாத்திரை செல்லும் அடியவர்கள் மேற்கூறிய நுட்பங்களை மனதில் கொண்டு, ஐயனின் பரிவார தெய்வமான மாளிகைபுரத்து அம்மனை முதலில் வணங்கிப் பின் அவரை ஆட்கொண்டு அருளிய ஐயனைத் தரிசித்துப் போற்றுதல் வேண்டும் (சரண கோஷ ப்ரியனே சரணம் ஐயப்பா)!!!
No comments:
Post a Comment