இந்திராணிக்கு அருளிய மகா சாஸ்தா (கந்த புராணம் விவரிக்கும் அற்புத நிகழ்வுகள்):

சிவசக்தி ஐக்கிய சுவரூபரான மகா சாஸ்தா தேவேந்திரனான இந்திரனுடைய தேவிக்குப் பேரருள் புரிந்த நிகழ்வினைக் கச்சியப்பர் அருளியுள்ள கந்த புராணத்தின் வழி நின்று இப்பதிவினில் சிந்தித்து மகிழ்வோம்.
சூரபத்மனின் கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே செல்கின்றது, முருகப் பெருமானின் அவதாரமோ இன்னமும் நடந்தேறவில்லை, இனியும் சூரனின் கொடுஞ்செயல்களைத் தாங்கிக் கொள்ள முடியாது எனும் நிலையில் இந்திரன் மீண்டுமொரு முறை 'திருக்கயிலை சென்று சிவபெருமானிடம் மன்றாடுவதே' செய்யத் தக்கது என்று கருதுகின்றான். எனில் 'அச்சமயத்தில் இந்திராணிக்குக் காவலாக யார் இருப்பார்? சூரனின் ஏவலர் மனைவியைக் கவர்ந்து செல்லக் கூடுமே' என்று பலவாறு சிந்தித்து வருந்துகின்றான். இறுதியில் சாஸ்தாவின் திருவடிகளைச் சரணமாகப் பற்றுவதே தக்கதொரு உபாயம் என்று தெளிகின்றான்.
மன மெய் வாக்கினால் ஒருமையுற்றுத் துதித்து நிற்கும் இந்திரனின் முன்பு கோடி சூர்யப் பிரகாசமாய்த் தோன்றும் மகாசாஸ்தா 'அன்பனே! கவலையை ஒழி! இந்திராணிக்கு நாம் அடைக்கலம் தந்தோம்!' என்று அருள் புரிந்துத் தன் அணுக்கத் தொண்டரும், பிரதான பூதப் படைத் தலைவருமான மகா காளரிடம் 'காளனே! இந்திரன் சிவமூர்த்தியைத் தரிசித்து வரத் திருக்கயிலை செல்லவிருக்கின்றான், அச்சமயமதில் இந்திராணிக்குத் தீங்கேதும் நேரா வண்ணம் காவல் புரிவாய்' என்று கட்டளையிட்டு மறைகின்றார்.
ஆறுமுகக் கடவுளின் திருஅவதாரத்திற்கு முந்தைய நிகழ்வுகள் இவை ஆதலால் கந்தக் கடவுள் சாஸ்தாவிற்கு இளைய சகோதரர் என்பது தெளிவு. இந்திரன் திருக்கயிலைக்குச் சென்று விட, இந்திராணியோ 'கணவர் கயிலையினின்று திரும்பும் வரையிலும் சிவலிங்க பூஜையிலும், சிவ தியானத்திலுமே' லயித்து இருக்கின்றார். இது ஒருபுறமிருக்க சூரபத்மனின் தங்கையான அஜமுகி, இந்திராணியை சிறைப் பிடித்துத் தமையனான சூரனுக்குப் பரிசளிப்பதாகச் சூளுரைத்து இந்திராணி இருக்குமிடத்திற்கு வருகின்றாள்.
அஜமுகியைக் கண்டு அஞ்சி நடுங்கும் இந்திராணி ஐயனான மகா சாஸ்தாவை நோக்கி எழுப்பும் அபயக் குரலை கச்சியப்பர் கந்த புராணத்தில் அற்புதமாய் பதிவு செய்கின்றார், 

(கந்த புராணம் - மகாகாளர் வரு படலம்: பாடல் 1, 2):
பையரா அமளியானும் பரம்பொருள் முதலும் நல்கும்
ஐயனே ஓலம்! விண்ணோர்க்கு ஆதியே ஓலம்! செண்டார்
கையனே ஓலம்! எங்கள் கடவுளே ஓலம்! மெய்யர்
மெய்யனே ஓலம்! தொல் சீர் வீரனே ஓலம் ஓலம்!
-
ஆரணச் சுருதி ஓர்சார் அடல்உருத்திரனென்று ஏத்தும்
காரணக் கடவுள் ஓலம்! கடல் நிறத்து எந்தாய் ஓலம்!
பூரணைக்கு இறைவா ஓலம்! புட்கலை கணவா ஓலம்!
வாரணத்து இறைமேல் கொண்டுவரும் பிரான் ஓலம்! என்றாள்.
ஐயனின் திருவருள் ஏவ, மகாகாளர் அவ்விடத்தே தோன்றிக் கடும் சீற்றத்துடன் அஜமுகியின் கரங்களைத் துண்டித்து இந்திராணியைக் காத்துப் பின் மறைகின்றார். பல கோடி வருடங்களுக்கு முந்தைய கந்த புராண காலகட்ட நிகழ்வுகளில் மகாசாஸ்தாவின் பிரபாவத்தை விளக்கும் அற்புதப் பகுதியிது (குறிப்பு: சாஸ்தா சுவாமி ஐயப்பனாக அவதரித்தது தற்போதைய கலியுகத் துவக்க காலகட்டத்திலேயே எனும் புரிதலும் அவசியம்).

No comments:

Post a Comment