கற்ப கோடி வருடங்களுக்கு முன்னர், தேவர்களும் அசுரர்களுமாய் இணைந்துப் பாற்கடலைக் கடைந்த காலகட்டத்தில், சிவபெருமானின் திருப்பார்வையும்' மோகினி வடிவிலிருந்த' ஸ்ரீமகாவிஷ்ணுவின் திருப்பார்வையும் கணநேரம் சங்கமிக்க அதனின்றும் கோடி சூர்யப் பிரகாசமாய் தோன்றியவர் 'அரிகர புத்திரரான' ஸ்ரீமகாசாஸ்தா. இந்நிகழ்வு நடந்தேறி பற்பல யுகங்களுக்குப் பின்னர், கலியுக துவக்க காலகட்டத்தில், பந்தள தேசத்தில் ஸ்ரீசாஸ்தாவின் திருஅவதாரமாகத் தோன்றிய மூர்த்தியே சுவாமி ஐயப்பன் (கலியுகம் துவங்கி சுமார் 5100 வருடங்களே கடந்துள்ளன).
மூல தெய்வமான ஸ்ரீமகா சாஸ்தாவுக்கு 'பூரணை, புஷ்கலை' எனும் இரு தேவியர் உண்டு, அவதார மூர்த்தியான சுவாமி ஐயப்பனோ பிரம்மச்சரிய விரதம் பூண்டிருந்தவர். ஸ்ரீசாஸ்தா திருக்கயிலையில் வளர்ந்த நிகழ்வுகள்; அவரின் பால லீலைகள், சிவமூர்த்தியிடம் ஞான உபதேசம் பெற்றது, சர்வலோக தர்ம பரிபாலனத்தை ஏற்றது; பூரணை; புஷ்கலை தேவியரை மணந்த சரிதங்கள் மற்றும் சாஸ்தாவின் பல்வேறு திருஅவதாரங்கள் ஆகியவைகளைப் பிரமாண்ட புராணத்தின் ஒரு பகுதியான 'பூதநாத உபாக்யானம்' எனும் நூல் விரிவாகப் பதிவு செய்கின்றது. மேலும் சாஸ்தாவால் மகிஷி வதமும், அதனையொட்டி சபரி மலையில் சாஸ்தாவின் விக்கிரகத் திருமேனியைப் பரசுராமர் பிரதிஷ்டை செய்வித்த நிகழ்வும் புராண காலத்திலேயே நடந்தேறி விடுகின்றது.
மேற்குறித்த நிகழ்வுகளெல்லாம் நடந்தேறி பலகோடி ஆண்டுகளுக்குப் பின்னரான இக்கலியுகக் காலகட்டத்தில் ஒரு சமயம் சபரி ஆலயம் பெருந்தீக்கு இரையாகி, அப்பகுதி முழுவதுமே உதயணன் எனும் கொடியவனின் கட்டுப்பாட்டுக்குள் வருகின்றது, எவரொருவரும் சபரி ஆலயம் செல்ல இயலாத சூழலில் ஐயனின் வழிபாடும் பெருமளவு குறைந்து விடுகின்றது. சபரிமலைப் பகுதியினை மீட்டெடுக்கவும், சபரி ஆலயத்தை புணர் நிர்மாணம் செய்விக்கவும், ஐயனின் வழிபாடு புதுப்பொலிவு பெற்று மிளிரவும், பந்தள தேசத்தில் ஸ்ரீசாஸ்தா 'சுவாமி ஐயப்பனாக' திருஅவதாரம் புரிகின்றார்.
தன்னுடைய அவதாரக் காலத்தில் 'புலிப்பால் கொணர்தல்' முதலிய பல்வேறு திருவிளையாடல்களைப் புரியும் சுவாமி ஐயப்பன், சபரிமலையின் பல்வேறு பகுதிகளிலுமிருந்த உதயணனின் கூட்டத்தினை முற்றிலும் அழித்தொழித்துத் தர்மத்தினை நிலைநாட்டி அருள் புரிகின்றார். பந்தள அரசரிடம் ஸ்ரீசாஸ்தா ஆலயத்தினை எழுப்பவேண்டிய இடத்தினைக் காண்பித்து, சபரி யாத்திரைக்கான விரத நியமங்கள்; பூசை முறைகள் ஆகியவைகளையும் வகுத்து, குடமுழுக்குத் தினமன்று 'ஸ்ரீசாஸ்தாவின் விக்கிரகத் திருமேனியுள்' சோதி வடிவில் கலந்து விடுகின்றார் சுவாமி ஐயப்பன்.
மூல தெய்வமான சாஸ்தாவின் வாகனங்கள் 'யானை மற்றும் குதிரை', அவதார மூர்த்தியான சுவாமி ஐயப்பனோ வன்புலி வாகனர். மகாசாஸ்தா செண்டு எனும் ஆயுதத்தைத் திருக்கரங்களில் ஏந்தி இருப்பார், சுவாமி ஐயப்பன் 'வில்லன் வில்லாளி வீரனாய்' திருக்காட்சி தருவார். இனி கீழ்க்கண்ட கந்தபுராணத் திருப்பாடலில் இடம்பெறும் 'மகாசாஸ்தாவின் தேவியர் மற்றும் யானை வாகனத்தினைப் பற்றிய குறிப்பினையும்' உணர்ந்துத் தெளிவோம்,
(மகா சாத்தாப் படலம் - திருப்பாடல: 58):
காருறழ் வெய்ய களிற்றிடையாகிப்
பாரிடர் எண்ணிலர் பாங்குற நண்ணப்
பூரணை புட்கலை பூம்புற மேவ
வாரணம் ஊர்பவன் முன்னுற வந்தான்
No comments:
Post a Comment