மணிதாசர் அருளியுள்ள பொன் சொரியும் முத்தையன் பஞ்சகம்

(திரு.அரவிந்த் ஸூப்ரமண்யம் இயற்றியுள்ள 'ஸ்ரீமகா சாஸ்தா விஜயம்' புராண நூலிலிருந்து எடுத்துத் தொகுக்கப் பெற்றுள்ளது): 

(திருப்பாடல் 1)
மனமே நமக்காக வாய்த்த குலதேவரின் மகிமைதான் 
ஆதிசேஷன் வாக்மனம் அடங்கா மகிமை தன்னை 
அற்ப மானிடன் யான் உரைப்பதாமோ?
தனது பொன்னம்பலத்திலகு சந்த்ரோதயன் 
த்ரைலோக்ய சம்மோஹனன் - தரணியில் 
இந்த்ர பரிபூரண நேசன் பக்தி சந்ததம் செய்திருப்போம் 
ஜன ஸமூஹ மேருவில் சிகாமணி தீரனே! என் தீவினைகள் 
மாற்றி மேலும் செல்வங்களாம் பக்தி முக்தி கல்வி 
சந்ததமும் ஈன்று சிந்தைதனில் வீற்றிருப்பாய் 
புனுகு ஜவ்வாது கஸ்தூரி கவயாதி மிருக பூத 
கணநாதனென்று பொன் சொரியும் முத்துப் 
பொதிகை சரிவில் உத்ரன் - என் புத்ர ஸந்தான பதியே 

(திருப்பாடல் 2)
தஞ்சமென வந்தவர்க்கு தருணத்தில் முன்னின்று 
தற்காக்கின்ற கோமான் சாடி வருகின்றதைப் பார்
உலகினில் அந்தணர் சதுர் வேத மாரி பொழிய 
வெஞ்சிலை பூதம் எதிரேற்று கட்டியம் ஓத - வேதாளம் 
குடை பிடிக்க - பிறகில் ஸூந்தரியான யஷியும் 
முல்லைக் குமரியும் வெண்சாமரங்கள் வீச 
அஞ்சாத ரண வெறியன் அடப்பம் கட்ட - அசனி காளாஞ்சி 
ஏந்த - அமராதி தேவர்கள் புஷ்ப வர்ஷம் சொரிய 
வெடி விநோதங்கள் பல வாத்ய கோஷத்தோடும் 
புஞ்சரி கருணாகரன் ஜகன்மோஹனன் வந்து 
பாக்யங்கள் தருவார் பொன் சொரியும் முத்துப் 
பொதிகை சரிவில் உத்ரன் - என் புத்ர ஸந்தான பதியே 

(திருப்பாடல் 3)
ஆதாரமான பொன்னம்பலவனும் பவனி வருகின்றதை
பார் - ஆரியன் பட்டரணவீரன் உடைவாள் 
கொண்டு அகம்படி பிடித்து வருவார் 
பாதாள பூதம் எதிர் சூதாளி சாவலன் பட்டகசன் 
காப்பவன் பேர்வந்த ரண நீல கண்டன் 
இருளன் அண்டையில் பலபேசி லாட தவசி 
வாதாடும் வன்னியன் தூதோட, வான்சுடலை மாடனும் 
கூடவருவார் - மந்த்ர மூர்த்தி தலைவனும் 
துயர் தீர்த்து எங்கள் மனதபீஷ்டங்கள் தருவார் 
பூதாதிபன் துரிய வேத சாஸ்த்ராகம புராணங்கள் 
ஓதும் பொருளாம் பொன் சொரியும் முத்துப் 
பொதிகை சரிவில் உத்ரன் - என் புத்ர ஸந்தான பதியே 

(திருப்பாடல் 4)
எங்கும் நிறைந்த சிவனங்கம் புணர்ந்த மால் 
ஈன்றெடுத்த அழகு பெருமான் - இக்கலியுகத்தில் 
கருணாகரன் - இவர்க்கு நிகர் இவ்வுலகத்தில் ஏது?
துங்க ரண சிங்கனும் செங்கனக சங்கிலி தோளனும் 
காளி தளவாய் துஷ்டரை விரட்டு, மரியோட்டு 
கட்டாரியன் முன்னோட்டு பட்டராயன் 
சங்கம் சுருட்டி முருகன் சரகுருட்டியும், சூழ்ந்திலங்கு 
பக்தாந்தரங்கனென்றும் துன்பம் கடத்தி அருளின்பம் 
கொடுத்துபரி தொண்டர் ஆட்கொண்டிருப்பார் 
பொங்கு புகழ் பொன்னாட்டு சிங்க நகர் தென்னாட்டு 
புவிராஜ குல நேசனென்றும் பொன் சொரியும் முத்துப் 
பொதிகை சரிவில் உத்ரன் - என் புத்ர ஸந்தான பதியே 

(திருப்பாடல் 5)
சீரணிக்கரந்தையர் சேரிணக்கம் கொண்டு, செல்வம் 
கொடுத்ததும் இவரே - செட்டி வேடம் பூண்டு வந்த 
சில துஷ்டரை சிஷை செய்ததும் இவரே 
தாரணியில் ஆரணன் காரணத்தால் தலைச்சுமடு 
எடுத்தவரும் இவரே - தலையழுத்தி ஆண்டவன் 
சிலை கொண்டு அடித்ததுடன் ஸ்தானம் கொடுத்ததும் இவரே 
வாரம் மீதேறி கோரங்கள் செய்ததில் மஸ்தகம் 
உடைத்ததும் இவரே - மனதிரக்கம் கொண்டு 
செங்கையினால் நமக்கு மைந்தர் வரம் தருவதும் இவரே 
பூரணானந்த ஜெய வீர மணி தாஸனும் போற்றும் குல 
தெய்வமும் இவரே! பொன் சொரியும் முத்துப் 
பொதிகை சரிவில் உத்ரன் - என் புத்ர ஸந்தான பதியே 

No comments:

Post a Comment