ஸ்ரீமகா சாஸ்தாவின் திருஅவதாரம் (கந்த புராண விளக்கங்கள்):

8ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தோன்றிய கச்சியப்ப சிவாச்சாரியார் தீந்தமிழில் அருளியுள்ள கந்த புராணத்தின் பல்வேறு பகுதிகளில் 'அரிகர புத்திரரான ஸ்ரீமகாசாஸ்தாவின் அவதார நிகழ்வுகள்' தொகுக்கப் பெற்றுள்ளன. குறிப்பாக அசுர காண்டத்தின் இறுதியில் இடம்பெறும் 'மகா சாத்தாப் படலம்; மகாகாளர் வரு படலம்' ஆகியவை ஸ்ரீசாஸ்தாவின் பிரபாவத்தை நன்முறையில் பதிவு செய்கின்றன. ஸ்ரீசாஸ்தாவை 'சாத்தன், மாசாத்தனார்; ஐயன்' எனும் பல்வேறு திருப்பெயர்களால் போற்றி மகிழ்கின்றார் கச்சியப்பர்.

மகா சாத்தாப் படலம் 68 திருப்பாடல்களைக் கொண்டது. இவற்றுள் முதல் 47 திருப்பாடல்களில் 'தேவர்கள் அசுரர்களோடு இணைந்துப் பாற்கடலைக் கடைதல், ஸ்ரீமகாவிஷ்ணுவின் மோகினி அவதாரம்; சிவபெருமான் மோகினியைக் காண்பதற்காகப் பாற்கடலுக்கு எழுந்தருளி வரும் தெய்வ நாடகம்' ஆகிய நிகழ்வுகளை விவரித்துக் கொண்டே வரும் கச்சியப்பர் '48ஆம் திருப்பாடலில்' பரப்பிரம்ம சுவரூபரான ஸ்ரீமகாசாஸ்தாவின் திருஅவதாரத்தைப் பதிவு செய்கின்றார். இனி அத்திருப்பாடல்களை உணர்ந்து மகிழ்வோம்.

(மகா சாத்தாப் படலம் - திருப்பாடல் 48):
இந்த வண்ணம் இருக்க முராரியும்
அந்தி வண்ணத்து அமலனும் ஆகியே
முந்து கூடி முயங்கிய எல்லையில்
வந்தனன் எமை வாழ்விக்கும் ஐயனே.

பொருள்:
இவ்வாறு மோகினி வடிவிலிருந்த பரந்தாமனின் திருப்பார்வையும், அந்தி வண்ணத் திருமேனியரான சிவமூர்த்தியின் திருப்பார்வையும் கணநேரம் சங்கமிக்கும் தெய்வ நாடகமொன்று நடந்தேற, அதனின்றும் கோடி சூர்ய பிரகாசமாய்த் தோன்றுகின்றார் தாரகப் பிரம்ம சுவரூபரான ஸ்ரீசாஸ்தா. 'ஐயன்' எனும் அற்புத திருநாமத்தால் ஸ்ரீசாஸ்தாவைப் போற்றிப் பணிகின்றார் கச்சியப்பர்.

(மகா சாத்தாப் படலம் - திருப்பாடல் 49):
மைக் கருங்கடல் மேனியும் வானுலாம்
செக்கர் வேணியும் செண்டுறு கையுமாய்
உக்கிரத்துடன் ஓர்மகன் சேர்தலும்
முக்கண் எந்தை முயக்கினை நீங்கினான்.
-
பொருள்:
கருங்கடல் வண்ணத்தினராகவும், சிவந்த திருச்சடையுடனும், திருக்கரங்களில் செண்டு எனும் ஆயுதத்தை ஏந்திய அற்புதத் திருக்கோலத்தில், உக்கிர வடிவினராய் ஸ்ரீமகாசாஸ்தா தோன்றினார். 

(மகா சாத்தாப் படலம் - திருப்பாடல் 50):
அத்தகும் திரு மைந்தற்(கு) அரிகர
புத்திரன் என்னும் நாமம் புனைந்து பின்
ஒத்த பான்மை உருத்திரர் தம்மொடும்
வைத்து மிக்க வரம் பல நல்கியே
-
பொருள்:
இவ்விதம் போற்றுதற்குரிய முறையில் உதித்த திவ்ய பாலகனான ஸ்ரீமகாசாஸ்தாவிற்கு மறை முதல்வரான சிவபெருமான் 'அரிகர புத்திரர்' எனும் திருநாமம் அளித்து, ஐயனை உருத்திரர்கள் அனைவருக்கும் நடுநாயகமாய் வீற்றிருக்கச் செய்துப் பின்னர் எண்ணற்ற  நல்வரங்களையும் அளித்து அருள் செய்தார்.

கச்சியப்பர்  'சாஸ்தா படலம்' என்று குறிக்காமல் 'மகா சாஸ்தா படலம்' என்று குறித்துள்ளதன் மூலம் ஐயனின் பிரபாவம் அளவிடற்கரியது என்பது தெளிவு (சிவ சிவ)!!!

மகா சாஸ்தாவும் சுவாமி ஐயப்பனும் ஒரே மூர்த்தியா அல்லது வெவ்வேறு தெய்வங்களா? - ஒரு தெளிவான பார்வை:

கற்ப கோடி வருடங்களுக்கு முன்னர், தேவர்களும் அசுரர்களுமாய் இணைந்துப் பாற்கடலைக் கடைந்த காலகட்டத்தில், சிவபெருமானின் திருப்பார்வையும்' மோகினி வடிவிலிருந்த' ஸ்ரீமகாவிஷ்ணுவின் திருப்பார்வையும் கணநேரம் சங்கமிக்க அதனின்றும் கோடி சூர்யப் பிரகாசமாய் தோன்றியவர் 'அரிகர புத்திரரான' ஸ்ரீமகாசாஸ்தா. இந்நிகழ்வு நடந்தேறி பற்பல யுகங்களுக்குப் பின்னர், கலியுக துவக்க காலகட்டத்தில், பந்தள தேசத்தில் ஸ்ரீசாஸ்தாவின் திருஅவதாரமாகத் தோன்றிய மூர்த்தியே சுவாமி ஐயப்பன் (கலியுகம் துவங்கி சுமார் 5100 வருடங்களே கடந்துள்ளன).

மூல தெய்வமான ஸ்ரீமகா சாஸ்தாவுக்கு 'பூரணை, புஷ்கலை' எனும் இரு தேவியர் உண்டு, அவதார மூர்த்தியான சுவாமி ஐயப்பனோ பிரம்மச்சரிய விரதம் பூண்டிருந்தவர். ஸ்ரீசாஸ்தா திருக்கயிலையில் வளர்ந்த நிகழ்வுகள்; அவரின் பால லீலைகள், சிவமூர்த்தியிடம் ஞான உபதேசம் பெற்றது, சர்வலோக தர்ம பரிபாலனத்தை ஏற்றது; பூரணை; புஷ்கலை தேவியரை மணந்த சரிதங்கள் மற்றும் சாஸ்தாவின் பல்வேறு திருஅவதாரங்கள் ஆகியவைகளைப் பிரமாண்ட புராணத்தின் ஒரு பகுதியான 'பூதநாத உபாக்யானம்' எனும் நூல் விரிவாகப் பதிவு செய்கின்றது. மேலும் சாஸ்தாவால் மகிஷி வதமும், அதனையொட்டி சபரி மலையில் சாஸ்தாவின் விக்கிரகத் திருமேனியைப் பரசுராமர் பிரதிஷ்டை செய்வித்த நிகழ்வும் புராண காலத்திலேயே நடந்தேறி விடுகின்றது.

மேற்குறித்த நிகழ்வுகளெல்லாம் நடந்தேறி பலகோடி ஆண்டுகளுக்குப் பின்னரான இக்கலியுகக் காலகட்டத்தில் ஒரு சமயம் சபரி ஆலயம் பெருந்தீக்கு இரையாகி, அப்பகுதி முழுவதுமே உதயணன் எனும் கொடியவனின் கட்டுப்பாட்டுக்குள் வருகின்றது, எவரொருவரும் சபரி ஆலயம் செல்ல இயலாத சூழலில் ஐயனின் வழிபாடும் பெருமளவு குறைந்து விடுகின்றது. சபரிமலைப் பகுதியினை மீட்டெடுக்கவும், சபரி ஆலயத்தை புணர் நிர்மாணம் செய்விக்கவும், ஐயனின் வழிபாடு புதுப்பொலிவு பெற்று மிளிரவும், பந்தள தேசத்தில் ஸ்ரீசாஸ்தா 'சுவாமி ஐயப்பனாக' திருஅவதாரம் புரிகின்றார். 

தன்னுடைய அவதாரக் காலத்தில் 'புலிப்பால் கொணர்தல்' முதலிய பல்வேறு திருவிளையாடல்களைப் புரியும் சுவாமி ஐயப்பன், சபரிமலையின் பல்வேறு பகுதிகளிலுமிருந்த உதயணனின் கூட்டத்தினை முற்றிலும் அழித்தொழித்துத் தர்மத்தினை நிலைநாட்டி அருள் புரிகின்றார். பந்தள அரசரிடம் ஸ்ரீசாஸ்தா ஆலயத்தினை எழுப்பவேண்டிய இடத்தினைக் காண்பித்து, சபரி யாத்திரைக்கான விரத நியமங்கள்; பூசை முறைகள் ஆகியவைகளையும் வகுத்து, குடமுழுக்குத் தினமன்று 'ஸ்ரீசாஸ்தாவின் விக்கிரகத் திருமேனியுள்' சோதி வடிவில் கலந்து விடுகின்றார் சுவாமி ஐயப்பன்.

மூல தெய்வமான சாஸ்தாவின் வாகனங்கள் 'யானை மற்றும் குதிரை', அவதார மூர்த்தியான சுவாமி ஐயப்பனோ வன்புலி வாகனர். மகாசாஸ்தா செண்டு எனும் ஆயுதத்தைத் திருக்கரங்களில் ஏந்தி இருப்பார், சுவாமி ஐயப்பன் 'வில்லன் வில்லாளி வீரனாய்' திருக்காட்சி தருவார். இனி கீழ்க்கண்ட கந்தபுராணத் திருப்பாடலில் இடம்பெறும் 'மகாசாஸ்தாவின் தேவியர் மற்றும் யானை வாகனத்தினைப் பற்றிய குறிப்பினையும்' உணர்ந்துத் தெளிவோம், 

(மகா சாத்தாப் படலம் - திருப்பாடல: 58):
காருறழ் வெய்ய களிற்றிடையாகிப்
பாரிடர் எண்ணிலர் பாங்குற நண்ணப்
பூரணை புட்கலை பூம்புற மேவ
வாரணம் ஊர்பவன் முன்னுற வந்தான்

திருநாவுக்கரசர் தேவாரத்தில் சபரிமலை ஐயன்:

சைவத் திருமுறைகளின் பல்வேறு பகுதிகளில் சாஸ்தா பற்றிய குறிப்புகள் இடம்பெறுகின்றன. சங்கர நாராயண தத்துவங்களின் சங்கமத்தினின்றும் தோன்றிய மகா சாஸ்தாவைத் தமிழ்ப்படுத்தி 'சாத்தன், மாசாத்தனார்' எனும் திருநாமங்களால் சைவ சமய அருளாளர்கள் குறித்து வந்துள்ளனர்.

பின்வரும் திருப்பயற்றூர் தேவாரப் பாடலில் 'சாத்தனை மகனாய் வைத்தார்' என்று பதிவு செய்கின்றார் நாவுக்கரசு சுவாமிகள், 
-
பார்த்தனுக்கருளும் வைத்தார் பாம்பரை ஆட வைத்தார்
சாத்தனை மகனாய் வைத்தார் சாமுண்டி சாம வேதம்
கூத்தொடும் பாட வைத்தார் கோளரா மதிய நல்ல
தீர்த்தமும் சடையில் வைத்தார் திருப்பயற்றூரனாரே!!

கலியுக வரதனே சரணம் ஐயப்பா:

எப்படி ஸ்ரீமகாவிஷ்ணுவை மூல தெய்வமாகவும், ஸ்ரீராமர் மற்றும் ஸ்ரீகிருஷ்ணரை அவதார மூர்த்திகளாகவும் வழிபடுகின்றோமோ அதே முறையில் மகா சாஸ்தா மூல தெய்வமாகவும், சாஸ்தாவின் கலியுக அவதாரமாக சுவாமி ஐயப்பனும் வழிபடப் பெற்று வருகின்றார்கள். மூல தெய்வமான சாஸ்தாவிற்கு பூரணை;புஷ்கலை எனும் இரு தேவியர் உண்டு, அவதார மூர்த்தியான சுவாமி ஐயப்பனோ பிரம்மச்சர்ய விரதம் பூண்டவர். 

இந்திராணிக்கு அருளிய மகா சாஸ்தா (கந்த புராணம் விவரிக்கும் அற்புத நிகழ்வுகள்):

சிவசக்தி ஐக்கிய சுவரூபரான மகா சாஸ்தா தேவேந்திரனான இந்திரனுடைய தேவிக்குப் பேரருள் புரிந்த நிகழ்வினைக் கச்சியப்பர் அருளியுள்ள கந்த புராணத்தின் வழி நின்று இப்பதிவினில் சிந்தித்து மகிழ்வோம்.
சூரபத்மனின் கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே செல்கின்றது, முருகப் பெருமானின் அவதாரமோ இன்னமும் நடந்தேறவில்லை, இனியும் சூரனின் கொடுஞ்செயல்களைத் தாங்கிக் கொள்ள முடியாது எனும் நிலையில் இந்திரன் மீண்டுமொரு முறை 'திருக்கயிலை சென்று சிவபெருமானிடம் மன்றாடுவதே' செய்யத் தக்கது என்று கருதுகின்றான். எனில் 'அச்சமயத்தில் இந்திராணிக்குக் காவலாக யார் இருப்பார்? சூரனின் ஏவலர் மனைவியைக் கவர்ந்து செல்லக் கூடுமே' என்று பலவாறு சிந்தித்து வருந்துகின்றான். இறுதியில் சாஸ்தாவின் திருவடிகளைச் சரணமாகப் பற்றுவதே தக்கதொரு உபாயம் என்று தெளிகின்றான்.
மன மெய் வாக்கினால் ஒருமையுற்றுத் துதித்து நிற்கும் இந்திரனின் முன்பு கோடி சூர்யப் பிரகாசமாய்த் தோன்றும் மகாசாஸ்தா 'அன்பனே! கவலையை ஒழி! இந்திராணிக்கு நாம் அடைக்கலம் தந்தோம்!' என்று அருள் புரிந்துத் தன் அணுக்கத் தொண்டரும், பிரதான பூதப் படைத் தலைவருமான மகா காளரிடம் 'காளனே! இந்திரன் சிவமூர்த்தியைத் தரிசித்து வரத் திருக்கயிலை செல்லவிருக்கின்றான், அச்சமயமதில் இந்திராணிக்குத் தீங்கேதும் நேரா வண்ணம் காவல் புரிவாய்' என்று கட்டளையிட்டு மறைகின்றார்.
ஆறுமுகக் கடவுளின் திருஅவதாரத்திற்கு முந்தைய நிகழ்வுகள் இவை ஆதலால் கந்தக் கடவுள் சாஸ்தாவிற்கு இளைய சகோதரர் என்பது தெளிவு. இந்திரன் திருக்கயிலைக்குச் சென்று விட, இந்திராணியோ 'கணவர் கயிலையினின்று திரும்பும் வரையிலும் சிவலிங்க பூஜையிலும், சிவ தியானத்திலுமே' லயித்து இருக்கின்றார். இது ஒருபுறமிருக்க சூரபத்மனின் தங்கையான அஜமுகி, இந்திராணியை சிறைப் பிடித்துத் தமையனான சூரனுக்குப் பரிசளிப்பதாகச் சூளுரைத்து இந்திராணி இருக்குமிடத்திற்கு வருகின்றாள்.
அஜமுகியைக் கண்டு அஞ்சி நடுங்கும் இந்திராணி ஐயனான மகா சாஸ்தாவை நோக்கி எழுப்பும் அபயக் குரலை கச்சியப்பர் கந்த புராணத்தில் அற்புதமாய் பதிவு செய்கின்றார், 

(கந்த புராணம் - மகாகாளர் வரு படலம்: பாடல் 1, 2):
பையரா அமளியானும் பரம்பொருள் முதலும் நல்கும்
ஐயனே ஓலம்! விண்ணோர்க்கு ஆதியே ஓலம்! செண்டார்
கையனே ஓலம்! எங்கள் கடவுளே ஓலம்! மெய்யர்
மெய்யனே ஓலம்! தொல் சீர் வீரனே ஓலம் ஓலம்!
-
ஆரணச் சுருதி ஓர்சார் அடல்உருத்திரனென்று ஏத்தும்
காரணக் கடவுள் ஓலம்! கடல் நிறத்து எந்தாய் ஓலம்!
பூரணைக்கு இறைவா ஓலம்! புட்கலை கணவா ஓலம்!
வாரணத்து இறைமேல் கொண்டுவரும் பிரான் ஓலம்! என்றாள்.
ஐயனின் திருவருள் ஏவ, மகாகாளர் அவ்விடத்தே தோன்றிக் கடும் சீற்றத்துடன் அஜமுகியின் கரங்களைத் துண்டித்து இந்திராணியைக் காத்துப் பின் மறைகின்றார். பல கோடி வருடங்களுக்கு முந்தைய கந்த புராண காலகட்ட நிகழ்வுகளில் மகாசாஸ்தாவின் பிரபாவத்தை விளக்கும் அற்புதப் பகுதியிது (குறிப்பு: சாஸ்தா சுவாமி ஐயப்பனாக அவதரித்தது தற்போதைய கலியுகத் துவக்க காலகட்டத்திலேயே எனும் புரிதலும் அவசியம்).

ஹரிஹர புத்திரரான மகா சாஸ்தாவே ஐயனார் (ஆதார பூர்வ விளக்கங்களும் நுட்பங்களும்):

சங்கர நாராயண தத்துவங்களின் சங்கமத்திலிருந்து தோன்றிய மகா சாஸ்தாவை 'ஐயன்' எனும் திருநாமத்தால் கந்தபுராணம் போற்றுகின்றது. 

(கந்த புராணம் - அசுர காண்டம்: மகா சாத்தா படலம் - பாடல் 48):
இந்த வண்ணம் இருக்க முராரியும்
அந்தி வண்ணத்து அமலனும் ஆகியே
முந்து கூடி முயங்கிய எல்லையில்
வந்தனன் எமை வாழ்விக்கும் ஐயனே.

போற்றுதற்குரிய ஐயன் எனும் திருப்பெயரோடு 'ஆர்' எனும் கூடுதல் மேன்மைக்குரிய விகுதியும் சேர்க்கப் பெற்று மகா சாஸ்தாவே 'ஐயனாராக' கிராமங்களிலும் நகரங்களிலும் வழிபடப்பட்டு வருகின்றார் என்று காஞ்சி மகாப் பெரியவர் தெளிவுறுத்தியுள்ளார் (ஆதார நூல்: தெய்வத்தின் குரல்: முதல் பாகம்).

ஹரிஹர புத்திரரான மகா சாஸ்தா சில தலங்களில் சுயம்பு மூர்த்தியாகவும் மற்றும் சில திருக்கோயில்களில் ரிஷிகள்; முனிவர்கள் மற்றும் பெரியோர்களால் பிரதிஷ்டை செய்விக்கப் பெற்ற நிலையிலும் எழுந்தருளி இருக்கின்றார். இவற்றோடு கூட, ஒவ்வொரு புதிய ஊர் நிர்மாணிக்கப்படும் பொழுதும் 'இந்த இடங்களில் இந்த ஆலயம் அமைக்கப்பட வேண்டும்' எனும் ஆகம விதிகளின் படி, சாஸ்தாவை 'ஐயனார்' எனும் திருநாமத்துடன், காவல் தெய்வமாக எல்லையில் எழுந்தருளச் செய்து வழிபட்டு வந்தனர். ஐயனின் வழிபாடு மிகமிகத் தொன்மையானது.
கிராமப்புரங்களில் பெரிதும் வழிபடப்பட்டு வருவதனால் ஐயனாரை கிராம தேவதை என்று பிழையாகக் கருதிவிடாமல் 'வைதீக சனாதன தர்மமாகிய நமது இந்து தர்மத்துக்குரிய சிவசக்தி தத்துவங்களிலிருந்து வெளிபட்ட ஒப்புவமையற்ற திருக்குமாரரே ஐயனார்' எனும் தெளிவான புரிதலோடு ஐயனைப் போற்றித் துதித்தல் வேண்டும். 'ஐயன்' கிராமங்களுக்கு மட்டுமா காவல் தெய்வம்? கோடான கோடி அண்டங்கள் முழுமைக்கும் அம்மூர்த்தியே தனிப்பெரும் காவல் என்பதனை அறிவிக்கும் கீழ்க்கண்ட கந்த புராணத் திருப்பாடலை இனிக் காண்போம்,

(கந்த புராணம் - அசுர காண்டம்: மகா சாத்தா படலம் - பாடல் 54):
அங்கண் மேவி அரிகரபுத்திரன்
சங்கையில் பெரும் சாரதர் தம்மொடும்
எங்கும் ஆகி இருந்து எவ்வுலகையும்
கங்குலும் பகல் எல்லையும் காப்பனால்!!!
-
பொருள்:
இங்கனம் ஹரிஹர புத்திரரான ஐயன் 'எவ்விடத்திலும் நீக்கமற நிறைந்த நிலையில் எழுந்தருளி இருந்து', இரவும் பகலும் அண்டங்களின் எல்லை முழுவதையும் காத்து வருகின்றார்.
சில தலங்களில் குதிரை அல்லது யானை வாகனங்களின் மீதும், இன்ன பிற தலங்களில் அமர்ந்த திருக்கோலத்தில் திருக்கரங்களில் வாளுடனும் ஐயனார் எழுந்தருளி இருப்பார். மேலும் எண்ணிறந்த திருக்கோயில்களில் 'பூரணை; புஷ்கலை தேவியரோடு எழுந்தருளி இருப்பது மற்றொரு சான்று!  ஸ்ரீசாஸ்தாவிற்கு 'பூரணை - புஷ்கலை' எனும் இரு அருட்சக்திகள் இருப்பதைக் கந்தபுராணம் பல்வேறு திருப்பாடல்களில் பதிவு செய்கின்றது,

(கந்த புராணம் - அசுர காண்டம்: மகா சாத்தா படலம் - பாடல் 58):
காருறழ் வெய்ய களிற்றிடையாகிப்
பாரிடர் எண்ணிலர் பாங்குற நண்ணப்
பூரணை புட்கலை பூம்புற மேவ
வாரணம் ஊர்பவன் முன்னுற வந்தான்
எந்த மூர்த்தியைக் கோடான கோடி பக்தர்கள் சபரி மலை சென்று தரிசித்தும் போற்றியும் வருகின்றனரோ, அதே மூல மூர்த்தியான மகா சாஸ்தா கிராமங்களிலும் பல்வேறு பெருநகரங்களிலும் ஐயனாராக, காவல் தெய்வமாக எழுந்தருளி இருக்கின்றார். ஐயனின் படை வீரரான மகா காளரையே கிராமங்களில் 'கருப்பசுவாமி' எனும் பெயரில் வழிபட்டு வருகின்றனர்!!!

(இறுதிக் குறிப்பு: சாஸ்தா; ஐயனார் என்பது ஒரே மூல தெய்வத்தைக் குறிக்கும் இருவேறு திருப்பெயர்கள், மகா சாஸ்தாவின் கலியுக அவதாரமே சுவாமி ஐயப்பன்).

கலியுக காலகட்டத்தில் பந்தள தேசத்தில் சுவாமி ஐயப்பனின் திருஅவதாரம் (நிகழ்வுகளும் நுட்பங்களும்):

சாஸ்தாவையே குல தெய்வமெனக் கொண்டு தென்காசியில் வசித்து வரும் பாண்டிய அரச குலத்தவர் கேரளத்திலுள்ள பந்தளத்துக்கு புலம் பெயர்கின்றனர். அம்மரபின் வழியில் கோலோச்சி வரும் இராஜசேகர பாண்டியன் எனும் சிற்றரசர் சந்தான பாக்கியம் வேண்டி சிவபெருமானிடம் அனுதினமும் விண்ணப்பித்து வருகின்றார். இது ஒருபுறமிருக்க, உதயணன் எனும் கொள்ளையனின் ஆதிக்கமும் வலிமையையும் பந்தளத்தில் மிகுந்து வருகின்றது.
இக்கொடியவன் சபரி மலை; இஞ்சிப் பாறை; தலைப்பாறை ஆகிய பகுதிகளை ஆக்கிரமித்து, பெரும் கோட்டைகளையும் கட்டிக் கொண்டு தனியொரு அரசாட்சியே நடத்தி வருகின்றான். கொலை; கொள்ளைகள் மிகுந்து இருந்ததால் சபரிமலையிலுள்ள சாஸ்தாவின் ஆலயத்திற்கு எவரொருவராலும் செல்ல இயலாது போகின்றது, மெல்ல மெல்ல சாஸ்தாவின் வழிபாடு ஷீணம் அடையத் துவங்குகின்றது. இது போதாதென்று உதயணன் சாஸ்தா ஆலயம் முழுவதையும் பெருந்தீக்கு இரையாக்குகின்றான்.
இக்கட்டான இச்சூழலில், மகா சாஸ்தா பம்பா நதிக்கரையில் 'சுவாமி ஐயப்பனாக' திருஅவதாரம் எடுக்கின்றார். பந்தள மன்னர் இப்புவி வாழத் தோன்றிய குழந்தையைச் சிவப் பிரசாதமாகக் கருதிச் சிறப்புடன் வளர்த்து வருகின்றார். சிறு வயதிலேயே வேத ஆகமங்களை ஓதாது உணரும் தன்மையினைக் கண்டு வியக்கும் குருகுல ஆசிரியர் ஐயன் பரிபூரண இறையவதாரமே என்றுணர்ந்துத் தெளிகின்றார்.
இந்நிலையில் பட்டத்தரசியாருக்கு ஆண் மகவொன்று பிறக்க, வஞ்சக எண்ணம் கொண்ட சில மந்திரிகள் ஐயனைக் கொல்ல அரசியாரோடு சேர்ந்து திட்டமொன்று தீட்டுகின்றனர். அரசியார் தனக்குத் தீராத தலை வலியிருப்பதாக நடிக்க, அரண்மனை வைத்தியர்களை 'புலிப் பால் ஒன்றினாலேயே இந்நோய் குணமாகும்' என்று கூற வைக்கின்றனர். கருணைப் பெருங்கடலான சுவாமி ஐயப்பன் அவர்களின் அறியாமையைப் போக்கி அருள் புரியத் திருவுள்ளம் பற்றுகின்றார்.
வனம் சென்று புலிப்பாலினைக் கொணர்வதாகக் கூறிச் செல்கின்றார். வனத்திலுள்ள கொடும் புலிகள் யாவும் 'தாய்ப் பசுவினைச் சூழும் கன்றுகளைப் போல' ஐயனைச் சூழ்கின்றன. தாரக பிரம்மமான சுவாமி ஐயப்பனும் அப்புலிகளுள் ஒன்றின் மீது ஆரோகணித்துப் பந்தள அரண்மனையினை அடைகின்றார். அனைவரும் ஐயனின் இறைத்தன்மையினை உணர்ந்துப் பணிகின்றனர்.
சுவாமி ஐயப்பன் சபரிமலைப் பகுதிகள் யாவிலுமிருந்த உதயணனின் கூட்டத்தினை முற்றிலும் அழித்தொழித்துத் தர்மத்தினை நிலைநாட்டுகின்றார். பந்தள அரசரிடம் சாஸ்தா ஆலயம் மீண்டும் அமையவேண்டிய இடத்தினை அடையாளம் காட்டி, சபரி யாத்திரைக்கான விரத நியமங்கள்; பூசை முறைகள் ஆகியவைகளையும் வகுத்துக் கூறுகின்றார்.
குடமுழுக்குத் திருநாளன்று அனைவரும் காணுமாறு 'பேரொளிப் பிழம்பாக' சாஸ்தாவின் விக்கிரகத் திருமேனியுள் கலந்து மறைகின்றார். அனைவரும் எண்ணிக் கொண்டிருப்பது போல் சுவாமி ஐயப்பனின் அவதார நோக்கம் மகிஷி வதம் அன்று, மகிஷி சம்ஹாரம் சாஸ்தாவால் புராண கால கட்டத்திலேயே நடந்தேறி விடுகின்றது. சுவாமி ஐயப்பனின் அவதார நோக்கம் கலியுகத்தில் சாஸ்தா வழிபாட்டினை புதுப்பொலிவோடு மிளிரச் செய்வதும், சபரி ஆலயத்தினை புனர்நிர்மாணம் செய்விப்பதுமே ஆகும் (மணிகண்டப் பொருளே சரணம் ஐயப்பா).

சபரி மலை ஐயனின் அறுபடை வீடுகள்:

சொரிமுத்து ஐயனார் திருக்கோயில் (பொன் சொரியும் முத்தையன் கோயில்) - (திருநெல்வேலி மாவட்டம் - தமிழ்நாடு) - மூலாதாரத் தலம்

அச்சன்கோயில் தர்ம சாஸ்தா திருக்கோயில் (கொல்லம் மாவட்டம் - கேரள மாநிலம்) - ஸ்வாதிஷ்டானத் தலம்

ஆரியங்காவு சாஸ்தா திருக்கோயில் (கொல்லம் மாவட்டம் - கேரள மாநிலம்) - மணிபூரகத் தலம்

குளத்துப்புழை சாஸ்தா திருக்கோயில் (கொல்லம் மாவட்டம் - கேரள மாநிலம்) - அனாகதத் தலம்

எருமேலி தர்மசாஸ்தா திருக்கோயில் (கோட்டயம் மாவட்டம் - கேரள மாநிலம்) - விசுக்தித் தலம்

சபரிமலை திருக்கோயில் (பத்தனம்திட்டா மாவட்டம் - கேரள மாநிலம்) - ஆக்ஞா சக்கரத் தலம்

பெரிய புராண நிகழ்வுகளில் மகா சாஸ்தா பற்றிய குறிப்புகள்:

சுந்தரமூர்த்தி நாயனாரும், சேரமான் பெருமாள் நாயனாரும் தத்தமது அவதார நோக்கம் நிறைவுற்ற நிலையில் திருக்கயிலையை அடைந்து சிவபெருமானின் திருமுன்பு தொழுது நிற்கின்றனர். அச்சமயத்தில் சேரமான் நாயனார் 'திருக்கயிலாலய ஞான உலா' எனும் பாடல் தொகுப்பினால் சிவமூர்த்தியைப் போற்றுகின்றார். சிவாலயங்களில் சிவபெருமானின் உற்சவ மூர்த்தி விக்கிரகத் திருமேனியுடன் திருவீதியுலா வருவதை அனைவரும் தரிசித்திருப்போம், அதே போன்று திருக்கயிலையில், தெய்வங்களும், கந்தர்வர்களும், முனிவர்களும், சிவகணங்களும், எண்ணிறந்த தேவர்களும் உடன்வர, சிவமூர்த்தி தன் சுயஉருவுடன் பிரத்யட்சமாய் எழுந்தருளி திருவீதியுலா கண்டு அருள் புரியும் அற்புதத் திருக்காட்சியினைப் பதிவு செய்வது 'திருக்கயிலாய ஞான உலா'.    

இவ்விதம் திருக்கயிலையில் சேரமான் அரங்கேற்றிய உலாவினை மகா சாஸ்தா மண்ணுலகில் 'திருப்பிடவூர்' எனும் தலத்தில் வெளிப்படுமாறு செய்தார் என்று பெரிய புராணத்தின் வெள்ளானைச் சருக்கத்தில் பதிவு செய்கின்றார் சேக்கிழார் அடிகள். இனி இதுகுறித்த திருப்பாடலைக் காண்போம்,

சேரர் காவலர் விண்ணப்பம் செய்ய அத்திருவுலாப் புறம்அன்று
சாரல் வெள்ளியங் கயிலையில் கேட்ட மாசாத்தனார் தரித்துஇந்தப்
பாரில் வேதியர் திருப்பிடவூர் தனில் வெளிப்படப் பகர்ந்தெங்கும்
நார வேலைசூழ உலகினில் விளங்கிட நாட்டினர் நலத்தாலே.

(குறிப்பு: மகா சாஸ்தா எனும் திருநாமத்தைத் தீந்தமிழில் 'மாசாத்தனார்' என்று சேக்கிழார் குறித்துள்ளார். திருக்கயிலாய ஞான உலா 11ஆம் திருமுறையில் தொகுக்கப் பெற்றுள்ளது)

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் அமைந்துள்ள புண்ணியத் தலம் திருப்பிடவூர் (தற்கால வழக்கில் திருப்பட்டூர்), இத்தலத்திலுள்ள பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில் மிகவும் பிரசித்தம், இவ்வாலயத்திற்கருகில் அமைந்துள்ள தனிக்கோயிலொன்றில் ஹரிஹர புத்திரரான மகா சாஸ்தா 'திருக்கயிலாய ஞான உலா' சுவடிகளைத் தன் திருக்கரங்களில் ஏந்திய திருக்கோலத்தில், 'அரங்கேற்ற நாயனார்' எனும் திருநாமத்தில், பூரணை; புஷ்கலை தேவியரும் உடனிருக்க ஆச்சரியமாய் எழுந்தருளி இருக்கின்றார். கண்கொண்ட பயனாய் இம்மூர்த்தியைத் தரிசித்துப் பணிதல் வேண்டும் (சிவ சிவ).

சபரிமலை ஐயனைப் போற்றும் 108 சரண கோஷங்கள்:

1. சுவாமியே சரணம் ஐயப்பா
2. ஹரிஹரசுதனே சரணம் ஐயப்பா
3. கன்னிமூல கணபதி பகவானே சரணம் ஐயப்பா
4. சக்தி வடிவேலன் சோதரனே சரணம் ஐயப்பா
5. மாளிகைபுரத்து மஞ்சம்மாதேவி லோகமாதாவே சரணம் ஐயப்பா
6. வாவர் சுவாமியே சரணம் ஐயப்பா
7. கருப்பண்ண சுவாமியே சரணம் ஐயப்பா
8. பெரிய கடுத்த சுவாமியே சரணம் ஐயப்பா
9. சிறிய கடுத்த சுவாமியே சரணம் ஐயப்பா
10. வனதேவத மாரே சரணம் ஐயப்பா
11. துர்கா பகவதி மாரே சரணம் ஐயப்பா
12. அச்சன் கோவில் அரசே சரணம் ஐயப்பா
13. அனாத ரட்சகனே சரணம் ஐயப்பா
14. அன்னதானப் பிரபுவே சரணம் ஐயப்பா
15. அச்சம் தவிர்ப்பவனே சரணம் ஐயப்பா
16. அம்பலத்தரசனே சரணம் ஐயப்பா
17. அபயதாயகனே சரணம் ஐயப்பா
18. அகந்தை அழிப்பவனே சரணம் ஐயப்பா
19. அஷ்டசித்தி தாயகனே சரணம் ஐயப்பா
20. அண்டினோரை ஆதரிக்கும் தெய்வமே சரணம் ஐயப்பா
21. அழுதையில் வாசனே சரணம் ஐயப்பா
22. ஆரியங்காவு அய்யாவே சரணம் ஐயப்பா
23. ஆபத்பாந்தவனே சரணம் ஐயப்பா
24. ஆனந்த ஜோதியே சரணம் ஐயப்பா
25. ஆத்ம சுவரூபியே சரணம் ஐயப்பா
26. ஆனைமுகன் தம்பியே சரணம் ஐயப்பா
27. இருமுடி பிரியனே சரணம் ஐயப்பா
28. இன்னலைத் தீர்ப்பவனே சரணம் ஐயப்பா
29. இகபரசுக தாயகனே சரணம் ஐயப்பா
30. இதய கமல வாசனே சரணம் ஐயப்பா
 31.ஈடில்லா இன்பமளிப்பவனே சரணம் ஐயப்பா
32. உமையவள் பாலகனே சரணம் ஐயப்பா
33. ஊமைக்கு அருள் புரிந்தவனே சரணம் ஐயப்பா
34. ஊழ்வினை அகற்றுவோனே சரணம் ஐயப்பா
35. ஊக்கம் அளிப்பவனே சரணம் ஐயப்பா
36. எங்கும் நிறைந்தோனே சரணம் ஐயப்பா
37. எண்ணில்லா ரூபனே சரணம் ஐயப்பா
38. என்குல தெய்வமே சரணம் ஐயப்பா
39. என் குருநாதனே சரணம் ஐயப்பா
40. எரிமேலி வாழும் கிராத சாஸ்தாவே சரணம் ஐயப்பா
41. எங்கும் நிறைந்த நாதப்பிரம்மமே சரணம் ஐயப்பா
42. எல்லோருக்கும் அருள் புரிபவனே சரணம் ஐயப்பா
43. ஏற்றுமானுரப்பன் மகனே சரணம் ஐயப்பா
44. ஏகாந்த வாசியே சரணம் ஐயப்பா
45. ஏழைக்கருள்  புரியும் ஈசனே சரணம் ஐயப்பா
46.  ஐந்துமலை வாசனே சரணம் ஐயப்பா
47. ஐயங்கள் தீர்ப்பவனே சரணம் ஐயப்பா
48. ஒப்பில்லா மாணிக்கமே சரணம் ஐயப்பா
49. ஓங்காரப் பரப்பிரம்மமே சரணம் ஐயப்பா
50. கலியுக வரதனே சரணம் ஐயப்பா
51. கண்கண்ட தெய்வமே சரணம் ஐயப்பா
52. கம்பங்குடிக்குடைய நாதனே சரணம் ஐயப்பா
53. கருணா சமுத்ரமே சரணம் ஐயப்பா
54. கற்பூர ஜோதியே சரணம் ஐயப்பா
55. சபரிகிரி வாசனே சரணம் ஐயப்பா
56. சத்ரு சம்ஹார மூர்த்தியே சரணம் ஐயப்பா
57. சரணாகத ரக்ஷகனே சரணம் ஐயப்பா
58. சரண கோஷப் பிரியனே சரணம் ஐயப்பா
59. சபரிக்கு அருள் புரிந்தவனே சரணம் ஐயப்பா
60. சம்பு குமாரனே சரணம் ஐயப்பா
61. சத்ய சொரூபனே சரணம் ஐயப்பா
62. சங்கடம் தீர்ப்பவனே சரணம் ஐயப்பா
63. சஞ்சலம் அழிப்பவனே சரணம் ஐயப்பா
64. சண்முக சோதரனே சரணம் ஐயப்பா
65. தன்வந்திரி மூர்த்தியே சரணம் ஐயப்பா
66. நம்பினோரைக் காக்கும் தெய்வமே சரணம் ஐயப்பா
67. நர்த்தனப் பிரியனே சரணம் ஐயப்பா
68. பந்தள ராஜகுமாரனே சரணம் ஐயப்பா
69. பம்பை பாலகனே சரணம் ஐயப்பா
70. பரசுராம பூஜிதனே சரணம் ஐயப்பா
71. பக்தஜன ரக்ஷகனே சரணம் ஐயப்பா
72. பக்தவத்சலனே சரணம் ஐயப்பா
73. பரமசிவன் புத்திரனே சரணம் ஐயப்பா
74. பம்பா வாசனே சரணம் ஐயப்பா
75. பரம தயாளனே சரணம் ஐயப்பா
76. மணிகண்டப் பொருளே சரணம் ஐயப்பா
77. மகர ஜோதியே சரணம் ஐயப்பா
78. வைக்கத்தப்பன் மகனே சரணம் ஐயப்பா
79. கானக வாசனே சரணம் ஐயப்பா
80. குலத்துப்புழை பாலகனே சரணம் ஐயப்பா
81. குருவாயூரப்பன்  மகனே சரணம் ஐயப்பா
82. கைவல்யபத தாயகனே சரணம் ஐயப்பா
83. ஜாதிமத பேதமில்லாதவனே சரணம் ஐயப்பா
84. சிவசக்தி ஐக்ய சொரூபனே சரணம் ஐயப்பா
85. சேவிப்பவர்க்கு ஆனந்த மூர்த்தியே சரணம் ஐயப்பா
86. துஷ்டர் பயம்நீக்குவோனே சரணம் ஐயப்பா
87. தேவாதி தேவனே சரணம் ஐயப்பா
88. தேவர்கள் துயரம் தீர்த்தவனே சரணம் ஐயப்பா
89. தேவேந்திர பூஜிதனே சரணம் ஐயப்பா
90. நாராயணன் மைந்தனே சரணம் ஐயப்பா
91. நெய்யாபிஷேகப் பிரியனே சரணம் ஐயப்பா
92. பிரணவ சுவரூபனே சரணம் ஐயப்பா
93. பாப சம்ஹார மூர்த்தியே சரணம் ஐயப்பா
94. பாயசான்ன பிரியனே சரணம் ஐயப்பா
95. வன்புலி வாகனனே சரணம் ஐயப்பா
96. வரப் பிரதாயகனே சரணம் ஐயப்பா
97. பாகவதோத்தமனே சரணம் ஐயப்பா
98. பொன்னம்பல வாசனே சரணம் ஐயப்பா
99. மோகினி சூதனே சரணம் ஐயப்பா
100. மோகன ரூபனே சரணம் ஐயப்பா
101. வில்லன் வில்லாளி வீரனே சரணம் ஐயப்பா
102. வீரமணிகண்டனே சரணம் ஐயப்பா
103. சத்குரு நாதனே சரணம் ஐயப்பா
104. சர்வ ரோக நிவாரகனே சரணம் ஐயப்பா
105. சச்சிதானந்த சொரூபனே சரணம் ஐயப்பா
106. சர்வாபீஷ்ட தாயகனே சரணம் ஐயப்பா
107. சாச்வதபதம் அளிப்பவனே சரணம் ஐயப்பா
108. பதினெட்டாம்படிக்குடைய நாதனே சரணம் ஐயப்பா

யார் இந்த மாளிகைபுரத்து அம்மன்? (சபரி மலையில் நிலவி வரும் தவறான செவிவழிச் செய்திகளும் முறையான விளக்கங்களும்):

மகிஷியைச் சுவாமி ஐயப்பன் சம்ஹாரம் புரிகையில், சாப விமோசனமுற்றுத் தன் பழைய உருவத்தைப் பெறும் மகிஷி 'தன்னை மணக்குமாறு' ஐயப்பனிடம் வேண்டியதாகவும், சுவாமி 'நாம் பிரம்மச்சர்ய விரதம் பூண்டிருப்பதால் உன்னை ஏற்பதற்கில்லை' என்று மறுத்ததாகவும், அதன் பின்னரும் நிர்பந்தித்த மகிஷியிடம் 'இச்சபரி மலைக்கு என்றொரு நாள் ஒரு கன்னி சுவாமியும் வராதிருப்பரோ அன்று உன்னை மணக்கின்றோம்' என்று வாக்களித்ததாகவும் ஒரு கருத்து நிலவி வருகின்றது.

முதன் முறையாக சபரி மலைக்கு விரதமிருந்துச் செல்வோரைக் கன்னி சுவாமி என்று குறிப்பர். இவர்கள் 'சரங்குத்தி ஆல்' எனும் இடத்தில் தங்களது வருகையைப் பதிவு செய்யும் விதமாய்ச் சரம் ஒன்றினைக் குத்திச் செல்வர். சாப விமோசனம் பெற்ற மகிஷி அனுதினமும் இவ்விடம் வந்து கன்னி சுவாமி எவரேனும் வந்துள்ளனரா? என்று சோதிப்பதாகவும், புதிய சரங்களைக் கண்டு ஏமாற்றத்துடன் திரும்பச் செல்வதாகவும் மற்றொரு கருத்தும் பேசப் பெற்று வருகின்றது.

இனி மேற்குறித்துள்ள செவிவழிச் செய்திகளை சில முக்கிய கோணங்களில் சிந்தித்துத் தெளிவோம், முதலில் மகிஷியை வதம் புரிந்தது மூல தெய்வமான மகா சாஸ்தாவே அன்றிச் சுவாமி ஐயப்பன் அன்று. அந்நிகழ்வும் புராண காலத்திலேயே நடந்தேறி விடுகின்றது. ஆனால் சாஸ்தா பந்தள தேசத்தில் சுவாமி ஐயப்பனாக அவதரித்ததோ 'கலியுக கால கட்டத்தின் துவக்கத்தில்' என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும்.

இரண்டாவது கோணம், 'சரி! மூல தெய்வமான சாஸ்தாவே சாப விமோசனம் பெற்ற மகிஷியிடம் அவ்விதம் கூறியிருக்கக் கூடுமோ?' எனில் அதுவும் பிழையான கருத்தே. சாஸ்தாவிற்கு மகிஷி வதத்திற்கு முன்னரே 'பூரணை; புஷ்கலை' எனும் இரு தேவியர் இருந்ததாகப் புராணங்கள் பதிவு செய்கின்றன. எனில் சாஸ்தா தான் பிரம்மச்சரிய விரதம் பூண்டிருப்பதாக மகிஷியிடம் கூறியதாகக் கொள்வது முற்றிலும் பொருந்தாத வாதம்.

மூன்றாவது கோணம், தத்தாத்ரேயருடைய மனைவியாரான லீலாவதி தேவியே தன் கணவரின் சாபமொன்றினால் மகிஷி எனும் அரக்கியாகப் பிறக்க நேர்ந்ததாகப் புராணங்கள் அறிவிக்கின்றன. ஆதலின் சாப விமோசனம் பெற்ற தத்தாத்ரேயரின் தேவியார் 'பரப்பிரம்ம சுவரூபரான மகா சாஸ்தாவிடம்' தன்னை மணக்க வேண்டியதாகக் கூறுவது அனர்த்தமான கூற்று. பிறகு இதனை எவ்விதம் விளங்கிக் கொள்வது?

சபரி வாசனான சாஸ்தா சாப நீக்கம் பெற்ற லீலாவதி தேவியாரை 'மாளிகைபுரத்து அம்மன்' எனும் திருப்பெயரில் தன்னுடைய பரிவார தெய்வங்களுள் ஒருவராக விளங்குமாறு ஆட்கொண்டார் என்பதே சத்தியமான கூற்று. எவ்விதம் சைவ ஆகமங்களில் பரிவார மூர்த்திகள் குறிப்பிடப் பெற்றுள்ளதோ, ஐயனின் ஆலயங்கள் தோறும் 'மாளிகை புரத்து அம்மன்' பரிவார தெய்வமாய் எழுந்தருளி ஐயனுக்குத் தொண்டு புரிந்து வருகின்றார்.

பரம புண்ணியமான சபரி யாத்திரை செல்லும் அடியவர்கள் மேற்கூறிய நுட்பங்களை மனதில் கொண்டு, ஐயனின் பரிவார தெய்வமான மாளிகைபுரத்து அம்மனை முதலில் வணங்கிப் பின் அவரை ஆட்கொண்டு அருளிய ஐயனைத் தரிசித்துப் போற்றுதல் வேண்டும் (சரண கோஷ ப்ரியனே சரணம் ஐயப்பா)!!!

மகா சாஸ்தாவின் நமஸ்கார சுலோகங்கள்:

லோக வீரம் மகா பூஜ்யம்.. சர்வ ரக்ஷாகரம் விபும்
பார்வதி ஹ்ருதயானந்தம்.. சாஸ்தாரம் ப்ரணமாம்யகம்
(சுவாமியே சரணம் ஐயப்பா)
-
விப்ர பூஜ்யம் விஷ்வ வந்த்யம்.. விஷ்ணு சம்போ ப்ரியம் சுதம்
க்ஷிப்ர பிரசாத நிரதம்.. சாஸ்தாரம் ப்ரணமாம்யகம்
(சுவாமியே சரணம் ஐயப்பா)
-
மத்த மாதங்க கமனம்.. காருண்யா ம்ருத பூரிதம்
சர்வ விக்ன ஹரம் தேவம்.. சாஸ்தாரம் ப்ரணமாம்யகம்
(சுவாமியே சரணம் ஐயப்பா)
-
அஸ்மத் குலேச்வரம் தேவம்... அஸ்மத் சத்ரு விநாசனம்
அஸ்மத் இஷ்ட ப்ரதாதாரம்.. சாஸ்தாரம் ப்ரணமாம்யகம்
(சுவாமியே சரணம் ஐயப்பா)
-
பாண்ட்யேச வம்சதிலகம் கேரளே கேளிவிக்ரஹம்|
ஆர்தத்ராண பரம் தேவம் சாஸ்தாரம் ப்ரணமாம்யகம்||
(சுவாமியே சரணம் ஐயப்பா)
-
அருணோதய ஸங்காசம் நீலகுண்டல தாரிணம்|
நீலாம் பரதரம் தேவம் வந்தேகம் பிரம்ம நந்தனம்||
(சுவாமியே சரணம் ஐயப்பா)
-
கிங்கிண்யொட்யாண பூதேசம் பூர்ணசந்த்ர நிபானனம்|
கிராதரூப சாஸ்தாரம் வந்தேஹம் பாண்ட்ய நந்தனம்||
(சுவாமியே சரணம் ஐயப்பா)
-
பூதவேதாள ஸம்ஸேவ்யம் காஞ்சனாத்ரி நிவாஸினம்|
மணிகண்ட மிதிக்யாதம் வந்தேஹம் சக்தி நந்தனம்||
(சுவாமியே சரணம் ஐயப்பா)
-
வ்யாக்ராரூடம் ரக்தனேத்ரம் ஸ்வர்ண மாலா விபூஷணம்|
வீரபட்டதரம் கோரம் வந்தேஹம் சம்பு நந்தனம்
(சுவாமியே சரணம் ஐயப்பா)
-
சாபபாணம் வாமஹஸ்தே ரௌப்ய வேத்ரஞ்ச தக்ஷிணே|
விலஸத் குண்டலதரம் வந்தேஹம் விஷ்ணு நந்தனம்||
(சுவாமியே சரணம் ஐயப்பா)
-
பூதநாத சதா நந்தா சர்வ பூத தயாபரா
ரஷ ரஷ மகா பாஹோ சாஸ்த்ரே துப்யம் நமோ நம!
(சுவாமியே சரணம் ஐயப்பா)

அண்டினோரை ஆதரிக்கும் தெய்வமே சரணம் ஐயப்பா!!!


திருச்செந்தூர் முருகன் பிள்ளைத் தமிழில் ஹரிஹர புத்திரரான சாஸ்தா பற்றிய குறிப்புகள்:

பகழிக்கூத்தர் அருளியுள்ள திருச்செந்தூர் பிள்ளைத் தமிழில் மகா சாஸ்தா பற்றிய சுவையான குறிப்புகளை இப்பதிவில் சிந்தித்து மகிழ்வோம்,

பிள்ளைத்தமிழ் இலக்கியத்தில், இயற்றப்பெறும் பாடல்கள் நிறைவுற்று விளங்கவும், பிள்ளைத் தமிழில் போற்றப்பெறும் நாயகன் மேன்மையடையும் பொருட்டும் இறைவனிடம் வேண்டிப் பாடுவதே காப்புப் பருவமாகும். இங்கு பாட்டுடைத் தலைவனோ செந்திலாண்டவன், தனிப்பெரும் தெய்வமான சிவபெருமானின் திருக்குமாரன், இருப்பினும் மரபின் பொருட்டு 'என்றும் இளையோனாகிய கந்தவேளைக் காக்குமாறு' காப்புப் பருவத்தில் பின்வரும் தெய்வங்களிடம் வேண்டுகின்றார் பகழிக் கூத்தர்.
-
1. பாற்கடல் வாசரான ஸ்ரீமகாவிஷ்ணு
2. ஆதிப் பரம்பொருளான சிவபெருமான்
3. அம்பிகை
4. பிரணவ சுவரூபரான விநாயகப் பெருமான்
5. நான்முகக் கடவுளின் தேவியான அன்னை கலைவாணி
6. அரிகர புத்திரரான மகா சாஸ்தா
7. கன்யாகுமரியில் எழுந்தருளியுள்ள பகவதி அம்மை
8. அன்னை ஸ்ரீகாளி
9. ஆதித்தர் (சூரிய தேவனார்)
10. முப்பத்து முக்கோடி தேவர்கள்

இனி காப்புப் பருவத்தில் அரிகர புத்திரரிடம் வேண்டிப் பாடும் திருப்பாடலை உணர்ந்து மகிழ்வோம்,
-
வரியு நீள் சடிலத்திடை மகுட ராசி தரித்தவர்
வளையு  நீடு கருப்புவில் மதுர வாளி தொடுத்தவர்
அரிய பூரணை புட்கலை அரிவைமார் இருபக்கமும்
அழகு கூரும கிழ்ச்சியர் அடிவிடிடாமல் வழுத்துதும்
உரிய நான்மறை நித்தலும் உறுதியாக வழுத்திய
உவமை ஆசு கவித்துறை உதவு நாவலன் முற்றிய
பரிய வாளை குதித்தெழு பரவை சூழு நகர்க்கு இறை
பழநி வேலவனைப் புகழ் பனுவல் மாலை தழைக்கவே.

(சுருக்கமான பொருள்):
நீண்ட சிவந்த சடையில் மகுடம் தரித்தவரும், வளைந்த நீண்ட வில்லினை ஏந்தியிருப்பவரும், பூரணை - புஷ்கலை எனும் இரு தேவியரோடு எழுந்தருளி இருப்பவருமான பிரத்யட்ச தெய்வமே! சபரி மலை ஐயனே! அடியவன் செந்திலாண்டவனுக்கென இயற்றியுள்ள இப்பிள்ளைத் தமிழ்ப் பாடல்கள் நிறைவுற்று விளங்க திருவருள் புரிந்தருள்வாய்!!

கற்பூர ஜோதியே சரணம் ஐயப்பா!

அறிந்தும் அறியாமலும், தெரிந்தும் தெரியாமலும், செய்த சகல குற்றங்களையும் பொறுத்து, காத்து ரட்சித்து அருள வேண்டும். ஓம் சத்தியமான பொன்னு பதினெட்டாம் படிமேல் வாழும் வில்லன்; வில்லாளி வீரன்; வீர மணிகண்டன், காசி; இராமேஸ்வரம்; பாண்டி; மலையாளம் அடக்கி ஆளும் என் ஓம் ஹரிஹரசுதன்; கலியுக வரதன்; ஆனந்த சித்தன்; ஐயன்; ஐயப்ப சுவாமியே சரணம் ஐயப்பா!!!

மனிதாஸரின் சாஸ்தா பாடல்கள் (முக்கியக் குறிப்புகள்):

கேரள மாநிலத்தின் கொல்லம் மாவட்டத்திலுள்ள புனலூரில் தோன்றிய அருளாளர் மணிதாஸர். சபரி ஐயனின் பரிபூரணத் திருவருளைப் பெற்றிருந்த உத்தம சீலர். திருஞானசம்பந்தர்; திருநாவுக்கரசர்; சுந்தரர் ஆகிய அருளாளர்கள் சிவத்தலங்கள் தோறும் சென்று தேவாரப் பனுவல்களைப் பாடியது போல், அருணகிரிநாதரின் திருப்புகழைப் போல் மணிதாஸர் மகா சாஸ்தாவிற்கென அருளியுள்ள அற்புதப் பாமாலைகள் 'சாஸ்தா பாட்டு' எனும் திருப்பெயரில் வழிவழியாய் போற்றப் பெற்று வருகின்றன. 'சாஸ்தா ப்ரீத்தி' என்று குறிக்கப் பெறும் வைபவங்களில் மணிதாசரின் திருப்பாடல்கள் பிரதானமாய் இடம்பெற்றிருக்கும்.

தாஸரின் தமிழ்ப் பனுவல்கள், வடமொழிப் பிரயோகங்களோடும் கூடிய மிக எளிய நடையில், விருத்தம் முதலிய பல்வேறு இலக்கண வகைகளில் அமைக்கப் பெற்றிருக்கும். கல்லையும் கசிவிக்கும் இப்பெருமகனாரின் சில திருப்பாடல்கள் இன்னமும் அறியப் பெறாத புதுமையானதொரு நடையிலும் அமையப் பெற்றுள்ளன. இவருடைய திருப்பாடல்களில் போற்றப் பெறும் தலங்களில் ஐயன் திருவுள்ளம் மிக மகிழ்ந்து விசேடமாய் எழுந்தருளி இருப்பார். 

மணிதாஸர் முழுமுதற் கடவுளான விநாயகப் பெருமானைப் போற்றியே தம்முடைய பனுவல்களைத் துவங்கும் மரபினைக் கொண்டிருந்தார், ஆறுமுகக் கடவுளையும், சிவமூர்த்தியையும், அம்பிகையையும், மகாவிஷ்ணுவையும் தம்முடைய திருப்பாடல்களில் ஆங்காங்கே போற்றித் துதித்து மகிழ்வார். குளத்தூர், ஆரியங்காவு, அச்சன்கோயில், சபரி மலை, பொன் சொரியும் முத்தையன் திருக்கோயில் முதலிய தலங்களில் எழுந்தருளியுள்ள சாஸ்தாவிற்கு பஞ்சகம் எனும் அற்புதத் தொகுப்புகளை அருளியுள்ளார்.

ஸ்ரீமகா சாஸ்தா விஜயம் எனும் புராண நூலின் ஆசிரியராகவும், ஐயனுக்காகவே தம்முடைய வாழ்க்கையினை அர்ப்பணித்துள்ள புண்ணிய சீலராகவும் விளங்கும்' திரு. அரவிந்த் ஸுப்ரமண்யம் அவர்கள், தாஸரின் பனுவல்களைப் பல்வேறு புராதன சுவடிகளிலிருந்தும், வழிவழியாய்ப் பாடப் பெற்று வரும் பாடல்களிலிருந்தும் குறிப்பெடுத்து, தம்முடைய அரிய பெரிய பிரயத்தனத்தினால் அவற்றினை அச்சிலேற்றும் திருப்பணியினை மேற்கொண்டு வருகின்றார்.

(ஆரியங்காவு பஞ்சகம் - முதல் திருப்பாடல்):
கருணாம்புதே உமது கமல பொற்பாதமே கதியென்று 
காத்திருக்கும் கம்பக்குடிக்கு அடிமை - உன் பொன் 
அடிக்கடிமை கண்ட ஸிகிதப்படிக்கு உன் 
சரணார விந்தமே ஸர்வதா ஸ்துதி செய்து வம்ச வழியாய் 
நடந்தும் சற்றாகிலும் மனமிறங்காததேனென்று 
சாற்றியெம்மை ஆட்கொள்ளுவீர் ஐயா 
ஒரு நாளும் எளியேனை கைவிடேன் என்ற உமது 
உறுதியை மறக்கலாமா? ஓங்காரமான பொருள் 
ஆகுமென் ஐயனே - ஸ்ரீம்கார தீப ஒளியே 
திருமாலரன் பெற்ற பெருமானே! எனக்குற்ற தீவினைகள் 
போக்கியருள்வாய் - திக்கெல்லாம் புகழ் பரவும் 
பூரண புஷ்கலை மருவும் திருஆரியக் கடவுளே!!

மணிதாசர் அருளியுள்ள அச்சன்கோவில் பஞ்சகம்:

(திரு.அரவிந்த் ஸூப்ரமண்யம் அவர்கள் இயற்றியுள்ள 'ஸ்ரீமகா சாஸ்தா விஜயம்' புராண நூலிலிருந்து எடுத்துத் தொகுக்கப் பெற்றுள்ளது): 

(திருப்பாடல் 1)
கோடி சூர்ய ப்ரபா மண்டலம் போல் ஒளிவீசி
வருகின்றதைப் பார் - குவலயக் கண்ணன் 
த்ருபுவன வச்யன் - நீல கோமளாங்க ப்ரகாசன் 
தேடு நவரதன் முடி சூடு கடகாங்கதன் திவ்ய கேயூர ஹாரன் 
செங்கையில் மாணிக்க பாத்ரம் கரும்பு வில் 
அபயம் சேர்ந்திலங்கும் புஷ்பபாணன் 
நாடி நமதருகில் அவர் ஓடி விளையாடியே நமதபீஷ்டங்கள் 
தருவார் - நம்புவோர்க்கு உபகாரி என்பதில் 
இவரன்றியில் நாட்டில் ஒரு தெய்வம் யார் காண்?
ஆடலம் பரியில் ஏறி கூடலம்பதியில் வந்து அடிமை 
கொண்டு அடிமை நல்கும் ஆதி சதுர் வேதங்கள் 
ஓதும் பரஞ்சோதியே! எங்கள் அச்சனார் கோவில் அரசே!

(திருப்பாடல் 2)
மண்டலம் புகழ் வேதியர்கள் தொழும் வீரமணிகண்டர் 
இவர் பவனி பாரீர் - வாசல் ப்ரதானியாய் 
ஆவசேரங்கம் செய்து வருகிறவன் கறுப்பன் 
தண்டலதிபன் தலைவன் - இண்டலையன் அண்டையில் 
சட்டமிடு திட்டமுடையோன் - சாடி வரும் காற்றாடி 
ஆடுறுஞ்சி முத்தன் - காடுவெட்டிகளும் கூட 
துண்டரீக தலைவரென்ற செல்லப்பிள்ளை 
சுமதி முன்னோடி வருவார் - தோரணம் கட்டி 
சமூஹக்காரர் தொழுதேற்ற தொண்டரிஷ்டங்கள் தருவார் 
அண்டர் முனி தெண்டனிடுகின்ற மணிகண்டர் 
ஆராதனம் செய்யுமென்று ஆதி சதுர் வேதங்கள் 
ஓதும் பரஞ்சோதியே! எங்கள் அச்சனார் கோவில் அரசே!!! 

(திருப்பாடல் 3)
சிந்தையானந்தமுறவே ஒளிவிளங்கும் குல தெய்வம் 
வரும் கோஷமிது காண் - சீரணி வெறிக்கலியின் 
விலங்கொலி கலீர் கலீர் என - சிறந்தழகு பூண்டருகினில் 
வந்தவர்கள் வழி பார்த்திரங்கி வசமாகுவாள் 
மாளிகையில் மேல் இசக்கி,  வடிவழகி காடிக்கல் 
யஷியுடன் வாது கொள் இசக்கி கூட 
சொந்தமாம் பத்ரகாளியின் தனி முழக்கொலி சேர் 
காளி வரதாளியும் சொல் பெரிய பேச்சி வடிவில் 
ப்ரம்ம ராஷஷியும் சூழ்ந்து கொண்டாடி நடக்க 
அந்தணர்கள் சிந்தனையில் நினைந்த வரம் அருளும் 
ஆவேச தேவனென்றும் ஆதி சதுர் வேதங்கள் 
ஓதும் பரஞ்சோதியே! எங்கள் அச்சனார் கோவில் அரசே!!! 

(திருப்பாடல் 4)
விதிமனம் கொண்டு பாரதி முலைப்பால் உண்ட வீரன்
சவாரி பாரீர் - வில்லம்பு கத்தி கட்டாரியும் 
வல்லயம் ஈட்டி வேல் பரசு வாள் சுரிகையும் 
குதி கொண்டு பூதங்கள் எதிர் கொண்டு அடுத்து வர 
கூடலங்காடு சென்று குட்டிதாய்ப்புலி வட்டமிட்டு 
அனந்த கோடி கூட்டி நகரோடி வந்து 
மதுராபுரிக்கரசன் எதிராய் அழைத்து தேவி தலைவலி 
மாற்றி நின்ற அரசே - வந்து என் துயராற்றி 
மைந்தர் வரமும் தந்து என் வம்ச வழி காத்தருள்வாய் 
அதிரூப லாவண்யன் மதி பூர்ண வல்லபன் 
ஹரிஹரகுமாரனென்றும் ஆதி சதுர் வேதங்கள் 
ஓதும் பரஞ்சோதியே! எங்கள் அச்சனார் கோவில் அரசே!!! 

(திருப்பாடல் 5)
பணிகின்றவர்க்கு உயிர்த்துணை என்ற விருதுடன் 
பாலிக்கும் ஸுகுண சீலன் - பக்தபரிபாலன் என்று 
எத்திசையும் புகழ்கின்ற பூர்ண சிந்தாமணிக்கு இணையான 
மாணிக்க மணி மார்பனாம் - எனது இஷ்ட குல தெய்வமாகி 
வந்த இவர் இருக்கும் போது கவலை ஏனோ? மனமிரங்கி 
எமக்கின்று கண்காட்சி தருவார் 
கணிகண்டு கொண்டு கண்மணி என்றிவர் பாத கமலத்தை 
இடைவிடாமல் காத்திருந்தால் நமக்கு ஏற்ற 
வரமும் தருவார் - கைவல்ய மூர்த்தி என்ற 
அணிவேலவர்க்கு இளைய! மணிதாசர் ஹ்ருதயத்தில் 
அருள் தத்வ போதனென்று ஆதி சதுர் வேதங்கள் 
ஓதும் பரஞ்சோதியே! எங்கள் அச்சனார் கோவில் அரசே!!!

மணிதாசர் அருளியுள்ள பொன் சொரியும் முத்தையன் பஞ்சகம்

(திரு.அரவிந்த் ஸூப்ரமண்யம் இயற்றியுள்ள 'ஸ்ரீமகா சாஸ்தா விஜயம்' புராண நூலிலிருந்து எடுத்துத் தொகுக்கப் பெற்றுள்ளது): 

(திருப்பாடல் 1)
மனமே நமக்காக வாய்த்த குலதேவரின் மகிமைதான் 
ஆதிசேஷன் வாக்மனம் அடங்கா மகிமை தன்னை 
அற்ப மானிடன் யான் உரைப்பதாமோ?
தனது பொன்னம்பலத்திலகு சந்த்ரோதயன் 
த்ரைலோக்ய சம்மோஹனன் - தரணியில் 
இந்த்ர பரிபூரண நேசன் பக்தி சந்ததம் செய்திருப்போம் 
ஜன ஸமூஹ மேருவில் சிகாமணி தீரனே! என் தீவினைகள் 
மாற்றி மேலும் செல்வங்களாம் பக்தி முக்தி கல்வி 
சந்ததமும் ஈன்று சிந்தைதனில் வீற்றிருப்பாய் 
புனுகு ஜவ்வாது கஸ்தூரி கவயாதி மிருக பூத 
கணநாதனென்று பொன் சொரியும் முத்துப் 
பொதிகை சரிவில் உத்ரன் - என் புத்ர ஸந்தான பதியே 

(திருப்பாடல் 2)
தஞ்சமென வந்தவர்க்கு தருணத்தில் முன்னின்று 
தற்காக்கின்ற கோமான் சாடி வருகின்றதைப் பார்
உலகினில் அந்தணர் சதுர் வேத மாரி பொழிய 
வெஞ்சிலை பூதம் எதிரேற்று கட்டியம் ஓத - வேதாளம் 
குடை பிடிக்க - பிறகில் ஸூந்தரியான யஷியும் 
முல்லைக் குமரியும் வெண்சாமரங்கள் வீச 
அஞ்சாத ரண வெறியன் அடப்பம் கட்ட - அசனி காளாஞ்சி 
ஏந்த - அமராதி தேவர்கள் புஷ்ப வர்ஷம் சொரிய 
வெடி விநோதங்கள் பல வாத்ய கோஷத்தோடும் 
புஞ்சரி கருணாகரன் ஜகன்மோஹனன் வந்து 
பாக்யங்கள் தருவார் பொன் சொரியும் முத்துப் 
பொதிகை சரிவில் உத்ரன் - என் புத்ர ஸந்தான பதியே 

(திருப்பாடல் 3)
ஆதாரமான பொன்னம்பலவனும் பவனி வருகின்றதை
பார் - ஆரியன் பட்டரணவீரன் உடைவாள் 
கொண்டு அகம்படி பிடித்து வருவார் 
பாதாள பூதம் எதிர் சூதாளி சாவலன் பட்டகசன் 
காப்பவன் பேர்வந்த ரண நீல கண்டன் 
இருளன் அண்டையில் பலபேசி லாட தவசி 
வாதாடும் வன்னியன் தூதோட, வான்சுடலை மாடனும் 
கூடவருவார் - மந்த்ர மூர்த்தி தலைவனும் 
துயர் தீர்த்து எங்கள் மனதபீஷ்டங்கள் தருவார் 
பூதாதிபன் துரிய வேத சாஸ்த்ராகம புராணங்கள் 
ஓதும் பொருளாம் பொன் சொரியும் முத்துப் 
பொதிகை சரிவில் உத்ரன் - என் புத்ர ஸந்தான பதியே 

(திருப்பாடல் 4)
எங்கும் நிறைந்த சிவனங்கம் புணர்ந்த மால் 
ஈன்றெடுத்த அழகு பெருமான் - இக்கலியுகத்தில் 
கருணாகரன் - இவர்க்கு நிகர் இவ்வுலகத்தில் ஏது?
துங்க ரண சிங்கனும் செங்கனக சங்கிலி தோளனும் 
காளி தளவாய் துஷ்டரை விரட்டு, மரியோட்டு 
கட்டாரியன் முன்னோட்டு பட்டராயன் 
சங்கம் சுருட்டி முருகன் சரகுருட்டியும், சூழ்ந்திலங்கு 
பக்தாந்தரங்கனென்றும் துன்பம் கடத்தி அருளின்பம் 
கொடுத்துபரி தொண்டர் ஆட்கொண்டிருப்பார் 
பொங்கு புகழ் பொன்னாட்டு சிங்க நகர் தென்னாட்டு 
புவிராஜ குல நேசனென்றும் பொன் சொரியும் முத்துப் 
பொதிகை சரிவில் உத்ரன் - என் புத்ர ஸந்தான பதியே 

(திருப்பாடல் 5)
சீரணிக்கரந்தையர் சேரிணக்கம் கொண்டு, செல்வம் 
கொடுத்ததும் இவரே - செட்டி வேடம் பூண்டு வந்த 
சில துஷ்டரை சிஷை செய்ததும் இவரே 
தாரணியில் ஆரணன் காரணத்தால் தலைச்சுமடு 
எடுத்தவரும் இவரே - தலையழுத்தி ஆண்டவன் 
சிலை கொண்டு அடித்ததுடன் ஸ்தானம் கொடுத்ததும் இவரே 
வாரம் மீதேறி கோரங்கள் செய்ததில் மஸ்தகம் 
உடைத்ததும் இவரே - மனதிரக்கம் கொண்டு 
செங்கையினால் நமக்கு மைந்தர் வரம் தருவதும் இவரே 
பூரணானந்த ஜெய வீர மணி தாஸனும் போற்றும் குல 
தெய்வமும் இவரே! பொன் சொரியும் முத்துப் 
பொதிகை சரிவில் உத்ரன் - என் புத்ர ஸந்தான பதியே 

21ஆம் நூற்றாண்டில் மகா சாஸ்தாவுக்கென ஒரு அற்புத புராணம்

(ஸ்ரீ மகாசாஸ்த்ரு ப்ரியதாசன் அரவிந்த் ஸுப்ரமண்யம் அவர்கள் இயற்றியது):
ஹரிஹர புத்திரரான மகா சாஸ்தாவின் பிரபாவங்களைப் பற்றி வேத வியாசரின் ஸ்காந்த புராணம்; கச்சியப்பரின் கந்தபுராணம் மற்றும் பற்பல தெய்வீகப் பனுவல்கள் நன்முறையில் பதிவு செய்துள்ளது எனினும் சாஸ்தாவின் லீலைகள் யாவையும் ஒருங்கேயமைத்துப் பறைசாற்றும் தனித்தவொரு புராணம் இல்லையே எனும் அடியவர்களின் ஆதங்கத்தைப் போக்கும் வகையில் ஸ்ரீஅரவிந்த் ஸுப்ரமண்யம் அவர்கள் 'மகா சாஸ்தா விஜயம்' எனும் ஒப்புவமையற்ற புராணத்தினை இயற்றியளித்துள்ளார்.  

புராண நூல் தான் புதிது எனினும் அதனில் இடம்பெறும் நிகழ்வுகளோ மிகமிகப் புராதனமானது. பகீரதப் பிரயத்தனமிது, 12 வருட ஆய்வு, அதன் தொடர்ச்சியாக அரிதினும் அரிதான சுவடிகள் மற்றும் ஆதி நூல்களிலுள்ள நிகழ்வுகளைப் புராண நடையில்  தொகுத்தளிக்க 2 வருட காலம் ஆக மொத்தம் 14 வருட தவ வாழ்வினையொத்த அர்ப்பணிப்புடன் திரு.அரவிந்த் அவர்கள் இப்புராண நூலினை நமக்களித்துள்ளார். பூர்வ பாகம்; உத்திர பாகம் என்று இரு பிரிவுகளைக் கொண்டு இந்நூல் தொகுக்கப் பெற்றுள்ளது. 

சுவாமி ஐயப்பன் மகா சாஸ்தாவின் அவதாரமே என்பதனைப் பல்வேறு கோணங்களில் முதலில் நிறுவிப் பின் சாஸ்தாவின் பிரபாவங்களை ஆச்சரியமான முறையில் வரிசைக் கிரமமாக விவரிக்கத் துவங்குகின்றார் நூலாசிரியர். 

ஹரிஹர புத்திரரான சாஸ்தாவின் அவதாரம், திருக்கயிலையில் வளரும் பால சாஸ்தாவின் லீலைகள், சர்வ லோக தர்ம பரிபாலனத்தை ஏற்றல், பூரணா; புஷ்கலா தேவியரை மணம் புரிந்து அருள் செய்த நிகழ்வுகள், மகிஷி சம்ஹாரம், மகா சாஸ்தாவின் (சுவாமி ஐயப்பன் உள்ளிட்ட) அஷ்ட அவதாரங்கள், எண்ணிறந்த ரிஷிகள்; தேவர்கள் மற்றும் அடியவர்களுக்கு அருள் புரிந்த நிகழ்வுகள், அற்புதத் தன்மை வாய்ந்த ஐயனின் பல்வேறு லீலா விநோதங்கள், ஐயன் எழுந்தருளியுள்ள அற்புதத் தலங்கள் என்று இந்நூலாசிரியர் விவரித்துள்ள ஒவ்வொன்றும் ஐயனின் திருவடிகளில் தெளிந்த பக்தியினைத் தோற்றுவிக்கும் விதமாக அமைந்துள்ளது. 

2ஆம் பாகமான உத்திர பாகத்தில், ஐயனைப் போற்றும் சகஸ்ரநாமங்கள், த்ரிசதிகள், பிரதான அஷ்டோத்திரங்கள், சத நாமாவளிகள் மற்றும் ஐயனின் பரிபூரணத் திருவருளைப் பெற்றிருந்த பரம அடியவரான மணிதாசர் அருளியுள்ள எண்ணிறந்த சாஸ்தா பாடல்கள் மற்றும் பஞ்சகங்கள் ஆகியவை இடம் பெறுகின்றன. 

சபரி ஐயனையும், மகா சாஸ்தாவையும் போற்றும் அடியவர் பெருமக்கள் ஒவ்வொருவர் இல்லத்தையும் உள்ளத்தையும் அலங்கரிக்க வேண்டிய புண்ணிய நூலிது (மணிகண்டப் பொருளே சரணம் ஐயப்பா)!!!



காந்தமலை (மகா சாஸ்தாவிற்கென தனியே ஒரு முத்தி உலகம்):

ஆதிப் பரம்பொருளான சிவமூர்த்தி மகா சாஸ்தாவிற்கென ஒரு தனி உலகத்தையே அளித்து அருள் புரிந்ததாகக் கச்சியப்பரின் கந்தபுராணம் பறைசாற்றுகின்றது. 'மகா சாஸ்தா' படலத்தின் 51ஆம் திருப்பாடலில் "புவனம் ஈந்து புவனத்து இறையென அவனை நல்கி" எனும் முதல் இரு வரிகளால் இதனை அறியப் பெறுகின்றோம். அவ்வாறெனில் 'அந்த புவனத்தின் பெயர் தான் என்ன?' எனும் கேள்விக்கான விடையே 'காந்த மலை'.

அசுர காண்டம் - மகா சாஸ்தா படலம் (திருப்பாடல்கள் 50 - 51)
அத்தகும் திரு மைந்தற்கு அரிகர
புத்திரன் எனும் நாமம் புனைந்துபின்
ஒத்த பான்மை உருத்திரர் தம்மொடும்
வைத்து மிக்க வரம்பல நல்கியே
-
புவனம் ஈந்து புவனத்து இறையென
அவனை நல்கி அமரரும் மாதவர்
எவரும் ஏத்திடும் ஏற்றமும் நல்கினான்
சிவனது இன்னருள் செப்புதற் பாலதோ

108 வைணவ திவ்ய தேசங்களில் 'திருப்பாற்கடல்' மற்றும் 'ஸ்ரீவைகுந்தம்' எனும் இரு தலங்களை முத்தி பெற்ற ஆன்மாக்கள் மட்டுமே தரிசிக்க இயலும் என்பது அனைவரும் அறிந்ததே. அது போலவே பாரத தேசத்தின் வட எல்லையிலுள்ள திருக்கயிலை மலையும் விண்ணிலுள்ள திருக்கயிலைக்கான ஒரு குறியீடே, சிவமுத்தி பெறுவோர் சென்றடையும் திருக்கயிலையோ, சத்திய லோகம் உள்ளிட்ட 14 உலகங்களையும் தாண்டி, வைகுந்தம் மற்றும் திருப்பாற்கடலையும் கடந்து, கற்பனைக்கும் எட்டாத, தத்துவங்கள் யாவற்றையும் கடந்ததொரு பெருவெளியில் அமைந்துள்ளது. 

பிரதான தெய்வங்கள் ஒவ்வொன்றிற்கும் தனியேயொரு முத்தி உலகம் உண்டு, அது போல் மகா சாஸ்தாவையும், அவரது அவதாரமான சுவாமி ஐயப்பனையும் உபாசித்து முத்தி பெறுவோர் காந்த மலையினை அடைந்துத் திருவருள் வெள்ளத்தில் அமிழ்ந்திருப்பர். 

காந்த மலையில் மகா சாஸ்தா கோடி சூர்ய பிரகாசராய் பூரணா; புஷ்கலா தேவியருடன் ஆச்சரியமாய் எழுந்தருளி இருப்பார், காந்த மலைக்கு ஐயனின் பரம அடியவரான மணிதாசர் 'காந்தமலை பஞ்சகம்' எனும் தொகுப்பினை அருளியுள்ளார்.  

(ஸ்ரீஅரவிந்த் சுப்ரமண்யம் இயற்றியுள்ள 'மகா சாஸ்தா விஜயம்' எனும் புராண நூலில் இடம்பெறும் மணிதாசரின் 'காந்தமலை பஞ்சகம்'):
பூமலர் சோலைபால் நீராழி சூழவும் - புற்றில் ஈதேன் 
ஒழுகவும் - பொங்கியே வானோடி கல்லாலின் 
மூலமே - பொன்மணி பீடம் தன்னில் 

காமனுடைய வடிவு தன்மேல் ஒளிக்கோடி என 
காந்தமலை வாசனப்பன் கருணை ப்ரவாஹமாய் 
அருள் வீற்றிருக்கவும், 

காமாதி சரணமடைய வாச ப்ரபையாள் தன் வீணையின் 
நாதமும், மைந்தனும் கனிந்தாடவும், வானுலகம் 
ஈரேழும் ஸ்தாணுமாலயன் என்று சாஸ்தரை வணங்கி நிதமும் 

நியமமொடு ஸனகாதி முனி வானோர் ஜெய ஜெய என்றுமே 
ஸ்துதி செய்யவும் (காணுவாம்) நேமி சிவகாமி தன் 
நேசனுடைய மைந்தனே! நித்யனே! முக்தி வடிவே!!

கருங்கடல் வண்ணரான மகா சாஸ்தா (கந்த புராண விளக்கங்கள்):

சிவ விஷ்ணு தத்துவங்களின் சங்கமத்தினின்றும் தோன்றிய மகா சாஸ்தாவைப் பொன்நிற மேனியராய் உருவகித்து வரையப் பெற்றுள்ள பல படங்களை இணைய தளங்களிலும் முகநூல் பதிவுகளிலும் காண்கின்றோம். இருப்பினும் கச்சியப்பரின் கந்த புராணம் 'மைக்கருங்கடல் மேனியர்' என்றே ஹரிஹர புத்திரரின் திருமேனி நிறத்தினை வர்ணிக்கின்றது,
-
(அசுர காண்டம்: மகா சாத்தா படலம்: திருப்பாடல் 49)
மைக்கருங்கடல் மேனியும் வானுலாம்
செக்கர் வேணியும் செண்டுறு கையுமாய்
உக்கிரத்துடன் ஓர்மகன் சேர்தலும்
முக்கண் எந்தை முயக்கினை நீங்கினான்

இறைவன் எத்தகைய வடிவத்திலும் நிறத்திலும் தோன்றும் சர்வ வல்லமை பொருந்தியவன் எனினும் புராணங்கள் முன்னிறுத்தும் இறை வடிவங்களை அதன் வழி நின்று உபாசிப்பதே நலன்கள் யாவையும் பெற்றுத்தர வல்லது. 'மழை வண்ணத்து அண்ணலே' என்று ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியைப் போற்றுவார் கவிச்சக்கரவர்த்தி, ஹரிஹர குமாரர் ஆகையால் 'ஹரியாகிய ஸ்ரீமகாவிஷ்ணுவின் திருமேனி நிறத்தில் தோன்றி அருள்பவர் மகா சாஸ்தா' எனும் புரிதல் அவசியமாகின்றது (சிவ சிவ)!!!.

தர்ம சாஸ்தா அஷ்டோத்திரம்:

ஹரிஹர புத்திரரான மகா சாஸ்தாவிற்கு 4 முதல் 5 அஷ்டோத்திரங்கள் இருப்பினும், சுவாமி ஐயப்பன் மற்றும் சாஸ்தா பூஜைக்கு, 108 திருநாமங்களைக் கொண்ட பின்வரும் அஷ்டோத்திரமே பொதுவில் பயன்படுத்தப் பெற்று வருகின்றது, 

1. ஓம் மஹாசாஸ்த்ரே நம
2. ஓம் விச்வ சாஸ்த்ரே நம
3. ஓம் லோக சாஸ்த்ரே நம
4. ஓம் தர்ம சாஸ்த்ரே நம
5. ஓம் வேத சாஸ்த்ரே நம
6. ஓம் கால சாஸ்த்ரே நம
7. ஓம் கஜாதிபாய நம
8. ஓம் கஜாரூடாய நம
9. ஓம் கணாத்யஷாய நம
10. ஓம் வ்யாக்ராரூடாய நம
11. ஓம் மஹாத்யுதயே நம
12. ஓம் கோப்த்ரே நம
13. ஓம் கீர்வாண ஸம்ஸேவ்யாய நம
14. ஓம் கதாதங்காய நம
15. ஓம் கதாக்ரண்யை நம
16. ஓம் ரிக்வேத ரூபாய நம
17. ஓம் நக்ஷத்ராய நம
18. ஓம் சந்த்ர ரூபாய நம
19. ஓம் வலாஹகாய நம
20. ஓம் தூர்வாச்யாமாய நம
21. ஓம் மஹாரூபாய நம
22. ஓம் க்ரூரத்ருஷ்டயே நம
23. ஓம் அனாமயாய நம
24. ஓம் த்ரிநேத்ராய நம
25. ஓம் உத்பலாகாராய நம
26. ஓம் காலஹந்த்ரே நம
27. ஓம் நராதிபாய நம
28. ஓம் கண்டேந்து மௌளி தனயாய நம
29. ஓம் கல்ஹாரகுஸுமப்ரியாய நம
30. ஓம் மதனாய நம
31. ஓம் மாதவஸுதாய நம
32. ஓம் மந்தார குஸுமார்சிதாய நம
33. ஓம் மஹாபலாய நம
34. ஓம் மஹோத்ஸாஹாய நம
35. ஓம் மஹாபாப விநாசநாய நம
36. ஓம் மஹா சூராய நம
37. ஓம் மஹா தீராய நம
38. ஓம் மஹா ஸர்ப்ப விபூஷணாய நம
39. ஓம் அஸிஹஸ்தாய நம
40. ஓம் சரதராய நம
41. ஓம் ஹாலாஹலதராத்மஜாய நம
42. ஓம் அர்ஜுநேசாய நம
43. ஓம் அக்னிநயநாய நம
44. ஓம் அநங்க மதனாதுராய நம
45. ஓம் துஷ்ட க்ரஹாதிபாய நம
46. ஓம் ஸ்ரீ தாய நம
47. ஓம் சிஷ்டரக்ஷண தீக்ஷிதாய நம
48. ஓம் கஸ்தூரி திலகாய நம
49. ஓம் ராஜசேகராய நம
50. ஓம் ராஜ ஸத்தமாய நம
51. ஓம் ராஜ ராஜார்சிதாய நம
52. ஓம் விஷ்ணு புத்ராய நம
53. ஓம் வனஜனாதிபாய நம
54. ஓம் வர்ச்சஸ்கராய நம
55. ஓம் வரருசயே நம
56. ஓம் வரதாய நம
57. ஓம் வாயுவாஹனாய நம
58. ஓம் வஜ்ர காயாய நம
59. ஓம் கட்க பாணயே நம
60. ஓம் வஜ்ர ஹஸ்தாய நம
61. ஓம் பலோத்ததாய நம
62. ஓம் த்ரிலோகக்ஞாய நம
63. ஓம் அதிபலாய நம
64. ஓம் புஷ்கலாய நம
65. ஓம் வ்ருத்த பாவனாய நம
66. ஓம் பூர்ணாதவாய நம
67. ஓம் புஷ்கலேசாய நம
68. ஓம் பாசஹஸ்தாய நம
69. ஓம் பயாபஹாய நம
70. ஓம் பட்கார ரூபாய நம
71. ஓம் பாபக்னாய நம
72. ஓம் பாஷண்ட ருதிராசனாய நம
73. ஓம் பஞ்ச பாண்டவ ஸந்த்ராத்ரே நம
74. ஓம் ப்ரபஞ்சாக்ஷ ராச்ரிதாய நம
75. ஓம் பஞ்சவக்த்ர ஸுதாய நம
76. ஓம் பூஜ்யாய நம
77. ஓம் பண்டிதாய நம
78. ஓம் பரமேச் வராய நம
79. ஓம் பவதாப ப்ரசமனாசாய நம 
80. ஓம் பக்தாபீஷ்ட ப்ரதாயகாய நம 
81. ஓம் கவயே நம
82. ஓம் கவீ நாமதிபாய நம
83. ஓம் க்ருபாளவே நம
84. ஓம் க்லேச நாசனாய நம
85. ஓம் ஸமாய நம
86. ஓம் அரூபாய நம
97. ஓம் ஸேநான்யை நம
88. ஓம் பக்த ஸம்பத் ப்ரதாயகாய நம
89. ஓம் வ்யாக்ர சர்மதராய நம
90. ஓம் சூலினே நம
91. ஓம் கபாலினே நம
92. ஓம் வேணு வாதனாய நம
93. ஓம் கலாரவாய நம
94. ஓம் கம்புகண்ட்டாய நம
95. ஓம் கிரீடாதி விபூஷிதாய நம
96. ஓம் தூர்ஜடயே நம
97. ஓம் விரநிலாய நம
98. ஓம் வீராய நம
99. ஓம் விரேந்த்ர வந்திதாய நம
100. ஓம் விச்வரூபாய நம
101. ஓம் வ்ருஷபதயே நம
102. ஓம் விவிதார்த்த பலப்ரதாய நம
103. ஓம் தீர்க்க நாஸாய நம
104. ஓம் மஹாபாஹவே நம
105. ஓம் சதுர்பாஹவே நம
106. ஓம் ஜடாதராய நம
107. ஓம் ஸநகாதிமுனிச்ரேஷ்ட ஸ்துத்யா நம
108. ஓம் ஹரிஹராத்மஜாய நம