சிவபெருமான், அம்பிகை எனும் அன்னை ஸ்ரீபார்வதி; ஸ்ரீவிநாயக மூர்த்தி; ஆறுமுகக் கடவுள்; திருமாலாகிய ஸ்ரீமகாவிஷ்ணு ஆகிய மூர்த்திகள் பாரத தேசம் முழுமைக்குமான தனிப்பெரும் தெய்வங்கள், உலக நாடுகள் முழுவதிலுமுள்ள பாரத தேசத்தினர் பல்லாயிரம் ஆண்டுகளாக இன்னுயிரெனப் போற்றி வரும் சர்வ வல்லமை பொருந்திய கடவுளர்கள். ஆயிரம் நாமங்கள் கொண்டு விளங்கும் இம்மூர்த்திகளை ஒவ்வொரு மாநிலத்தவரும் தத்தமது மொழி; மரபு இவைகளுக்கேற்ப உளமாரத் தொழுது வருகின்றனர். ஆதி அந்தமற்ற, அண்ட கோடிகள் யாவையையும் ஆட்சி புரிந்து வரும் நம் தெய்வங்களை தென்னாடு; வடநாடு என்று பிரித்துப் பார்ப்பது சிறுபிள்ளைத் தனமான அணுகுமுறையாகும்.
திருஞானசம்பந்தர் திருக்காளத்தியில் தங்கியிருந்த நிலையிலேயே, ஆந்திர மாநிலத்திலுள்ள ஸ்ரீசைலத்தையும், கர்நாடகா மாநிலத்திலுள்ள கோகரணத்தையும், வடக்கே உத்தர்காண்ட் மாநிலத்திலுள்ள திருக்கேதாரத்தையும், பத்ரிநாத் அருகிலுள்ள இந்திர நீல பருப்பதம் எனும் தலத்தையும், வடக்கு எல்லையிலுள்ள திருக்கயிலை மலையையும் தனித்தனி திருப்பதிகங்களால் போற்றித் துதித்துள்ளார்.
நாவுக்கரசு சுவாமிகள் திருக்காளத்தியிலிருந்து புறப்பட்டு ஆந்திர மாநிலத்திலுள்ள ஸ்ரீசைலத்தினை அடைந்துத் தமிழ்ப் பாமாலைகள் சூட்டி மகிழ்ந்தார், பின் அங்கிருந்து கன்னட தேசத்திலுள்ள கோகரணத்தைத் தொழுதார், இதன் தொடர்ச்சியாய் உத்தர பிரதேச மாநிலத்திலுள்ள வாரணாசியைத் தரிசித்துப் பரவி இறுதியாய் வடக்கு எல்லையிலுள்ள திருக்கயிலை மலையையும் நேரில் தரிசித்துத் தீந்தமிழ்ப் பதிகங்களால் சிவபெருமானைப் போற்றியுள்ளார்.
சுந்தர மூர்த்தி நாயனார் திருக்காளத்தியில் இருந்த நிலையிலேயே, ஆந்திர மாநிலத்திலுள்ள ஸ்ரீசைலத்தையும், வடக்கேயுள்ள திருக்கேதாரத்தையும் தனித்தனி திருப்பதிகங்களால் போற்றியுள்ளார்.
பின்னர் 15ஆம் நூற்றாண்டில் தோன்றிய அருணகிரிநாதரும் இம்முறையிலேயே தமிழகத்திற்கு வடக்கேயுள்ள திருவேங்கடம் (கீழ்த்திருப்பதியிலுள்ள கபிலேஸ்வரம்), விஜயவாடா இந்திரகீலாத்ரி மலைச்சாரலில் அமைந்துள்ள ஸ்ரீசுப்பிரமண்ய சுவாமி திருக்கோயில், ஸ்ரீசைலம், கேரள தேசத்தில் பாலக்காடு அருகிலுள்ள ஸ்ரீகல்யாண சுப்பிரமண்ய சுவாமி திருக்கோயில், வடக்கே உத்தர்காண்ட் மாநிலத்திலுள்ள ஹரித்வார், உத்தரப் பிரதேச மாநிலத்திலுள்ள காசி ஆகிய தலங்களுக்கு நேரில் சென்று தரிசித்துத் திருப்புகழ் திருப்பாடல்களை அருளியுள்ளார், வடக்கு எல்லையிலுள்ள திருக்கயிலைக்கும் தனியே திருப்புகழ் பாடல்களை அருளியுள்ளார்.
ஆன்மீகத்தின் அரிச்சுவடி கூட தெரியாமல் மத வெறுப்பு அரசியல் பேசித் திரிபவர்களும், இதுவரையிலும் நம் பாரத தேசத்தில் தோன்றிய எண்ணிறந்த ஞானிகள் மற்றும் அருளாளர்கள் மீது ஒருசிறிதும் மரியாதை இல்லாதவர்களும் முன்வைக்கும் பிரிவினை சார்ந்த மத அரசியல் வலையில் சிக்காமல், தெளிந்த புரிதலுடன் நம் ஆன்மீக யாத்திரையைத் தொடர்வோம், திருவருள் நமக்கு என்றுமே துணை நின்று காக்கும் (சிவ சிவ)!!!
No comments:
Post a Comment