கண்ணதாசன் இளம் பிராயத்தில் ஈ.வே.ரா வின் கோட்பாடுகளால் (???) பெரிதும் ஈர்க்கப்பட்டு அவருடைய இறை மறுப்புக் கழகத்தில் இணைகின்றார். ஈ.வே.ரா வின் இயக்கம் அச்சமயத்தில் 'இந்து மதத்தினை எதிர்க்கும்' பிரதான நோக்குடன் 'கம்ப இராமாயணம் தமிழர்களை இழிவு படுத்தும் வகையில் அமைந்துள்ளது' எனும் போலிப் பிரச்சாரத்தினைக் கையிலெடுக்கின்றது. அக்காவியத்தில் கையாளப்படும் 'அசுரர்கள்' எனும் பதம் 'தமிழர்களையே குறிக்கின்றது' என்றும், 'தமிழினத்தைக் கம்ப காவியம் குரங்குகளாகச் சித்தரிக்கின்றது' என்றும் வரைமுறையற்ற புதுப்புதுக் கதைகளைப் புனைந்துப் பிதற்றித் திரிந்து வருகின்றனர்.
கம்ப இராமாயண நூல்களையும், ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியின் திருவுருவப் படங்களையும் எரிக்கும் போராட்டங்களைப் பல்வேறு இடங்களில் துவங்குகின்றனர். அறிஞர்(???) அண்ணாவும் 'கம்ப ராமாயணம் ஒரு காம நூல்' எனும் நூலொன்றினை எழுதித் தன் பங்குக்குப் பகுத்தறிவுத் திருப்பணி (???) புரிகின்றார். இக்கட்டான இக்கால கட்டத்தில் கம்ப இராமாயணத்தைத் தானும் விமர்சித்து எழுத வேண்டும் எனும் நோக்கோடு அதனைப் படிக்கத் துவங்குகின்றார் முத்தையா (கண்ணதாசன்).
தொடர்ந்து பல மாதங்கள் கவிச்சக்கரவர்த்தியின் இலக்கியப் புனலில் மூழ்கியெழுகின்றார். அத்திருப்பாடல்களின் மேன்மையினை உணர்ந்து வியக்கின்றார். 'இரக்கம் என்றவொன்று இல்லாதிருப்பவரே அரக்கர்' என்று கம்பர் குறித்துள்ளமையைக் கற்றுத் தெளிகின்றார். உன்னதமான வாழ்வியல் கோட்பாடுகளும், மனித வாழ்வை மேம்படுத்தும் ஒப்புவமையற்ற தர்மங்களும் கம்ப இராமாயணம் முழுவதும் பரவியிருத்தலைக் காண்கின்றார்.
இதன் பின்னர், கொள்கைகள் ஏதுமற்று, புரிதலற்ற வெறுப்பு; பகைமை; காழ்ப்புணர்ச்சி இவைகளை மட்டுமே முன்னிறுத்திச் செயல்பட்டு வரும் ஈ.வே.ரா வின் நாத்தீகக் கழகத்திலிருந்து முழுவதும் விலகி வந்து, இந்து சமயத்தைப் பின்பற்றத் துவங்குகின்றார் நம் கவியரசர். ஆர்வம் மீதுறப் பற்பல இந்து தர்ம சாத்திரங்கள்; உபநிடதங்கள்; கீதை; சைவ; வைணவ அருளாளர்களின் திருப்பாடல்கள் இவைகளை எண்ணிறந்த ஆண்டுகள் பெரிதும் முனைந்துக் கசடறக் கற்றறிகின்றார்.
இந்து தர்மம் முன்னிறுத்தும் வழிபாட்டு முறைகள்; சடங்குகள்; மரபுகள் இவை ஒவ்வொன்றையும் பல்வேறு கோணங்களில் ஆய்ந்தறிந்து 'அர்த்தமுள்ள இந்து மதம்' எனும் அற்புத நூலை இயற்றுகின்றார். 10 பகுதிகளைக் கொண்ட இந்நூல் பதிப்பித்து வெளியிடப்பட்ட சில நாட்களிலேயே பல லட்சம் பிரதிகள் விற்றுத் தீர்ந்த பெருமையினைக் கொண்டது. திருவருளால் திரு.கண்ணதாசன் அவர்களுக்கு கைகூடிய கிடைத்தற்கரிய அனுபவ ஞானத்தினை இந்நூலின் ஒவ்வொரு வரியிலும் நம்மால் உணர இயலும்.
No comments:
Post a Comment