சமணம் பௌத்தம் ஆகிய சமயங்கள் 'மறுபிறவியை ஒப்புக் கொள்கின்றன எனினும் அவரவர் புரியும் செயல்களின் வினைப் பயன்கள் தாமாகவே சென்று அச்செயல் புரிந்தோரை மறுபிறவிகளில் பற்றும், இதற்கு இறைவன் என்றொருவர் குறுக்கே வருவதில்லை' எனும் கர்மவாதக் கொள்கையை உடையவை. திருவள்ளுவரோ 'பரம்பொருளாகிய இறைவனின் துணையின்றி ஒருபொழுதும் இப்பிறவிக் கடலிலிருந்து நீங்க இயலாது என்று அறுதியிடுகின்றார்.
-
தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க்கு அல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது
திருவள்ளுவரின் காலகட்டமான சங்ககாலத்தில் கிருத்துவ; இஸ்லாமிய மதங்களின் ஊடுருவல் பாரத தேசத்திலில்லை. எனினும் ஒரு வாதத்திற்கு அம்மதங்களையும் இந்த ஆய்வில் எடுத்துக் கொள்வோமாயின், இவ்விரு ஆப்ரகாமிய மதங்களும் மறுபிறவிக் கொள்கைகளை முற்றிலும் மறுக்கின்றன, திருவள்ளுவரோ இந்து தர்மத்தின் அடிநாதமான மறுபிறவிக் கோட்பாடுகளை எண்ணிறந்த குறள்களில் பதிவு செய்கின்றார்.
-
பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேராதார்
இந்து தர்மக் கொள்கைகள் 'புண்ணியம்; பாவம் இவையிரண்டுமே முத்தி அடைவதற்குத் தடைகள்' என்றொரு புரட்சிக் கருத்தினை முன்மொழிகின்றன. புண்ணியச் செயல்களை 'நான் செய்கின்றேன்' எனும் தன்முனைப்பின்றிப் புரிதல் வேண்டும் இல்லையேல் அப்புண்ணியப் பலன்களை அனுபவிக்க மீண்டும் பிறவியெடுக்க வேண்டி வரும்' என்பது இந்து தர்மத்தின் கர்ம யோகக் கோட்பாடு, இத்தனித்துவமான கொள்கை வேறெந்த மதங்களிலும் இல்லை. இதனைத் திருவள்ளுவர் பின்வரும் குறளில் பதிவு செய்கின்றார்.
-
இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு
மருத்துவர் எம்மதமாக இருப்பினும் அவரளிக்கும் மருந்துகள் எவரொருவருக்கும் பலனளிக்கும், ஆதலின் 'மருத்துவருக்கு ஏன் மதச் சாயம் பூசுகின்றீர்' என்று வாதிடுவது முறையான அணுகுமுறையன்று. மதம் என்பது முக்கியக் கொள்கை மற்றும் கோட்பாடுகளின் தொகுப்பு என்றுணர்வோமாயின் வள்ளுவப் பெருந்தகை 'நம் பாரத தேசத்தில் பல லட்சம் வருடங்களாக வழிவழியாய் புத்துணர்வுடன் விளங்கி வரும் ஒப்புவமையற்ற' இந்து தர்மத்தினைச் சார்ந்தவரே என்பது தெளிவு (சிவ சிவ).
No comments:
Post a Comment