சைவ சமயத்தின் வேதங்கள் "அறம்; பொருள்; இன்பம்; வீடா?" அல்லது "ரிக்; யஜுர்; சாம; அதர்வணமா? "

திருமுறை ஆசிரியர்கள்; அருளாளர்கள் மற்றும் ஆச்சாரியர்கள் யாவரும், "சைவ சமயத்தின் அடிநாதமான ரிக்; யஜுர்; சாம; அதர்வண வேதங்களை" எண்ணிறந்த திருப்பாடல்களில் தனித்தனியே பெயரைக் குறிப்பிட்டே போற்றி வந்துள்ளனர். இவ்வளவு வெளிப்படையான குறிப்புகள் இருந்தும், சைவ சமயத்தில் மொழி அரசியலால்  பிரிவினைப் பிரச்சாரம் புரிவதையே தங்கள் வாழ்நாள் லட்சியமாகக் கொண்டுள்ள புண்ணியவான்கள், 'நான்மறைகள்' என்று பொதுக் குறியீடாக வரும் திருமுறைப் பாடல்களை மட்டும் எடுத்துக் கொண்டு, அவை 'அறம்; பொருள்; இன்பம்; வீடு' எனும் தமிழர் வேதத்தையே குறிக்கின்றது, 'ரிக்; யஜுர்; சாம; அதர்வண வேதங்களை அல்ல' என்று தொடர்ந்து பொய்ப் பரப்புரைகளை மேற்கொண்டு வருகின்றனர், அது குறித்து இப்பதிவில் சிறிது சிந்தித்துத் தெளிவுறுவோம், 

கச்சியப்ப சிவாச்சாரியார் பின்வரும் கந்தபுராணத் திருப்பாடலில், 'இருக்கு ஆதியாம் வேத நான்கையும்' எனும் வரியில், 'ரிக் முதலான நான்கு வேதங்களையும்' என்று சைவ சமய வேதங்களைக் குறிக்கின்றார், 
-
(கந்த புராணம் - பாயிரம் - திருப்பாடல் 47)
மயலறு பயிலரே வைசம்பாயனர்
சயிமினி சுமந்துவாம் தவத்தர் நால்வர்க்கும்
வியல்இருக்கு ஆதியாம் வேத நான்கையும்
உயர்வுறு தவத்தினான் முறையின் ஓதினான்

ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள், பின்வரும் திருப்பாடல் வரிகளில் ஐயத்திற்குச் சிறிதும் இடமின்றி, 'ரிக்; யஜுர்; சாம; அதர்வண வேதங்களையும் அவற்றின் இறுதியில் இடம்பெறும் வேதாந்தமாகிய 10 பிரதான உபநிடதங்களையும் தனித்தனியே பெயரோடு குறிப்பிட்டுப் போற்றுகின்றார், 
-
(கந்தக்கோட்ட மும்மணிக்கோவை - திருப்பாடல் 28 - முதல் 8 வரிகள் மட்டும்)
நாயகன் தந்த நால்வேதத்துள் 
இருக்கு மறையின் எழில் ஐத்ரேயம் 
எசுவின் தைத்திரியம் ஈசாவாசியம் 
பிருகதாரணியம் பேழ்க் கடவல்லி 
கீதச் சாந்தோக்கியம் நல்கேதம் 
அதர்வப் பிரச்சிந மணி மாண்டூக்கியம் 
முண்டகம் என்ன மொழி ஒருபதூஉம் 
..

பின்வரும் திருப்பாடலில் உமாபதி சிவாச்சாரியார் தம்முடைய சேக்கிழார் புராணத்தில், 'இருக்கு முதல் மறைநான்கில்' என்று சைவ சமய வேதங்கள் எவையென்று தெளிவாகக் குறிக்கின்றார்.  
-
(சேக்கிழார் புராணம்: திருப்பாடல் 86)
திருத்தொண்டர் புராணம் எழுதிய முறையை
மறையோர் சிவமூல மந்திரத்தால் அருச்சனை செய்திறைஞ்சி
இருக்கு முதல் மறைநான்கில் இன்று முதலாக
இதுவும் ஒரு தமிழ்வேதம் ஐந்தாவதென்று
கருத்திருத்தி அமுதடைக்காய் நறும்தூபதீபம்
கவரி குடை கண்ணாடி ஆலத்திநீறு
பரித்தளவு செய்யக்கண்டு வளவர்பிரான்
முறையைப் பசும்பட்டினால் சூழ்ந்து பொற்கலத்தினில் இருத்தி

ஆதலின் சைவ; வைணவ; சாக்த; கௌமார; காணபத்ய; சௌரம் எனும் அறுசமயங்களுக்கும் அடிநாதமாக விளங்குவது 'ரிக்;யஜுர்;சாம; அதர்வண' வேதங்களே என்பது தெளிவு.

எனில் 'தேவராயும்' என்று துவங்கும் திருமுதுகுன்றத் திருப்பதிகத்தில், 'அந்தணாளர்க்கு அறம்பொருள் இன்பம்வீடு மொழிந்த வாயான்' என்று ஞானசம்பந்தர் குறித்துள்ளாரே, இதனை எவ்வாறு புரிந்து கொள்வது? எனில், வடமொழியில் "தர்ம; அர்த்த; காம; மோக்ஷம்" என்று வழங்கப் பெறும் புருஷார்த்தங்களே தமிழ் வழக்கில்  "அறம்; பொருள்; இன்பம்; வீடு" எனும் வாழ்வியல் நெறிகளாகப் போற்றப் பெறுகின்றது. 'நான்மறைகளாகிய ரிக்; யஜுர்; சாம; வேதங்களில் பொதிந்துள்ள இந்நெறிகளைச் சிவபெருமான் சனகாதியர்க்கு உணர்த்தி அருளினார்' என்ற அளவில் இதனைப் புரிந்து கொள்வதே ஏற்புடையது. 

மேலும் நம் சம்பந்தப் பிள்ளையார் 'தங்கு செஞ்சடையினீர் சாமவேதம் ஓதினீர்' என்றும் 'இருக்கின் மலிந்த இறைவர்அவர் போலாம்' என்றும் சாம; ரிக் வேதங்களைத் தனித்தனியே பெயரைக் குறிப்பிட்டுப் போற்றியுள்ள திருப்பாடல்களையும் சிந்தித்துத் தெளிவுறுதல் வேண்டும். 

திருமுறைகளின் பொருளைத் திரித்துக் கூறி, வடமொழி வன்மத்தைத் தூண்டித் தொடர்ந்து பிரிவினைப் பிரச்சாரம் புரிந்து வரும் இவர்களின் பிரதான நோக்கம், நால்வேதங்கள் எனும் சங்கிலியால் பாரத தேசமெங்கிலும் ஒற்றைப் புள்ளியில் வலிமையாய்ப் பிணைக்கப் பெற்றுள்ள நம் சனாதன தர்மத்தின் அறுவகைச் சமயங்களையும் வேதங்களிலிருந்து பிரித்துச் சிறுசிறு பிரிவுகளாக்கிப் பலவீனப்படுத்துவது. அதன் ஒரு பகுதியாய் தமிழகத்தில், வடமொழியிலுள்ள நான்மறைகள்; உபநிடதங்கள்; புராணங்கள்; இதிகாசங்கள் இவைகளின் மீது தொடர்ந்து வெறுப்புப் பிரச்சாரம் புரிந்து, அவைகளைத் தமிழ்ச் சமய மரபிலிருந்து நீக்க முனைந்து வருகின்றனர். 

மொழி அரசியல் மற்றும் பிரிவினைப் பிரச்சாரம் புரிபவர் மூலம் ஆன்மிகம் கற்காமல் நம் சமயச் சான்றோர் அறிவுறுத்தி வந்துள்ள பாதையில் பயணித்து உய்வு பெறுவோம், தொடர்ப் பொய்ப் பிரச்சாரங்களை புறம் தள்ளுவோம் (சிவ சிவ).

வேத வேள்வியை நிந்தனை செய்துழல் 
ஆதமில்லி அமணொடு தேரரை
வாதில் வென்றழிக்கத் திருவுள்ளமே
பாதி மாதுடனாய பரமனே
ஞாலம் நின்புகழே மிகவேண்டும் தென்
ஆலவாயில் உறையும் எம்ஆதியே!!!

No comments:

Post a Comment