தமிழ் மொழியும் ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியும் (கம்ப இராமாயண விளக்கங்கள்):

கைகேயி அன்னையின் மூலம் வெளிப்பட்ட தசரத மன்னனின் வாக்கினைச் சிரமேற் கொண்டு கோசலை மைந்தன் அக்கணமே கானகம் செல்ல முனைகின்றான். எனினும் இலக்குவனோ தமையனுக்கு இழைக்கப்பட்டுள்ள அநீதி கண்டு வெகுண்டு, யாவரையும் அழித்தொழிக்கும் எண்ணத்துடன் வில்லில் நாணொலி எழுப்புகின்றான், அண்டங்கள் யாவும் கிடுகிடுக்கின்றன. அச்சமயத்தில் ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி பல்வேறு அறவுரைகளால் இலக்குவனை அமைதியுறச் செய்வதாகக் கவிச்சக்கரவர்த்தி பதிவு செய்கின்றார். இனி இது குறித்த திருப்பாடலொன்றினை இப்பதிவில் சிந்தித்து மகிழ்வோம், 

(அயோத்தியா காண்டம் -  நகர் நீங்கு படலம்):
நன்சொற்கள் தந்து ஆண்டு எனை நாளும் வளர்த்த தாதை
தன் சொல் கடந்து எற்கு அரசு ஆள்வது தக்கது அன்றால்
என் சொல் கடந்தால் உனக்கு யாது உளது ஈனம்?' என்றான் 
தென்சொல் கடந்தான் வடசொல் கலைக்கு எல்லை தேர்ந்தான்!!!
-
(பொருள்):
தம்பீ, இனிய சொற்களை மட்டுமே புகன்று இதுநாள் வரையிலும் நமை வளர்த்து வந்த தந்தையின் வாக்கினை மீறி அரசாள முனைவது எவ்விதத்திலும் அறமாகாது. (தமையனான எம்மை 'தாய், தந்தை, தலைவன், இறைவன்' என்று அனைத்துமாகவும் ஏற்றுள்ளதாகப் பல சமயங்களில் கூறி வருவாயே, அவையாவும் உண்மையெனில்) இன்று இச்சமயத்தில் எம்முடைய சொற்களை மீறி நீ அடைந்து விடக்கூடிய பயன் தான் என்ன? என்று அறவுரை பகர்கின்றான் தசரத மைந்தன். 

மேற்குறித்துள்ள திருப்பாடலின் இறுதி வரியில் 'வடமொழி; தென்மொழியாகிய தமிழ்' ஆகிய இரண்டிலும் பெரும் புலமை பெற்றிருந்தான் ஸ்ரீராமன் என்று குறிக்க வரும் கம்பர், 'மறைமொழியாகிய வடமொழிப் புலமையில் எல்லை கண்டவன் (வடசொல் கலைக்கு எல்லை தேர்ந்தான்)' என்றும் தென்மொழியாகிய தமிழ் மொழியில் 'எல்லை கடந்த புலமையைக் கைக்கொண்டிருந்தான் (தென்சொல் கடந்தான்)' என்றும் அற்புதத் தன்மையில் பதிவு செய்துப் போற்றுகின்றார்.

No comments:

Post a Comment