'இந்து தர்மம்' என்பது ஒரு மதமா? (முக்கிய விளக்கங்கள்):

'ரிக்; யஜுர்; சாம; அதர்வணம்' எனும் நால்வேதங்களை அடிப்டையாகக் கொண்டு விளங்கும் 'சைவ; வைணவ; சாக்த; கௌமார; காணாபத்ய; சௌர' சமயங்கள் ஆறும் 'மறை நெறி; வேத நெறி; வைதீக சமயம்; சனாதன தர்மம்' என்று பல்லாயிரம் ஆண்டுகளாகப் பல்வேறு விதங்களில் குறிக்கப் பெற்று வந்தது, பின் இறுதியாய் இந்த தொன்மையான தர்மத்திற்கு 'இந்து' எனும் குறியீடு மந்திரச் சொல் போன்று வந்து அமைந்தது. குறியீடு தான் பின்னாளில் தோன்றியதேயன்றி நம் அறு சமயங்களும் அனைத்து காலத்திலும் 'நால்வேதங்கள்' எனும் குடைக்குக் கீழ் ஒன்றிணைந்த நிலையிலேயே இயங்கி வந்துள்ளது தெளிவு.

ஒரு சிறு உதாரணம் மூலம் இதனை விளங்கிக் கொள்ள முயல்வோம், திருப்பதி ஸ்ரீநிவாசப் பெருமாளுக்குப் பின்னாளிலேயே (அடியவர் ஒருவரால்) 'பாலாஜி' எனும் திருப்பெயர் அமைந்தது, இத்திருநாமத்தை எந்த பாசுரங்களிலும் புராணங்களிலும் காண முடியாது, சரி இதிலிருந்து நாம் என்ன முடிவுக்கு வரப் போகின்றோம்? 'பாலாஜி எனும் திருநாமம் பின்னாளில் தோன்றி இருப்பினும் அப்பெயர் குறிக்கும் தெய்வம் பல லட்சம் வருடங்களாக அத்திருமலையிலேயே அருள் புரிந்து வருகின்றார்' என்று தானே பொருள் கொள்வோம்? அது விடுத்து 'எந்த புராணத்திலும் பாலாஜி என்ற பெயர் இல்லாததால் பாலாஜி என்பது ஒரு தெய்வமே அல்ல' என்று குழந்தைத் தனமாக வாதிட்டுக் கொண்டிருக்கப் போகின்றோமோ?

'இந்து' என்றொரு மதமே இல்லை என்று மத வெறுப்புப் பிரச்சாரம் புரிந்து வரும் நாத்தீகக் கழகங்களும், பிரிவினை அரசியல்வாதிகளும், மதமாற்று சக்திகளும் மறைமுகமாக அழிக்க நினைப்பது அக்கூட்டமைப்பினுள் இயங்கி வரும் நம்முடைய அறு சமயங்களையே என்பதனை முதலில் உணர்வோம். ஒரு பெரும் கூட்டமைப்பைச் சிறிது சிறிதாக வெவ்வேறு பகுதிகளாகப் பிரித்து விட்டால் அதனைச் சிதைத்து அழிப்பது எளிது என்பதே இதன் பின்னணி அரசியல்.

மெய்ப்பொருள் காண்பது 'அறிவு' (சிவ சிவ)!!!!

No comments:

Post a Comment