சிவபெருமான் தமிழர் தெய்வம், ருத்திரன் வடமொழி தெய்வமா? ஆதாரபூர்வ விளக்கங்கள்:

சிவபெருமான் தமிழர் தெய்வம்; உருத்திரன் வடமொழி தெய்வம், பிற்காலத்தில் இவ்விரு கடவுளர்களையும் ஒன்றாகச் சேர்த்துவிட்டார்கள் என்று தீவிரமாகப் பிரிவினைவாத பிரச்சாரம் புரிந்து வரும் அறிவிலிகளின் பிதற்றல்கள் குறித்து இப்பதிவில் சிந்தித்துத் தெளிவுறுவோம்,

ஆதிப் பரம்பொருளாகிய சிவபெருமானுக்கு ஆயிரம் திருநாமங்கள், அவற்றுள் ருத்திரன் என்ற திருநாமத்துக்கு 'துன்பக் கடலினின்றும் விடுவிப்பவர்' என்று பொருள், கச்சியப்ப சிவாச்சாரியார் பின்வரும் கந்த புராணத் திருப்பாடலில் இதனை ஐயத்திற்கு இடமின்றித் தெளிவுறுத்தியுள்ளார்,

(கந்த புராணம்: தக்ஷ காண்டம், ததீசிப் படலம்: திருப்பாடல் 46):
இன்னலம் கடலுள் பட்டோர் யாரையும் எடுக்கும் நீரால்
உன்னரும் பரம மூர்த்தி உருத்திரன் எனும்பேர் பெற்றான்
அன்னவன் தரவந்தோர்க்கும் அடியடைந்தோர்க்கும் அன்னான்
தன்னுரு எய்தினோர்க்கும் சார்ந்ததால் அவன் தனிப்பேர்

காஞ்சிப் புராணத்தில் சிவஞான முனிவரும் இதே கருத்தை வலியுறுத்துகின்றார்,
-
இன்பம் செய்தலின் சங்கரன்; எம்பிரான்
இன்பம் ஆக்கலின் சம்பு, இடும்பைநோய்
என்பது ஓட்டும் இயல்பின் உருத்திரன்

இந்து தர்ம கடவுளர்களைத் தமிழர் தெய்வம்; வடமொழி தெய்வம் என்று பிரிவினை பேசித் திரிபவர்களின் உள்நோக்கம் மிக மிகத் தெளிவானது, இந்து தர்மத்தைப் பிரித்துப் பிரித்துச் சிறு சிறு பிரிவுகளாக்கி வலிமையிழக்கச் செய்துப் பின் முழுமதுமாய் அழித்தொழித்து விடலாம் எனும் எண்ணத்தில் இவர்களின் செயல்பாடு மிகத் தீவிரமாகவே உள்ளது, நாம் தான் விழிப்புணர்வோடு இத்தகைய போலிப் பிரச்சாரங்களுக்குப் பலியாகாமல் நம் சமய அருளாளர்களின் திருவாக்கினை உள்ளத்தில் கொண்டு ஆன்மீக யாத்திரையை மேற்கொள்ளுதல் வேண்டும்.

No comments:

Post a Comment