சைவ சமயம் வடமொழியிலுள்ள 18 புராணங்களை அங்கீகரிக்கின்றதா? முறையான விளக்கங்கள்:

திருஞானசம்பந்தர், பாண்டிய நாட்டில் மீண்டும் சைவ சமயம் தழைத்தோங்கச் செய்யும் பொருட்டு மதுரைக்கு எழுந்தருளி வருகின்றார். பாண்டியனின் வெப்பு நோயினைத் திருநீற்றுப் பதிகம் பாடி நீக்குகின்றார். பின் அனல் வாதத்தில் சமணர்களை வெல்கின்றார், இறுதியாய் வையையாற்றில் புனல் வாதம் நடந்தேறுகின்றது, சமணர்கள் இட்ட பொய்நெறிச் சுவடிகள் ஆற்றின் போக்கில் அடித்துச் செல்லப் பட, சம்பந்த மூர்த்தி இடும் 'வாழ்க அந்தணர்' எனும் சுவடியோ ஆற்றின் போக்கிற்கு எதிரேறிச் சென்று சைவ சமயத்தின் மேன்மையைப் பறைசாற்றுகின்றது.

இந்நிகழ்வு தொடர்பான பெரிய புராணத் திருப்பாடலொன்றை இனிக் காண்போம்,
-
வேத முதல்வன் எனும் மெய்த் திருப்பாட்டினில்நேர்
ஆதி உலகோர் இடர்நீங்கிட ஏத்த ஆடும்
பாத முதலாம் பதினெண் புராணங்கள் என்றே
ஓதென்றுரை செய்தனர் யாவும் ஓதாதுணர்ந்தார் .

(சுருக்கமான பொருள்):
வேத வியாசர் அருளிய பதினெட்டு புராணங்களிலும் 'முக்கண் மூர்த்தியான சிவபெருமானே ஆதிப் பரம்பொருளாக விளங்குபவர்' எனும் சத்தியம் பேசப் பெற்றுள்ளது' என்றுரைத்தவாறே சம்பந்தப் பெருமான் தம்முடைய தேவாரச் சுவடியினை வைகை ஆற்றில் இட்டார் என்று சேக்கிழார் குறிக்கின்றார். ஆதலின் சைவ சமயம் பதினெண் புராணங்களை முழுவதுமாய் அங்கீகரிக்கின்றது என்பது தெளிவு.

வியாசர் அருளிய 18 புராணங்களையும் சூத மாமுனிவர் என்பவர் நைமிசாரண்யம் எனும் வனத்தில் எண்ணிறந்த முனிவர்களுக்கு உபதேசித்ததாகப் புராணங்கள் பதிவு செய்கின்றன. இதனைச் சமபந்தப் பெருமான் தம்முடைய தேவாரத் திருப்பதிகத்திலும் 'சூதன் ஒலிமாலை' என்று குறித்துள்ளார்.
-
வேத முதல்வன் முதலாக விளங்கி வையம்
ஏதப்படாமை உலகத்தவரேத்தல் செய்யப்
பூத முதல்வன் முதலே முதலாப் பொலிந்த
சூதனொலிமாலை என்றே கலிக்கோவை சொல்லே.

No comments:

Post a Comment