திருமாலும் விஷ்ணுவும் ஒரே தெய்வமா? சைவத் திருமுறைகள் கூறுவது என்ன ? (ஆதாரபூர்வ விளக்கங்கள்):

திருமால் தமிழர் தெய்வம், விஷ்ணு வடதேசத்து தெய்வம், இரண்டையும் பிற்காலத்தில் ஒன்றாகச் சேர்த்துவிட்டார்கள் என்று தற்காலச் சூழலில் உலவி வரும் பிரிவினைவாதப் பிதற்றல்கள் குறித்துச் சைவத் திருமுறைகள் வாயிலாக இப்பதிவில் சிந்தித்துத் தெளிவுறுவோம்,

முருகக் கடவுளின் பரிபூரணத் திருவருளைப் பெற்றுள்ள அருணகிரிப் பெருமானின் கருத்தினை அவருடைய திருப்புகழ் திருப்பாடல்கள் வாயிலாகவே முதலில் காண்போம்,
-
'கொலையிலே மெத்த விரகிலே கற்ற' என்று துவங்கும் திருப்புகழில் 'உலகனே முத்தி முதல்வனே சித்தி உடையனே விஷ்ணு மருகோனே' என்று குறிக்கின்றார், 'கருவினுருவாகி வந்து' என்று துவங்கும் பழனித் திருப்புகழில் 'உரகபட மேல் வளர்ந்த பெரியபெருமாள் அரங்கர் உலகளவு மால் மகிழ்ந்த மருகோனே' என்று பதிவு செய்கின்றார், ஆதலின் விஷ்ணு; திருமால் எனும் இரு திருப்பெயர்களும் ஒரே தெய்வத்தையே குறிக்கின்றது என்பது தெளிவு.

இனி திருநாவுக்கரசு சுவாமிகளின் திருஇராமேச்சுரம் தேவாரத் திருப்பதிகப் பாடலைக் காண்போம்,
-
(திருப்பாடல் 11):
வரைகளொத்தே உயர்ந்த மணிமுடி அரக்கர் கோனை
விரைய முற்றறஒடுக்கி மீண்டு மால் செய்த கோயில்
திரைகள்முத்தால் வணங்கும் திருஇராமேச்சுரத்தை
உரைகள் பத்தால் உரைப்பார் உள்குவார் அன்பினாலே!!!

இலங்கை சென்று மணிமுடி அரக்கர் கோனாகிய இராவணனை அடியோடு அழித்தொழித்துத் திரும்புகையில் ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி செய்த கோயில் திருஇராமேஸ்வரம் என்று பதிவு செய்கின்றார் அப்பர் அடிகள், ஸ்ரீராமர் என்று குறிக்காமல் 'மால் செய்த கோயில்' என்று குறித்திருப்பதனால் 'திருமால்', 'ஸ்ரீராமர்', 'ஸ்ரீமகாவிஷ்ணு' ஆகிய திருப்பெயர்கள் யாவும் ஒரே தெய்வத்தையே குறிக்கின்றன என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

ஆன்மீகத்தைப் பிரிவினை வெறி கொண்ட மதமாற்று சக்திகளின் மூலம் அறிய முற்படாமல் ஞானிகளின் வாக்கினைக் கொன்டு உணர்ந்துத் தெளிவுறுவோம் (சிவ சிவ).

No comments:

Post a Comment