குருக்ஷேத்திர பூமி, அம்புப் படுக்கையில் பீஷ்மர், பாண்டவர்கள் திரௌபதியுடன் சென்று பிதாமகரைப் பணிகின்றனர், கண்ணனும் உடன் எழுந்தருளி இருக்கின்றான். அச்சமயத்தில் எண்ணிறந்த தர்மங்களை பாண்டவர்களுக்கு உபதேசிக்கும் பீஷ்மர் இறுதியாய், 1000 திருநாமங்களுடன் கூடிய ஸ்ரீவிஷ்ணு சகஸ்ரநாமத்தையும் வெளிப்படுத்துகின்றார்.
பின்பு தர்மர் பிதாமகரிடம், 'பரந்தாமனின் திவ்யத் திருநாமங்களைக் கேட்கப் பெற்று புண்ணியர்களானோம், இனி 'ஈஸ்வரர்; சம்பு என்று பலவாறு போற்றப் பெறுபவரும், அண்டங்கள் அனைத்திற்கும் ஆதியும் அந்தமுமாய் விளங்குபவரும், தனக்கொரு காரணமற்ற சுயம்பு மூர்த்தியாய் விளங்கியருளும் மகாதேவரின் திருநாமங்களையும் உபதேசித்தருள வேண்டும்' என்று விண்ணப்பிக்கின்றார் (வியாச பாரதம்: அனுசாசன பர்வம் - அத்தியாயம் 14).
பீஷ்மர் யுதிஷ்டிரரிடம் 'மகாதேவரின் தன்மைகளை விளக்கும் உத்தம ஞானமானது எனக்கு கைவரப் பெறவில்லை. எங்கும் வியாபித்துள்ள பரம்பொருளாக இருப்பினும் காண்பதற்கரிய இறைவர் அவர், அம்மூர்த்தியே யாதொன்றிற்கும் மூல காரணம், அவரே ஞானங்களனைத்தின் வரம்பாகத் திகழ்பவர், தேவர்களும் தெய்வங்களும் தொழுதேத்தும் தனிப்பெரும் தெய்வமாய் விளங்கும் அப்பெருமானின் தன்மையினை உள்ளவாறு அறிந்துணர எவரொருவராலும் இயலாது. எனினும் அச்சிவ மூர்த்தியின் அளப்பரிய கீர்த்தியினை உரைக்க வல்லவர் ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா ஒருவரே, கண்ணனைத் தவிர்த்துப் பிரிதொருவரால் சர்வேஸ்வரரின் பிரபாவத்தினை விவரித்து விட இயலாது' என்றுரைக்கின்றார்.
நம் மாபாரதக் கண்ணன் இவ்விடத்திலும் தானே ஸ்ரீமன் நாராயணன மூர்த்தி; பரவாசுதேவன் என்றெல்லாம் அறிவித்துக் கொள்ளவில்லை. மாறாக, 'முன்னாளில் குருவான உபமன்யு முனிவர் எமக்கு உபதேசித்துள்ள சிவ ஸஹஸ்ரநாம வைபவத்தை உங்களுக்குக் கூறுகின்றேன்' என்று அருளிச் செய்கின்றார். கிடைக்கும் வாய்ப்புகள் தோறும், ஆச்சாரிய பரம்பரையின் மகத்துவத்தைப் பறைசாற்ற நம் கீதாச்சாரியன் தவறுவதே இல்லை.
அனுசாசனப் பர்வம் 14-16 அத்தியாயங்கள் வரையிலும் ஸ்ரீகிருஷ்ணன் சிவபரம்பொருளின் அளப்பரிய கீர்த்தியையும், இமயமலைச் சாரலில் உபமன்யு முனிவரிடம் முன்பொரு சமயம் உபதேசமாகப் பெற நேர்ந்த நிகழ்வுகளையும் முதலில் விவரிக்கின்றான். பின்னர் 17ஆம் அத்தியாயத்தில் சிவ சகஸ்ரநாமத்தை முழுவதுமாய், உபமன்யு முனிவரின் வார்த்தைகளாகவே மாபாரதக் கண்ணன் வெளிப்படுத்தி அருள்கின்றான்.
வேத வியாசர், மகாபாரதத்திலும், மற்றுமுள்ள தம்முடைய புராணங்களிலும் மொத்தம் 5 சிவ சகஸ்ரநாமங்களைப் பதிவு செய்தருளி உள்ளார். அவற்றுள், கிருஷ்ணாணாவதார கால கட்டத்தில், உபமன்யு முனிவரிடமிருந்து உபதேசமாகப் பெற்று, குருஷேத்ர யுத்த சமயத்தில் ஸ்ரீகிருஷ்ணன் வெளிப்படுத்தி அருளியுள்ள இந்த சிவ சகஸ்ரநாமமே பாரத தேசமெங்கும் பிரசித்தமாகப் பாராயணம் புரியப்பட்டு வருகின்றது.
சிவ; விஷ்ணு சகஸ்ரநாமங்கள் இரண்டையும் அளித்து சைவ வைணவ சமயங்களின் ஒப்புயர்வற்ற சங்கமமாகத் திகழ்வது வியாச பாரதத்தின் அனுசாசனப் பர்வம். புது தில்லியிலிருந்து 175 கி.மீ பயணத் தொலைவிலுள்ள குருஷேத்திர பூமிக்கருகில், பிதாமகர் அம்புப் படுக்கையில் வீழ்ந்திருந்த இடத்தை இன்றும் தரிசிக்கலாம். இங்கு பீஷ்மருக்கு ஆலயமொன்றும் அதனருகில் அர்ஜுனன் சரத்தால் உருவாக்கிய தீர்த்தமும் அமைந்துள்ளது.
No comments:
Post a Comment