துறவுக் கோலத்தில் போதை வழக்கம் கைக்கொள்வோர் ஞானிகளா?

வாரணாசி; ஹரித்வார்; திரிவேணி சங்கமம் ஆகிய தலங்களில் துறவிகள் போன்ற தோற்றத்தில், உடல் முழுவதும் திருநீறு பூசிக்கொண்டு, போதை வஸ்துக்களைப் புகைத்த வண்ணமிருப்போரை நம்மால் காண இயலும். இது குறித்த சில நுட்பங்களை இப்பதிவினில் சிந்தித்துத் தெளிவுறுவோம்.
நமது இந்து தர்மம் கள்ளினை உட்கொள்வது பஞ்ச மகா பாதகங்களில் ஒன்றெனச் சுட்டுகின்றது, 'கள்' என்பது மது பானத்தினை மட்டும் குறிக்க வந்ததல்ல, மனத்தையும், அறிவையும் தன்னிலை இழக்கச் செய்யும் அனைத்து வித போதை வஸ்துக்களும் அதனுள் அடங்கும். திருமூலர் 'கள்ளுண்ணாமை' எனும் அதிகாரத்தில் போதை வழக்கத்தை வன்மையாகக் கண்டிக்கின்றார்.
'காமமும் கள்ளும் கலதிகட்கே ஆகும்' என்று 'முறையற்ற காமமும், போதை வழக்கமும் கீழ் மக்களுக்கே உரியது' என்று சாடுகின்றார் திருமூலர். உலக மாயையாகிய மயக்கத்திலிருந்து விடுபட்டு உய்வு பெற மற்றொரு மயக்கத்தை நாடுவோர் மூடர்களே என்கின்றார், 
-
மயக்கும் சமய மலமன்னும் மூடர்
மயக்கும் மதுவுண்ணும் மாமூடர் தேறார்
மயக்குறு மாமாயை மாயையின் வீடும்
மயக்கில் தெளியின் மயக்குறும் அன்றே.
'வாமாச்சார வழியில் சக்தி வழிபாடு புரிகிறேன் பேர்வழி' என்று பிதற்றிக் கொண்டு போதை வழக்கத்தைக் கைக்கொள்பவர் தம்மிடம் எஞ்சியுள்ள சக்தியையும் இழந்து அழிவர், அம்பிகையின் திருவருள் எக்காலத்திலும் இம்மூடர்களுக்குக் கிட்டாது, சக்தியைச் சிவானந்தம் எய்தும் முயற்சியில் செலவிட வேண்டுமேயன்றி போதை வழக்கத்திலல்ல என்று தெளிவுறுத்துகின்றார். 
-
சத்தியை வேண்டிச் சமயத்தோர் கள்ளுண்பர்
சத்தி அழிந்தது தம்மை மறத்தலால்
சத்தி சிவஞானம் தன்னில் தலைப்பட்டுச்
சத்திய ஞான ஆனந்தத்திற் சார்தலே.
மெய்ஞான யோகிகள் யோகக் கனலை மேலெழுப்பிச் சகஸ்ராரத்தில் சிவதரிசனம் கண்டுச் சிவானந்தத் தேன் எனும் மதுவுண்டு வாழ்ந்திருப்பர். மற்றொருபுறம் போலி யோகிகளாகிய மூடர்கள் கள் முதலிய போதை வஸ்துக்களைக் கைக்கொண்டு அறிவிழந்து அழிந்து போவார், இவர்கள் ஒருக்காலமும் ஞானம் அடையார் என்று அறுதியிட்டுக் கூறுகின்றார் திருமூலர்,
இப்பதிவின் நோக்கம் இத்தகையோரின் பக்தியைச் சாடுவது அல்ல, பக்தி என்பது ஒவ்வொரு ஆன்மாவுக்கும் இறைவனுக்கும் உள்ள தனிப்பட்ட தொடர்பு, அதனை விமரிசிக்க எவருக்கும் உரிமையில்லை. எனினும் இந்து தர்ம ஞானிகள் மற்றும் ஆச்சாரியர்கள், நால்வர் பெருமக்கள்; அருணகிரிநாதர் மற்றும் சைவ சமய அருளாளர்கள் ஆகியோர் வழிவழியாய் முன்னிறுத்திய, வழிமொழிந்துள்ள தர்மங்களில் அபிமானம் உள்ள எவருக்கும் அறமற்ற போதை பழக்கத்தினைச் சாடும் கடமையும், உரிமையும் உண்டு. 
பொய்த்துறவு பூண்டு இத்தகைய வழக்கத்தில் ஈடுபடுவோர் வாழ்வினைச் சந்திக்க அச்சம் கொண்டவர்கள்; அதனால் போதை வழக்கத்தினைக் கைக்கொள்ளத் துவங்கிப் பின் அதற்கு அடிமையாகி உழலும் சாமான்ய மனிதர்களே. இவர்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் உணவிடலாம், உதவலாம் எனினும் இவர்கள் ஒருக்காலும் வணங்கத் தக்கவரல்ல; மிகத் தவறான வழிகாட்டிகள்.

உடனே அங்கொன்றும் இங்கொன்றுமாயுள்ள, நாம் ஞானிகள் என்று நம்பும், புகைப்பழக்கம் உள்ளோர் சிலரை முன்னிறுத்தி விவாதித்து நேரத்தை விரயமாக்குவதை விடுப்போம், 'போதை வழக்கத்தினைக் கைக்கொண்டும் ஆன்ம இலாபம் பெற இயலும்' எனும் அறம் சிறிதுமற்ற சிந்தனையை அகற்றுவோம், வழிவழி வந்துள்ள நமது சமய குருநாதர்களின் வழியில் பயணித்துத் தெளிவுறுவோம் (சிவ சிவ).

2 comments:

  1. தெளிவான விளக்கம் நன்றி, தங்களின் இப்பணி தொடர வாழ்த்துக்கள் ...

    ReplyDelete
    Replies
    1. மிக்க மகிழ்ச்சி! சிவ சிவ!!!

      Delete