'புலால் உட்கொள்வதை கைவிடுவது இல்லை' எனும் முடிவுக்கு முன்னமே வந்துப் பின் அம்முடிவுக்கு சாதகமான நிகழ்வுகளை அங்கொன்றும் இங்கொன்றுமாய் சேகரித்து வைத்துக் கொண்டு வாதிடுவதென்பது சரியான அணுகுமுறையாக இருக்க இயலாது. புராணங்கள்; இதிகாசங்கள்; சாத்திரங்கள்; திருமுறைகள் மற்றும் அருளாளர்களின் திருப்பாடல்கள் ஆகியவைகளைக் கசடறக் கற்று அதன் பின்னரே தர்ம அதர்மம் குறித்த ஒரு தெளிவான முடிவிற்கு வருதல் வேண்டும். இனி இப்பதிவின் மூலக் கருவிற்குள் பயணிப்போம்.
முதல் கோணம், கண்ணப்ப நாயனார் வேடர் மரபில் தோன்றியவர், சாத்திரங்கள் குறித்த ஞானமோ, தர்ம அதர்மம் குறித்த புரிதலோ பெரிதாக அமைந்திருக்காத வேடர்கள் நிறைந்துள்ள சூழலில், வனப்பகுதியில் வளரப் பெற்றவர். ஆனால் நம்முடைய நிலையோ இதனின்றும் முற்றிலும் மாறுபட்டது, எண்ணற்ற தர்ம சாத்திரங்கள்; திருமுறைகள்; அருளாளர்களின் அறவுரைகள் ஆகியவைகளை கற்றுணரும் வாய்ப்பும் கல்வியும் நமக்கின்று அமையப் பெற்றுள்ளது. ஆதலின் கண்ணப்பரின் சூழலையும் நம்முடைய இக்காலகட்ட சூழலையும் ஒப்பு நோக்குவது முறையன்று.
இரண்டாவது கோணம், நம் உடற் பகுதியொன்றின் குறைபாட்டினைப் பதிவு செய்யும் ஊடு-கதிர்ப்படத்தினை (எக்ஸ்-ரே), அத்துறையில் நிபுணத்துவம் வாய்ந்த மருத்துவரொருவரின் துணையினைக் கொண்டே அறிந்து கொள்ள முனைகின்றோம். அது போன்று, புராண;இதிகாச நிகழ்வுகளிலிருந்து நாம் உய்த்துணர வேண்டிய நீதிக் கருத்துகளை, தவத்தாலும் சீலத்தாலும் மேம்பட்டு, தம்முடைய வாழ்வையே சமயத் தொண்டிற்கென அர்ப்பணித்து வந்துள்ள அருளாளர்கள் மற்றும் ஆச்சாரியர்கள் மூலமாகவே உணர்ந்துத் தெளிதல் வேண்டும். அதனை விடுத்து, நாமாக புராண நிகழ்வுகளை மேலோட்டமாக அணுகி ஒரு முடிவுக்கு வருதலென்பது நுனிப் புல் மேய்வதனை ஒக்கும்.
(சமயப் பெரியோர்கள் அறிவுறுத்தியுள்ள கண்ணப்பரின் வரலாற்றுச் சாரம்): 'இறை வழிபாட்டில் அன்பே பிரதானம். ஆசாரமும் நியமமும் அவசியமே எனினும் அவைகளால் மட்டும் வழிபாடு முழுமை பெற்று விடுவதில்லை. நெறிமுறைகளுடன் புரியப் பெற்று வரும் வழிபாடு நாளடைவில் அன்பு வழிபாடாக பரிணாமம் பெறுகின்றது. நியமத்துடன் கூடிய வழிபாடு என்பது அவசியமான தொடக்க நிலையே; கருணைப் பெருங்கடலான இறைவனுடன் அன்பினால் ஒன்றிக் கரைவதே அதன் இறுதி நோக்கம்'.
மூன்றாவது கோணம், யாருடன் யாரை ஒப்பு நோக்குவது என்றொரு வரைமுறை வேண்டாமா? 'கண்ணப்பன் ஒப்பதோர் அன்பின்மை கண்டபின்' என்று மணிவாசகப் பெருந்தகை 'கண்ணப்பர் சிவபரம்பொருளிடத்து கொண்டிருந்த அன்புப் பெருநிலை தமக்கு வாய்க்கவில்லையே' என்றுருகிப் போற்றுகின்றார். 'கலைமலிந்த சீர்நம்பி கண்ணப்பர்க்கு அடியேன்' என்று பணிகின்றார் நமது சுந்தர மூர்த்தி சுவாமிகள். தன்னலமில்லா அன்புப் பெருவெள்ளமான கண்ணப்பருடன் எண்ணிறந்த தகுதிக் குறைபாடுகளோடு கூடிய நம்மை ஒப்பிட்டுப் பார்ப்பதோ?
இறுதிக் கோணம், ஓரிரு விதிவிலக்கான சரிதங்களைப் பொதுவான விதிகள் என்று குழம்பித் தவறான பாதையில் பயணிக்கத் துவங்குவது பெரும் தீமையில் நம்மைக் கொண்டு சேர்க்கும். 3000 ஆண்டுகள் சிவயோகத்திலிருந்து ஆண்டொன்றிற்கு ஒரு திருப்பாடல் வீதம் 3000 திருப்பாடல்கள் அருளியுள்ள திருமூலர் 'புலால் மறுத்தல்' எனும் அதிகாரத்தில் 'மாமிசம் உட்கொள்பவர் கடும் நரகில் வீழ்வார்' என்று அறுதியிட்டுள்ளாரே! பரமஞானியான அச்சிவயோகி அறியாத நீதியினை நாம் அறிந்ததாக எண்ணிப் பிதற்றுவது மடமையன்றோ!
No comments:
Post a Comment