இந்து தர்மம் யாகங்களில் ஆட்டினை பலியிடச் சொல்கின்றதா? (திருமுருக வாரியார் சுவாமிகளின் விளக்கம் மற்றும் சில நுட்பங்கள்):

முந்தைய யுகங்களிலும், தற்பொழுது நடந்தேறி வரும் கலியுகத்தின் துவக்க காலகட்டத்திலும் ஆட்டினைக் கொன்று அதனுடலைக் குறிப்பிட்ட சில வகை யாகங்களில் ஆகுதியாக இடும் வழக்கம் நிலவி வந்தது. வேத வாக்கியங்களைக் கற்றரிந்தவர்கள் என்று பல வேதியர்கள் தங்களை முன்னிறுத்திக் கொண்டுத் தத்தமது குறையறிவினைக் கொண்டு மறைகளுக்குப் பொருள் கொள்ளத் துவங்கியதே இதற்கான காரணம். தற்பொழுது அவ்வழக்கம் முற்றிலுமாய் ஒழிந்து விட்டது எனலாம். முதலில் இது தொடர்பான பரம குருநாதரான நம் வாரியார் சுவாமிகளின் விளக்கத்தினைக் காண்போம்.

"வேதியர்கள் ஆட்டைக் கொன்று யாகம் செய்வது பெரும் பிழையாகும். அஜம் என்ற சொல்லுக்கு முளைக்காத பழைய நெல் என்று பொருள் (ஜம் - தோன்றுவது, அஜம்  = தோற்றமில்லாதது). அஜம் என்ற பழைய நெல்லால் வேள்வி செய்வது என்ற கருத்தை உணராமல் அஜம் என்ற சொல்லுக்கு ஆடு என்று அர்த்தம் செய்து கொண்டு ஆட்டைக் கொன்று வேள்வி செய்யத் தொடங்கினார்கள். "தீதா வசவனியாயம்  செய் வேதியரே" என்று வரும் கந்தரந்தாதி 31வது பாடலால் அறிக".

இனி வாரியார் சுவாமிகள் குறித்துள்ள அருணகிரியாரின் கந்தர் அந்தாதித் திருப்பாடலையும் அதன் சுருக்கமான பொருளையும் காண்போம்.
-
(பதம் பிரிக்கப் பட்டுள்ளது):
தீதா வசவு அனுபவிக்க மண்ணிலும் விண்ணிலும் - செந்
தீ தாவு அச அனியாயம் செய் வேதியரே, தியங்கா
தீ தா வசவ நிமலர் செல்வா, சாக்கிர வசத்து
(அ)தீத வச அன்புறப்பாரெனும் முத்தி சித்திக்கவே!!!
-
சுருக்கமான பொருள்:
இம்மை மறுமை நலன்கள் பெற விழைந்து, ஒரு சிறிதும் ஜீவகாருண்யம் இல்லாது ஆட்டினைப் பலியிட்டு வேள்வி புரியும் வேதியர்களே, இனி அவ்வாறு திகைத்துத் தவறிழைக்காமல், சிவபரம்பொருளின் திருக்குமாரனான குமாரக் கடவுளிடம் தெளிவான அறிவினையும், திருவருளையும் வேண்டிப் பணிந்து உய்வு பெறுங்கள்!!!
மேற்குறித்துள்ள திருப்பாடலின் இரண்டாம் வரிக்கு சிறிது விரிவாகப் பொருள் காண்போம். அக்கினி தேவனின் வாகனம் ஆடு, அதனால் தீ தாவு என்கின்றார், அச என்பது அஜம் எனும் ஆட்டினைக் குறிக்க வந்தது. கதியற்ற பிராணிகளை வதைத்து வேள்வியில் இடும் செயலை 'அநியாயம் செய் வேதியரே' என்று கடுமையாய் நிந்திக்கின்றார் அருணகிரிப் பெருமான்.

இனி, மகாபாரதத்தின் அனுசாசனப் பர்வத்தில் (அத்தியாயம் 115) குறிக்கப் பெற்றுள்ள இது தொடர்பான நிகழ்வினையும் காண்போம். 'அஜம்' என்பது ஆட்டையே குறிக்கின்றது என்று தேவர்களும், 'முளைக்காத நெல்லையே' சுட்டுகின்றது என்று ரிஷிகளும் வாதிடுகின்றனர். இரு சாராரும் சுவர்க்கத்தில் உள்ள வசு எனும் அரசனிடம் இது குறித்துக் கேட்க, தேவர்களுக்கு அஞ்சி 'வேதம் வேள்வியில் இடச் சொல்வது ஆட்டையே' என்று வசு மாற்றிக் கூறுகின்றான். 'அசத்தியம் உரைத்ததால் மறுகணமே பாதாள உலகிலும் வீழ்கின்றான்' என்று மாபாரதம் தெளிவாகப் பதிவு செய்கின்றது. இதனால் இந்து தர்மம் ஜீவகாருண்யத்தை மிகக் கடுமையாக முன்னிறுத்துகின்றது என்பது தெளிவு.

தேவர்களே மறைப் பொருளில் குழம்பினால் நம் கதியென்ன? வருத்தமே வேண்டாம். மிக எளியதொரு வழியுண்டு, எவ்வகையில் பொருள் கொண்டால் பிற உயிர்களுக்கு ஒருசிறிதும் துன்பம் விளையாதோ அவ்வழியில் பொருள் காண்பதே தக்கதொரு தீர்வு. கல்வியறிவு இதற்குப்  பிரதானம் அல்ல; கருணையே பிரதானம். கருணையே வடிவான இறைவனை கருணையால் மட்டுமே அடைய இயலும். இன்று முதல் அசைவம் உட்கொள்ளும் செயலை முழுவதுமாய்த் துறப்போம் சிவகதி சேர்வோம்.

No comments:

Post a Comment