அகிம்சையை வலியுறுத்தும் பத்ராசலம் ஸ்ரீராமதாசரின் திவ்ய சரிதம் (இந்து தர்ம நுட்பங்கள்):

பத்ராசலம் ஸ்ரீராமதாசர் 17ஆம் நூற்றாண்டில் தோன்றிய அருளாளர். ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியிடம் அதீத பக்தியும் ஈடுபாடும் கொண்டொழுகும் உத்தம சீலர். அக்கால கட்டத்தில் ஆந்திர மாநிலத்தை ஆண்டு வரும் முகலாய மன்னன் தானேஷாவின் ஆளுகைக்குட்பட்ட பத்ராசலப் பகுதியின் தாசில்தாராகப் பொறுப்பேற்கின்றார் தாசர். பத்ராசலத்தில் ஸ்ரீராமர் அன்னை சீதையை மடியிலிருத்திய அதிஆச்சரியத் திருக்கோலத்தில் (இலக்குவனும் உடனிருக்க) எழுந்தருளி இருக்கும் புராதன ஆலயமொன்று மிகவும் பழுதுற்ற நிலையிலிருப்பதைக் கண்ணுற்று வருந்திப் புணர் நிர்மாணிக்க விழைகின்றார்.

நிதி பற்றாத நிலை உருவாக அரசாங்க வரிப் பொருளிலிருந்து 6 லட்சம் வரை எடுத்து, அதனை விரைவில் திரும்ப வைத்து விடுவதாகவும் சங்கல்பிக்கின்றார். திருக்கோயில் புணர் நிர்மாணமும் குடமுழுக்கும் மிகச் சிறப்பான முறையில் நடந்தேறுகின்றது, இதனிடையில் நடந்தேறிய நிகழ்வுகளை அறிந்து கொள்ளும் தானேஷாவோ வெகுண்டு ஸ்ரீராமதாசரை கோல்கொண்டா கோட்டையில் சிறையிடுமாறு ஆணையிடுகின்றான். சிறைச் சாலையிலோ சாட்டையடி, சுடு மணலில் இடுதல் என்று ஸ்ரீதாசர் அனுதினமும் கடும் துன்பத்திற்கு உள்ளாக்கப் படுகின்றார். ஓரிரு ஆண்டுகள் அல்ல; பனிரெண்டு முழு ஆண்டுகள் இவ்விதம் சிறை வாசமும் சித்திரவதையுமாய் கழிகின்றது.

தண்டனையின் தீவிரத்தினைத் தாங்கவொண்ணாத நிலையில் ஸ்ரீதாசர் அனுதினமும் அற்புதப் பனுவல்களால் தசரத மைந்தனைப் போற்றித் தன்னைக் காத்தருளுமாறு அகம்குழைத்துக் கண்ணீர் பெருக்கி மன்றாடி வருவார். இவ்விதம் 12 ஆண்டுகள் முடிவுறும் நிலையில் ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி இலக்குவனுடன், இரு வீரர்களின் திருவுருக்கொண்டு, பின்னிரவு வேளையில் தானேஷாவின் அரண்மனையுள் தோன்றியருளி, ஸ்ரீதாசர் எடுத்த பொருளினை வட்டியோடு செலுத்தி ரசீதும் பெற்று, சிறையில் மயங்கிய நிலையிலிருக்கும் ஸ்ரீராமதாசரின் அருகினில் அதனை சேர்ப்பித்துப் பின் திருவுருவம் மறைகின்றார்.
கண் விழித்ததும் ரசீதினைக் கண்டு உளம் நெகிழும் ஸ்ரீதாசர் கோசலை மைந்தனின் திருவருட் செயலினை வியந்து போற்றித் துதிக்கின்றார். தானேஷா ஸ்ரீதாசரின் தெய்வத் தன்மையினை உணர்ந்து தன் தவறுக்காக மன்னிப்பு வேண்டிப் பணிகின்றான். இவ்விடத்தில், கருணைப் பெருவெள்ளமான ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி 12 ஆண்டுகளாக ஸ்ரீதாசரை இரட்சித்து அருளாதது ஏன் எனும் வினா நமக்கு எழுமல்லவா! அன்னை ஸ்ரீமகாலக்ஷ்மி பாற்கடல் வாசனாரிடம் இது குறித்து வினவுவதாகவும், 'முற் பிறவியில் ஒரு கிளியினை 12 ஆண்டுகள் கூண்டில் அடைத்து வளர்த்த பாவத்தின் பயனாய் ஸ்ரீதாசருக்கு இப்பிறவியில் 12 ஆண்டுகள் சிறைவாசம் வந்தெய்தியது' என்று ஸ்ரீமகாவிஷ்ணு விளக்கியருள்வதாகவும் 'ஸ்ரீமகா பக்த விஜயம்' எனும் மூல நூல் நமக்குத் தெரிவிக்கின்றது. 

மேரு மலையினும் மேம்பட்ட தவமும் சீலமும் கொண்டு விளங்கியருளிய ஸ்ரீராமதாசருக்கே (ஒரு கிளியை கூண்டிலடைத்த செயலுக்கு) இத்தகைய துன்பம் எய்துமெனில், தம்மைத் தற்காத்துக் கொள்ளும் சக்தியும் கதியுமற்ற நிலையிலுள்ள வாயிலாப் பிராணிகளை வதைத்து அதன் மாமிசத்தினை உட்கொள்ளும் கருணையற்ற செயலானது நம்மை எத்தகு கொடிய துயரத்தில் ஆழ்த்தும் என்பதனை நன்குணர்த்துத் தெளிதல் வேண்டும். எவ்வுயிர்க்கும் தாயாக விளங்கியருளும் இறைவன் ஒரு பொழுதும் உயிர் வதையை மன்னிப்பதில்லை (சிவாய நம).

No comments:

Post a Comment